WFTW Body: 

நாம் பலவீனராய் இருக்கும்போதுதான் மெய்யாகவே பலசாலிகளாய் இருக்கிறோம்! (2கொரிந்தியர் 12:10).

ஆபிரகாம் தன் சொந்த பெலத்தினால் இஸ்மவேலைப் பெற்றான். ஆனால் தேவனோ அவனை அங்கீகரியாமல், “அவனை அனுப்பிவிடு” என்றே ஆபிரகாமிடம் கூறினார் (ஆதியாகமம் 17:18-21, ஆதியாகமம் 21:10-14). கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நாம் நிற்கும் நாளில், நாம் ஜெபிக்காமலும், தேவனைச் சாராமலும் இருந்துகொண்டு, திறமையினால் சாதித்த நன்மையான செயல்கள் எல்லாவற்றையும் அவருக்கு அர்ப்பணிக்கும்போது, நம்மிடமும்கூட அப்படியே “அங்கீகரிக்கமாட்டேன்” என்றுதான் சொல்லுவார்!! ஆம், அவையாவும் மரம், புல், வைக்கோலாய் காணப்பட்டு சாம்பலாகும்.

'தேவன் மூலமாய் செய்யப்பட்டது’ எதுவோ அது மாத்திரமே நிலைநிற்கும்!

ஆபிரகாம், பிள்ளைபெறுவதற்கான தன் சுய பெலன் எல்லாம் ஒழிந்து மலட்டுத்தன்மை அடைந்த பிறகுதான் “தேவ வல்லமையினால்" அவர் அங்கீகரித்த ஈசாக்கு பிறந்தான்!

தேவனைப் பொருத்தவரைக்கும் ஆயிரம் இஸ்மவேல்களைவிட ஒரு ஈசாக்கே மேல்! வேறு விதமாய் சொல்வோமென்றால், அக்கினியினால் சோதிக்கப்படும்போது ஒரு கிலோ மரத்தை விட ஒரு கிராம் தங்கமே அதிக மதிப்புடையது! சுயபெலத்தினால் செய்யப்பட்ட அநேக கிரியைகளைவிட பரிசுத்த ஆவியானவரின் துணையினால் செய்த சில கிரியைகளே மதிப்புள்ளது!

நாம் மனந்திரும்பினதற்கு முன்பும், பிறகும்கூட ‘நம் நற்கிரியைகள்' அழுக்கான கந்தைகள்தான். ஆனால் விசுவாசத்தினால் உண்டான நீதியும், ஆவியானவரைச் சார்ந்துகொண்டதினால் உண்டான ஊழியமும், ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண நாளில் நம்முடைய கல்யாண வஸ்திரமாய் இருக்கும் (வெளி 19:8). என்ன வித்தியாசம்! கந்தை வஸ்திரம் அல்ல, கல்யாண வஸ்திரம்!! நம்முடைய வாழ்க்கையை நம் சொந்த ஆத்தும பெலத்தினால் வாழ்ந்தோமா அல்லது தேவ பெலத்தால் வாழ்ந்தோமா என்பதில்தான் அந்த வித்தியாசம் அடங்கியிருக்கிறது.

இயேசுகிறிஸ்து தமது ஊழியத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் பெலனைச் சார்ந்தே இருந்தார். பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெறாமல், பிரசங்கிக்கிற ஊழியத்திற்கு அடியெடுத்து வைக்க அவர் ஒருபோதும் துணியவில்லை. அவர் ஏற்கனவே பரிசுத்த ஆவியானவரின் பெலன் கொண்டு பூரணமான பரிசுத்தத்தில் வாழ்ந்து, தம் பிதாவினிடத்திலிருந்து “இவர் என் நேசகுமாரன் இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” என்று சாட்சி பெற்றிருந்தார் (மத்தேயு 3:17). ஆனாலும் அவரது ஊழியத்திற்கு ஆவியனாவரின் அபிஷேகம் அவருக்குத் தேவையாய் இருந்தது. அதற்காக ஜெபித்தார், பெற்றுக்கொண்டார்! (லூக்கா 3:21). மேலும் அவர் பூமியில் வாழ்ந்திருந்த எல்லாரைக்காட்டிலும் நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுத்தபடியினால், எல்லாரைக் காட்டிலும் அதிகமாய் ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டார் (எபிரெயர் 1:9). அதன் விளைவாக, அவருடைய ஊழியத்தின் மூலம் ஜனங்கள் சாத்தானுடைய சிறைப்பிடியிலிருந்து விடுதலையானார்கள் - இதுதான் அபிஷேகத்தின் தலையாய நோக்கமும் பிரதான வெளிப்பாடுமாகும்! (லூக்கா 4:18; அப்போஸ்தலர் 10:38).

தேவனுடைய பணி மனுஷீகத் தாலந்துகளாலும் திறமைகளாலும் செய்யப்படுவதில்லை. இயல்பாகவே அதிகமான தாலந்து பெற்றவர்கள் மறுபடியும் பிறந்த பிறகு, இப்பொழுது தாங்கள் தங்களுடைய இயல்பான புத்திக்கூர்மையையும் உணர்ச்சிவசப்படுத்தும் வல்லமையையும் மற்றவர்களை தேவனுக்கு நேராக நடத்தப் பயன்படுத்திவிடலாம் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள்.

