ஆதிக்கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட ஆழ்ந்த தன்மையும், அர்ப்பணமும், வல்லமையும் இன்றுள்ள அநேகமான விசுவாசிகளிடம் காணப்படுவதில்லை.
இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஆம், இவர்கள் சரியானவிதமாய் மனந்திரும்பவில்லை என்பதே பிரதான காரணமாகும்.
இயேசுகிறிஸ்து பிரசங்கித்த முதல் செய்தி யாதெனில், “மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” (மாற்கு 1:15) என்பதுதான். இதே செய்தியைத்தான் அவருடைய அப்போஸ்தலர்களும் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளைகொடுத்தார் (லூக்கா 24:47). அதை அப்படியே அப்போஸ்தலர்களும் கொஞ்சமும் பிசகாமல் பிரசங்கித்தார்கள் (அப் 20:21).
தேவனுடைய வார்த்தை இதைக்குறித்து மிகவும் தெளிவாகவே இருக்கிறது! உங்களுக்கு காரியம் நன்றாய் நடந்து, நீங்கள் உண்மையாகவே மனமாற்றமடைய வேண்டுமென்றால், மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் ஒருக்காலும் பிரிக்கமுடியாது! இந்த இரண்டையும் தேவனே ஒன்றாக இணைத்திருக்கிறார். எனவே, தேவன் இணைத்ததை மனிதன் ஒருக்காலும் பிரிக்கலாகாது!
மனந்திரும்புதலும் விசுவாசமுமாகிய இந்த முதல் இரண்டு மூலப்பொருட்கள் தான் கிறிஸ்தவ ஜீவியத்தின் அஸ்திவாரத்தில் இடப்படுகிறது (எபிரெயர் 6:1). எனவே, நீங்கள் சரியான விதத்தில் மனந்திரும்பவில்லையென்றால் உங்கள் அஸ்திவாரம் பிழையானதொன்றாகவே காணப்படும். இவ்வித தவறான அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட உங்கள் கிறிஸ்தவ ஜீவியம் முழுவதும் உறுதியில்லாமல் ஆட்டங்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை!
இவ்வாறு போலியாய் மனந்திரும்பிய சில உதாரணங்களை வேதாகமத்திலும் நாம் பார்க்கிறோம்.
சவுல் ராஜா தேவனுக்குக் கீழ்ப்படியாமற் போனபோது, தான் பாவம் செய்ததாக சாமுவேல் தீர்க்கதரிசியிடம் ஒத்துக்கொண்டான். ஆனால் தன்னுடைய மீறுதலை ஜனங்கள் அறிந்து கொள்ளுவதற்கோ அவன் விரும்பவேயில்லை. அக்கொடிய நேரத்திலும், அவன் மானிடரின் மதிப்பைத் தேடினான்! ஆம், உண்மையான மனந்திரும்புதலை அவன் அடையவே இல்லை! தான் கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்டதினிமித்தமே சவுல் துக்கமடைந்திருந்தான் (1சாமுவேல் 15:24-30). ஆனால், தாவீது ராஜாவோ இந்த சவுலுக்கு முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டான். தாவீது ராஜா பாவத்தில் வீழ்ச்சியடைந்தபோது, அவைகளைப் ‘பகிரங்கமாய்' அறிக்கை செய்தே மனந்திரும்பினான்! (சங்கீதம் 51).
சவுலைப் போலவே ஆகாப் என்ற ராஜாவும் இருந்தான். தேவன் ஆகாப் ராஜாவை நியாயந்தீர்க்கப்போகிறார் என்ற எச்சரிப்பை எலியா தீர்க்கதரிசியின் மூலம் கேட்ட மாத்திரத்தில், அவன் அதற்காக துக்கித்தான். அவன் இன்னும் ஒருபடி கடந்துவந்து, தன் பாவங்களுக்காக இரட்டுடுத்தி, துயரங்கொள்ளவும் செய்தான் (1இராஜாக்கள் 21:27-29). ஆனால் அவனோ “உண்மையாய்” மனந்திரும்பவில்லை. அவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு அஞ்சினான்... அவ்வளவுதான்!
