WFTW Body: 

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நின்று, தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபையைத் தருகிறார். நாம் அவருடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருந்தால், ஏற்ற காலத்தில் தேவன் நம்மை உயர்த்துவார் (1பேதுரு 5:5,6).

நாம் “உயர்த்தப்படுவது” என்பதற்கு, இந்த உலகத்திலோ அல்லது கிறிஸ்தவ உலகத்திலோ, மனுஷருடைய கனத்தைப் பெறும்படியான “உயர்ந்த மனுஷராய்” மாறுவது என்று அர்த்தமல்ல. மாறாக, ஆவிக்குரிய உயர்வையே அது குறிப்பிடுகிறது! நம் ஜீவியத்திலும், ஊழியத்திலும் தேவனுடைய சம்பூரண சித்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆவிக்குரிய அதிகாரத்தை தேவன் நமக்கு அருளிச்செய்வதே இந்த “உயர்த்தப்படுதல்” ஆகும்! ஆனால், நாம் நம்மை நாமே தாழ்த்துவதைப் பொருத்தே இந்த உயர்த்தப்படுதலும் சார்ந்திருக்கிறது.

மனுஷர்களுடைய கண்களுக்கு முன்பாய் நாளுக்கு நாள் பெரியவர்களாக மாற விரும்பும் ஜனங்களாலேயே இவ்வுலகம் நிறைந்திருக்கிறது என்பதை நாம் யாவருமே அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு வியாபாரியும் இவ்விதம் பெரியவர்களாய் மாறவே விரும்புகிறார்கள். துரதிருஷ்டவசமாய், தங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களும் இவர்களைப்போலவே நாளுக்கு நாள் பெரியவர்களாய் மாறிடவே விரும்புகிறார்கள். “அருள்திரு டாக்டர் - Reverend Doctor” போன்ற மதிப்பிற்குரிய பட்டம் பெறுவதற்கும், தங்கள் ஸ்தாபனங்களில் “சேர்மன் - Chairman” பதவியைப் பெறுவதற்கும் இவர்கள் ஆவலாய் தவிக்கிறார்கள்! இவ்வாறு, இன்றைய கிறிஸ்தவம் இவ்வுலகத்திலுள்ள எந்த கார்ப்பரேட் நிறுவனைத்தையும் விட வித்தியாசமற்று இருப்பது கொடிய துயரமேயாகும்!

தங்கள் தலைவர்கள், கவனத்தை ஈர்க்கும் ஒளி(spotlight) வெள்ளத்தில் சினிமா நட்சத்திரங்கள் போல் ஜொலித்து நிற்பதையும், பொதுக்கூட்டங்களில் ஆடம்பரமான சிங்காசனங்களில் அமர்ந்திருப்பதையும், ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருப்பதையும், மாளிகை வீடுகளில் வசிப்பதையும், விலையுயர்ந்த கார்களை ஓட்டிவருவதையும் இன்றைய இளம் விசுவாசிகள் மெய்சிலிர்க்கப் பார்க்கிறார்கள்! இந்த இளைஞர்கள் தேவனுடைய வழியை சரியாய் புரிந்து கொள்ளாதபடியால், இதுபோன்ற தங்கள் தலைவர்களைப் புகழ்வது மாத்திரமல்லாமல், தாங்களும் இவர்களைப்போல் உயர விரும்பும் அந்த நாட்களுக்காய் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்! தேவனிடமிருந்து “இத்தனை செல்வமான உயர்வை” அடைவதற்கு இந்தப் பிரசங்கிகள் பல வருடங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் ஜீவித்திருப்பார்கள் என்றும் இந்த இளம் விசுவாசிகள் “தவறாய்" எண்ணிக்கொள்கிறார்கள்! அதைப்போலவே தாங்களும் உண்மையுள்ளவர்களாயிருந்து, என்றாவது ஒருநாள் இதுபோன்ற டாம்பீக மேடையில் கவனத்தை ஈர்க்கும் ஒளி(spotlight) வெள்ளத்தில் நிற்கப்போகும் நாளை, இப்போதே கற்பனை செய்தும் பார்க்கிறார்கள்!

