இயேசு கிறிஸ்துவுக்கு சீஷனாயிருக்கும் ஒருவர், மனுஷர்களுக்குப் பயந்தோ அல்லது சூழ்நிலைகளுக்குப் பயந்தோ தீர்மானங்கள் எடுத்திடக்கூடாது!
என்னுடைய வீட்டின் முகப்பு அறையில், “நீங்கள் தேவனுக்குப் பயந்திருந்தால், வேறு எதற்குமே பயப்படத் தேவையில்லை” என்ற வசனத்தைப் பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருக்கிறேன். இந்த வசனம் ஏசாயா 8:12,13 வசனங்களின் லிவிங் வேதாகமப் பொழிப்புரையாகும். கடந்த 25 ஆண்டுகளாய், இந்த வசனம் எனக்குப் பேருதவியாய் இருந்து வருகிறது.
"பயம்” என்ற விஷயத்தில், நான் ஆண்டவரிடமிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களில் சிலவற்றை இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எல்லாவற்றிற்கும் முதலாவதாய், சாத்தானுடைய ஆயுதசாலையில் ‘பயமே' பிரதான ஆயுதமாய் இருக்கிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
இரண்டாவதாக நான் கற்றுக்கொண்ட சத்தியம் யாதெனில், சில சமயங்களில் எனக்கு பயத்தின் உணர்வு வந்தால், அதைக் குறித்து நான் என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக்கொள்ளத் தேவையில்லை.... ஏனெனில், நான் இன்னமும் மாம்சத்தில்தான் இருக்கிறேன். நாம் இதைக் குறித்து நடைமுறையான யதார்த்தமுள்ளவர்களாயும், நேர்மையாகவும் இருந்திட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் நேர்மையுள்ளவராயிருந்து, சில சமயங்களில் “தனக்குள்ளே பயங்களும் இருந்தன” (2கொரிந்தியர் 7:5) என்று ஒத்துக்கொண்டாரே!
மூன்றாவதாய் நான் கற்றுக்கொண்டது யாதெனில் (இது மிகவும் முக்கியமானது), எனக்குள் பயமே வந்துவிட்டாலும், அந்த பயத்தின் அடிப்படையில் நான் எந்தத் தீர்மானமும் எடுத்துவிடக் கூடாது என்பதேயாகும். என்னுடைய தீர்மானங்கள் எப்போதும், பயத்திற்கு நேர் எதிராயிருக்கும் “தேவன் மீது கொண்ட விசுவாசத்தின்” அடிப்படையில் மாத்திரமே இருக்க வேண்டும். இவ்விதமாகவே நான் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வருகிறேன். அதனிமித்தமாய், தேவன் உண்மையுள்ளவராயிருந்து தம்முடைய உதவியையும், உற்சாகத்தையும் அதிகமாய் எனக்குத் தந்துவருகிறார்.
“பயப்படாதிருங்கள், பயப்படாதிருங்கள், பயப்படாதிருங்கள்” என இயேசு திரும்பத் திரும்பக் கூறியது ஏன் என்ற காரணத்தை இப்போது நான் அறிந்திருக்கிறேன்.
இந்த வலியுறுத்துதலானது புதிய ஏற்பாட்டில் “பாவம் செய்யாதிருங்கள், பாவம் செய்யாதிருங்கள், பாவம் செய்யாதிருங்கள்” என்ற வலியுறுத்தலுக்கு இணையான முக்கியத்துவம் உடையதாகவே இருக்கிறது!
இயேசு எப்போதுமே “பாவத்துக்கு” எதிர்த்து நின்றார்! அதே போல், “பயத்துக்கும்” அவர் சதா எதிர்த்தே நின்றார்! தேவன் ஒருவருக்கேயன்றி வேறு எதற்கும் பயப்பட வேண்டாம் என மத்தேயு 10:28-ம் வசனத்தில் இயேசு கூறினார். இந்தப் பாடம் நாம் யாவரும் கற்றிருக்க வேண்டிய மிக முக்கியமான பாடமாகும். ஏனெனில், ஓர் ஆவிக்குரிய தலைவன் எந்தத் தீர்மானத்தையும் பயத்தின் அடிப்படையில் எடுக்கவே கூடாது!
என்னுடைய அறையில் நான் பல ஆண்டுகளாய் தொங்க விட்டிருந்த மற்றொரு வசனம்: "நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே” (கலாத்தியர் 1:10).
