சபை கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. அது வாரந்தோறும் கூடிவரும் வெறும் விசுவாசிகளின் கூட்டமல்ல. எனவே நாம் கட்டுவது ஒரு சரீரமே அல்லாமல் “ஒரு கிறிஸ்தவ மார்க்க குழு அல்ல” என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். எந்த மனிதனும் ஒரு மார்க்க குழுவை கூட்டிச் சேர்த்திட முடியும். ஆனால், கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்கோ தேவனிடமிருந்து கிருபையும் அபிஷேகமும் அருளப்பட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை நாமே மறுதலித்து, அனுதினமும் மரித்து, பரிசுத்தாவியினால் நிறைந்திருப்பதே ஆகும்.
பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலர்கள் ஒரு கூட்டமாய் கூடிவந்தார்கள், ஒரு சரீரமாய் அல்ல. இன்றுள்ள அநேக பெரிய சபைகளும் ஆராதனை கூடுகையாக இருக்கிறார்கள், ஓர் சரீரமாய் அல்ல. அதை ஒப்பிடுகையில், வீடுகளில் கூடும் சிறிய சபைகள் சிறிதளவு மேன்மையாக இருந்தாலும் அவர்கள் “ஜனசங்கங்களாக - (clubs)” இருக்கிறார்கள், ஓர் சரீரமாய் அல்ல. ஆனால் இயேசுவோ, தம்முடைய சரீரத்தையே கட்டிக்கொண்டிருக்கிறார்.
முதல் கிறிஸ்துவின் சரீரம் மனுஷரால் காணப்பட்டபோது முன்னணையிலே (கால்நடை தீவன-கொட்டிலில்) கிடத்தியிருந்தது. இப்படி ஒரு தாழ்விடப் பிறப்பின் நிந்தையே, கிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளமாய் மேய்ப்பர்கள் கண்டார்கள் (லூக்கா 2:12 காண்க). மீண்டுமாய் கிறிஸ்துவின் சரீரம் கடைசியாகவும், நிந்தைமிகுந்த, ஒரு குற்றவாளியின் சிலுவையில், கல்வாரியில் தொங்கி காட்சியளித்தது. பிறப்பிலிருந்து இறப்புவரை முதல் கிறிஸ்துவின் சரீரம் ஓர் நிந்தையின் குணாதிசயமாய் இந்த லௌஹீக உலகத்திற்கும், மார்க்க உலகத்திற்கும் இருந்தது.
இன்றும் கிறிஸ்துவின் சரீரத்தின் உண்மையான தோற்றம், இந்த உலகத்திற்கும், பாபிலோனிய கிறிஸ்தவத்திற்கும் அதே நிந்தையின் மாதிரியை அனுபவமாய் கொண்டிருக்கும். நம்முடைய ஸ்தலசபை இதுபோன்ற “கிறிஸ்துவின் நிந்தையால்” மூடப்படாதிருந்தால், ஒருவேளை நாம் ஓத்தவேஷக்காரர்களாகவும், “பாபிலோனின் பாளையத்திற்கு புறம்பே” செல்லாதவர்களாகவும் இருக்கக்கூடும் (எபிரேயர் 13:13). இருப்பினும், கிறிஸ்துவின் நிந்தை என்பதற்கும் நம் சொந்த பாவம், அல்லது மதியீனம் அல்லது வெதுவெதுப்பான தன்மை ஆகியவைகளால் ஏற்படும் நிந்தைக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. ஒன்றுக்கொன்று உள்ள வித்தியாசத்தை நாம் தவறாய் எடுத்துக்கொள்ளக்கூடாது.
