WFTW Body: 

பாவம் பிரவேசிக்கும் முன்னர், "ஆதாமும் ஏவாளும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப் படாதிருந்தார்கள்." அவர்கள் ஒருவருக்கொருவர் எதையும் மறைக்காதவர்களாய், திறந்த மனதுடனும், நேர்மையுடனும் பழகி வந்தனர். அவர்கள் பாவம் பண்ணினவுடனே, காரியங்கள் எல்லாம் தலைகீழானது. அவர்கள் உடனடியாக அத்தி இலையைக் கொண்டு தங்களை மறைத்துக் கொண்டனர். ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்? டாம் & ஜெரி கார்ட்டூனில் வருவது போல நைஸாக எட்டிப் பார்க்கும் எந்த ஒரு டாம் பூனையும் அந்தத் தோட்டத்தில் இருக்கவில்லை. நிச்சயமாகவே அவர்கள் மற்ற விலங்குகளிடமிருந்தும் தங்களை மறைத்துக் கொள்ளவில்லை. பின்னே ஏன் அவர்கள் தங்களை அத்தி இலைகளால் மறைத்துக் கொள்ள வேண்டியத் தேவை ஏற்பட்டது? அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தங்களை ஒளித்துக் கொண்டனர்.

ஒருவரிடமிருந்து ஒருவர் தங்களை ஒளித்துக் கொள்ளும் காரியமானது பாவம் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாகும். எல்லா ஜனங்களும் தங்களுடைய ஆள்த்துவத்தில் அசிங்கமென கருதும் காரியத்தைப் பிறரிடமிருந்து ஒளித்துக் கொள்கிறார்கள். அது பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் பிறர் அறிய நேர்ந்தால், அவர்கள் சங்கடத்துக்குள்ளாவார்கள். ஆதலால் அவர்கள் முக மூடிகளை அணிகிறார்கள். அவர்கள் மேலோட்டமாகத் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உற்சாகமாகவும், பரவசமாகவும் காட்சி கொடுத்தாலும், அடித்தளத்திலே தோற்கடிக்கப்பட்டவர்களாகவும், நொந்துபோனவர்களாகவுமே உள்ளனர்.

தங்களைப் பற்றி முழுவதும் அறிந்த பிறகும் கூட அப்படித் தங்களை அறிந்தவர்கள் தங்களை நேசித்து விட வேண்டும் என்ற ஏக்கமே எல்லாருக்குள்ளும் உள்ளது. மற்றவர்களுடன் ஏற்பட்டக் கசப்பான அனுபவங்களே நம்மை முகமூடி அணியச் செய்கிறது. நம்மைப் பற்றிய முழு விவரங்களையும் மற்றவர்கள் அறிந்தால், அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற பயம் நம்மிடம் உண்டு. ஆகவே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயத்தை முன்பக்கமாக வைத்தவர்களாகவே நம்மை வெளி உலகிற்குக் காண்பிக்கிறோம். கிறிஸ்தவர்களுக்கும் இது மிகவும் பொருந்தும். இயேசு இப்பூமியில் இருந்த காலத்தில் அநேக மதப்பற்றுள்ள மக்களை கண்ட போதும், அவர்கள் முகமூடி அணிந்தவர்களாய் இருந்த படியால், அவரால் அவர்களுக்கு உதவிட முடியாமல் போயிற்று.

தேவனைப் பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர் நம்மை இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக் கொள்கிறார் என்பதே ஆகும். தேவன் உங்களை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக நீங்கள் ஒரு முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று ஒரு மதம் சொல்லுமானால், அது பொய்யான மதமாகும். இயேசு இப்படியொரு மதத்தை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தவில்லை. நாம் இருக்கிற பிரகாரமாகவே தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற செய்தியுடன்தான் அவர் இங்கு வந்தார். நம்மை நாமே மாற்றிக் கொள்ள முடியாது என்பது தேவனுக்குத் தெரியும். அதனால் அவர் நாம் இருக்கிறபடியே நம்மை ஏற்றுக் கொண்டு, அவர்தாமே நம்மை மாற்றுகிறார்.

