WFTW Body: 

“தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள்...” (1கொரிந்தியர் 14:39)

1. தீர்க்கதரிசனஞ்சொல்லுதல் என்பதன் பொருள்:“மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுவது” தான் “தீர்க்கதரிசனஞ்சொல்லுதல்” என்பதன் பொருளாகும். வேறுவகையில் சொல்லப்போனால், அது மனுஷருக்கு ஊக்கமும், பெலனும், ஆறுதலும் அளிக்கும் வகையில் பேசுவதாகும். (1கொரிந்தியர் 14:3 - நியூ லிவிங் மொழிபெயர்ப்பு). நாடோறும் நாம் ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும், அதாவது, அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் என்று எபிரெயர் 3:13 நமக்குக் கூறுகிறது. ஆகவே, தீர்க்கதரிசனம் சொல்லுதலில், சோர்ந்துபோனவர்களைத் தூக்கியெடுத்து, அவர்கள் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு, அவர்களை உற்சாகப்படுத்துவதில் பிரதானமாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அதை நாம் சரியாகச் செய்தால், அவர்களை சவாலிடவும், அவர்களுக்கு புத்திமதி கூறவும், பாவத்தை உணர்த்துவிக்கும் வார்த்தைகளைப் பேசவும் ஆண்டவர் நமக்கு உதவி செய்ய முடியும். புரியாத அந்நிய பாஷைகளில் பேசுவதைக் காட்டிலும் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலே மேலானது. ஏனென்றால், தீர்க்கதரிசனமானது சபையில் ஜனங்களை பக்திவிருத்தியடையச் செய்கிறது, ஆனால் “அந்நியபாஷையோ,” அதைப் பேசுகிற நபரை மட்டுமே பக்திவிருத்தியடையச் செய்கிறது (1கொரிந்தியர் 14:4).

2. எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைக்கலாம்: 1கொரிந்தியர் 14:31 கூறுவதற்கேற்ப, சபையிலுள்ள எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தை நாட வேண்டும். இந்த வரம் சகோதரர்களுக்கு மட்டுமல்லாது சகோதரிகளுக்குமான வரமாகும். சகோதரிகள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது தங்கள் தலைகளின்மேல் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். அதன் காரணம் என்னவென்றால்: ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான் என்று 1கொரிந்தியர் 11:3-15 போதிக்கிறது. ஒரு ஸ்திரீ தன் தலையின்மேல் முக்காடிட்டுக் கொள்ளும்போது, சபையில் தேவனுடைய மகிமை மட்டுமே காணப்படும்படியாக மனுஷனுடைய மகிமையானது மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை, தன் முக்காட்டின் மூலமாக மவுனமாக சாட்சியிடுகிறாள்.

3. தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கதரிசனம் உரைப்பதை உறுதிசெய்யுங்கள்:வார்த்தையைப் பிரசங்கிக்க ஆயத்தமாகும்போது, நாம் பேசப்போகும் வார்த்தை நம் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமேயன்றி வெறும் கோட்பாடாக இருக்கக் கூடாது என்பதை நாம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். இயேசு, தாம் ஏற்கனவே செய்திருந்தவற்றைத் தான் (கடைபிடித்தவற்றை) உபதேசித்தார் (இயேசு முதலாவது செய்யவும், பின்பு உபதேசிக்கவும் தொடங்கினார் என்று அப்போஸ்தலர் 1:2 கூறுகிறது). கடைபிடித்திராத கோட்பாடுகளை நாம் ஒருபோதும் பிரசங்கிக்கக் கூடாது! பகிர்ந்துகொள்வதற்குப் புதிதாக நம்மிடம் ஏதும் இல்லையென்றால், நாம் ஏற்கனவே பிரசங்கித்தவற்றையே திரும்பவுமாகப் பேசுவதே மிகச் சிறந்தது. ஆனால், நம்முடைய சொந்த வாழ்க்கையில் நாம் கடைபிடித்திராதவற்றை ஒருபோதும் பிரசங்கிக்கக்கூடாது. நாம் இயேசுவுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் மட்டுமே அவருடைய அதிகாரம் நம்மைத் தாங்கும். ஆகவே, நாம் தேவனுடைய வார்த்தையைக் கற்கும்போது, முதலாவது நம்முடைய வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே படிக்கவேண்டும். அப்பொழுது, நம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்து அனுபவித்தவற்றைப் பற்றி நாம் பேசமுடியும்.

