ஓர் ஆவிக்குரிய தலைவன், தனது வேலைகள் அனைத்தையும் தேவ சித்தத்திற்குட்பட்டும், தேவ வல்லமையாலும், தேவ மகிமைக்காகவுமே செய்கிறான். ஆதலால் இறுதியில் அக்கினியானது அவனுடைய வேலைப்பாட்டைச் சோதிக்கும் போது, அது பொன்னாகவும், வெள்ளியாகவும், விலையேறப்பட்ட கற்களாகவும் விளங்கும் (1 கொரி 3:12-15). தேவன் நமக்கு வல்லமையைத் தந்து, நம்மைத் தகுதி உள்ளவர்களாய் மாற்றாத பட்சத்தில், நம்மால் புதிய உடன்படிக்கை ஊழியர்களாக இருக்க முடியாது என்று 2 கொரி 3:5,6 வசனங்களில் பவுல் நமக்குக் கூறுகிறார். ஓர் ஆவிக்குரிய தலைவன், ஊழியம் செய்யும்படியான தகுதியை தேவனாலே பெற்றிருப்பதால், அவனால் தனது பிரயாசங்களைக் குறித்து மேன்மை பாராட்டவே முடியாது. தேவனுடைய ஜீவன் நம் மூலமாகப் பாய்ந்து பிறரை ஆசீர்வதிப்பது உண்மையானால், அதற்கான புகழ்ச்சியை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் நாம் தயாரிக்காத ஒன்றிற்காகப் புகழ்ச்சியை எடுத்துக் கொள்ள முடியாது. உதாரணமாக, யாரோ ஒருவர் செய்த ஒரு கேக்கை நான் உங்களிடம் கொண்டு வந்து தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டு விட்டு, "Br.Zac, நீங்கள் ஓர் அற்புதமான கேக்கைக் கொடுத்தீர்கள்" என்று என்னைப் பாராட்டினால், அதைக் குறித்து பெருமை அடையும்படிக்கு நான் சோதிக்கப்படக்கூட மாட்டேன். ஏனெனில் அதை நான் தயாரிக்கவில்லையே. ஆனால் அதே சமயம் நான் அதைச் செய்திருந்தால், ஆ! ஆ! நான் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறேன் என எண்ணி பெருமை கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் இன்னொருவர் செய்த ஒன்றிற்காக நான் எப்படிப் பாராட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்?
நாம் மற்றவர்களுக்கு ஒன்றைக் கொடுக்கும் போது, அது தேவனுடைய தயாரிப்பா? அல்லது நமது சொந்தத் தயாரிப்பா? என்று கண்டுகொள்ளுவதற்கு இதுவும் ஒரு வழியாகும். அந்த கேக் உதாரணத்தைப் போலவே நாமும் நம்முடைய ஊழியத்தைக் குறித்துப் பெருமையாய் இருக்கிறோமா? அப்படியானால் அந்த ஊழியமானது நம்முடைய சொந்தத் தயாரிப்புத்தான் என்பதில் ஐயமில்லை. தேவனுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. அதைத் தேவன் உற்பத்தி செய்திருந்தால், நாம் அதில் பெருமையடைவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமிருக்காது. இயேசுவின் சீஷர்கள் அப்பத்தையும், மீனையும் திரள் கூட்டத்திற்குப் பகிர்ந்தளித்ததற்காக, ஏதாவது பாராட்டையோ, புகழ்ச்சியையோ எடுத்திருப்பார்கள் என எண்ணுகிறீர்களா? இல்லை. அந்தச் சாப்பாட்டுப் பொட்டலத்தை இயேசுவிடம் தந்த அச் சிறுவன் கூட அப்படிச் செய்திருக்க மாட்டான். இயேசு உற்பத்தி பண்ணிக் கொடுத்ததை அந்தச் சீஷர்கள் பந்தி பரிமாறினார்கள். அவ்வளவுதான். நாம் எல்லாரும் உற்பத்தி பிரிவில் பணியாற்றாமல், பகிர்ந்தளிக்கும் பிரிவில் பணியாற்றுவதால் தேவனுக்கு ஸ்தோத்திரம். இதினிமித்தமே நம்மால் எந்நேரமும் பூரண இளைப்பாறுதலில் இருக்க முடிகிறது. உற்பத்தி செய்யும் போதுதான் மனஅழுத்தம் இருக்குமே தவிர, பகிர்ந்தளிக்கும் போதல்ல. பகிர்ந்தளிக்கும் போது நமக்குக் களைப்பு உண்டாகும் என்பது உண்மைதான். ஆனால் மனஅழுத்தம் இருக்காது. நம்முடைய தகுதியெல்லாம் தேவனால் உண்டாயிருக்கிறது. நாமாக மதிப்புமிக்க எதையுமே உற்பத்தி செய்ய முடியாது. ஆகவேதான் நாம் தயாரிப்பில் ஈடுபட முயற்சிப்பதே கிடையாது.
