WFTW Body: 

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்…” (மத்தேயு 28:20)

இது மாபெரும் கட்டளையின் அடுத்த பகுதியாகும். முதலாவது, நாம் உலகமெங்கும் சென்று, ஜனங்களை நோக்கி அவர்கள் பாவிகள் என்றும், கிறிஸ்து அவர்களுடைய பாவங்களுக்காக மரித்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், அவர் பரலோகத்திற்கு ஏறிச்சென்று மறுபடியும் வரப்போகிறார் என்றும், அவர் ஒருவரே பிதாவினிடத்திற்குச் செல்வதற்கான ஒரே வழி என்றும் கூறுகிறோம். ஜனங்கள் அந்த அழைப்பிற்கு பதிலளிக்கும்போது, அவர்களிடத்தில் இயேசுவைத் தங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக ஏற்றுகொண்டு, கிறிஸ்துவை வாழ்நாள் முழுவதும் பின்பற்றக் கூடிய சீஷர்களாகும்படி அழைப்பு விடுத்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, அவர்களுக்கு தெய்வத்துவத்தின் இரகசியத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை; இவை அனைத்தும் ஒலிம்பிக் மாரத்தான் பந்தயத்தின் தொடக்கக் கோட்டிற்கு வருவதைப் போன்றது தான்.

உங்கள் நாட்டின் ஒரு பிரதிநிதியாக, ஒலிம்பிக் மாரத்தான் பந்தயத்தின் தொடக்கக் கோட்டிற்கு வருவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். அதுவே ஒரு சாதனைதான், ஆனால் அதில் மட்டுமே மேன்மை ஒன்றும் இல்லை. ஏனென்றால் தொடக்கக் கோட்டிற்கு வருவது பந்தயத்தின் ஆரம்பம் மட்டுமேயாகும். நீங்கள் ஒரு சீஷராகி, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பது மிகவும் பெரியது. ஆனால் ஒலிம்பிக் போட்டியைப் போலவே, நீங்கள் இப்போது பந்தயத்தை ஓடத் தொடங்க வேண்டும். அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது என்பது இயேசு நமக்குக் கட்டளையிட்ட ஒவ்வொரு காரியத்தையும் செய்வதாகும்.

அதைச் செய்வதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். இதைத்தான் ஒவ்வொரு சபையும் ஜனங்களுக்கு போதிக்க வேண்டும்.

ஒரு சபை சீஷர்களை உருவாக்குவதற்கும் ஞானஸ்நானம் கொடுப்பதற்கும் முன்னுரிமை அளித்தால், அது அங்கேயே நின்றுவிடக்கூடாது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்கள் சபைக் கூட்டங்களில் அவர்கள் எதை போதிக்க வேண்டும்? இயேசு கற்பித்த ஒவ்வொன்றையும் போதிக்க வேண்டும். ஏதோ குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டுமல்லாமல், இயேசு கற்பித்த அனைத்தையும் போதிக்கவேண்டும். நிச்சயமாக உளவியலையோ அல்லது வெறும் பொழுதுபோக்குக் காரியங்களையோ போதிக்கக் கூடாது. ஒரு சபையானது அதன் அங்கத்தினர்களின் தரத்தை மேம்படுத்துவதை விட அதன் இசையை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவது வருத்தமாக இருக்கிறது. அது மிகவும் வருத்தமான காரியம். பரலோகத்திலிருக்கும் தேவன் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒரு புதிய சபை ஒன்று கூடியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் உள்ளவர்கள் மெய்யாகவே மறுபடியும் பிறந்தவர்களாயும் மெய்யாகவே இயேசு தங்கள் வாழ்க்கையின் ஆண்டவராயிருக்க விரும்புகிறவர்களாயும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த சபையோ இசையில் கவனம் செலுத்துவதை நீங்கள் கண்டால், தேவன் அதில் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறீர்களா? நல்ல இசை இருப்பது நல்லது தான்; நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பது தான் கேள்வி. சபையிலுள்ள மக்களின் தரம் கிறிஸ்துவின் தரத்திற்கு அதிகமதிகமாக மாற வேண்டும் என்பதிலா, அல்லது இசையானது இன்னும் அதிகமதிகமாக பொழுதுபோக்கு அம்சமாக மாற வேண்டும் என்பதிலா, எதில் தேவன் அதிக ஆர்வம் காட்டுகிறார்? தேவனுக்குப் பிரியமானது எது என்பதைக் கிறிஸ்தவத் தலைவர்கள் புரிந்து கொள்ளாததினால் கிறிஸ்தவர்கள் எப்படி வழி விலகிச் சென்று விட்டார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

