WFTW Body: 

இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களாக இருக்கும்படி இளம் வாலிபர்களையே அழைத்தார். ஓர் அப்போஸ்தலராக இருக்கக் குறைந்தபட்சம் 60 அல்லது 65 வயது இருக்க வேண்டும் என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் இயேசு 30 வயதுடையவர்களைத் தம்முடைய முதல் அப்போஸ்தலர்களாகத் தெரிந்துகொண்டார். இயேசு மரித்தபோது அவருக்கு வயது 33½ மட்டுமே. அவருடைய பதினொரு அப்போஸ்தலர்களும் அவரை விட வயது குறைந்தவர்களாகவே இருந்தனர். ஏனென்றால் யூத குருமார்கள் எப்போதும் தங்களை விட வயதில் குறைந்தவர்களையே தங்களுடைய சீஷர்களாகத் தெரிந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். பெந்தெகொஸ்தே நாளன்று யோவானுக்கு 30 வயது மட்டுமே இருந்திருக்கக் கூடும்.

இயேசு இந்த வாலிபர்களை அழைத்தபோது, அவர்களுடைய அனுபவத்தைப் பார்க்காமல், அவர்கள் முழு இருதயம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையே பார்த்தார். பெந்தெகொஸ்தே நாளில் இந்த வாலிபர்கள் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டு, கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகும்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலே தகுதிபெற்றனர். அவர்களின் அனுபவமும் முதிர்ச்சியும் பின்னரே வந்தன. தீமோத்தேயுவும் கூட மிகவும் இளம் வயதிலேயே ஓர் அப்போஸ்தலரானார் (1தீமோத்தேயு 4:12).

இன்றும் தேவன் தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு வாலிபர்களையே அழைக்கிறார். ஆனால் அவர்கள் தாழ்மையிலே நிலைத்திருக்க வேண்டும். தேவனால் அழைக்கப்பட்ட எந்த வாலிபனும் சந்திக்கும் முக்கியமான ஆபத்து ஆவிக்குரிய பெருமையாகும்.

தேவனுடைய ஊழியர்களாய் அழைக்கப்பட்ட வாலிபர்கள் தங்களுடைய அழைப்பிலிருந்து வீழ்ச்சியடைந்த அநேக துயரமான நிகழ்வுகளை இந்தியாவில் நான் பார்த்திருக்கிறேன். சில நிகழ்வுகளில், தேவன் அவர்களை ஏதாகிலும் ஒருவகையில் உபயோகப்படுத்தத் தொடங்கியவுடன் அவர்கள் பெருமையடைந்து தேவனுக்குச் சொந்தமான மகிமையைத் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டபடியால் தேவன் அவர்களை ஒதுக்கிவைக்க வேண்டியதாயிற்று. வேறு சில நிகழ்வுகளில், அவர்கள் உலகத்தின் சௌகரியத்தைத் தேடி, நல்ல சம்பளம் கொடுக்கும் மேற்கத்தியக் கிறிஸ்தவ அமைப்புகளில் சம்பளம் பெறும் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். இவ்வாறு இவர்கள் பிலேயாமைப் போல வழிதவறிப் போனார்கள். இன்னும் சில நிகழ்வுகளில், சௌந்தரியமிக்க தெலீலாள்களால் ஈர்க்கப்பட்டு சிம்சோனைப் போல தங்கள் அபிஷேகத்தை இழந்தனர். இவ்வாறு, மனுஷருடைய புகழ்ச்சியையும் பணத்தையும் பெறுவதற்காகவோ அல்லது சௌந்தரியமிக்க ஸ்திரீகளின்மீதுள்ள தங்களுடைய இச்சையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ தேவனுடைய அழைப்பையும் தங்களுடைய அபிஷேகத்தையும் இந்த அருமையான வாலிபர்கள் பலி கொடுத்து விட்டார்கள்.

பணத்திற்காகவோ, அழகான ஸ்திரீகளுக்காகவோ அல்லது ஜனங்களின் அங்கீகாரத்திற்காகவோ கவலைப்படாமல் தேவனுடைய வார்த்தையை அச்சமின்றிப் பேசுகிற தேவனுடைய தீர்க்கதரிசிகள் இன்று இந்தியாவில் எங்கே இருக்கிறார்கள்?

அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது. தேவனால் அழைக்கப்பட்டவர்களில் அநேகர், தங்களுடைய பயணத்தின் பாதையிலே வீழ்ச்சியடைந்து விட்டனர்.

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஆவிதான். நாம் நொறுங்குண்டவர்களாய் தாழ்மையுடன் இருந்தால், தேவன் எப்போதும் நம்மைப் பயன்படுத்துவார். ஆனால், நாம் தேவனிடத்திலிருந்து பெற்ற பெரிதான வெளிப்பாடுகளின் நிமித்தமோ அல்லது தேவன் நமக்குக் கொடுத்த மகத்தான ஊழியத்தின் நிமித்தமோ நாம் ஒரு பொருட்டுள்ளவர்களாக (விசேஷித்தவர்களாக) மாறிவிட்டோம் என்று எண்ணும் நாளில் தானே பின்மாற்றம் அடையத் தொடங்குகிறோம். அப்போது தேவன் நம்மை ஒதுக்கி வைத்துவிடுவார்.

நாம் இன்னும் ஏதோவொரு சபையிலே மூப்பர்களாக நம் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டோம் என்பதை நித்தியத்தில் கண்டுபிடிப்போம்.