ஏராளமான காணிக்கைகளைத் திரட்டி பணம் சம்பாதிக்கும் இவ்வித பிரசங்கிகளை இளைஞர்கள் காணும் போது, அவர்களைப் போலவே தாங்களும் ஐசுவரியவான்களாய் மாறிடும் நாளுக்காய் ஏக்கத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்! ஆம், இந்த இளைஞர்களின் மாதிரித் திலகம் இயேசு கிறிஸ்துவல்ல... ஐசுவரியத்தில் உழலும் சினிமா நட்சத்திரங்களுக்கு ஒப்பான இந்தப் பிரசங்கிகளே' இவர்களின் மாதிரித் திலகமாய் இருக்கிறார்கள்! இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் துயரம் மிகுந்த அவலநிலையாகும்!

"ஆண்டவரை நாம் முழு இருதயமாய் பின்பற்றினால், பொன்னும் புகழும் உடையவர்களாய் அல்ல.... ஒப்பற்ற தேவ பக்தியுடையவர்களாக மாறுவோம்" என்பதை நம்முடைய இளைஞர்களுக்கு, நாம் நம் ஜீவியத்தின் மூலமாய் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

அதுமாத்திரமல்ல, இந்த சீரிய மாற்றம் நிகழும்போது, நாம் தவறாய் புரிந்து கொள்ளப்படுவோம்! தள்ளப்படுவோம்! துன்புறுத்தவும்படுவோம்! ஆனால், அதேசமயம் நம்மைப் பகைப்பவர்களை நேசிக்கவும், நம்மை சபிப்பவர்களை ஆசீர்வதிக்கவும் நம்மால் முடியும்! இந்த ஒப்பற்ற வாழ்க்கையைத்தான், நம் அடுத்த சந்ததிக்கு நாம் செயல்படுத்திக் காட்டவேண்டியது அவசியமாயிருக்கிறது. இதைச் செய்ய நாம் தவறிவிட்டால், வருங்கால சந்ததியினர் இன்றைய லௌகீகமான பிரசங்கிகளிடம் தாங்கள் காணும் மாயக் கவர்ச்சிக்குரிய “வேறொரு இயேசுவையே” பின்பற்றுவார்கள்!

தேவனுடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருப்பதன் பொருள், அவர் நம் ஜீவியத்தில் அனுப்பும் எல்லாச் சூழ்நிலைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதேயாகும். இந்தச் சூழ்நிலைகள் நம்மைத் தாழ்த்துவதற்கு இடங்கொடுத்தால் மாத்திரமே, நாம் சிறியவர்களாய் மாறி, தேவன் பெரியவராய் நமக்கு மாறுவார்! ஜனங்களின் கண்களுக்கு முன்பாய் நாம் சிறியவர்களாய் மாறிவிட்டால், இப்போது அவர்கள் நம்மைச் சார்ந்து ஜீவிக்காமல் பெரியவரான ஆண்டவரையே சார்ந்து ஜீவிக்கக் கற்றுக்கொள்வார்கள்!

கிறிஸ்து நமக்குள் பெருகி, நாமோ சிறியவர்களாய் மாறிடவே எப்போதும் வாஞ்சை கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு நம்மைக் குறைத்து சிறியவர்களாக்கும்படியான அநேக சூழ்நிலைகளுக்குள் தேவனே நம்மை நடத்துகிறார். நம்மை சிறியவர்களாக்கும் கிரியை நமக்குள் நடந்து விட்டால், கிறிஸ்து தாமாகவே நமக்குள் பெருகி விடுவார்! இவ்வாறு தேவன் நடத்தும் சூழ்நிலைகளில் நம்மை நாமே தாழ்த்திவிட்டால் தேவனுடைய நோக்கம் நமக்குள் நிச்சயம் சம்பூரணமாய் நிறைவேறி விடும்!