அநேக கிறிஸ்தவ ஊழியர்கள், தங்களுடைய பேச்சுத் திறனையும், புத்திக் கூர்மையையும், தெளிந்த வசனிப்பையும் கண்டு, அதை ஆவியானவரின் வல்லமை என்று தவறாய் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இவையாவும் ஆத்துமாவின் வல்லமைதான்! அவைகளைச் சார்ந்து கொள்வதால் தேவனுடைய ஊழியத்திற்குத் தடைதான் ஏற்படும்! மனுஷீக ஆத்தும பெலத்தால் செய்யப்படும் கிரியை நித்தியமானதல்ல. இம்மையில் அது அழியாவிட்டாலும், கிறிஸ்துவின் நியாயாசனத்தில் அது நிச்சயமாய் அழிந்து போகும்.

இயேசு, தம் சுய பேச்சுத்திறனையோ, உணர்ச்சிப் பெருக்கத்தையோ சார்ந்து கொண்டு ஜனங்களை தேவனிடத்திற்குத் திருப்பவில்லை. ஆத்தும பெலத்தினால் செய்கிற எந்த கிரியையும், கேட்கிறவர்களின் "ஆத்துமாவை மாத்திரம்தான்” தொடுமே ஒழிய அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவைகள் உதவாது என்று இயேசு அறிந்திருந்தார். அதே காரணத்தால்தான் அவர் எந்தவிதமான “இசை நிகழ்ச்சியின் மூலமாகவும்” ஜனங்களை தேவனிடத்திற்குத் திருப்ப முயற்சிக்கவில்லை!

தம்மைக் கேட்பதற்குக் கூடினவர்களின் உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு, தேவனிடத்தில் சரணடையும்படி மனுஷீகமாய் அவர்களை உந்தி முயற்சிக்கவில்லை. இன்றைய சுவிசேஷகர்கள் கையாளும் மற்ற எந்த ஆத்தும மனுஷீக உபாயங்களையும் அவர் கையாளவில்லை. இவைகளெல்லாம் அரசியல்வாதிகளும் விளம்பரதாரர்களும் கையாளுகின்ற உத்திகள்! இயேசுவோ, அவர்களில் ஒருவரல்ல!

யெகோவாவின் ஊழியக்காரரான அவர், தம் எல்லாப் பிரயாசத்திற்கும் பரிசுத்த ஆவியானவரையே முற்றிலும் சார்ந்திருந்தார். அதன் விளைவாகவே, அவரைப் பின்பற்றினவர்கள் அவரைப்போலவே தேவனுடைய ஆழ்ந்த ஜீவியத்திற்குள் பிரவேசித்தார்கள்!!

தமது கருத்துக்கு மற்றவர்களையும் இசையச் செய்யும்படிக்குத் தமது ஆத்தும வல்லமையைப் பிறரிடம் இயேசு ஒருபோதும் திணித்ததில்லை. அவர் தம்மையேகூட கட்டாயமாய் பிறரிடத்தில் புகுத்தவில்லை! பிறர் விரும்பினால் 'தம்மை நிராகரிக்கும்படிக்கு' அவர்களுக்கு எப்போதும் சுதந்திரம் கொடுத்திருந்தார். ஆத்தும கிறிஸ்தவத் தலைவர்களோ, தங்களுடைய மந்தையின் மீதும் சக ஊழியக்காரர்கள் மீதும் தங்களுடைய பலத்த வசீகரத்தின் மூலம் ஆளுகை செலுத்துகிறார்கள்! ஜனங்கள் இப்படிப்பட்ட தலைவர்களுக்குப் பயந்து, அவர்களை மகிமைப்படுத்தி, அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படியே கீழ்ப்படிகிறார்கள்!!

திரளான ஜனங்கள் இப்படிப்பட்ட தலைவரைச் சுற்றி மந்தையாய் இருந்தாலும், அவர்கள் ஏகமாய் ஒற்றுமையாய் இருந்தாலும், அவை யாவும் ஒரு தலைவனுக்குச் செலுத்தும் பயபக்தியே ஒழிய, மெய்யான ஐக்கியம் அல்ல! இப்படிப்பட்ட தலைவர்கள் ஆவியையும் ஆத்துமாவையும் பிரிக்கத் தெரியாதவர்களாய் இருக்கிறபடியால், தங்களிடம் உள்ள வல்லமை ஆவியானவரின் வல்லமை என்று எண்ணிக்கொண்டு தங்களையே வஞ்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுகிறவர்களும் அப்படியே வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நியாயாசனத்தின் தெளிவான வெளிச்சம், அது தேவனுடைய கிரியைக்குத் தடையாயிருக்கும் மனுஷீக ஆத்தும பெலன் என்பதையே வெளிப்படுத்துகிறது!!

இயேசுவோ, இப்படிப்பட்ட ஒரு தலைவராய் இல்லை! எந்தவொரு உண்மைக் கிறிஸ்தவனும் அப்படிப்பட்டவனாய் இருக்கக்கூடாது!! ஆத்தும வல்லமையைப் பிரயோகிப்பது, மனிதனுக்கு தேவன் வைத்த பிரமாணத்தை மீறுவதாயும், அவருடைய ஊழியத்திற்கு அது தடையாகவும் இருக்கும் என்று உணர்ந்து, அதைப் பிரயோகிப்பதற்கு நாம் பயந்திட வேண்டும்!!

மெய்யான ஆவிக்குரிய ஊழியம் ஒருபோதும் மனுஷீக ஆத்தும பெலனால் செய்யப்பட முடியாது. அது பரிசுத்த ஆவியின் வல்லமையினால்தான் முடியும். இயேசுகிறிஸ்து இதை அறிந்திருந்தார். ஆகவேதான், தம் ஆத்தும வல்லமையை சதா மரணத்தில் ஊற்றினார். இவ்விதமாய், குறைந்த காலத்தில், தம்மைப் பின்பற்றினவர்களிடத்தில் ஓர் ஆழமான, நிலையான கிரியையை அவரால் நடப்பிக்க முடிந்தது.