தேவன் சொல்வதை செவிசாய்த்துக் கேட்டிட ஒவ்வொரு நாளும் நேரம் செலவிடுங்கள்.
வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில் திரும்பத் திரும்ப கூறப்பட்ட வாசகம்: “பின்பு/அப்பொழுது தேவன்... ...என்றார் (Then God Said)” என்பதுதான்.
ஒழுங்கின்மையான பூமியை மீண்டுமாய் தேவன் சிருஷ்டித்த போது, அந்த முதல் ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் தேவன் ஏதாகிலும் ஒன்றைச் சொன்னார்! இவ்வாறு தேவன் பேசிய ஒவ்வொரு சமயத்திலும், பூமியானது ஒரு மேன்மையான ஸ்தலமாய் 'உருமாற்றம்' அடைந்தது!
ஆகவே, வேதாகமத்தின் முதல் பக்கத்திலேயே ஒரு முக்கியமான சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. அது என்னவெனில், "தேவன் நம்மோடு என்ன பேசுகிறார் என்பதை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கேட்க வேண்டும்” என்பதுதான். இவ்வாறு ஒவ்வொரு நாளும் தேவன் நம்மோடு பேசுகிறவைகளுக்கு மிகுந்த கவனமாய் நாம் கீழ்ப்படிந்துவிட்டால், நாம் சிறந்த ‘பயனுள்ள' கிறிஸ்தவர்களாய் மறுரூபமடைந்துவிடுவோம்!
தேவன் நம்மோடு பேசுவதைக் கேட்பதற்கும் (hearing), வேதாகமத்தை வழக்கமாய் வாசிப்பதற்கும் (reading) இடையில் ஏராளமான வித்தியாசம் உண்டு. தங்கள் வேதத்தை நாள்தோறும் வாசித்த ஜனங்கள் தான் ஆண்டவரை சிலுவையில் அறைந்தார்கள் என்பதை நாம் மனதில் கொள்ளக்கடவோம். அவர்கள் வேதத்தைக் கற்றார்கள், ஆனால், அவர்களுடைய இருதயத்தில் தேவன் பேசியதையோ அவர்கள் ஒரு சமயங்கூட கேட்கவேயில்லை (அப்போஸ்தலர் 13:27). இதே அபாயம் நமக்கும் இருக்கிறதே! இந்த அபாயத்திற்குள் நாம் விழுந்துவிட்டால் அன்றிருந்த ஜனங்களைப்போலவே நாமும் ஆவிக்குரிய குருடர்களாய் மாறி விடுவோம்!
ஆதியாகமம் முதலாம் அதிகாரம் “நம்மிடம் தேவன் ஒவ்வொரு நாளும் பேச விரும்புகிறார்” என்பதையும் நமக்கு போதிக்கிறது.
ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவன் பேசுவதை ஒவ்வொருநாளும் கேட்பதில்லை! அதற்குப் பதிலாய் மனிதர்கள் எழுதிய புத்தகங்களை மாத்திரமே வாசிக்கிறார்கள்!
தேவன் எப்போதெல்லாம் பேசினாரோ, அப்போதெல்லாம் "இயற்கைக்கு அப்பாற்பட்ட” சம்பவங்கள் நடந்தன என்பதை ஆதியாகமம் 1-ம் அதிகாரம் தெளிவாய்க் காட்டுகிறது. இதைப் போலவே, நம் இருதயங்களில் தேவன் பிரதானமாய் பேசியிருப்பவற்றையே நாம் பிரசங்கிப்பவர்களாக இருந்தால், நம்முடைய ஊழியத்திலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்த கிரியைகள் நிச்சயமாய் சம்பவிக்கும்!
பவுல் தீமோத்தேயுவுக்குக் கூறும் போது "நீ உபதேசிப்பதற்கு முன் உன் ஜீவியத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இரு” என்றார். ஏனென்றால், “அப்போதுதான் அந்த உபதேசத்தின் மூலமாய் நீயும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களும் இரட்சிக்கப்படுவார்கள்” என வலியுறுத்திக் கூறினார் (1தீமோத்தேயு 4:16), நம்மை நாமே வஞ்சித்துக்கொள்வதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள ஒரே வழி “தேவன் என்னோடு என்ன பேச விரும்புகிறார்?” என்பதை கவனித்துக் கேட்பதேயாகும்!
