யாத்திராகமம் 15-ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் தேவனைத் துதிப்பதில் தொடங்கி அவருக்கு எதிராக முறுமுறுப்பதில் முடிகிறது. இதே காரியத்தை இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் மீண்டும் மீண்டும் செய்தார்கள். பெரும்பாலான விசுவாசிகளின் வாழ்க்கையும் இப்படித் தான் மேலேயும் கீழேயும் பாயும் கடல் அலைகளைப் போல இருக்கிறது–அவர்கள் விரும்பியதைப் பெறும்போது தேவனைத் துதிப்பார்கள், ஏதேனும் தவறு நடந்து விட்டால் மீண்டும் குறை கூறுவார்கள்; அதைக் கடந்து விட்டால் மீண்டும் தேவனுக்கு நன்றி செலுத்துவார்கள், அடுத்த பிரச்சனை எழும் போது மீண்டும் தேவனை சந்தேகிப்பார்கள். ஏனென்றால், பெரும்பாலான விசுவாசிகள் இஸ்ரவேலர்களைப் போலவே தரிசித்து (கண்டு) வாழ்கிறார்களே அல்லாமல் விசுவாசித்து வாழ்கிறதில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் தங்கள் கூட்டங்களில் (சில சமயங்களில் அந்நியபாஷையில்) தேவனை உரக்கத் துதிக்கிறார்கள். ஆனால், ஞாயிறு மதியம் முதல் அவர்களுடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவர்களுடைய தாய்மொழியில் பேசும் அவர்களது பேச்சு வித்தியாசமாகவும், கோபம், முறுமுறுப்பு மற்றும் குறைசொல்லல் நிறைந்ததாயும் காணப்படுகிறது!! பின்னர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அலை மேலே எழுகிறது, அவர்கள் மீண்டும் தேவனைத் துதிக்கத் தொடங்குகிறார்கள்.
அதன் பிறகு மீண்டும் அலை கீழே விழுகிறது!! தம்முடைய புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள் இப்படி வாழ்வது நிச்சயமாக தேவனுடைய நோக்கத்தில் இல்லை. ஒருவருக்கு அந்நியபாஷை வரத்தை அளிக்கும் பரிசுத்த ஆவியானவரால் அவரது தாய்மொழியிலும் அவரது பேச்சைக் கட்டுப்படுத்த முடியாதா? அவரால் நிச்சயமாக முடியும். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். எல்லாவற்றிலும் ஸ்தோத்திரியுங்கள்” (பிலிப்பியர் 4:4; எபேசியர் 5:20) என்று வேதம் கூறுகிறது.
அதுவே புதிய உடன்படிக்கையில் எல்லா நேரங்களிலும் நமக்கான தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆனால் அதைச் செய்ய, நாம் விசுவாசத்தினால் வாழ வேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தேவன் ஏற்கனவே ஒரு தீர்வைத் திட்டமிட்டிருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும்.
இஸ்ரவேலர்கள் மோசேயினிடத்தில் முறையிட்டபோது, அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். “பிரச்சினைக்கான தீர்வு அங்கே உன் முன்பாகவே இருக்கிறது” (யாத்திராகமம் 15:25) என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காட்டினார். மோசே மரத்தை வெட்டி தண்ணீரில் போட்டான், தண்ணீர் மதுரமாக மாறியது.
அந்த மரத்தை வனாந்தரத்தில் நட்டது யார்? அது ஒரு மனிதனா அல்லது கர்த்தரா? எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, கர்த்தரே அதைச் செய்தார்! வனாந்தரத்தில் மனிதர்கள் மரங்களை நடுவதில்லை. ஒருவேளை 100 ஆண்டுகளுக்கு முன்பே கர்த்தர் அந்த மரத்தை மாராவுக்கு அருகில் நட்டிருப்பார். ஏனென்றால், 100 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் மாராவுக்கு வருவார்கள். அதன் தண்ணீர் கசப்பாக இருப்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். எனவே அவர்களது பிரச்சனைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு காண அவர் திட்டமிட்டிருந்தார். நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அதே கர்த்தர் உங்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைத் திட்டமிட்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
இதை நம்புவது தான் விசுவாசத்தால் நடப்பதாகும். எந்தப் பிரச்சனையும் இன்று திடீரென்று தோன்றி தேவனை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதில்லை. பிசாசு நமக்காக என்னென்ன பிரச்சனைகளைத் தயார் செய்கிறான் என்பதை தேவன் முன்பே அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவை அனைத்திற்கும் முன்கூட்டியே ஒரு தீர்வையும் வைத்திருக்கிறார்! அதனால் நீங்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
நான் ஒரு விசுவாசியாக 56 வருடங்களில் பல பிரச்சனைகளை எதிர் கொண்டதன் பின்னர், இதன் உண்மைத் தன்மைக்கு என்னால் சாட்சியமளிக்க முடியும். தேவன் ஒரு தீர்வைத் திட்டமிடாத எந்த ஒரு பிரச்சனையையும் நான் இதுவரை சந்தித்ததில்லை! நான் என் வாழ்க்கையின் மாராக்களுக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தண்ணீர் எனக்கு மதுரமாக மாறும்பொருட்டு, மரங்கள் உண்டாகும்படி அவர் ஏற்கனவே விதைகளை விதைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் “நமக்காக அமைதியாக அன்பில் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்” (செப் 3:17 - பொழிப்புரை). இந்த அற்புதமான, அன்பான தந்தையின் மீது விசுவாசம் வைத்து நடக்கும்படி உங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விசுவாசிக்கும்போது, உங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்வீர்கள். உங்கள் நாவில் குறைகூறுதலும், முறுமுறுப்பும், கோபங்களும் இனி ஒருபோதும் காணப்படாது; மாறாக, தேவனுக்கு துதியும், நன்றியும் மட்டுமே செலுத்துவீர்கள்.