WFTW Body: 

பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தை முழு புதிய ஏற்பாட்டிலும் மிகச் சிறந்த முறையில் விவரிக்கும் ஒரு வசனம் 2 கொரிந்தியர் 3:18ம் வசனமாகும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்வின் கர்த்தராக (ஆண்டவராக) மாறும்பொழுது, அவர் விடுதலையைத் தருகிறார். “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (வசனம் 17). பிரதானமாக, அவர் பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மை விடுதலை செய்கிறார். அதுமாத்திரமல்ல பண ஆசையிலிருந்தும், தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கும் நம்முடைய முன்னோர்களின் பாரம்பரியத்திலிருந்தும், மனிதர்களின் அபிப்ராயத்திலிருந்தும், இதுபோன்ற மற்ற காரியங்களிலிருந்தும் நம்மை விடுதலை செய்கிறார். இது மெய்யாகவே ஒரு பெரிய விடுதலை. பின்பு மனிதனுக்கு ஊழியம் செய்யாமல், விடுதலையோடு தேவனுக்கே ஊழியம் செய்கிறவர்களாய் நாம் மாறுவோம்.

“வேதவசனங்களில் இயேசுவின் மகிமையைப் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் காட்டுகிறார்” என்று 2 கொரிந்தியர் 3:18ல் சொல்லப்படுகிறது (கண்ணாடி என்பது தேவனுடைய வார்த்தையாகும் - யாக்கோபு 1:23–25). உபதேசங்களைச் சரிபார்ப்பதற்கும் பிரசங்கங்களைப் பெறுவதற்கும் மட்டுமே சிலர் வேதாகமத்தை வாசிக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரோ வேதாகமத்திலிருந்து இயேசுவின் மகிமையை நமக்கு பிரதானமாகக் காண்பிக்க விரும்புகிறார். அந்த மகிமையை நாம் காணும்பொழுது, அந்த சாயலுக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை மறுரூபப்படுத்துகிறார். அந்தச் சாயலில் கிறிஸ்து எவ்விதமாக ஊழியம் செய்தார் என்பதும் உள்ளடக்கியுள்ளது. அவரைப் போலவே நாமும் ஊழியம் செய்யத் தொடங்குகிறோம். அவருடைய பிதாவுக்கு ஊழியம் செய்வதற்காக இயேசு எவ்வாறு தியாகங்களைச் செய்தார் என்பதை ஆவியானவர் நமக்குக் காட்டுவார் – நாமும் கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்காகத் தியாகங்களைச் செய்யும்படி நம்மையும் மாற்றுவார். நம்மை மறுரூபப்படுத்துவதற்குப் பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதித்தால், நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய ஊழியமும் முற்றிலுமாக மாறிவிடும்.

இப்பொழுது தேவனுடைய வார்த்தையில் இயேசுவின் மகிமையை நாம் காணும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நம்மை மகிமையின்மேல் மகிமையடைய மறுரூபப்படுத்தி, ஒவ்வொரு நாளும் இயேசுவின் மகிமையை நம்மிலே அதிகரிக்கச் செய்கிறார் (2 கொரிந்தியர் 3:18). வேறுவிதமாகக் கூறினால், நாம் முழுமையாக ஆவியானவருக்கு நம்மை அர்ப்பணித்திருந்தால், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய வாழ்வில் அபிஷேகம் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும், 30 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததைவிட இன்று மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், நீங்கள் வயது முதிர்ந்தவர்களாகும்போது உங்களுடைய வாழ்க்கையில் மகிமை குறைந்துவிடும். அநேக வைராக்கியமான இளைஞர்கள் திருமணம் செய்துகொண்ட பின்பு பின்மாற்றம் அடைகிறார்கள். அது ஏன் நடக்கிறது? நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி திருமணம் செய்திருந்தால், நீங்கள் தனியாக (வாலிபராக) இருந்தபோது உங்களுக்கு இருந்த வைராக்கியத்தையும் மகிமையையும் விட இப்போது மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் மனைவியோ உங்கள் இல்லறமோ கர்த்தரைவிட அதிக முக்கியமானதாய் உங்களுக்கு மாறினால், மகிமை குறைந்துவிடும். அத்தகைய மனிதன் கர்த்தருடைய மகிமையைக் காண்கிறதை நிறுத்திவிட்டு பின்மாற்றம் அடையத் தொடங்குகிறான்.

