ரோமர் 14 மற்றும் 15 அதிகாரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது. விசுவாசிகளாக, நாம் அனைவரும் எல்லா விஷயங்களிலும் ஒரே விதமாக சிந்திப்பதில்லை. ஒரு நாள் கிறிஸ்து திரும்பி வருகையில் நம் அனைவரின் மனமும் பரிபூரணமாக மாறும். அப்பொழுது, ஒவ்வொரு உபதேசத்தைக்குறித்தும் நாம் அனைவரும் 100% ஒத்த கருத்துடையவர்களாயிருப்போம். அதோடேகூட, உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்ன என்பதையும், மாம்சத்துக்குரிய மற்றும் உலகத்திற்குரிய வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் நாம் உணர்ந்துகொள்வோம். ஆனால், இப்போது நாம் அனைவரும் இந்த விஷயங்களில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் நேர்மையாகவும் முழு மனதுடனும் இருந்தாலும்கூட, நம் மனம் இன்னும் பாவத்தின் விளைவுகளால் தாக்கமடைந்திருக்கிறது. எவருக்கும் எந்தவொரு காரியத்தைப் பற்றியும் பூரணமான புரிந்துகொள்ளுதல் இருப்பதில்லை. “நாம் அனைத்தையும் கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்” (1கொரிந்தியர் 13:12). எனவே, மற்றவர்களிடம் வித்தியாசமான ஒன்றைக் காணும்போது, ‘நாம்தான் சரி, மற்றவர்கள் அனைவரும் தவறு’ என்று கற்பனை செய்துகொண்டு பிடிவாதமாக இருக்கக்கூடாது. இப்படித்தான் கிறிஸ்துவின் சரீரத்தில் பிரிவினைகள் வருகின்றன. தெளிவானதும் முக்கியமானதுமான சத்தியங்கள், குறிப்பாக, கிறிஸ்துவின் ஆள்த்துவத்தையும் அவருடைய கிரியைகளையும் பற்றிய சத்தியங்கள், வேதத்தில் காணப்படுகின்றன. இயேசு கிறிஸ்து முழுவதும் தேவனாகவும் முழுவதும் மனிதனாகவும் இருக்கிறார்; அவரே உலகின் பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார்; அவரே பிதாவாகிய தேவனிடத்திற்குச் செல்லும் ஒரே வழியாயிருக்கிறார். இப்படிப்பட்ட உபதேசங்களில், நாம் ஒரு துளியும் விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் அடிப்படை இல்லாத மற்ற உபதேசங்கள் இருக்கின்றன.
தண்ணீர் ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு அவசியமில்லை என்றாலும், ஸ்தல சபைகளுக்கு இன்னும் அது ஒரு முக்கியமான உபதேசமாகும். குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில் நம்பிக்கை கொண்ட ஒருவர், குழந்தை ஞானஸ்நானம் வேதப்பூர்வமற்றது என்று நம்பும் மற்றொருவருடன் இணைந்து சபையில் ஒன்றாகப் பணி செய்வது சாத்தியமில்லை. ஏனென்றால், அவர்கள் தொடர்ந்து மோதிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சகோதரர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய முடியாவிட்டாலும், அவர் மறுபடியும் பிறந்திருந்தால், தேவன் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், நாம் அவரை கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒன்றாக ஊழியம் செய்ய முடியாவிட்டாலும் கூட, நாம் ஒன்றாக ஐக்கியம் கொள்ள முடியும். இன்றைய பரிதாபம் என்னவென்றால், பல விசுவாசிகள் தங்களால் ஒருவருடன் சேர்ந்து ஊழியம் செய்ய முடியாவிட்டால், அவருடன் ஐக்கியமே கொள்ள முடியாது என்று நினைக்கிறார்கள். இங்குதான் ரோமர் நிருபத்தின் 14 மற்றும் 15 -ஆம் அதிகாரங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.
