WFTW Body: 

பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது..” (சங்கீதம் 16:3)

பரிசுத்தவான்களிடத்தில் "பிரியம் வைத்திருப்பது" என்றால் நடைமுறையில் அதன் அர்த்தம் என்ன? சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் நான் பெற்ற ஒரு அனுபவம் இந்த வசனத்தை ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்க எனக்கு உதவியது, மேலும் கர்த்தருக்கு இந்த மனப்பான்மை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதைப் பார்க்க எனக்கு உதவியது.

உண்மை சம்பவம்: எங்களுடைய 1 வயது குழந்தை அப்போது தான் நடக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். நடக்கும்போது, தான் விழாமலிருக்க அவள் அடிக்கடி நாற்காலி, கட்டில், போன்றவற்றைப் பிடித்துக் கொள்வாள், ஆனால் அவள் ஏதாவதொன்றை ஆதாரமாகப் பிடித்துக்கொள்ளாமல் வீட்டு ஹாலில் நடந்து செல்ல ஒருபோதும் தைரியம் பெற்றதில்லை.

பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில், அவள் எதையும் பிடித்துக்கொள்ளாமல், நான் வீட்டில் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி, முழு சிரிப்போடு தள்ளாடிக்கொண்டு வந்தாள். நான் சிலிர்த்துப் போனேன்! அறையைக் கடக்கும் முதல் முயற்சியிலேயே அவளால் சாதிக்க முடியுமா என்ற ஆவலுடன் நான் அவளை உற்சாகப்படுத்த ஆரம்பித்தேன்.

ஆனால் முற்றிலும் எதிர்பாராத ஒன்று அதன்பின் நடந்தது. அது எனது மகிழ்ச்சியை வேறு நிலைக்கு உயர்த்தியது. இல்லை, குறுநடை போடும் என் குழந்தை ஓடத் தொடங்கவில்லை; அவளுடைய மூத்த சகோதரி என் பக்கத்தில் வந்து என்னுடன் சேர்ந்து அவளை உற்சாகப்படுத்தினாள். என் மூத்த பெண் குழந்தைகளில் ஒருவள் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதைக் கண்டபோது என் மகிழ்ச்சி அவ்வளவாய் அதிகரித்தது!

நேர்மையாகச் சொன்னால், அந்த நேரத்தில் என் சிறிய மகள் நடக்க முயற்சித்ததில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட, மூத்த மகளின் மகிழ்ச்சியில் நான் அதிக மகிழ்ச்சி பெற்றேன் என்றே சொல்லவேண்டும்!

இந்த நிகழ்வு பல ஆண்டுகளாகப் பலமுறை பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் நடந்துள்ளது. அதோடுகூட நான் அதில் கற்றுக்கொண்ட பாடம் எனக்குள் பதிந்துவிட்டது: என் குழந்தைகள் தங்களது தனித்துவமான தாலந்துகள், முதலியவற்றில் வளர்வதைக் குறித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஒரு தந்தையாக என் இதயத்திற்கு அது ஒரு தனி மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், கிறிஸ்துவில் உள்ள என் சகோதர சகோதரிகள் மீதான உண்மையான அன்பில் நான் மகிழ்ச்சியடைவதால், பரலோகத்தில் உள்ள என் தகப்பனுடைய இருதயத்திற்கு ஒரு விசேஷித்த மகிழ்ச்சியை நான் கொண்டு வர முடியும் என்பதை இது எனக்குக் கற்றுக் கொடுத்தது.

நமது நன்கு கற்றறிந்த அதிநவீன மனதில், தேவனுடைய குடும்பத்திலுள்ள மற்ற நபர்களிடத்தில் நாம் கொள்ளும் மகிழ்ச்சியைப் போன்ற ஒன்று கிறிஸ்துவின்மீதான அன்பைக் காட்டிலும் கீழே இருக்கிறது என்று நினைப்பது எளிது. ஆயினும்கூட, தேவனுடைய குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு மிகவும் வெட்கமற்ற அன்பின் சில வெளிப்பாடுகள் மிகவும் முதிர்ந்த கிறிஸ்தவரிடமிருந்து வருவதைக் காண்கிறோம்:

நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1தெசலோனிக்கேயர் 2:8)

என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்… அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.” (பிலேமோன் 1:10,12)

அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.” (பிலிப்பியர் 2:27)

கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.” (1கொரிந்தியர் 12:21,25)

இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.” (பிலிப்பியர் 1:8)

நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் மெய்யாகவே பிழைத்திருப்போம்.” (1தெசலோனிக்கேயர் 3:8)

சபையின் மீது பவுல் கொண்ட அன்பின் உதாரணத்தைப் பார்ப்பது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. "நான் சபையை நேசிக்கிறேன்" என்று சொல்வது எளிது. சரீரத்திலுள்ள மற்ற குறிப்பிட்ட அவயவங்கள் மீதான எனது சந்தோஷத்தை இங்கே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்துடன் நேர்மையாக ஒப்பிடுவது முற்றிலும் வேறொரு விஷயமாகும். மற்றவர்களின் வளர்ச்சியிலும் மற்றவர்களின் வரங்களிலும் நான் மகிழ்ச்சியடைகிறேனா? நான் கர்த்தரோடு சேர்ந்து அவரோடுகூட நிற்கிறேனா (அவர்களுக்காகப் பரிந்துபேச எப்பொழுதும் ஜீவிக்கிறவர் - எபிரெயர் 7:25), அதோடு என் மூத்த மகள் குறுநடை போடும் குழந்தைக்குச் செய்ததைப் போல, கிறிஸ்துவில் என் சகோதர சகோதரிகளை அப்படியாக நான் உற்சாகப்படுத்தி தாங்குகிறேனா?