பரிசுத்த ஆவியின் துணையின்றி, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றுமே மனுஷீகமாகத்தான் இருக்கும் என்றும் அதற்கு எவ்வித நித்திய மதிப்பும் இல்லை என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜெபிக்காமல், தேவனுடைய உதவியை நாடாமல், பரிசுத்த ஆவியின் வல்லமையில்லாமலேயே உங்களுடைய பிரசங்கத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும் என்பது உண்மைதான். உங்களுக்குப் பெருமளவு மனுஷீகத் திறமைகள் இருக்கலாம். அதை வைத்து நீங்கள் கணிசமான அளவிற்குக் காரியங்களைச் சாதிக்கவும் செய்யலாம். ஆனால் அவையாவும் தேவனுடைய பார்வையிலே வெறும் மரமும், புல்லும், வைக்கோலும்தான் என்பதை நீங்கள் ஒரு நாளிலே கண்டுபிடிப்பீர்கள்.
ஒருநாள் இயேசு பரிசேயரைக் கடிந்து கொண்டு, அவர்களுடைய உபதேசத்தைச் சரிப்படுத்திய பிறகு, சீஷர்கள் அவரிடம் வந்து, "உம்முடைய வசனத்தைக் கேட்டுப் பரிசேயர் இடறலடைந்தார்கள் என்று அறிவீரா?" என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை விட்டுவிடுங்கள்; ஏனெனில் அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறர்கள் என்றும், "என் பரமப்பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்" (மத் 15:12,13) என்றும் சொன்னார். நீங்கள் பிரசங்கிக்கும் போதெல்லாம் ஒரு விதையை நடுகிறீர்கள். நீங்கள் நடுகின்ற விதையானது தேவனிடமிருந்து வராததாயிருந்தால், ஒரு நாள் அது பிடுங்கியெறியப்படும். நம்முடைய வேலைப்பாடானது பரிசுத்த ஆவி அருளும் வல்லமையினால் நடைபெறுமானால், அது நித்திய காலமாய் நிலைநிற்கும். ஆனால் நாமோ ஜெபிக்காமலும், ஆதரவற்ற நிலையிலிருந்து தேவனைச் சார்ந்து கொள்ளாமலும், பரிசுத்த ஆவியின் ஒத்தாசையின்றியும் தேவனுக்கு ஏதாவது செய்வோமானால், நிச்சயமாகவே அது ஒரு நாள் வேரோடே பிடுங்கப்படும்.