4. தாழ்மையான இருதயம் கொண்டிருங்கள்: சுய-நம்பிக்கையின் ஆவியோடு நாம் எதையும் பகிர்ந்துகொள்ளக் (பிரசங்கிக்கக்) கூடாது. ஒருபோதும் ஜனங்களைக் குறிவைத்துப் பேசக்கூடாது. நாம் வாழ்க்கையின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகண்டுவிட்டோம் என்னும் தோற்றத்தையும் மற்றவர்களுக்கு அளிக்கக் கூடாது! மாறாக, நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நம்முடைய விசுவாசத்தின் அளவுக்குத் தக்கதாக நாம் தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும் (ரோமர் 12:6). மேலும், எப்பொழுதுமே ஒரு தாழ்மையான இருதயத்தோடு, இயேசுவை மட்டுமே உயர்த்தி, நாம் பேசவேண்டும். இயேசு மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் அவர் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார் (யோவான் 12:32). ஆகவே, அவருடைய வார்த்தையை நாம் அறிவிக்கும்போது, எப்பொழுதுமே தாழ்மையான ஓர் இருதயத்தைக் கொண்டிருக்க தேவன் நமக்கு உதவவேண்டுமென்று அதிகமாய் ஜெபிக்க வேண்டும்.

5. மாம்சத்தின்மீது நம்பிக்கை வைக்காதிருங்கள் “மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல் இருக்கும் நாமே மெய்யான விருத்தசேதனமுள்ளவர்கள்” (பிலிப்பியர் 3:3). பொதுவில் பேச நமக்குத் தைரியம் இல்லாதிருக்கும்போது, நாம் பின்வாங்காமல், வல்லமைக்காக தேவனைத் தேடினால், அவர் நம்மை பெலப்படுத்துவார். ஆனால், நாம் இயல்பாகவே பொதுவில் நன்றாகப் பேசக்கூடியவர்களாக இருந்தால், நாம் அந்தத் திறமையில் நம்பிக்கை வைக்காதிருக்க உறுதியாயிருக்க வேண்டும்; ஆனால், ஜெபத்தில் அதிகமதிகமாக தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டும், அவர் நம்மை பெலப்படுத்துவார். தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு விசுவாசமும் தேவனைச் சார்ந்துகொள்ளுதலும் மிக மிக அத்தியாவசியமானவையாகும்.

6. அதிகமாய் ஜெபியுங்கள்: குறிப்பாக நாம் எதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், எதைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்ற ஞானத்தை தேவனிடம் கேட்டு ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5). நாம் பேசும்பொழுதே, சரியான ஆவியோடும் சரியான மனநோக்கங்களுடனும் பேச உதவிசெய்யும்படி பரிசுத்த ஆவியின் வல்லமைக்காக நாம் ஜெபிக்க வேண்டும் (லூக்கா 11:13). நாம் பேசி முடித்தபின்பும் ஜெபிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். விதைக்கப்பட்ட விதைகள் சில நல்ல நிலத்தில் விழுந்து அவை கனிகொடுக்கவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். நாம் பகிர்ந்துகொண்டதைக் குறித்து மற்றவர்கள் நம்மை மெச்சிக்கொண்டால் நாம் பெருமையடையாதபடி நம்மைக் காக்கும்படிக்கும், யாருமே நம்மை மெச்சிக்கொள்ளாதிருந்தால் சோர்ந்துபோகாதபடி நம்மைக் காக்கும்படிக்கும் நாம் ஆண்டவரிடம் ஜெபிக்க வேண்டும். ஆண்டவர் நாம் பேசவேண்டும் என்று விரும்பியவற்றைத் தான் நாம் பேசினோமா என்பதும், அவற்றை நாம் மனத்தாழ்மையுடன் பேசினோமா என்பதும் தான் முக்கியமான காரியமாகும். நாம் அப்படிச் செய்திருந்தால், அப்பொழுது தேவன் மகிமைப்பட்டிருப்பார், அது ஒன்றே காரியம்.