நமது சபைகளில் நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு கட்டளையிட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் கீழ்ப்படியும்படி ஜனங்களுக்கு போதிக்க வேண்டும். நாமே தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் அவைகளுக்கு எப்படி கீழ்ப்படிவது என்று மற்றவர்களுக்கு நாம் கற்பிக்க முடியாது. இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்: “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்”; “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்யும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் நான் மற்றவர்களுக்குக் கற்பிக்க மட்டும் வேண்டும் என்றால், ஒரு மனிதன் வேதியியல், இயற்பியல் அல்லது வரலாற்றைக் கற்பிப்பது போல நான் இயேசுவின் அனைத்து போதனைகளையும் எடுத்து கற்பிக்க முடியும். நான் கருத்துகளைப் படித்து அவற்றைக் கற்பிக்கிறேன். ஆனால் “அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்…” என்று வரும்போது நானே முதலில் அதைச் செய்திருக்க வேண்டும்; அப்படிச் செய்தால் மட்டுமே அவர்களும் அதை எப்படிச் செய்யலாம் என்பதை நான் அவர்களுக்குக் கற்பிக்க முடியும். நானே அதைச் செய்யவில்லையென்றால், எனக்கே நீச்சல் அடிக்கத் தெரியாதபோது மற்றவர்களுக்கு நீச்சல் அடிக்க கற்றுக்கொடுக்கிறவனைப் போல ஆகிவிடுவேன். நீச்சல் அடிப்பதில் கொள்கைகள் மற்றும் நுட்பங்களை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால், அதை கரும்பலகையில் விவரித்து பலருக்கும் தெளிவாக விளக்க முடியும். ஆனால் நீங்களோ நீச்சல் அடிக்கிறவராக இருக்க முடியாது. அது வெறுமனே “அவர்களுக்கு கற்பிப்பதாய்” இருக்கும். ஆனால் “அவர்களுக்குச் செய்யக் கற்றுக்கொடுப்பது…” என்பது நீச்சல் குளத்திலோ அல்லது ஆற்றிலோ நீங்கள் உண்மையில் நீரின் மேற்பரப்பில் எப்படி நீந்தலாம் என்றும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எப்படிப் போகலாம் என்றும் செய்து காட்டுவதைக் குறிக்கிறது.

ஒரு கிறிஸ்தவ வேதத் தலைவருக்கு, இயேசு கட்டளையிட்ட ஒவ்வொரு காரியத்தையும் அப்படியே ஜனங்கள் கைக்கொள்ளும்படி போதிக்கும் பொறுப்பு இருக்கிறது; அது ஒரு பெரிய அளவு போதனையாகும். அதனால்தான், அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்காக, “இயேசு கற்பித்த அனைத்தும்” என்ற புத்தகத்தை எழுதினேன். நான் செய்ய விரும்புவதெல்லாம் இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதும், இயேசு போதித்த அனைத்தையும் கற்பிப்பதும், என் வாழ்வின் கடந்த 52 வருடங்களில் நானே அதைச் செய்ய நாடியதைப் போலவே அதைச் செய்ய உங்களுக்குக் கற்பிப்பது மட்டுமேயாகும். ஏதோ எனக்குப் பிடித்த அல்லது எளிதான கட்டளைகளை மட்டும் வலியுறுத்தி, மற்றவற்றைப் புறக்கணிப்பது அல்ல.

இயேசு கட்டளையிடும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு சீஷனுடைய ஆர்வமாக மாற வேண்டும்.