பவுல் தம்முடைய ஊழியத்தை 2 கொரிந்தியர் 4:1ல் தொடர்ந்து விவரிக்கிறார். “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை”. அப்போஸ்தலனாகிய பவுலும்கூட சோர்ந்துபோவதற்கு சோதிக்கப்பட்டார். எனவே நீங்கள் சோர்ந்துபோவதற்குச் சோதிக்கப்பட்டால், அதனை விநோதமாகக் கருதக்கூடாது. நான் அநேக சமயங்களில் சோர்ந்துபோவதற்குச் சோதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் “இயேசுவை எங்கள் கண்கள் நோக்கிப் பார்க்கிறதினாலும், தேவன் எங்களுக்குக் கொடுத்திருக்கிற அற்புதமான ஊழியத்தை நாங்கள் நினைத்துப் பார்க்கிறதினாலும் நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை” என்று நான் பவுலைப் போல சொல்லியிருக்கிறேன். ஆகையால் நாம் அனைவரும் சோர்ந்துபோவதற்குச் சோதிக்கப்பட்டாலும், நம்முடைய கண்கள் இயேசுவையே நோக்கிப் பார்க்கிறதினால், நம்மில் ஒருவரும் ஒருபோதும் சோர்ந்துபோகத் தேவையில்லை.

அநேக கிறிஸ்தவ ஊழியர்கள் சில வருடங்கள் தேவனைச் சேவித்தபிறகு, சோர்ந்துபோய் இருளடைந்தவர்களாய் மனச்சோர்வடைகிறார்கள்; சிலர் நரம்பியல் பாதிப்பை அடைகிறார்கள். ஏனென்றால் தங்களுடைய சொந்த தகுதியால் தேவனுக்கு ஊழியம்செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவருடைய ஊழியத்திற்கு நம்மைத் தகுதிப்படுத்துவதற்கு நாம் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும். நாம் தேவனுக்கு ஊழியம்செய்ய வேண்டுமென்றால் சரீர ஆரோக்கியத்திற்கும் கூட நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைவார்கள். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள். ஆனால் கர்த்தருக்குக் காத்திருக்கிற நீங்களோ கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவீர்கள்” (ஏசாயா 40: 30, 31) என்பதே தேவனுடைய வாக்குத்தத்தமாகும். நம்முடைய தகுதி தேவனிடமிருந்து வருகிறது. நீங்கள் பண நெருக்கடியிலிருந்தாலும் “எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” (2 கொரிந்தியர் 3:5) என்ற வாக்குத்தத்தத்தை நம்புங்கள். நமக்கு என்ன தேவையாயிருந்தாலும், அதனை தேவனால் நேர்த்தியாகச் சந்திக்க முடியும்.