நீங்கள் மனுஷரைப் பிரியப்படுத்த நாடினால், ஆண்டவருடைய ஊழியனாய் ஒரு போதும் இருந்திடவே முடியாது! மனுஷரைப் பிரியப்படுத்துவதிலிருந்து விடுதலையாவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
யாரோ ஒருவரை நீங்கள் பிரியப்படுத்தாததினிமித்தம், ஏதாகிலும் ஒருவகையில் அவர் உங்களுக்குத் தீங்கு செய்துவிடுவாரோ என்ற பயம் உங்கள் இருதயத்தில் இருந்தால்... அவரை எப்பொழுதும் பிரியப்படுத்தவே முயற்சிப்பீர்கள். இதுதான் உங்கள் நிலையென்றால் நீங்கள் தேவனுடைய ஊழியக்காரனாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது! பயத்தின் அடிப்படையில் நீங்கள் ஏதாவது கிரியை நடப்பிப்பீர்களானால், அவ்வாறு உங்களை நடத்துவது “பிசாசுதானே” அன்றி தேவன் அல்லவே அல்ல!
நம் கடந்தகால ஜீவியத்தைத் திரும்பிப் பார்த்தால், பயத்தின் அடிப்படையில் தான் நாம் அநேகத் தீர்மானங்களை எடுத்திருக்கிறோம் என்பதைக் காண முடியும். இந்த எல்லாத் தீர்மானங்களிலும், நாம் தேவனால் நடத்தப்படவேயில்லை! அந்தத் தீர்மானங்களில் சிலவற்றின் விளைவுகள் மோசமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாமோ தேவன் நமக்கென்று வைத்திருந்த மிகச் சிறந்ததை இழந்துவிட்டோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! இனிமேல், எதிர்காலத்தில் நாம் கவனமாய் நடந்துகொள்ளக்கடவோம்.
நாம் மானிடராயிருக்கிறபடியால், பய உணர்வு நமக்குள் வருவது இயல்பானதேயாகும். உதாரணமாய், நீங்கள் இப்போது உட்கார்ந்திருக்கும் இடத்திற்கருகில் ஒரு ‘கருநாகம்' உங்களை நோக்கி வருவதைக் கண்டால் இயல்பாகவே அதிர்ச்சியடைந்து குதித்து ஓடுவீர்கள். பயஉணர்வை வெளிப்படுத்தும் “அட்ரினலின் சுரப்பி" (Adrenalin) தானாகவே சுரந்து உங்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து கொள்ளும்! இது இயல்பானதேயாகும். ஆனால், நீங்கள் எங்கெல்லாம் உட்காருகிறீர்களோ அங்கெல்லாம் ஒரு கருநாகம் வந்துவிடும் என்ற அச்சத்தோடு இருக்கமாட்டீர்களே!
அதைப் போலவே, நாம் யாரைக் குறித்தும் ஒருக்காலும் பயந்திடவே கூடாது!
எனவே மனுஷர் நிமித்தமோ அல்லது சாத்தான் நிமித்தமோ கொண்ட பயத்தின் அடிப்படையில் நாம் எந்தத் தீர்மானமும் எடுக்கவே கூடாது! நம்முடைய ஒவ்வொரு தீர்மானமும் தேவனுக்குப் பயந்திருக்கும் அடிப்படையிலும், நம் பரமபிதாவின்மீது கொண்ட முழு விசுவாசத்தின் ஆதாரத்திலும் மாத்திரமே இருந்திட வேண்டும். அப்போதுதான், நாம் பரிசுத்தாவியினால் நடத்தப்படுகிறோம் என்ற நிச்சயத்தை நாம் பெற்றிருக்க முடியும்!
கர்த்தருக்கு ஊழியம் செய்யும் நம் யாவருக்கும் எபிரெயர் 13:6 ஒரு மிக முக்கியமான வசனமாகும். அந்த வசனம்: “நாம் தைரியம் கொண்டு, கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்? என்று சொல்லலாமே!" எனக் கூறுவதைக் கவனித்தீர்களா?
மேற்கண்ட சத்தியங்களையெல்லாம் நாம் மெய்யாகவே விசுவாசித்தால், அந்த விசுவாசம் நம் ஜீவியத்தில் சொல்லிமுடியா அதிகாரத்தைக் கொண்டுவருவதை நாம் காணலாம். இதற்கு மாறாக, நாம் மனுஷருக்குப் பயந்து அல்லது அவர்களைப் பிரியப்படுத்த நாடி அல்லது அவர்களைக் கவர்ச்சிக்க விரும்பி அல்லது அவர்கள் முன் நம்மை நியாயப்படுத்த முயற்சித்து ஜீவிப்பவர்களாயிருந்தால்... நம்மிடம் இருக்கவேண்டிய ஆவிக்குரிய அதிகாரத்தின் பெரும்பகுதியை சாத்தான் நிச்சயமாய் அபகரித்துவிடுவான்! இத்தனை பெரிய இழப்பைக் கொண்டுவரும் இவ்வித மனப்பான்மைகளை நம்மைவிட்டு முற்றிலுமாய் அகற்றிடக்கடவோம்!