இவ்வாறு மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்காமல், அதிகப்படியான வேலையில் மிகுந்த அலுவலாயிருந்த மார்த்தாளை இயேசு ஒருசமயம் கடிந்து கொண்டார். இந்த மரியாள் செய்ததை இயேசு மெச்சிக் கொண்டபோது, மரியாள் செய்தது தான் ஜீவியத்திற்குத் தேவையான ஒரே காரியம் எனக்கூறினார் (லூக்கா 10:42). அன்று சாமுவேல் கூறியது போல, “கர்த்தாவே சொல்லும், உமது அடியான் கேட்கிறேன்” என்ற மனப்பான்மையே இன்று நாம் யாவரும் பெற்றிருக்க வேண்டும்.
வேதாகமத்தின் முதல் பக்கத்தில் நாம் காண்பது என்ன? தேவன் பேசிய போதெல்லாம் ஏதாவது ஒரு செயல் நிறைவேறியதைக் காண்கிறோம்... ஒளி உண்டாயிற்று! ஜலத்திலிருந்து பூமி பிரிக்கப்பட்டது! மரங்களும், மீன்களும், மிருகங்களும் சிருஷ்டிக்கப்பட்டன...!!
ஆம், ஏசாயா 55:10,11-ம் வசனங்கள் கூறுவதைப்போல் தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள், அவர் விரும்பியதை “நிறைவேற்றாமல்” வெறுமையாய் திரும்பியதில்லை! எதற்காகப் பேசினாரோ அதற்கான “காரியம் வாய்க்காமல்'' இருந்ததும் இல்லை என்றே காண்கிறோம்.
இந்த வசனத்தில் 1) நிறைவேற்றுவது (சாதனை - accomplishing) 2) காரியம் வாய்ப்பது (வெற்றி - succeeding) எனக் கூறப்பட்ட வார்த்தைகள், இவ்வுலகத்தில் உள்ள எல்லா ஜனங்களாலும் அதிகம் மதிப்பிடப்படும் வார்த்தைகளேயாகும்.
நாம் யாவருமே, நம் ஜீவியத்தில் ஒன்றை நிறைவேற்றுவதற்கும் (சாதனை புரிவதற்கும்), யாதொரு காரியமாயிருந்தாலும் அது ஜெயமாய் வாய்க்கப்பண்ணப்படுவதற்கும் விரும்புகிறோம். ஆனால் பல்வேறு வழிகளைச் சோதித்து, அவற்றுள், சாதனை புரிவதற்கும் காரியம் வாய்ப்பதற்கும் ஏற்ற வழியைக் கண்டிபிடிப்பதற்கு நம்முடைய ஜீவிய காலமோ மிகவும் குறுகியதாய் இருக்கிறதே! அதுவும் குறிப்பாக “ஆவிக்குரிய விஷயங்களுக்கு” இவ்வித பரிசோதனைகளைப் பரிசீலித்து கண்டு பிடிப்பதற்கோ நம் காலம் போதாது என்பது திண்ணம்! ஏதோ சில வழிமுறைகள் மூலமாய் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய முயற்சித்து, சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு அந்த வழிமுறைகள் தேவனுடைய வழிகள் அல்ல என்றும் நாம் தவறான வழித்தடத்தில் ஓடியிருக்கிறோம் என்றும் கண்டறிவதில் என்ன பிரயோஜனம்? இவ்வித காலவிரயத்திலிருந்து நம்மை இரட்சித்துக் கொள்ள ஒரே வழி “தேவன் பேசும் வார்த்தைகளை உன்னித்துக் கேட்பதேயாகும்”. இவ்வாறு செய்வது எப்போதுமே ஜெயத்தையும், நிறைவேறுதலையும் கொண்டுவந்து தரும்!