7. நேரமெடுத்து ஆயத்தம் செய்யுங்கள்: பேசுவது நமக்குத் தடுமாற்றமாயிருக்குமானால், நாம் என்ன பேசப்போகிறோம் என்பதை ஒழுங்குபடுத்துவதற்கு நேரமெடுத்துக்கொள்ள வேண்டும்; கொடுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டாதிருக்கவேண்டும்; நாம் சொல்ல விரும்பும் பிரதானமான காரியத்தை மட்டுமே பேச வேண்டும். நாம் பகிர்ந்துகொள்ள விரும்புவதை எழுதிவைத்துக்கொண்டால், நாம் பேசவேண்டியதை மட்டும் பேசுவதும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசுவதும் நமக்கு எளிதாயிருக்கும். ஆனால், நாம் முன்னதாகவே அதற்காகக் கடினமாகப் பிரயாசப்பட வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்று வேதம் கூறுகிறது (கலாத்தியர் 6:7). “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்” என்று நீதிமொழிகள் 13:4 கூறுகிறது. கடின உழைப்புக்கு தேவன் பலனளிக்கிறார். “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்று 1கொரிந்தியர் 14:40 நமக்குக் கூறுகிறது. எனவே, எப்பொழுதுமே தெளிவாகவும் கிரமமாகவும் பேச முயற்சியுங்கள். ஒரு நல்ல சமையற்காரன், ஜனங்களுக்கு எளிதாகச் செரிமானமாகும் வகையில் உணவை சமைக்க எப்படி கடினமாய் உழைப்பானோ, அதுபோல நாம் எப்பொழுதுமே ஜனங்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்தளிக்க வேண்டும். எப்பொழுதுமே புதிது புதிதாகப் பேசவேண்டும் என்று அல்லாதபடி, ஏற்கனவே பேசியதைத் திரும்பப் பேச நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவன் நம் இருதயத்தில் வைத்த காரியங்கள் மிகவும் பரவசமூட்டுவதாய் இல்லாமல் தோன்றலாம். ஆனால், நாம் அறிந்த அளவுக்கு, நாம் பேசவேண்டும் என்று தேவன் விரும்பியதைத் தான் பேசுகிறோம் என்ற உறுதி நமக்கிருந்தால், அவர் அதை ஆசீர்வதிப்பார் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

8. செய்தி எளிமையாயிருக்கட்டும்: இயேசு எப்போதுமே எளிமையாகவே பேசினார். அவர் போதித்தவை நடைமுறைக்கேற்றவையாகவும், அவருடைய வார்த்தைகள் எப்பொழுதுமே எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியவையாகவும் இருந்தன. பேசுபவர்கள் புத்திசாலித்தனமான வார்த்தைகளையும் தங்களது பேசுச்சுத் திறமையையும் பயன்படுத்தும்போது, சத்தியமானது தவற விடப்பட முடியும். நாம் பேசுவதை ஒரு சிறு குழந்தையும் புரிந்துகொண்டு அதிலிருந்து பயனுள்ள எதோ ஒன்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் எப்பொழுதும் நாம் பேச வேண்டும்.

