வெளிப்படுத்தின விசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரலோக காட்சித் துளிகள் ஏழிலும், பரலோகத்தில் குடியிருப்பவர்கள் தொடர்ந்து உரத்த சத்தமாய் (சில சமயங்களில் இடியின் சத்தத்தைப் போன்றும், ஆறுகள் இரைச்சலிடும் சத்தத்தைப் போன்றும் அதிக சத்தமாய்) தேவனைத் துதிக்கிறதைக் காண்கிறோம். இதுதான் பரலோக சூழல் - எந்தவொரு குறைசொல்லும் வற்புறுத்தலும் இல்லாமல் தொடர்ச்சியான துதி நிறைந்த ஒரு சூழல். இந்த சூழலையே பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும், சபைகளுக்குள்ளும் கொண்டு வர விரும்புகிறார். இவ்வாறாகத் தான் இந்த எல்லா இடங்களிலிருந்தும் சாத்தான் துரத்தப்படுவான்.
வெளிப்படுத்தின விசேஷம் 4:10-ல் பரலோகத்தின் ஒரு அம்சம் காணப்படுகிறது. மூப்பர்கள் "தங்கள் கிரீடங்களைத் தேவனுக்கு முன்பாக வைத்தார்கள்" என்று அங்கே வாசிக்கிறோம். பரலோகத்தில் இயேசு மாத்திரமே தம்முடைய தலையில் கிரீடத்தை வைத்திருப்பார். மீதமுள்ள நாம் அனைவருமே சாதாரண சகோதர சகோதரிகளாக இருப்போம். பரலோகத்திலே சிறப்பான சகோதர சகோதரிகள் என்று யாரும் இல்லை. சபையிலே மேன்மையான சகோதர சகோதரிகளாக இருக்க நாடுகிறவர்கள், நரக சூழலையே சபைக்குள் கொண்டு வருகிறார்கள். பிதாவிற்கு முன்பாக நாம் நிற்கும்போது எதைக் குறித்தும் நாம் ஒருபோதும் மேன்மை பாராட்டவும் மாட்டோம். நமக்கு உண்டான யாவற்றையும் அவருக்கு முன்பாக வைப்போம். அவர்கள் வைத்திருக்கும் எதைக் குறித்தும் "இது என்னுடையது" என்று பரலோகத்திலே யாரும் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் (அவர்கள் பெற்றிருக்கும் கிரீடத்தைக் குறித்தும் கூட அப்படிச் சொல்ல மாட்டார்கள்). நம்முடைய சபைகளில் பரலோக சூழல் உட்புகுந்து பரவத் தொடங்கும் போது, நமக்கு உண்டான எதைக் குறித்தும் "இது என்னுடையது" என்று நாமும்கூட இனி ஒருபோதும் சொல்லவே மாட்டோம். எல்லாமே தேவனுடையதாகவும், தேவனுடைய இராஜ்ஜியம் பூமியில் பரவுவதற்காக அவைகள் இருப்பதாகவும் கருதப்படும்.
தேவனுடைய சித்தம் பரலோகத்தில் எவ்வாறு செய்யப்படுகிறது? நான்கு காரியங்களை நான் குறிப்பிடுகிறேன். முதலாவதாக, அவருடைய கட்டளைகளுக்காக "தேவனுக்குக் காத்திருக்கும்" ஒரு நிரந்தர நிலையில் தேவதூதர்கள் இருக்கிறார்கள். தேவன் முதலில் பேசுவதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் - அதன் பிறகுதான் அவர்கள் செயல்படுகிறார்கள். ஆகவே, "உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத்தேயு 6:10)" என்று நாம் ஜெபிப்பதின் அர்த்தம் இதுதான்: முதலாவதாக, தேவன் நம்மிடம் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம். இரண்டாவதாக, தேவன் பேசும்போது, தேவதூதர்கள் “உடனடியாக” கீழ்ப்படிகிறார்கள். மூன்றாவதாக, பரலோகத்தில் தேவன் எதையாவது கட்டளையிடும்போது, அது “முழுமையாக” செய்யப்படுகிறது. இறுதியாக, தேவதூதர்களின் கீழ்ப்படிதல் “மகிழ்ச்சி நிறைந்ததாக” இருக்கிறது.
