WFTW Body: 

தேவனிடத்திலிருந்து கிருபையைப் பெற்றுக்கொள்ளாமல் ஒருவரும் புதிய உடன்படிக்கையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியாது. சிலர் நியாயப்பிரமாணத்திலுள்ள பத்துக் கட்டளைகளில் முதல் ஒன்பது கட்டளைகளைக் கிருபையின்றிக் கடைபிடிக்க முடியும். ஆனால், பத்தாவது கட்டளையாகிய - “ஒருபோதும் பிறனுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” - என்பதை தேவனுடைய கிருபை இல்லாமல் ஒருவரும் கடைபிடிக்க முடியாது. கிருபையின்றி ஒருவரும் (மத்தேயு 5 முதல் 7 வரை விவரிக்கப்பட்டுள்ள) புதிய உடன்படிக்கை வாழ்க்கையின் தரத்திற்கு வர முடியாது. தேவன் தம்முடைய கிருபையை தாழ்மையுள்ளவர்களுக்கு மாத்திரமே தருகிறார் (1பேதுரு 5:5).

நற்பண்புகளில் ஒன்றாகிய தாழ்மையே மிகவும் எளிதாக போலியாக்கப்பட்டுள்ளது. உண்மையான தாழ்மை என்பது மற்றவர்கள் நம்மை காணும்போது தெரிவது அல்ல. அதை தேவன் நமக்குள்ளே காண்கிறார் - அது உள்ளானதாக இருக்கிறது. கிறிஸ்துவின் ஜீவியம் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பிலிப்பியர் 2:5-8 சொல்லுகிறபடி, இயேசு தாம் தேவனாயிருப்பதினால் தமக்கு உண்டாயிருக்கும் சிலாக்கியங்களையும் உரிமைகளையும் துறந்துவிட்டு, தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர்களின் கைகளினால் சிலுவையில் அறையப்படுவதைக் கூட ஏற்கத் தயாராக இருந்தார். நாமும் அந்தத் தாழ்மையின் பாதையில் அவரைப் பின்பற்றி நடக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இயேசு மூன்று படியாகத் தம்மைத் தாழ்த்தினார்.

1. அவர் ஒரு மனுஷனானார்.

2. அவர் ஒரு அடிமையானார்.

3. சிலுவையிலே, அவர் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்படத் தயாராக இருந்தார்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்று இரகசியங்களை நாம் இங்கே காண்கிறோம். அது தாழ்மை, தாழ்மை, தாழ்மை என்பதே.

இயேசு இந்தப் பூமியில் 33 வருடங்கள் வாழ்ந்தபோது, அவர் மற்றவர்களுக்குத் தாழ்மையுடன் சேவை செய்ததையும், துன்பங்களையும், அவமானங்களையும், காயங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டிருந்ததையும் தேவதூதர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் பரலோகத்தில் ஆண்டாண்டு காலமாக அவரைத் தொழுதுகொண்டு வந்தனர். ஆனால் பூமியில் அவருடைய நடத்தையை அவர்கள் பார்த்தபோது, அவர் பரலோகத்தில் இருந்தபோது ஒருபோதும் அவர்கள் பார்த்திராததும் புரிந்துகொண்டிராததுமான தேவனுடைய சுபாவமாகிய, அவருடைய பணிவு மற்றும் தாழ்மை என்னும் குணாதிசயத்தை இன்னும் அதிகமாகக் கற்றுக்கொண்டார்கள். இப்போது தேவன் பரலோகத்திலுள்ள தூதர்களுக்கு கிறிஸ்துவின் அதே ஆவியை சபையில் நம் மூலமாகக் காண்பிக்க விரும்புகிறார் (எபேசியர் 3:10-ல் சொல்வது போல). இப்போது தேவதூதர்கள் நம்மிலும் நம்முடைய நடத்தையிலும் என்ன பார்க்கிறார்கள்? நம்முடைய நடத்தையானது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறதா?

மனத்தாழ்மையே எல்லாவற்றிலும் மேலான நற்பண்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனத்தாழ்மையானது, நாமும் நம்மிடம் இருக்கும் எல்லாமும் தேவனுடைய ஈவுகளே என்பதை முழுவதுமாக ஒப்புக்கொள்கிறது. மனத்தாழ்மை நம்மை அனைத்து மனிதர்களையும், குறிப்பாக பலவீனமான, பண்பாடற்ற, பின்தங்கிய மற்றும் எளியவர்களை மதிக்கவும் செய்கிறது. “மனத்தாழ்மை என்கிற மண்ணில் இருந்து மட்டுமே ஆவியின் கனியும் கிறிஸ்துவின் நற்பண்புகளும் வளர முடியும்”. ஆகவே, நம்மைப் பற்றின உயர்ந்த எண்ணங்களோ, மரியாதையை நாடுவதோ, தேவனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மகிமையை எடுத்துக்கொள்வதோ போன்ற எவ்வித விஷமும் நம்முடைய இருதயத்தில் ஒருபோதும் நுழையாமல் இருக்க, நீங்கள் உங்களைத் தொடர்ச்சியாக நியாயந்தீர்த்து வாழவேண்டும். இயேசுவின் மனத்தாழ்மையை அதிகம் தியானியுங்கள். இதுவே நான் உங்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான புத்திமதியாகும்.

இயேசு தம்முடைய எழுபது சீஷர்களிடம், "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" என்று கூறினார் (லூக்கா 10:20). நாம் இந்தக் காரியங்களில் சந்தோஷப்படக்கூடாது: (அ) நாம் யார் என்பதிலோ; (ஆ) நாங்கள் என்ன செய்தோம் என்பதிலோ; அல்லது (இ) நாம் என்ன செய்ய முடியும் என்பதிலோ சந்தோஷப்படக்கூடாது. ஆனால் நாம் சந்தோஷப்பட வேண்டியவைகள்: (அ) கர்த்தர் யார் என்பதிலும்; (ஆ) கர்த்தர் என்ன செய்தார் என்பதிலும்; (இ) கர்த்தர் என்ன செய்வார் என்பதிலுமே சந்தோஷப்பட வேண்டும். நம்முடைய திறமையைக் குறித்து நாம் மகிழ்ச்சியடையும் போது, ​​நாமே மகிமையைப் பெறுகிறோம், அது மற்ற விசுவாசிகளை விட நம்மை மேன்மையாகக் காட்டுகிறது. இது பரிசேயத்தனம். அப்போது நாம் "நம்முடைய கைகளின் கிரியைகளில் களிகூருகிறோம்" (அப்போஸ்தலர் 7:41) - பிசாசுகளைத் துரத்துவது, நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது, வசனத்தைப் பிரசங்கிப்பது, கட்டுரை எழுதுவது, உபசரிப்பது, நல்ல உணவை சமைப்பது, காரை நன்றாக ஓட்டுவது, அல்லது சில பூமிக்குரிய பணிகளை சிறப்பாக செய்வது போன்ற நமக்கு நாமே பெருமை தேடும் வழிகள் ஏராளம் உள்ளன. ஆனால் அவை எல்லாம் விக்கிரக ஆராதனையாகும். தேவன் செய்தவற்றில் மட்டுமே நாம் களிகூரும் போது, ​​அது நம்மைத் தாழ்மையுடன் வைத்திருக்கும், மேலும் நம்மை மற்ற எல்லா விசுவாசிகளோடும் சமமான நிலையில் இருக்கச் செய்து, அவ்விதமாக கிறிஸ்துவின் சபை கட்டப்பட முடியும்.