பெரும்பாலான கிறிஸ்தவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிற வசனங்கள் 2 கொரிந்தியர் 4:10, 11 வசனங்கள் ஆகும். அவர்களுடைய வாழ்க்கையில் சரீரப் பிரகாரமான அற்புதங்களை செய்யக்கூடிய ஒரு சுவிசேஷத்தைக் கேட்க அநேக விசுவாசிகள் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் ஜீவனை நீங்கள் வெளிப்படுத்த விரும்பினால், அதற்குரிய பதில் இந்த வசனங்களில் உள்ளது. இயேசுவின் மரணத்தை நம்முடைய சரீரத்தில் சுமந்து திரிய வேண்டும். இந்த “இயேசுவின் மரணம்” என்றால் என்ன? இயேசு பூமியில் வாழ்ந்த 33½ வருடங்கள் முழுவதிலும் செய்ததைப் போலவே நம்முடைய சொந்த சித்தத்திற்கும், நம்முடைய சுய ஜீவியத்திற்கும் மரிப்பதே ஆகும் (யோவான் 6:38). இயேசு பூமியிலிருந்தபோது வாழ்க்கையின் சூழ்நிலைகளில் எவ்வாறாக நடந்துகொண்டாரோ அவ்வாறாக நடப்பதே இதனுடைய அர்த்தமாகும். ஜனங்கள் அவரை ‘பிசாசு’ என்று அழைத்தபோதும், யூதாஸ் ஸ்காரியோத்து அவருடைய பணத்தைத் திருடியபோதும், ஜனங்கள் அவரை துப்பியபோதும், ஜனங்கள் அவரை ‘வேசித்தனத்தினால் பிறந்தவன்’ (மரியாளின் குமாரன்) என்று அழைத்தபோதும், ஜனங்கள் அவரை அவமானப்படுத்தியபோதும், அவரை சூறையாடியபோதும், நிந்தித்தபோதும், பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி அவரை தேவாலயத்திலிருந்து வெளியேற்றியபோதும் பிரதிகிரியை எப்படி இருந்தது? மனுஷீக கனத்திற்கும், கெளரவத்திற்கும், புகழுக்கும், கண்ணியத்திற்கும், அவருடைய சொந்த சித்தத்திற்கும் அவர் மரித்தார். இதுவே “இயேசுவின் மரணம்” ஆகும். இயேசுவின் கல்வாரி மரணத்தில் உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பங்குமில்லை. உலகத்தின் பாவங்களுக்காக நாம் மரிக்க முடியாது. ஆனால் அவருடைய பூமிக்குரிய ஜீவியத்தின் ஒவ்வொரு நாளிலும் அவருடைய வாழ்க்கையில் ஒரு மரணம் இருந்தது. அந்த மரணத்தில் தானே நாம் பங்குகொள்ள வேண்டும். அது "இயேசுவின் மரணம்" என்று ஏன் அழைக்கப்படுகிறது? ஏனென்றால் தம்முடைய சுயத்திற்கும் இந்த உலக காரியங்களுக்கும் மரிக்கிற இந்த வழியாக நடந்த முதல் நபர் இயேசுவே ஆவார். மனுஷீகமாக இருக்கும் அனைத்திற்கும் அவர் மரித்து, இவ்விதமாக பிதாவின் மகிமையை வெளிப்படுத்தினார். இந்த இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படியாக நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம்.

2 கொரிந்தியர். 4:17, 18-ல் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “நாம் கடந்து செல்கிற இந்த எல்லா உபத்திரவங்களும் அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவங்களாகும். ஏனென்றால் அதன் மூலமாக நமக்குள் வரக்கூடிய மகிமை மிகவும் அதிகமான நித்திய கனமகிமையாகும்” (4: 17). ஆனால் “காணப்படுகிற அநித்தியமானவைகளைக் காண மறுத்து, காணப்படாத நித்தியமானவைகளைக் காணும்போது” (4:18) மாத்திரமே இந்த மகிமை நமக்குள் வரும். அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நம்முடைய எல்லா உபத்திரவங்களையும் மனிதனுடைய கண்ணோட்டத்தில் பார்க்காமல், தெய்வீக கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். நம்முடைய வாழ்கையில் இந்த சோதனைகள் ஒரு மகிமையை உண்டாக்குகிறது. இயேசுவின் இருதயத்தோடு நெருங்கிய ஐக்கியத்தை நாம் பெறுகிறோம். அதனால்தான் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம் (சோர்ந்துபோகிறதில்லை); அதன் வழியாகத்தான் நாம் ஒரு ஊழியத்தையும் பெறுகிறோம். வெறுமனே தேவனுடைய வார்த்தையைப் படிப்பதின் மூலமாக நாம் ஒரு ஊழியத்தை பெறுவதில்லை.