WFTW Body: 

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும் (நீதிமொழிகள் 4:18).

இது மெய்யாகவே ஒரு புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தமாகும். ஒரு மனுஷன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, ​​அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்துவினுடைய நீதியால் அவன் தரிப்பிக்கப்பட்டு, தேவனால் நீதிமானாக்கப்படும் போது மட்டுமே அவன் நீதிமானாகிறான் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அவனுடைய வாழ்க்கை சூரிய உதயத்தின்போது காணப்படும் ஒளியைப்போல மட்டுமே இருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. “நீதிமான்களின் பாதை சூரியப்பிரகாசம் போல் இருக்கிறது…” என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன் உதிக்கும்போது ஒளி வீசினாலும் கூட, சூரியன் இன்னும் அதன் உச்சகட்ட ஒளிப்பிரகாசத்தை அடைந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. வானில் சூரியன் உதிப்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்; இந்த சூரிய ஒளியின் பிரகாசமானது சூரியன் விடியற்காலையில் உதிப்பதிலிருந்து நடுப்பகல் வரை அதிகரித்துக்கொண்டே சென்று, நடுப்பகலில் சூரியன் முழுமையான பிரகாசத்தை அடைகிறது. சூரியன் உதித்து உச்சியை நோக்கி நகரும்போது நிழல்களின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றன என்று நாம் சொல்லலாம்; நம்முடைய சுய ஜீவியத்தின் நிழலும் அவ்வாறே தொடர்ந்தேர்ச்சையாய் குறைந்துகொண்டே வந்து, இறுதியாக சூரியன் உச்சிக்கு வரும்போது நிழல் முற்றிலும் மறைந்துவிடுவது போல, அறவே சுயமில்லாத ஜீவியத்தை நாம் பெற்றிட வேண்டும் என்பதே நமக்கான தேவனுடைய சித்தமாகும். நாம் மறுபடியும் பிறந்த அந்த நேரத்திலிருந்தே, அவருடைய பிள்ளைகளாகிய நம் எவருடைய வாழ்க்கையும் ஏற்ற இறக்கமான அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமே அல்ல.

ஆனால் இப்போது, ​​பெரும்பாலான கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஏற்ற இறக்க அனுபவங்களே காணப்படுகின்றன. மேலும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் ஏற்ற இறக்கமான அனுபவங்கள் இருக்கின்றன என்றும், சில போதகர்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன என்றும் நாம் கேள்விப்படும்போது, நம்முடைய தோல்வியில் நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம். நீதிமான்களின் பாதை ஏற்ற இறக்கமானது அல்ல என்று கூறும் தேவனுடைய வார்த்தையிலிருந்து நமது தரத்தை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, ஏதோ ஒரு மாம்சீக விசுவாசியின் வாழ்க்கையில் இருந்தோ அல்லது மாம்சீக போதகரின் வாழ்க்கையில் இருந்தோ நாம் நமது தரத்தை நிர்ணயிக்கிறோம். நீதிமானின் பாதை பிரகாசமாகவும், பிறகு இருளாகவும், மீண்டும் பிரகாசமாகவும், பிறகு மீண்டும் இருளாகவும் இருப்பது போன்றது அல்லவே. அதாவது ஒரு கணம் மலையின் உச்சியில் இருப்பது, மறு கணம் மனச்சோர்வின் குழியில் விழுவது; கர்த்தரைப் புகழ்ந்து களிகூருவது, பிறகு அடுத்த நாளே சோகமாகவும் துயரமாகவும் இருப்பது. இதுதான் நமது அனுபவம் என்றால், அது தேவனுடைய சித்தம் அல்ல என்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது நீதிமான்களின் பாதையல்ல. ஒரு நபர் அந்த வழியில் நடந்தால், அவர் நீதிமான்களின் பாதையில் நடக்கவில்லை என்று நம்மால் தெளிவாகச் சொல்ல முடியும்.

புதிய ஏற்பாட்டில் நீதிமான்களின் பாதை என்பது “புதிதும் ஜீவனுமான மார்க்கம்” என்றே அழைக்கப்படுகிறது. அது ஏதோ புரிந்துகொள்வதற்கான ஓர் உபதேசம் அல்ல; மாறாக அது நீதிமான்களின் பாதை. இப்போது, ​​புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை விசுவாசிக்கிறவர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம்.“புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின் சகோதர சகோதரிகள்” என்று பேசிய ஒருவரைப் பற்றி எனக்கு ஒரு கடிதம் வந்தது. புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின் சகோதரர் அல்லது சகோதரி என்றால் யார்? கிறிஸ்தவ ஐக்கிய சபையில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல. அல்லது உபதேசங்களைப் புரிந்துகொண்டவர் அல்ல, மாறாக அவர்கள் ஏற்ற இறக்கங்கள் இல்லாத ஜீவியத்தைக் கொண்டவர்கள். ஏற்ற இறக்கங்களுடன் இருப்பவர் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில் நடக்கவில்லை; அது பழைய, செத்த வழி. புதிதும் ஜீவனுமான மார்க்கம் பிரகாசத்தின் மேல் பிரகாசம், பிரகாசத்தின் மேல் பிரகாசம் என்று தொடர்ந்தேர்ச்சையாய் பிரகாசம் அடைந்து கொண்டே இருக்கும். புதிய ஏற்பாடு பேசும் ஒரே புதிதும் ஜீவனுமான மார்க்கம் அதுதான்: அதுவே நீதிமான்களின் பாதை. இந்த 'மனச்சோர்வுற்ற துக்ககரமான' நிலையானது, நாம் உபதேசங்களை மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறோம், ஆனால் மெய்யான ஜீவ மார்க்கத்தில் இன்னும் ஒரு காலடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதையே நிரூபிக்கிறது.