இது பற்றிய சங்கதிகளைக் கூறுகிற ஒரு கட்டுரையை நான் கொஞ்ச காலத்துக்கு முன்பாக வாசித்தேன். அதை ஆக்கியோனின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. அக்கட்டுரை சொல்லுகிறதாவது:

"நாம் யாவரும் 'ஒளிந்து கண்டுபிடிக்கிற விளையாட்டை' விளையாடி நம் வாழ்க்கையைக் கழிக்கிறவர்களாய் இருக்கிறோம். ஏனென்றால் நாம் இருக்கிற நிலையைக் குறித்து வெட்கப்படுகிறவர்களாய், ஒருவருக்கொருவர் ஒளிந்து வாழ்கிறோம். நமக்குள்ளாக வாழும் உண்மையான நபரை ஒருவரும் காணமுடியாதபடிக்கு முகமூடியை அணிந்து வாழ்கிறோம். நாம் ஒருவரையொருவர் முகமூடி வழியாகப் பார்த்து கொண்டு அதையே 'ஐக்கியம்' என்றும் அழைத்துக் கொள்ளுகிறோம். நாம் பாதுகாப்பாகவும், இடையூறில்லாமலும் வாழ்வது போல ஒரு எண்ணப்பதிவை ஜனங்களுக்குக் கொடுத்தாலும், அது ஒரு முகமூடியாகவே உள்ளது. அந்த முகமூடிக்கு அடியிலே நாம் குழப்பத்திலும், பயத்திலும், தனிமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் நம்மை ஊடுருவிப் பார்த்து விடுவார்களோ என்று பயப்படுகிறோம். அவர்கள் நமக்குள் இருக்கும் உண்மையான ஆளைப் பார்த்துவிட்டால், நம்மை ஒதுக்கி விடுவார்கள் அல்லது ஒரு வேளை நம்மைப் பார்த்து நகைப்பார்கள் என்று பயப்படுகிறோம். அவர்களுடைய நகைப்பு நம்மைக் கொன்று விடும். எனவே 'நடிப்பு விளையாட்டைக்' காண்பித்து, நாம் உறுதியுள்ளவர்களாகவும், தைரியம் உள்ளவர்களாகவும் இருப்பதைப் போல ஒரு பிரம்மையை உண்டு பண்ணினாலும், அதன் பின்னணியில் குழந்தையைப் போல நடுங்குகிறவர்களாகவே இருக்கிறோம். நம்முடைய முழு வாழ்க்கையும் ஒரு முக்கிய பகுதியாக மாறுகிறது. நமக்குள்ளிருந்து கதறிக் கொண்டிருக்கும் மெய்யான காரியங்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், நம்மைக் குறித்த தேவையற்ற ஏராளமான விஷயங்களைப் பேசி ஜோக்கடிக்கிறவர்களாக இருக்கிறோம்."

"நாம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு நேசிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். நாம் நம்முடைய உண்மை நிலையை மற்றவர்கள் முன்பாகக் காட்டும் போது, அவர்கள் நம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்பதே நாம் அனுபவ ரீதியாகக் கண்ட காரியமாகும். நம்முடைய காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்த பிறகும் கூட நம்மை நேசிக்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடுகிறோம். ஆனால் அப்படிப்பட்ட நபரை நம்மால் ஒரு போதும் கண்டு பிடிக்கவே முடியாது. அன்பு, அன்பு என மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் பேசுகிறதைக் கேட்டவுடன், ஒருவேளை அவர்களாவது நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள் துளிர் விடுகிறது. அந்த நம்பிக்கையுடன் அவர்களோடு சேர்ந்தவுடன், வெகு சீக்கிரத்திலேயே அவர்களும் முகமூடியுடனேயே அலைந்து திரிகிறார்கள் என்ற விஷயம் நமக்குப் புலப்பட்டு விடுகிறது. அவர்களும் நம்முடைய குறைகளையே சுட்டிக் காட்டுகின்றனர்."

"இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? நாம் இருக்கிறப் பிரகாரமாகவே தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேசிக்கப்படுகிறோம் என்கிற உண்மையை நாம் காண்பதுதான் நம்முடைய தேவையாகும். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவனுடைய அன்பை அனுபவித்துப் பழகும்போது, அது நம்மைத் தைரியம் உள்ளவர்களாகப் பண்ணுகிறது. அதன் பின்பு பாசாங்கு செய்ய வேண்டிய அவசியம் அற்றுப் போகிறது. பிறகு தேவனிடத்திலும், மனிதனிடத்திலும் நாம் நாமாகவே இருந்துவிடுவோம். தேவ அன்பு நம்மை ஒரு போதும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படியாகக் கட்டாயப்படுத்தாது. தேவன் நம்முடைய பூரணமற்றத் தன்மைகள் அனைத்தையும் கண்டறிந்தாலும், அவர் நம்மை குற்றப்படுத்தாமல், அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறவராய் இருக்கிறார். இருந்தும் காரியத்தின் மறுபக்கம் என்னவெனில், அவர் நம்மைப் பூரணப்படுத்த விரும்புகிறார் என்பதாகும். நம்மைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் தேவன் கண்டும், அறிந்தும் இருந்தாலும், அவரால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்று அறிந்து கொள்ளுவதுதான், ஒரு குதூகலமான கிறிஸ்தவ ஜீவியத்துக்கு வேராக அமைகிறது. இந்தப் பரிபூரணமான வாழ்வை அருளுவதற்காகவே இயேசு வந்தார்."