9. எப்பொழுது நிறுத்தவேண்டும் என்பதை அறிந்திடுங்கள்: இயேசு ஒருபோதும் தம்முடைய செய்தியை வழவழ என்று இழுக்கவில்லை. மலைப் பிரசங்கத்தின் செய்தி நேரம் வெறும் 20 நிமிடங்கள் மாத்திரமே இருந்தது. ஒரு குறுகிய நேரத்தில் ஒரு வல்லமையான செய்தியை தேவன் நமக்குத் தர முடியும்! அதிக நேரம் பேசுவது அநேகருக்கு அதை உள்வாங்கிக்கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். அநேகர் செய்தியின் மீது கவனம் செலுத்த முடியாமலும் செய்துவிடும். அளவைக் காட்டிலும் தரமே அதிக முக்கியமானது. “மிகுதியான வார்த்தைகளை பேசப் பேச அவற்றின் அர்த்தம் குறைவாகவே இருக்கும், ஆகவே அவற்றால் பயனென்ன?” (பிரசங்கி 6:11 நியூ லிவிங் மொழிபெயர்ப்பு). ஜனங்களுடைய கவனத்தை அதிகநேரம் ஈர்த்துவைத்திருக்கக் கூடிய திறமை வெகுசிலருக்குத் தான் உண்டு. நீண்டதொரு பிரசங்கத்தைச் செய்து, ஜனங்கள் சுவாரசியமிழந்து அடிக்கடி தங்கள் கடிகாரத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தேவன் நம் இருதயத்தில் வைத்தவற்றை சுருக்கமாகப் பேசுவதே சாலச் சிறந்தது (லூக்கா 14:8-11).

10. பயப்பட்டு கோழையாயிராமல் தைரியமாயிருங்கள்: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2தீமோத்தேயு 1:7). கிறிஸ்து இன்னாரென்றும் நம்முடைய வாழ்க்கையில் அவர் செய்திருப்பது என்னவென்றும் நாம் அறிந்திருப்பதினால், நாம் தைரியங்கொண்டிருக்க முடியும். நம்முடைய பூரணமற்ற காரியங்களையும் கூடப் பயன்படுத்தி அவற்றின்மூலம் தேவன் மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும். நம்மால் இயன்ற கொஞ்சத்தை நாம் செய்தால், நம்மால் செய்ய முடியாதவற்றை தேவனே செய்து, நாம் பேசுபவற்றை ஆசீர்வதிப்பார். கானாவூரிலே அந்த வேலைக்காரர்கள் செய்ததுபோல, கற்சாடிகளைத் தண்ணீரால் நிரப்ப மாத்திரம் நாம் உண்மையுள்ளவர்களாயிருந்தால், ஆண்டவர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றிடுவார் (யோவான் 2:1-11). தேவன் அதைச் செய்யும்படிக்கு அவரில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் தேவன்மீது நம்பிக்கை வைத்தால், நம்முடைய பெலவீனங்களின்மூலமாகவும் அநேகரை அவரால் ஆசீர்வதிக்க முடியும்.

11. எப்பொழுதுமே இருதயத்திலிருந்தே தீர்க்கதரிசனஞ்சொல்லுங்கள்: நாம் நம்முடைய மூளையறிவைக் கொண்டு போதிக்கக்கூடாது. “எல்லாரும் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்” (1கொரிந்தியர் 14:31), ஆனால் எல்லாரும் போதகர்களாயிருக்க முடியாது (1கொரிந்தியர் 12:29) என்று வேதம் கூறுகிறது. போதிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் போதகர்களாயிருக்கும்படி வெகு சிலரே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேவன் அப்படிப்பட்ட அழைப்பை நமக்குக் கொடுத்திராவிட்டால், நாம் போதிக்கும்படி ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. “அறிவு ஜனங்களை இறுமாப்படையச் செய்யும்” என்று 1கொரிந்தியர் 8:1 கூறுகிறது. அது நாம் மற்றவர்களைத் தாழ்வாகப் பார்க்கச்செய்யும். நாம் என்ன சொல்லுகிறோம் என்பது மாத்திரம் முக்கியமல்ல, அதை நாம் எப்படிச் (என்ன மனநோக்கங்களோடு) சொல்லுகிறோம் என்பதும் முக்கியமாயிருக்கிறது. எப்போதுமே மற்றவர்களுடைய நன்மையை நம் மனதில் கொண்டிராவிட்டால், அறிவின்மீதும், உபதேசத்தின்மீதும், ஜனங்களுடைய சிந்தையைக் கிளர்ச்சியூட்ட மாத்திரம் செய்து அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கைக் கொடுக்கும் காரியங்களின்மீதுமே நம் கவனம் தூண்டப்படும்!! ஆனால், நம்முடைய அழைப்போ, ஜனங்களைத் தூக்கியெழுப்பி அவர்களை சவாலிடுவதற்காயிருக்கிறது.