“அவருக்கு அழகுமில்லை, செளந்தா்யமுமில்லை.... அவர் அசட்டை பண்ணப்பட்டவரும் மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார்” (ஏசாயா 53:2,3) என்று இயேசுவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அவருடைய மகிமை, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்ததும், அதிகபட்சமான மனுஷருடைய கண்களுக்கு முன்பாக மறைந்திருந்ததுமான அவருடைய உள்ளான ஜீவியமாகவேயிருந்தது (யோவான் 1:14). அவ்விதமே நம் ஸ்தல சபைகளும் இந்த உலகத்திற்கோ அல்லது பாபிலோனிய கிறிஸ்தவத்திற்கோ ஓர் கவர்ச்சியாய் இருந்திடக்கூடாது. ஒரு தேவபக்தியான வாழ்க்கையைத் தேடி உள்ளே வரும் மக்களுக்கே, சபையின் மகிமை அழகுள்ளதாய் காணப்பட வேண்டும். ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளே இருந்த திரைச்சீலைகள் அழகுள்ளதாய் இருந்தது. ஆனால் அதன் வெளியே போடப்பட்டிருந்ததோ கரும்-மரக்கலரிலான செம்மறியின் தோல். அதின்மேல் தூசியும் அழுக்கும் படிந்திருந்தன. கூடாரத்தின் உள்ளே, எல்லா உட்புற திரைச்சீலைகளும் அழகுள்ளதாயிருந்தது. கிறிஸ்துவின் மணவாட்டியும் “தன் அந்தரங்க ஜீவியத்தில் அழகுள்ளவள்” (சங்கீதம் 45:13). மேலும் அவளுடைய உள்ளான அழகின் மகிமைக்கு மேலாக நிந்தையினால் நிறைந்த மூடுதிரை இருக்கும் (ஏசாயா 4:5).
இங்குதான், சபை தலைவர்களுக்கு ஓர் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அவர்கள் சபையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை வைத்தே அந்த சபை, இயேசுவைப்போலவே மனுஷர்களால் மதிக்கப்படாமல் இருக்குமா? அல்லது உலகத்தின் கனத்தையும் புகழையும் பெற்று இருக்குமா? என்பதை தீர்மானிக்கப் போகிறது. மாம்சீக அல்லது ஆத்துமத்திற்குரிய கிறிஸ்தவர்களிடத்திலிருந்து அல்லது இந்த உலகத்திலிருந்து, ஒரு நல்ல மதிப்பை நாம் தேடுவோமென்றால், நாம் நிச்சயமாய் பாபிலோனைக் கட்டும் பரிதாபத்திற்கு உள்ளாவோம். இவ்வாறாக, இன்றுள்ள கிறிஸ்தவ உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாம் பிரபல்யமாய் மாறினால், நாம் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்ற முற்றிலும் தவறி விட்டோமென்பது நிச்சயம்.
இதை இயேசு கூறும்போது “என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” (மத்தேயு 5:11,12) என்றார். ஏரோதும் அவன் போர்சேவகர்களும் முதல் கிறிஸ்துவின் சரீரமாகிய குழந்தை இயேசுவை 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக கொலை செய்ய வகைதேடினார்கள். இன்றும் அநேக இடங்களில், கிறிஸ்துவின் சரீரம் ஆரம்பிக்கும்போதே, அதை அழித்திட அநேகர் முயற்சிக்கிறார்கள். யோசேப்பு தேவனுடைய சத்தத்திற்கு உணர்வுள்ளவராய் அவருடைய வார்த்தைக்கு துரிதமாய் கீழ்ப்படிந்து, அதன்படி செய்தபடியால் கிறிஸ்துவின் சரீரத்தை பாதுகாத்துக்கொண்டார் (மத்தேயு 2:13-15). அந்த அளவிற்கு, கிறிஸ்துவின் சபையில் பொறுப்புள்ளவர்களாயிருக்கும் நாமும் யோசேப்பைப் போல “கவனித்து கேட்கிறவர்களாய்” ஆவியானவர் நம்மிடம் பேசியவுடன், அவர் நமக்கு சொன்னபடியே துரிதமாய் கீழ்ப்படிந்திட வேண்டும். அவ்வாறு கவனித்து கீழ்ப்படியவில்லையென்றால், நம் ஸ்தலத்திலுள்ள கிறிஸ்துவின் சரீரம் ஏதாகிலும் ஒரு வகையில் நஷ்டமடையும். கடைசி நாளில், அதற்கு நாமே பொறுப்பாளிகளாய் நிற்போம். இந்த விஷயத்தில், நம்முடைய பொறுப்பை நாம் கவனமாய் எடுத்து கொள்ளவேண்டும், ஏனெனில், நமக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவையும் குறித்து தேவனுக்கு முன்பாக நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாயிருக்கிறோம் (எபிரெயர் 13:17).