பரலோகத்தில் அருமையான ஐக்கியமுண்டு. அங்கே ஒருவர் மற்றொருவரை அடக்கி ஆளுகை செய்யாமல் ஒருவருக்கொருவர் பணிவிடைக்காரர்களாய் இருக்கிறார்கள். தேவன் அங்கே பிதாவாக இருப்பதால், பரலோகம் முற்றிலும் வேறுபட்ட ஆவியை உடையதாக இருக்கிறது. அவர் ஜனங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை அன்புடன் மேய்த்து, அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார். அந்த சுபாவத்தில் தான் நாம் பங்குகொள்ள வேண்டும். இப்பொழுது நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், பரலோகத்தில் நமக்குக் கிரீடங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. அதன் பொருள் என்ன? நாம் ஜனங்களை ஆளுகை செய்வோம் என்று அர்த்தமா? இல்லை, இல்லவேயில்லை. அதன் பொருள் என்னவென்றால், இந்த பூமியிலே நம்முடைய சகோதரர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற வாஞ்சை கொண்டிருந்தாலும் நம்முடைய அநேக குறைபாடுகளினிமித்தம் அதைப் பூரணமாகச் செய்ய முடியவில்லை. ஆனால் பரலோகத்தில் நம்முடைய எல்லா குறைபாடுகளும் நீங்கிவிட்டது என்பதை நாம் கண்டறிந்து, மற்றவர்களுக்குப் பூரணமாகப் பணிவிடை செய்ய முடியும். இப்படியாக, நம்முடைய இருதயங்களின் வாஞ்சை நிறைவேற்றப்படும். இயேசுவே பரலோகத்தில் மிகப்பெரிய நபராகவும் எல்லோரிலும் மிகப்பெரிய ஊழியக்காரனாகவும் இருப்பார். அவருடைய ஆவி என்றென்றும் ஒரு பணிவிடை செய்யும் ஆவியாக இருக்கும். தேவன் சபையைப் பூமியிலே பரலோகத்தின் ஒரு சிறிய மாதிரியாக மற்றவர்கள் ருசித்துப்பார்க்க வைத்திருக்கிறார். பரலோக சூழலை ஒரு சபைக்குள் கொண்டு வந்து, அந்த சபையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சகோதரனோ அல்லது சகோதரியோ தான் எந்தவொரு சபையிலும் மிக விலையேறப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மூத்த சகோதரர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. நாம் எல்லோருமே இதுபோன்ற விலையேறப்பெற்ற சகோதரா்களாயும் சகோதரிகளாயும் மாறும்படியான வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். சபையிலுள்ள ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ எண்ணிப்பாருங்கள், அவர்கள் சபைக் கூட்டத்திற்கோ அல்லது ஒரு வீட்டிற்கோ வரும்போதெல்லாம், பரலோகத்திலிருந்து ஓர் தூய்மையான தென்றல் அந்த அறையில் வீசுகிறதை போல இருக்கிறது. அப்படிப்பட்ட சகோதரனோ அல்லது சகோதரியோ எவ்வளவு விலையேறப் பெற்றவர்கள்! இப்படிப்பட்டவர்கள் உங்களைச் சந்தித்து உங்களிடம் வெறுமனே ஐந்து நிமிடம் செலவிட்டாலும், நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். ஐந்து நிமிடம் உங்கள் வீட்டிற்குப் பரலோகம் வந்ததைப் போல உணர்கிறீர்கள்! அவர் ஒரு பிரசங்கத்தையோ அல்லது வேதத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டையோ உங்களுக்குக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் மந்தமாகவோ அல்லது மனச்சோர்வாகவோ இல்லாமல், எவர்மீதும் குறை சொல்லாமல், அவ்வளவு தூய்மையாக இருந்தார்கள்.