12. மற்றவர்கள் மீதுள்ள அன்பினிமித்தமாய் தீர்க்கதரிசன வரத்தை ஆர்வமாய் விரும்புங்கள்: (1கொரிந்தியர் 14:1). நாம் செய்யும் எல்லாமே அன்பிலிருந்து பாய்ந்தோட வேண்டும். அன்பில்லாதபடி செய்யும் மிகச் சிறந்த கிரியையும் பிரயோஜனமற்றதாயிருக்கிறது. எனவே, சபையின்மீதுள்ள அன்பின் நிமித்தமாகவும், மற்றவர்களைக் கட்டியெழுப்பி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தின் நிமித்தமாகவும் நாம் தீர்க்கதரிசன வரத்தை நாட வேண்டும். இதுவே எப்பொழுதும் நம்முடைய மனநோக்கமாயிருக்க வேண்டும். சகோதரர் சகரியா பூணன் கூறியிருப்பதுபோல, “ஒரு தேவ ஊழியனுடைய இருதயத்தில் எப்பொழுதுமே இருக்கவேண்டிய இரண்டு காரியங்கள், தேவனுடைய வார்த்தையும் தேவனுடைய ஜனங்களும் ஆகும்.”

13. தனிப்பட்ட உரையாடல்களிலும் தீர்க்கதரிசனஞ்சொல்லுங்கள்: தீர்க்கதரிசனம் உரைத்தல் ஒரு சபைக்கூடுகையில் பொதுவில் பேசுவதற்கு மட்டுமானதல்ல. நாம் மற்றவர்களோடு ஈடுபடும் தனிப்பட்ட உரையாடல்களிலும் நாம் தீர்க்கதரிசனஞ்சொல்ல முடியும். அது ஒருவேளை தொலைபேசி மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஒருவருக்கு உற்சாகமூட்டுவதாயிருக்கலாம்; அல்லது ஒருவர் வீட்டிற்குச் சென்று அவரோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். உற்சாகமூட்டுவது தீர்க்கதரிசனம் உரைப்பதாகும். நாம் ஒவ்வொருநாளும் பிறருக்கு உற்சாகமூட்ட முயற்சிக்கவேண்டும் (எபிரெயர் 3:13). அது, நாம் நேசிப்பவர்கள் பாவத்தினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அவர்களைப் பாதுகாக்கும். நாம் பிறரை ஆசீர்வதிக்க விரும்பினால், இவ்விதமாக நாம் அதைச் செய்ய முடியும்: சந்தர்ப்பங்களுக்காக நம் கண்களை விழிப்பாய் வைத்திருக்க வேண்டும். தேவன் நம்மோடு பேசிய ஏதோ ஒன்று நம்மை ஆசீர்வதித்திருக்குமானால், அதைக்கொண்டு நாம் மற்றவர்களையும் ஆசீர்வதிப்போமாக. “ஏற்ற நேரத்தில், ஏற்ற வார்த்தையைப் பகிர்ந்துகொள்வது” தீர்க்கதரிசனஞ்சொல்லுதலாகும். அது தான் மற்றவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் (நீதிமொழிகள் 15:23).

இப்படியிருக்க, தேவனுடைய மகிமைக்கென்று, தீர்க்கதரிசனம் உரைப்பதை ஆவலாய் நாடுவோமாக!