விசுவாசத்தில் பலவீனமான ஒரு சகோதரனைப் பார்க்கிறீர்களா? அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? "கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல" (ரோமர் 15:7) ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் பரிபூரணமாக இருந்தபோது கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டாரா? இல்லை. அப்படியானால், உங்கள் சகோதரனை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஏன் அவர் முதலாவது பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நம்முடைய மறுபிறப்பின் நாளில் நாம் அனைவரும் எவ்வளவு பலவீனரும் புத்தியீனருமாக இருந்தோம்! தேவனைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, நாம் அனைவரும் பாவத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்தோம். ஆகிலும் கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டார். அவர் நம்மில் பல தவறுகளைக் கண்டார், ஆனாலும் அவர் நம்மை ஏற்றுக்கொண்டார். தேவன் ஏற்றுக்கொண்ட மற்றவர்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம் பெருமையுள்ளவர்களாகவும், தேவனை விட நாம் அதிக ஆவிக்குரியவர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுகிறவர்களாகவும் இருக்கிறோம்! இப்படித்தான் மார்க்கக் கண்மூடிக் குழுக்கள் (cults) உருவாகின்றன. தவறான உபதேசங்களால் மட்டுமல்லாமல், மற்ற தேவப்பிள்ளைகள் மீதான தவறான மனப்பான்மைகளாலும் மார்க்கக் கண்மூடிக் குழுக்கள் உருவாகின்றன. கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள அங்கத்தினர்களை ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய சின்னஞ்சிறு சட்டதிட்டங்களை அடிப்படையாக ஆக்கிவிடக்கூடாது.
“நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன?” (ரோமர் 14:10). இது ஒரு வெளிப்புற கிரியை. “நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன?" (ரோமர் 14:10). இது ஓர் உள்ளான மனப்பான்மை. இரண்டையும் நாம் தவிர்க்க வேண்டும். தேவன் ஏற்றுக்கொண்ட அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு நம் இருதயம் விசாலமடையும் போது, நாம் சுவிசேஷத்தின் நற்செய்தியின் முழுமைக்கு வருகிறோம். நீங்கள் (கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள மற்றவர்களுடன்) ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துங்கள்” (ரோமர் 15:6).
ரோமருக்கு எழுதின நிருபத்தின் கடைசி அதிகாரமாகிய 16-ஆம் அதிகாரத்தில், ரோமாபுரியிலுள்ள வெவ்வேறு விசுவாசிகளுக்கு பவுல் செலுத்திய வாழ்த்துக்களைக் கொண்டிருக்கிறது. ரோமாபுரியிலுள்ள சபையில், ஐந்து வீட்டு-சபைகள் இருந்தன (ரோமர் 16:5-15). அவர்கள் அனைவரும் ஒரு மண்டபத்தில் ஒரு பெரிய சபையாக (mega-church) கூடிவரவில்லை. ரோமாபுரியிலுள்ள சபை மிகப் பெரிதாயிருந்தது. ஆனால் அவர்கள் வெவ்வேறு வீடுகளில் சிறிய குழுக்களாகக் கூடிவந்தனர். பவுல் ரோமாபுரிக்குச் சென்றதில்லை என்றாலும், அங்குள்ள திருச்சபையிலுள்ள பல்வேறு நபர்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி அவர்களை வாழ்த்தினார்.
கடைசியாக: ‘விசுவாசத்திற்குக் கீழ்ப்படிதல்’ (ரோமர் 16:26) என்ற பதம் இந்த நிருபத்தின் தொடக்கத்தில் இருப்பதைப் போலவே கடைசியிலும் வருகிறது. ஜனங்களை விசுவாசத்திற்கு நேராய் நடத்துவதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் விசுவாசித்த சத்தியங்களுக்குக் கீழ்ப்படியும்படிக்கு நடத்துவதற்கும் தேவன் பவுலுக்கு அழைப்பைக் கொடுத்திருந்தார். கீழ்ப்படிதல் என்கிற கிரியை இல்லாத விசுவாசம் ஒரு செத்த விசுவாசமாகும். அது ஓர் உயிரற்ற சரீரம் போன்றது. பழைய உடன்படிக்கையில் ‘கீழ்ப்படிதலுக்கு’ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புதிய உடன்படிக்கையில், ‘விசுவாசத்திற்குக் கீழ்ப்படிதல்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டளையும் ஓர் அன்பான தகப்பனிடமிருந்து வருகிறது என்றும், அவை நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் நாம் அறிந்து இப்போது தேவனுக்குக் கீழ்ப்படிகிறோம்.