மகிழ்ச்சியின் எதிர்ப்புறம்

அனைத்துவிதமான வெறுப்புகளிலிருந்தும் நம்மை சுத்திகரித்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், மற்றவர்கள் மீது நமக்கு எந்தத் தீயா எண்ணமும் இல்லை, அல்லது நாம் யாரைக்குறித்தும் புறங்கூறவில்லை, அல்லது நாம் யாரையும் குற்றம் சாட்டாமல் இருக்கிறோம் என்பதினால் மதியீனமாக நம்மை வாழ்த்திப் புகழ்ந்து கொள்ள முடியும். ஏதோ இவைகள்தான் மகிழ்ச்சிக்கு எதிரானவை என்று கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் மகிழ்ச்சிக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு மிகவும் ஆபத்தான எதிர்நிலை இருப்பதை நான் கவனித்தேன், அது தான் அலட்சியம்.

“‘நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன?’ என்கிறார்கள்; (கர்த்தர் பதில்கூறுகிறார்,) இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்… அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.” (ஏசாயா 58:3,6-8).

நாள்தோறும் தம்மை அறிய முற்பட்ட ஜனங்களுக்கு தேவன் அறிவித்த பாவம் (ஏசாயா 58:1-2) கவனக்குறைவு, அலட்சியம், புறக்கணிப்பு. அவர்கள் தேவனை அறிய விரும்பினார்கள், அவருடைய வழிகளை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தார்கள், ஆனால் அந்த நாட்டத்திற்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்கள் கருதியதால் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்! அவர்கள் தேவனை தேடலாம், அதோடு அவருடைய குடும்பத்தைப் பற்றி அலட்சியமாகவும் இருக்கலாம் என்று நினைத்தார்கள்!

நாம் கர்த்தருடன் நடக்கும்போது, ​​நிச்சயமாக அவர் நாம் செய்த பாவங்களை (வெறுப்பு, புறம்கூறுதல், குற்றச்சாட்டுகள் போன்றவை) கையாள விரும்புகிறார், ஆனால் அதைவிட அதிகமாக, நாம் செய்யவேண்டியதைச் செய்யாமல் போன ஒவ்வொரு பாவத்தையும் கவனிக்க விரும்புகிறார். குறிப்பாக நம் இருதயங்களில் அன்பில்லாமையை அவர் கவனிக்க விரும்புகிறார். அவருடைய விருப்பமெல்லாம், நம்முடைய சொந்த தேவைக்காக அவருடைய அன்பினால் நம்மை நிரப்புவது மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நிரம்பி வழிய நம்மை நிரப்புவதுதான் (யோவான் 7:38). இதை நம்புவது கடினம்தான், ஆனால் அலட்சியம் உண்மையில் வெறுப்பை விட மோசமானது என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது - “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.” (வெளி 3:15-16) - மெய்யாகவே தேவன் வெதுவெதுப்பாயிருப்பதை விட குளிராயிருப்பதை மேலானதாகக் காண்கிறார்!!.

நான் முழுமையாக எதைப் புறக்கணிக்கிறேன் (நான் செய்யத் தவறினவைகள்) என்பதை விட, "செய்த" பாவங்கள் (நான் செய்யும் தவறுகள்) மீது கவனம் செலுத்துவது மிகவும் எளிதானது என்பதை நான் கவனித்தேன். ஆனால் தேவன் வெறுமனே ஏதோ கெட்டதை ("குளிர்ச்சி") அகற்றி, நம்மை அலட்சியமாக ("வெதுவெதுப்பாக") வாழ விட்டுவிடுவதில் திருப்தியடையவில்லை; அவர் நம்மை நன்மை என்கிற வெள்ளத்தில் (அவருடைய அனலாக எரியும் அன்பை) நிரப்ப விரும்புகிறார். அவரது கிருபையால் நாம் கடக்க வேண்டிய முக்கியமான கட்டம் வெறுமை, வெதுவெதுப்பு, கவனக்குறைவு மற்றும் அலட்சியம் என்கிற பாலைவனமாகும்.

அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.” (லூக்கா 11:24-26)

கிறிஸ்துவின் சரீரத்தின் மீது நமக்கு உள்ள கவனக்குறைவை, பகையானது எப்படி நம் ஆத்துமாவுக்கு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானதாக நாம் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், மற்ற சகோதர சகோதரிகள் மீதான நமது அலட்சியப் போக்கை நமக்கு வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடத்தில் கேட்போம். அவருடைய இரக்கம் நம்மை அன்புத்தாழ்ச்சியிலிருந்து மனந்திரும்புவதற்கு நம்மை வழிநடத்துவதாக! மேலும் அவர் தமது குடும்பத்தில் கொண்டிருக்கும் அவருடைய மகிழ்ச்சியின் முழுமையால் நம் இதயங்களை நிரப்புவாராக! ஒரு தந்தையாக பெருத்த மகிழ்ச்சியின் எனது சொந்த அனுபவத்தைப் பற்றி சிந்திக்க இது என்னை பெரிதும் ஆசீர்வதித்திருக்கிறது. அதோடுகூட நாம் நினைவில் வைக்கவேண்டிய ஒன்று, அவருடைய குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடத்தில் தேவனுடைய இருதயத்தை நாம் பகிர்ந்து கொள்ளும்போது, அது அவருடைய சந்தோஷத்தை பெருகச் செய்ய நமக்கு வாய்ப்பாக்க இருக்கிறது.

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (யோவான் 15:12)

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று… எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1பேதுரு 4:7-8)

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே (தேவனின் அனலான அன்பில்) இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:12-13)