WFTW Body: 

கர்த்தர் என்னை எவ்விதமாய் வழிநடத்தி வந்திருக்கிறார் என்பதைப் பலமுறை என் வாழ்க்கையில் நான் திரும்பிப் பார்த்திருக்கிறேன். அது என்னுடைய விசுவாசத்தைப் புதுப்பித்திருக்கிறது. நான் ஒரு கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும்போது, அதிலிருந்து வெளியே வர ஒரு வழியுமே இல்லை என்று தோன்றும்போது, நான் வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தங்களை எனக்கு நினைப்பூட்டிக்கொள்கிறேன்; மற்ற விசுவாசிகள் எனக்குக் கொடுக்கும் ஊக்கத்தையும் பெற்றுக்கொள்கிறேன். இவை எல்லாவற்றைக் காட்டிலும் என் விசுவாசத்தை அதிகமாகப் பலப்படுத்துகிற காரியம் என்னவென்றால், நான் என் வாழ்க்கையை பின்னோக்கிப் (திரும்பிப்) பார்க்கிறது தான். "இதுவரை ஒரு முறையாவது நான் உன்னைக் கைவிட்டேனா?" என்று கர்த்தர் என்னிடம் கேட்கிறார். "இல்லை ஆண்டவரே, ஒருமுறை கூட நீர் என்னைக் கைவிடவில்லை" என்று நான் அவரிடம் பதிலளிக்கிறேன். அப்பொழுது அவர், "நான் இப்பொழுதும் உன்னைக் கைவிடவே மாட்டேன்" என்று கூறுகிறார். இவ்வாறாக நான் திரும்பிப் பின்னோக்கிப் பார்ப்பது மற்ற அனைத்தைக் காட்டிலும் என்னை அதிகமாக ஊக்கப்படுத்துகிறது.

நீங்கள் மீண்டும் பாவத்தில் விழுந்துவிட்டீர்களா? கடந்த காலத்தில் தேவன் உங்களை எவ்வாறு மன்னித்தார் என்பதைத் திரும்பிப் பாருங்கள். அவர் உங்களை மன்னித்தபோது, நீங்கள் மீண்டும் விழுவீர்கள் என்பது அவருக்குத் தெரியாதா? நீங்கள் மீண்டும் விழுந்தபொழுது, அது அவருக்கு ஆச்சரியமாக இருந்ததா? இல்லை. அப்படியானால் அவர் உங்களை மீண்டும் மன்னிப்பார். நன்றியுள்ள இருதயத்தோடு பின்னோக்கிப் பாருங்கள். அது உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும். கர்த்தருடைய இரக்கத்திற்கு நன்றி செலுத்துங்கள். உங்களுடைய கடந்தகாலத் தோல்விகளை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள மற்ற தோல்வியுற்ற விசுவாசிகளிடம் இரக்கம்பாராட்டக் கற்றுக்கொள்வீர்கள்.

நாம் மேல்நோக்கி கர்த்தருடைய மகிமையை அதிகமதிகமாய்ப் பார்க்கிறதை ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. நாம் இன்னும் காணாத இயேசுவின் மகிமை அதிகம் உண்டு. இதற்காக நாம் பசிதாகமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அந்தச் சாயலுக்குத்தான் நம்மை மறுரூபப்படுத்த விரும்புகிறார். நாம் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்போது, அது நம்முடைய சொந்த தேவையைக் காணச் செய்கிறதாகையால் நம்மைத் தாழ்மைப்படச் செய்கிறது. நம் வாழ்வின் இறுதிவரை தாழ்மையுடன் இருப்பதற்கான இரகசியம் இதுதான்.

தேவன் அபிஷேகம்பண்ணி அதிகமாகப் பயன்படுத்திய ஒருவருக்குப் பெருமை வருவது மிகவும் எளிது. அதுபோன்ற பிரசங்கியார்கள் அநேகரை நான் பார்த்திருக்கிறேன். தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறபடியால் மிகவும் பெருமையடைந்து, ஜனங்களிடமிருந்து தங்களை அதிகமாக தொலைவுப்படுத்திக் கொள்ளுகிறார்கள். நம் வாழ்வின் இறுதிவரை நம்மை நொறுங்கினவர்களாய் மனத்தாழ்மையுடன் வைத்திருக்க உதவும் காரியம் எது? ஒரே ஒரு காரியம்தான். அது நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கிப் பார்ப்பதே ஆகும். நாம் இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது பெருமை கொள்ள முடியாது. ஒரு மனிதன் மற்றவர்களைப் பார்க்கத் தொடங்கும் போது, மற்றவர்களை விடத் தான் சிறந்தவன் என்றும் மற்றவர்களை விட அதிகமாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்றும், மற்றவர்களை விட தேவனால் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டவன் என்றும் கற்பனை செய்து பெருமையடைகிறான்.