கிறிஸ்தவ வேலையைச் செய்கின்ற போது, பரிசுத்த ஆவியின் ஒத்தாசை எதுவும் இல்லாமல், வெறும் பணத்தையும், சிறந்த நிர்வாகத் திறமையையும் வைத்துக் கொண்டேப் பலவற்றைச் செய்து விடலாம். உதாரணமாக, நீங்கள் கிறிஸ்தவ கான்பரன்ஸ் கூட்டங்களை ஒழுங்கு செய்வதாக வைத்துக் கொள்ளுவோம். அதற்காக நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்கும். ஓர் அரங்கத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்; அழைப்பிதழ்களை அனுப்ப வேண்டும்; தங்குமிடத்தை ஒழுங்கு செய்ய வேண்டும்; சாப்பாட்டுக் காரியங்களைத் திட்டமிட வேண்டும். இப்படிப் பற்பல வேலைகளைச் செய்ய வேண்டும். ஆனால் கிறிஸ்தவனல்லாத ஒரு சிறந்த நிர்வாகியே இவை அனைத்தையும் செம்மையாய்ச் செய்துவிட முடியும். சொல்லப் போனால், கிறிஸ்தவர்களால் ஒழுங்கு செய்யப்படும் அநேகக் கான்பரன்ஸ்களை விட, உலகத்தார் நடத்தும் கான்பரன்ஸ்கள் மிகச் சிறப்பாக அமைவதுண்டு. ஆனால் ஒரு கிறிஸ்தவ கான்பரன்ஸிலே நித்திய காலமாய் நிலைநிற்கக் கூடிய பகுதியானது வார்த்தையைப் பகிர்ந்தளிக்கிற ஊழியமாகும். இப்பகுதியானது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்படியெல்லாம் சொல்லும்போது, இங்கு எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையிலே செய்யப்பட வேண்டுமென்பதை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம். ஒரு கான்பரன்சுக்கு இவையெல்லாம் உறுதுணையாக உள்ளன. ஆனால் என்றென்றும் நிலைநிற்பதைக் குறித்து யோசிக்கும் போது, அது பரிசுத்த ஆவியினால்தான் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் நம்முடைய சொந்த ஊழியத்திற்குப் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய ஊழியத்தில் எந்தப் பகுதியானது மனுஷீகப் பயிற்சியினாலும், மனுஷீக ஆதாரத்திலிருந்தும் உருவெடுத்தது என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்கலாம். நாம் நேர்மை உள்ளவர்களாய் இருப்போமானால், நாம் கேட்ட இந்தக் கேள்விக்கான பதில் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும்.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். ஜீவியமில்லாமல் வெறும் வேத அறிவை மட்டுமே உடையவர்களாய் இருக்கிற வேதாகமக் கல்லூரி விரிவுரையாளர்களிடமும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமின்றி வெறும் தகவல் பரிமாற்றம் மட்டும் செய்கிறவர்களாக இருந்து கொண்டிருக்கும் மிஷனரி தலைவர்களிடமும்தான் அவர் இன்றும் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போஸ்தலர் தங்கள் காலத்தில் இப்படிப்பட்ட மக்களை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. நாமும் இயேசுவின் அடிச்சுவட்டில் பயணிக்கிறவர்களாயிருந்தால், நம்முடைய காலத்திலும் இப்படிப்பட்ட ஜனங்களுடன் மோத வேண்டியதாகத்தான் இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை, நான் இப்படிப்பட்ட மக்களைப் பிரியப்படுத்தி, ஆண்டவருக்குப் பிரியமில்லாமல் இருப்பதைவிட, ஆண்டவரோடு நடந்து அவர்களுடன் போராடுவதையே தெரிந்து கொள்ளுகிறேன். தேவனுக்குப் பிரியமாய் நடப்பதற்காக, இம்முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க வேண்டிய அளவிற்கு விலைக்கிரயம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அப்படிப்பட்டப் போரட்டத்தை எதிர்கொள்ளவும் நான் ஆயத்தமாய் உள்ளேன். "நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால், நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே" (கலா 3:10). எனவே நாம் யாவரும் நம்முடைய ஊழியப் பாதையிலே, நம்முடைய ஆதரவற்ற நிலையை உணர்ந்து, தேவனையே சார்ந்து கொண்டவர்களாய், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நம்மீது எப்பொழுதும் தங்கி இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனேயே முன்னேறிச் செல்லுவோமாக.