“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத்தேயு 28:18). நாம் இந்த மாபெரும் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமானால் இந்த வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். சகல அதிகாரமும் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கவில்லை எனில், கிறிஸ்தவ ஊழியத்தில் கொஞ்சக் காலத்திலேயே சோர்வுக்குள்ளாகி அதை விட்டுவிடக் கூடும். ஊழியத்தின் விளைச்சலை (பலனை) நீங்கள் உடனடியாகப் பார்க்க முடியாது. சுவிசேஷகர்களோ, தீர்க்கதரிசிகளோ, அப்போஸ்தலர்களோ கூட உடனடியாக ஊழியத்தின் பலனைப் பார்ப்பதில்லை. அது ஒரு குழந்தையை, வளர்ந்த ஒரு வாலிபனாக வளர்த்தெடுப்பதைப் போன்றதாகும். நான் பல வருடங்களாக சபைகளை உருவாக்கி, விசுவாசிகளை ஸ்தாபித்து, அவர்களை தேவ பக்திக்கு நேராய் நடத்த நாடியிருக்கிறபடியினால் இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இந்த ஊழியத்திற்காக என்னை அனுப்பினவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர் என்பதை நாம் உணரும் வரை சோர்வடைவது என்பது மிகவும் எளிதானது. அந்த அதிகாரத்துடன் அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்.
எனவே நான் மாபெரும் கட்டளையின் இரண்டாம் பாதியை இவ்விதமாகப் பார்க்கிறேன்: இது இயேசு கூறிய மிக அருமையான இரண்டு அறிக்கைகளுக்கு இடையில் இருக்கிறது. முதலாவது, வசனம் 18-இல் , “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது,” என்றும், இரண்டாவது, வசனம் 20-இல், “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார். இந்த இரண்டு உண்மைகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி எனக்கு சந்தேகம் இருந்தாலும், மாபெரும் கட்டளையின் இரண்டாம் பாதியை நான் நிறைவேற்றப் போவதில்லை. ஐம்பது வருட கிறிஸ்தவ ஊழியத்தில் நான் கண்டது என்னவென்றால், கீழ்க்கண்ட சத்தியங்களைக் குறித்து நீங்கள் நிச்சயமுடையவராய் இல்லாதிருந்தால் அது மிகவும் சோர்வடையச் செய்வதாக இருக்கும்:
- உங்களை அனுப்பினவர் பரலோகத்திலும் (வானங்களில், அதாவது, பிசாசுகள் வசிக்கும் இரண்டாவது வானங்களிலும்) பூமியிலும் (பூமியில் உள்ள சகல ஜனங்களின் மீதும்) சகல அதிகாரமும் கொண்டவர்.
- நான் மாபெரும் கட்டளையின் இந்தப் பகுதியை நிறைவேற்ற முயற்சிக்கும் போது, அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என்ற ஒரு குறிப்பிட்ட வாக்குத்தத்தம் எனக்கு உண்டு.
இந்த இரண்டு அருமையான வாக்குத்தத்தங்களுக்கும் தொடர்புடைய ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. நிபந்தனைகளை நிறைவேற்றாமல் வெறும் வாக்குத்தத்தங்களை மாத்திரம் உரிமை கோர முயலும் மிக மோசமான பழக்கம் கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. உதாரணமாக, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது இரட்சிக்கப்படுவாய்" என்று உங்களிடம் கூறப்பட்டால், “சரி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நான் நிறைவேற்றப் போவதில்லை, ஆனாலும் நான் இரட்சிக்கப்படுவேன்,” என்று நினைப்பது எவ்வளவு மதியீனமானது என்று நீங்கள் நினைக்க மாட்டீர்களா? அல்லது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” உங்கள் பாவத்தை ஒத்துக்கொள்ளும் நிபந்தனையை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால், அவர் எப்படி உங்கள் பாவத்தை மன்னிப்பார் என்று நம்ப முடியும்?