ஆனால், அவன் இயேசுவை மேல்நோக்கிப் பார்த்தால், அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவிலே இயேசுவைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்துகிடந்ததைப் போல, தேவனுக்கு முன்பாக தூசியிலே முகங்குப்புற விழுந்து மனந்திரும்புவான். அவ்வாறாக ஒருவன் இயேசுவை நோக்கிப் பார்த்துக்கொண்டே இருந்தால், அவன் என்றென்றுமாய் தன்னுடைய முகத்தைத் தூசியில் வைத்திருப்பான். எல்லா நேரங்களிலும் நம் முகத்தைத் தூசியிலே வைக்க நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே பாதுகாப்பான இடம். எனவே, உங்களுடைய வாழ்நாட்கள் முடியும்வரை தேவன் உங்கள்மீது மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், மேல்நோக்கிப் பாருங்கள்.

தேவன் நமக்கென்று அற்புதமான காரியங்களை வைத்திருக்கிறார். அவருக்காக நாம் செய்ய வேண்டிய ஒரு பெரிய வேலையையும் அவர் வைத்திருக்கிறார். நாம் எப்போது இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்வோம் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கர்த்தர் வருவதற்கு முன்பாக இந்த பூமியில் அவருக்காக நாம் ஏதாவது பிரயோஜனமுள்ள காரியத்தைச் செய்ய எதிர்பார்க்கிறோம். உலகில் பெரும்பாலான ஜனங்கள் எதிர்காலத்தை அச்சத்துடனும் கவலையுடனும் பார்க்கிறார்கள். ஆனால் நாம் விசுவாசத்தோடு முன்னோக்கிப் பார்க்கிறோம்.

உபாகமம் 11:21-ல் மோசே அவர்களிடம், "உங்கள் நாட்களும் உங்கள் குமாரரின் நாட்களும் பரலோகத்தின் நாட்களைப் போல தேசத்தில் பன்மடங்கு பெருக வேண்டும்" என்பதே தேவனுடைய வாஞ்சை என்று கூறினார். பூமியில் நமது நாட்கள் பரலோகத்தின் நாட்களைப் போல இருக்கவேண்டும் என்பது நம் அனைவருக்குமான தேவனுடைய சித்தமாயிருக்கிறது. பரலோகத்தின் சந்தோஷம், சமாதானம், அன்பு, தூய்மை மற்றும் நற்குணம் என்பவைகளின் முன்ருசியை நம் வீடுகளிலும் சபைகளிலும் நாம் இப்போதும் அனுபவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதை நான் கொஞ்சம் அனுபவித்திருக்கிறேன். எனவே, என் வாழ்க்கையும் என் ஊழியமும் எனக்கு ஒரு பெரிய சுமையாக இல்லை. இல்லவே இல்லை. அது மகிழ்ச்சியாகவும் ஒவ்வொரு நாளும் உற்சாகமாகவும் இருந்துவருகிறது, ஏனென்றால் நான் பூமிக்குரிய பிரமாணங்களின்படி வாழாமல் பரலோகத்தின் பிரமாணங்களின்படி வாழக் கற்றுக்கொண்டேன். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடங்கும்போது இதைச் செய்ய நீங்கள் தீர்மானிப்பது எளிது. ஆனால் வரும் ஆண்டில் பூமிக்குரிய பிரமாணங்களின்படி வாழாமல் பரலோகத்தின் பிரமாணங்களின்படி வாழ நீங்கள் தீர்மானிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். முடிவுபரியந்தம் நிலைத்திருந்த இயேசுவின் மீது உங்கள் கண்களைப் பதித்திடுங்கள்; அப்பொழுது பூமியில் உங்கள் நாட்கள் பரலோகத்தின் நாட்களைப் போல இருக்கும். அதுவே நமக்கான தேவசித்தமாயிருக்கிறது.

இப்புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் தேவனுடைய மகத்தான ஆசீர்வாதம் நிறைந்ததாய் அமைய உங்கள் யாவரையும் நான் வாழ்த்துகிறேன்!