நீதிமான்களின் பாதை, பிரகாசமாகிக்கொண்டே செல்லும் சூரிய உதயத்தைப் போன்றது; சூரியன் முன்னும் பின்னுமாகச் செல்வதில்லை. அது திடீரென்று தன் மனதை மாற்றிக்கொள்வதில்லை. அது சீராகத் தன் பாதையில் சென்றுகொண்டே இருக்கிறது. சகோதர சகோதரிகளே, அதுவே நம்முடைய வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தமாயிருக்கிறது. மேன்மேலும் மேன்மையான ஜீவியத்தை நோக்கிச் செல்வதே தேவனுடைய சித்தம். அதாவது, என் மாம்சத்தில் குடிகொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி நான் மேலும் மேலும் அதிக வெளிச்சத்தைப் பெறுகிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு எனக்குத் தெரியாத என் மாம்சத்தில் குடிகொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி இப்போது நான் வெளிச்சம் பெறுகிறேன். நாம் இவ்வாறு நம்மைப் பற்றிய வெளிச்சத்தைப் பெறுகிறவர்களாய் இல்லையென்றால், நாம் நீதிமான்களின் பாதையில் இல்லை. வெறுமனே ஏதோ சில உபதேசங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாதபடி, இதை நாம் மிகத் தெளிவாக அறிந்து கொள்வோமாக. அந்தப் பாதை என் மாம்சத்தைப் பற்றி நான் மேலும் மேலும் அதிக வெளிச்சத்தைப் பெறக்கூடிய, ஒளியானது மேன்மேலும் பிரகாசமாகிக்கொண்டே செல்லும் பாதை. அல்லது “தேவன் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால்…” என்று 1யோவான் 1:7 கூறுவது போல தேவன் ஒளியாக இருக்கிறார், நான் அந்த ஒளியிலே நடந்தால், நான் தேவனுக்கு நெருக்கமாக வருகிறேன்; நான் தேவனுக்கு எவ்வளவு நெருக்கமாக வருகிறேனோ, அவ்வளவுக்கவ்வளவு ஒளி பிரகாசமாகிக்கொண்டே செல்கிறது. அதாவது, என் மாம்சத்தில் குடிகொண்டிருக்கும் காரியங்களைப் பற்றிய வெளிச்சத்தை அதிகமதிகமாய் பெறுகிறேன். என் ஜீவியத்தில் உள்ள அக்காரியங்களை நான் மேன்மேலும் மரணத்திற்குள்ளாக்க முடிகிறது, இவ்வாறு நான் அதிக ஞானமுள்ளவனாக மாறுகிறேன். இவ்விதமாகத்தான் இயேசுவும் ஞானத்தில் வளர்ந்தார்: அவர் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில் நடந்தார். லூக்கா 2:52-ல் இயேசுவானவர் ஞானத்தில் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, சாலொமோன் இங்கே (நீதிமொழிகள் 4:18-ல்) அதையேதான் கூறுகிறார்.

2கொரிந்தியர் 3:18-ல் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மகிமையை நமக்குக் காண்பிக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மகிமையானது ஓர் ஒளியாகும், மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை அதே கிறிஸ்துவின் சாயலாக மகிமையின்மேல் மகிமையடைய மறுரூபமாக்கும்போது, ​​அந்த ஒளியானது நம் வாழ்வில் மேன்மேலும் பிரகாசமடைகிறது. நீதிமொழிகள் 4:18 என்பது 2கொரிந்தியர் 3:18-க்கு இணையான பழைய ஏற்பாட்டு வசனமாகும். நீதிமொழியில் உள்ள இந்த வசனத்தைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் புதிய ஏற்பாட்டில் உள்ள அதற்கு இணையான வசனமான 2கொரிந்தியர் 3:18-ஐப் பார்க்க வேண்டும். அது, “...மகிமையின்மேல் மகிமை, மகிமையின்மேல் மகிமை” என்று கூறுவதைக் காணலாம்.

இந்த 2026-ம் ஆண்டு ​​உங்கள் அனைவருக்கும், பரிசுத்த ஆவியானவர் உங்களை மகிமையின்மேல் மகிமையடைய இயேசுவின் சாயலுக்கொப்பாக மாற்றுகிற, ஒரு மிகவும் ஆசீர்வாதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.