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிபந்தனைக்குட்பட்டவை. தேவன் நல்லோர்மீதும் தீயோர்மீதும் சூரியனை உதிக்கச் செய்வது, நீதிமான்கள்மீதும் துன்மார்க்கர்கள்மீதும் மழையைப் பொழிய வைப்பது, இவற்றைப் போன்ற பொருளாதார ஆசீர்வாதங்களை அவர் எந்த நிபந்தனையும் இல்லாமல் எல்லாருக்கும் கொடுக்கிறார். ஆனால் தேவனுடைய ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்று வரும்போது, அவற்றைப் பெறுவதற்கு நிபந்தனைகள் உள்ளன. இது முதலாவது பாவ மன்னிப்பில் தொடங்குகிறது. மனந்திரும்பி, கிறிஸ்துவில் விசுவாசம் வைக்காதபடி, ஒருவருக்கும் பாவ மன்னிப்பு கிடைக்காது. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம், விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறோம். மேலும், தேவன் தமது கிருபையை நிபந்தனையின்றி அனைவருக்கும் வழங்குவதில்லை. தாழ்மையுள்ளவர்களுக்கு மட்டுமே அவர் தமது கிருபையை அளிக்கிறார். ஒவ்வொரு ஆவிக்குரிய வாக்குத்தத்தத்திற்கும் ஒரு நிபந்தனை உண்டு.
நான் சொன்ன மற்ற எல்லாப் பகுதிகளிலும் வாக்குத்தத்தத்துடன் இணைக்கப்பட்ட நிபந்தனையை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட பல கிறிஸ்தவர்கள், ஏன் “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்கிற இந்த வாக்குத்தத்தத்தில் மட்டும் நிபந்தனையைப் பூர்த்தி செய்யாமல் அதை உரிமைகோர முயற்சிக்கிறார்கள்? அது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் மனந்திரும்பி விசுவாசிக்காவிட்டாலும் மன்னிக்கப்படுவீர்கள் என்று நான் பிரசங்கித்தால் அவர்கள் ஆச்சரியப்படுவார்களல்லவா? உங்கள் பாவங்களை நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மன்னிக்கப்படலாம் என்று நான் சொன்னால், அவர்கள் அதை அபத்தமானது என்று சொல்வார்களே. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்று வேதாகமம் கூறுகிறதல்லவா? “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் உபதேசம் பண்ணுங்கள், உலகத்தின் முடிவுபரியந்தம் கர்த்தர் எப்போதும் உங்களோடு இருப்பார்” என்று அதே வேதாகமம் சொல்கிறது. தேவன் சொன்னது இதுதான். அதைக் கூறிய பிறகு அவர், “இதோ, சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார்.
ஆகவே, அது இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் கைக்கொள்ள மற்றவர்களுக்குக் கற்பிக்கப் புறப்படுபவர்களுக்கென்று குறிப்பாகக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தமாகும். நான் 50 வருடமாக அதை நிறைவேற்ற முயன்று, இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய வேண்டும் என்று உலகின் பல பகுதிகளிலும், குறுந்தகடுகள், இணையதளம் மற்றும் புத்தகங்கள் மூலம் ஜனங்களுக்குக் கற்பித்திருக்கிறேன். நான் கர்த்தருடைய பிரசன்னத்தையும் அவருடைய அதிகாரத்தையும் மெய்யாகவே அனுபவித்திருக்கிறேன் என்று நான் சாட்சி கூற முடியும். ஆகவே, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்மை என்று நம்பும்படி உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் முதலாவது நீங்களே கைக்கொண்டு, அவற்றைப் பிறரும் கைக்கொள்ளும்படி கற்பிக்க நீங்கள் புறப்பட்டால், அவருடைய அதிகாரம் உங்களை ஆதரிக்கும்; அவர் எப்போதும் உங்களுடனே கூட இருப்பார்.
அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பதன் விளைவுகளில் ஒன்று, அவர் நம்மை சோர்விலிருந்தும், இருளிலிருந்தும், மோசமான மனநிலைமைலிருந்தும் மற்றும் அது போன்ற எல்லா வகையான விஷயங்களிலிருந்தும் விடுவிக்கிறார் என்பதாகும். எப்பொழுதும் இயேசு என்னுடன் இருந்தால் உலகில் நான் எப்படி மோசமான மனநிலையில் இருக்க முடியும்? இயேசு எப்போதும் என்னுடன் இருந்தால் இந்த உலகில் நான் எப்படி சோர்வடையவோ பயப்படவோ முடியும்? கிறிஸ்து இல்லாத போது அவர்களுடன் இருக்கிறார் என்று பலர் கற்பனை செய்துகொள்கிறார்கள். அவர்கள் இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் கைக்கொள்ள முயற்சிப்பதில்லை; அவர்கள் இயேசு கட்டளையிட்டதை மற்றவர்களுக்குக் கற்பிக்க முற்படுவதில்லை. எனவே, அந்த வாக்குத்தத்தத்தை உரிமைகோருவதற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஒரு நிபந்தனை இருக்கிறது; அதை நீங்கள் தெளிவாகப் பார்க்கும்படி உங்களை நான் உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.