"தேவ அன்பைப் பற்றிய அறிவானது, மனுஷரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தேடி அலைகிற காரியத்திற்கு ஒரு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைத்துவிடும். நாம் நம்பிக்கையால் நிறைந்து விடுவோம். நம்முடைய குற்ற மனப்பான்மை எல்லாம் அகன்று, பயங்களெல்லாம் நம்மைவிட்டு விரட்டப்பட்டு விடும். சில சமயங்களில் நாம் தனியாய் இருந்தாலும், தனிமையை உணர மாட்டோம். ஏனென்றால் அவர் நம்மைவிட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லையென வாக்குப் பண்ணியிருக்கிறார்."

"உங்கள் குடும்பக் கூட்டாளியிடம் உங்களுக்கு இருக்கும் தயவும், சாந்தமும் அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவரைப் பராமரிக்க நீங்கள் எடுக்கிற கரிசனையும் அவரிடத்திலே சிறகுகளை முளைக்கச் செய்கிறது. ஆரம்பக்கட்டத்திலே அது சிறியதும், பலவீனமானதுமான சிறகுகளாக இருந்தாலும் அது சிறகுகள்தான். நீங்கள் விட்டுவிடாதிருந்தால், அச்சிறகுகள் இன்னும் முளைத்து, ஒரு நாளிலே உங்களைக் குறித்ததான தேவத் திட்டப்படியே, நீங்கள் இருவருமாகக் கழுகுகளைப் போல செட்டையடித்து உயர எழும்பிப் பறப்பீர்கள்."

நம்முடைய திருமணக் கூட்டாளியிடமிருந்து, தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற ஏக்கப் பெருமூச்சு ஒரு கூக்குரலாக இருந்து கொண்டே இருக்கிறது. ஆதலால் அவரைக் கவனித்துக் கேட்பது இன்றியமையாததாகும். அவருடைய பேசப்பட்ட வார்த்தைகளுக்கு மட்டுமின்றி, பேசப்படாத இருதயத்தின் மௌன வார்த்தைகளுக்கும் நமது காதுகள் திறந்திருப்பது அவசியமானதாகும். தேவன் நம்மை, நாம் இருக்கிற வண்ணமே ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதையே நம்மால் விசுவாசிக்க முடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய துயரமாகும். அதன் விளைவாக அவரிடமிருந்தும் நம்மை ஒளித்துக் கொள்ளுகிறோம். அதைத்தான் ஆதாமும், ஏவாளும் செய்தனர். அவர்கள் தேவனிடமிருந்து தங்களை மறைத்துக் கொள்ளுவதற்காக ஒரு மரத்துக்குப் பின்னால் ஓடினார்கள்.

தேவனால் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதிலிருந்து உண்டாகிற சந்தோஷத்தை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினாலேயே, அநேக புருஷரும், மனைவிகளும் ஒருவரையொருவர் நேசிக்க இயலாமல் தவிக்கின்றனர். அவர்கள் மதத்தைப் பெற்றுக் கொண்டு கிறிஸ்துவை விட்டு விட்டனர். கிறிஸ்து இல்லாத ஒரு வெறுமையான கிறிஸ்தவ மதத்தை ஜனங்களுக்குக் கொடுப்பதுதான் பிசாசின் தலைசிறந்த உத்திகளில் ஒன்றாகும். இது அவர்களை நொந்து போன நிலைக்குத் தள்ளிவிடுகிறது. திரள்கூட்டமான ஜனங்கள் மெய்யான கிறிஸ்தவமில்லாத இந்த மதத்திலிருந்து திரும்பி விடுகிறார்கள். கிறிஸ்துதான் மெய்யான கிறிஸ்தவம்.

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒவ்வொரு குடும்பமும், சமாதானம் நிறைந்தாக இருக்கும். அது கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பமாக இருக்கும். அங்கே அவர்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுவார்கள். ஏனெனில், தேவன் தங்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்ற பாதுகாப்புடனும், நம்பிக்கையுடனும் அவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட குடும்பத்தையே நாம் கட்ட வேண்டியவர்களாய் இருக்கிறோம்.