போலியான மனந்திரும்புதலுக்கு யூதாஸ்காரியோத்தும் ஒரு மாதிரியாகவே காணப்படுகிறான். இயேசுகிறிஸ்துவுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டதைக் கண்டவுடன், மிகுந்த மனஸ்தாபப்பட்டு, “நான் பாவஞ் செய்தேன்” எனக் கூறினான் (மத்தேயு 27:3-5). ஆனால், அந்தோ... இன்று அநேகர் செய்வதைப்போலவே இவன் தன் பாவ அறிக்கையை ஆசாரியர்களிடம் (பாதிரிகளிடம் - Priests) செய்தான்! தான் செய்த செயலுக்காக துக்கமடைந்தாலும் அவனோ மனந்திரும்பவில்லை!! அவன் உண்மையாகவே மனந்திரும்பியிருப்பானென்றால், தன் ஆண்டவரிடம் உள்ளம் உடைந்து சென்று மன்னிப்புக் கேட்டிருப்பான். ஆனால் அவனோ அப்படிச் செய்யவில்லை!!
மேற்கூறிய உதாரணங்களிலிருந்து, எவைகள் மெய்யான மனந்திரும்புதல் இல்லை என்பதை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
“விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்குத் திரும்புவதே” மெய்யான மனந்திரும்புதல் என 1தெசலோனிக்கேயர் 1:9 கூறுகின்றது.
மரத்தினாலும் கல்லினாலும் செய்யப்பட்டு புறஜாதியாரின் கோவில்களில் வைக்கப்பட்டிருப்பவைகள் மாத்திரமே விக்கிரகங்கள் என்பது பொருளாகாது! இவ்வித விக்கிரகங்களுக்குச் சமமான அபாயம் நிறைந்த அநேக விக்கிரகங்களை இன்று ஜனங்கள் ஆராதிக்கிறார்கள்! அவைகள் ஒருவேளை, பார்ப்பதற்கு அவலட்சணமாய் இல்லாது காணப்படலாம். சுகபோகம், சொகுசான வாழ்க்கை, பணம், மனுஷரின் புகழ்தேடுதல், தன் சொந்த வழியிலேயே செல்ல விரும்புதல்... ஆகியன போன்ற அநேக விக்கிரகங்கள் உள்ளன.
நாம் எல்லோருமே இதுபோன்ற விக்கிரகங்களை பல ஆண்டுகாலமாய் வழிபட்டு வந்திருக்கிறோம். இவ்வித விக்கிரகங்களை ஆராதிப்பதை நிறுத்தி, அவைகளை விட்டுத் தேவனிடம் திரும்புவதே உண்மையான மனந்திரும்புதலாகும்!!
மெய்யான மனந்திரும்புதல் 1) நம் மனம் (Mind) 2) நம் உணர்ச்சி வசமாகுதல் (Emotions) 3) சுயசித்தம் (Will) ஆகிய நம் முழு ஆள்த்துவத்தையும் பாதிக்கும்!
இவைகளில் முதலாவது, பாவத்தைக்குறித்தும் உலகத்தைக் குறித்தும் நம் மனதில் ஏற்படும் மாற்றமேயாகும். இந்த மனமாற்றத்தில், பாவம் நம்மை தேவனிடத்திலிருந்து பிரித்துவிட்டதை நம் மனதில் ஆழ்ந்து உணருகிறோம்! மேலும் இம்முழு உலகத்தின் வாழ்க்கைச் சக்கரமும் தேவனுக்கு விரோதமாகவே சுழன்று கொண்டிருப்பதையும் காண்கிறோம்! இவ்விதம், தேவனுக்கு அபகீர்த்தியைக் கொண்டுவரும் இந்த வாழ்க்கைச் சூழலிருந்து விடுபட்டுத் திரும்புவதற்கு இப்போது மனப்பூர்வமாய் வாஞ்சிக்கிறோம்!!
இரண்டாவதாக, மனந்திரும்புதல் நம் உணர்ச்சிவசமாகுதலையும் (Emotions) பாதிக்கிறது. நாம் வாழ்ந்த பாவ வாழ்க்கை நமக்கு மிகுந்த துக்கத்தைக் கொண்டுவருகிறது (2கொரிந்தியர் 7:10). நம் பொல்லாத கிரியைகளை நினைத்து நம்மை நாமே வெறுக்கவும் செய்கிறோம்! மேலும், எவரும் நம்மிடத்தில் கண்டிட முடியாத கொடிய அருவருப்பான தீமைகளை இப்போது நாம் காண்கிறபடியால் அதற்காக வெட்கமடைகிறோம்! (எசேக்கியேல் 36:31,32).