நாம் தவறு செய்த யாவரிடமும் சென்று மன்னிப்பு கேட்பதிலும், நம்மை நாமே தாழ்த்தும் பகுதி அடங்கியிருக்கிறது. கர்த்தருடைய வேலைக்காரர்களாய் (ஊழியர்களாய்) இருப்பவர்கள் எல்லா ஜனங்களுக்கும் வேலைக்காரர்களாய் இருந்திட வேண்டும்! ஆகவே, ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி, ஒரு வேலைக்காரனாய், அவர்களுக்குக் கீழாய் நம்மைத் தாழ்த்திடவே விருப்பம் கொண்டிருக்க வேண்டும். நாம் தவறு செய்யும் போது, அதை உடனடியாக ஒத்துக்கொள்ளவும் தேவையான இடங்களில் மன்னிப்பு கேட்கவும் வேண்டும்! தவறே செய்யாத ஒரே ஒரு நபர் தேவன் மாத்திரமேயாவார்!

“ஆண்டவரே, இந்த சூரியனுக்குக் கீழ் வாழும் சிறுபிள்ளைகளோ, வேலைக்காரர்களோ அல்லது பிச்சைக்காரர்களோ அல்லது யாராக இருந்தாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க நான் ஆயத்தமாயிருக்கிறேன்! இவ் விஷயத்தில் என் மதிப்பையும், கௌரவத்தையும் நான் ஒருக்காலும் தேடமாட்டேன்” என்று நான் ஆண்டவரிடம் கூறியிருக்கிறேன். நான் ஆண்டவரிடம் சொன்னது போலவே செயல்படுத்தியும் வாழ்கிறேன். தேவனும் என்னை ஆசீர்வதிக்கிறார்!

உங்களில் திருமணமானவர்கள், நீங்கள் அறியாமலே கூட, தற்செயலாய் உங்கள் மனைவியை மனம் புண்படச் செய்வது எவ்வளவு எளிதில் சம்பவிக்கிறது என்பதை அறிவீர்கள். ஒரு விஷயத்தை நல்ல நோக்கத்தோடு சொல்லியிருப்பீர்கள். ஆனால் அதை உங்கள் மனைவி விளங்கிக்கொள்ளாமல் உங்களைத் தவறாய் புரிந்து கொள்ள முடியும். அதைப்போலவே, நீங்களும்கூட, உங்கள் மனைவி கூறியதைத் தவறாய்ப் புரிந்து கொள்ளவும் முடியும்! இதுபோன்ற சமயங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு நான் கூறும் விடை இதுதான்: “உங்கள் நல்ல நோக்கத்தை விளக்குவதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் பிரயாசங்களைக் காட்டிலும் அல்லது இந்த தவறு யாருடையது என அலசி ஆராய்வதைக் காட்டிலும் ஒரே ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டால் உங்கள் வீட்டில் சமாதானம் நொடிப்பொழுதில் திரும்ப வந்து சேரும்!

இப்போது, ஏதோ ஒரு சூழ்நிலையில் உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களைத் தவறாய் புரிந்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் விளக்கம் கூறினாலும், அவைகளைக் கேட்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இந்த சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதென்ன? குறிப்பாக, நீங்கள் முற்றிலும் குற்றமற்றவராக இருக்கும்போது? இந்த நிலைக்காக நீங்களே நொந்து மடிந்து கொள்வதா? தேவையேயில்லை! தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக உங்கள் மனச்சாட்சி தூய்மையாய் இருக்கிறதா என்பதை மாத்திரம் உறுதி செய்யுங்கள். பின்பு, இந்த விஷயத்தை தேவனிடமே விட்டு விடுங்கள்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இது ஒன்றுதான்! இந்த வழிமுறையைத்தான் நான் பல ஆண்டுகளாய் பின்பற்றி வருகிறேன். அதினிமித்தம் நான் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டும் இருக்கிறேன். இதே வழிமுறையை நீங்களும் பின்பற்றும்படி உங்களுக்கும் ஆலோசனை கூறுகிறேன்.