இவ்வாறு நாம் வாழ்ந்த பாவ வாழ்க்கையின் மூலம் தேவனைத் துக்கப்படுத்தியதற்காக அழுது புலம்புகிறோம். வேதாகமத்தில் நாம் காணும் குறிப்பிடத்தக்க தேவ மனிதர்கள் யாவரும் தங்கள் பாவத்தைக்குறித்த உணர்வடைந்தவுடன் இவ்விதமே தங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்திருக்கிறார்கள். தாவீது (சங்கீதம் 51); யோபு (யோபு 42:5); பேதுரு (மத்தேயு 26:75), ஆகிய பரிசுத்தவான்கள் தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பிய போது மனங்கசந்து அழுதார்கள் என வேதம் சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறு நம்முடைய பாவங்களுக்காகத் துயருற்று அழுவதை இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஊக்குவித்திருப்பதை வேதாகமத்தில் நாம் காண்கிறோம் (மத்தேயு 5:5; யாக்கோபு 4:9). ஆம், நாம் தேவனிடத்தில் திரும்பிச் சேருவதற்கு இதுவே சரியான வழியாகும்!!
கடைசியாக, மனந்திரும்புதல் நம் சித்தத்தைப் (Will) பாதிக்கிறது. நாம் நம்முடைய சொந்தவழி செல்ல விரும்பும் முரட்டாட்டமான சுயசித்தத்தை வளைத்து சிருஷ்டி கர்த்தரிடம் சரணடையச் செய்வதே நம் சித்தம் (சுய விருப்பம்) பாதிக்கப்படும் செயலாகும்! இதன் பின்பு இயேசுவை நம் ஜீவியத்தின் முழுமைக்கும் ஆண்டவராக இருக்கச் செய்திட வேண்டும்! அதன் பொருள் யாதெனில், இப்போதிருந்து நாம் செய்யும்படி தேவன் என்னென்ன விரும்புகிறாரோ அவைகளை மாத்திரமே செய்து முடித்திட ஆயத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும். ஆம், என்ன விலைக்கிரயம் ஆனாலும், எவ்வளவு இழிவான பாதையானாலும் அவைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு தேவன் விரும்பியதைச் செய்துமுடித்திட நாம் பேராவல் கொண்டிருக்க வேண்டும்!!
இவ்விதமே கெட்டகுமாரன் தன் தகப்பன் வீட்டிற்கு மனந்திரும்பி வந்தபோது உள்ளம் உடைந்தவனாய், தன் தகப்பன் கட்டளையிடும் எதையும் செய்வதற்கு ஆயத்தம் கொண்டவனாய்... தன்னை முற்றிலுமாய் ஒப்புவித்து வந்தான் (லூக்கா 15:11-25). இதுவே மெய்யான மனந்திரும்புதல்.
நாம் இதுவரை செய்த “ஒவ்வொரு” பாவத்தையும் தேவனிடத்தில் கண்டிப்பாய் அறிக்கைசெய்ய வேண்டும் என்பது கிடையாது. ஏனெனில் நாம் செய்த எல்லாப் பாவங்களையும் நினைவிற்கொள்வது ஒருக்காலும் முடியாது, அவ்விதமே கெட்டகுமாரனும் தான் செய்த ஒவ்வொரு பாவத்தையும் தன் தகப்பனிடம் அறிக்கை செய்து கொண்டிருக்கவில்லை! அவன் மனந்திரும்பி, “தகப்பனே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்!” என மாத்திரமே அறிக்கை செய்தான். அவ்விதமே நாமும் செய்திடல் வேண்டும்.
ஆனால் யூதாஸ்காரியோத்தும், “நான் பாவம் செய்தேன்” எனக் கூறியதை எண்ணிப்பாருங்கள். அவ்வாறு அவன் கூறினாலும், அவனுடைய அறிக்கைக்கும் கெட்டகுமாரனுடைய அறிக்கைக்கும் மேற்குக்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் வித்தியாசம் இருப்பதை நம்மால் காணமுடிகின்றது. ஆம், நம் வார்த்தைகளை மாத்திரம் தேவன் கவனித்துக் கேட்பதில்லை! அவர் நம் வார்த்தைகளுக்குப் பின்பாக மறைந்திருக்கும் ‘ஆவியையும்' அறிந்தே அதற்கேற்றவிதமாய் கிரியை செய்கிறார்!!