WFTW Body: 

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:14-16).

இயேசு பயன்படுத்திய மற்றொரு உதாரணம் அல்லது சொல் சித்தரிப்பு தான் வெளிச்சம். இயேசுவின் காலத்தில், ஜனங்கள் விளக்குகளைப் பயன்படுத்தினார்கள். விளக்கின் திரி என்பது மிக மிகச் சிறிய விஷயம். (இன்று ஒரு பல்பு என்பது மிகச் சிறிய விஷயம்). ஆனால் அது ஓர் அறை முழுவதையும் ஒளிரச் செய்கிறது! திரியின் அளவோ அல்லது பல்பின் அளவோ முக்கியமல்ல, ஆனால் அதிலிருந்து வரும் ஒளியின் தீவிரம்தான் முக்கியம். முக்கியத்துவம் அளவிற்கல்ல, தரத்திற்கேயாகும். மங்கலான ஒளியை வெளியிடும் பூஜ்ஜிய வாட் பல்புகள் உள்ளன. அவற்றின் வெளிச்சத்தில் நீங்கள் எதையும் பார்க்க முடியாது. மறுபுறத்தில், அதே அளவு கொண்ட ஆனால் அதிக சக்திவாய்ந்த ஹாலோஜன் பல்புகள் போன்றவை உள்ளன. அவை ஒரு முழு தெருவையும் ஒளிரச் செய்கின்றன. ஒரு பல்பானது மிகக் குறைந்த வாட்டேஜ் அல்லது மிக அதிக வாட்டேஜ் கொண்டதாக இருக்கலாம். முக்கியமானது அதன் சக்தியே அன்றி, அதன் அளவு அல்ல. ஒளிரச் செய்யக்கூடிய சக்தியின் தீவிரம். இயேசு, “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்கிறார்.

உலகம் இருளில் மூழ்கியிருக்கிறது. அந்த இருள் எவ்வளவேனும் எனக்குள் இருக்கக்கூடாது. நான் ஒரு பல்பாக இருந்து, உலகின் இருள் என்னுள் இருந்தால், நான் உடைந்த பல்பைப் போன்றவன். அநேக சபைகளில் உடைந்த பல்புகளைப் போன்ற கிறிஸ்தவர்களே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவை எரிந்து பிரகாசித்துக் கொண்டிருந்தன, ஆனால் இப்போது அவை உடைந்து போய்விட்டன. அவர்கள் பின்மாற்றம் அடைந்துவிட்டார்கள், ஆகையால் அவர்களுடைய வெளிச்சம் இனி பிரகாசிப்பதில்லை. அந்த வெளிச்சம் என்ன? “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்று வசனம் கூறுகிறது. அந்நாட்களில், தொடர்ந்து எண்ணெயால் எரிந்து கொண்டிருந்த ஒரு விளக்கு வழியாக ஒளி வந்தது, அது திரியை எரியச் செய்தது. அந்த எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயிருக்கிறது.

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு நபரின் ஒரு அடையாளம், அவன் நன்மை செய்கிறவனாய் இருப்பான் என்பதுதான். இயேசு பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் செய்யப்பட்டபோது, ​​அவர் நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்தார் என்று அப்போஸ்தலர் 10:38-இல் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று “அபிஷேகம் பெற்ற” பிரசங்கிமார்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களைப் போல, அவர் தம்முடைய ஊழியத்திற்காக ஜனங்களிடமிருந்து பணம் சேகரிக்கும்படி சுற்றித் திரியவில்லை. அவர் அதற்கு நேர்மாறாக இருந்தார். அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். அதற்காக அவர் ஒருபோதும் கட்டணம் வசூலிக்கவில்லை. அவர் கேட்காமலேயே ஜனங்கள் தாமாக முன்வந்து அவருக்கு வெகுமதிகளை அளித்தார்கள். அவர் அவற்றை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் தமது தேவைகளை யாருக்கும் தெரியப்படுத்தமாட்டார். அவர் எந்தக் கட்டணமும் இல்லாமல் நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்தார்.

அவர் கூறுகிறார், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, உங்களை அல்ல, தேவனை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது!” உங்களுக்கு கனம் கிடைக்கவும், உங்களுக்கு மகிமை கிடைக்கவும் நீங்கள் நற்கிரியைகளைச் செய்தால், அது உண்மையில் இருள் தான். பல கிறிஸ்தவர்கள் செய்யும் பல நற்கிரியைகள் உண்மையில் தங்களுக்கு கனத்தை தேடிக் கொள்வதற்காக செய்யப்படும் விளம்பரங்களாகவே இருக்கின்றன. அவர்களுடைய நிறுவனம் அல்லது ஊழியம் உண்மையில் இருளாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் பரலோகப் பிதாவுக்குச் செல்லும் மகிமை அதில் எதுவும் இல்லை. மாறாக, அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ அல்லது அந்தக் குறிப்பிட்ட மனிதனுக்கோ மகிமை வருகிறது. ஆனால் இயேசுவோ, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள்” என்றே கூறினார். இதுவே மெய்யான வெளிச்சம், அங்கு ஒரு நபர் நன்மை செய்கிறார், அதன் விளைவாக, கிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார், தனிநபர் அல்ல.

இதுதான் ஒளியை வெளிப்படுத்துவது என்பதன் அர்த்தம். யோவான் 1:4-இல், இந்த ஒளி இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: “இயேசு கிறிஸ்துவுக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.” எனவே ஒளி என்பது ஓர் உபதேசமோ, போதனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியோ அல்ல - அது ஒரு வாழ்க்கை. அது பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடமிருந்து வெளிவரும் இயேசுவின் வாழ்க்கையே. நம்மிடமிருந்து வெளிவரும் இயேசுவின் ஜீவன், எண்ணெயால் ஏற்றி, ஒளியைக் கொடுக்கும் பழைய விளக்கைப் போன்றது.

யோவான் 8:12-இல் இயேசு மிகத் தெளிவாகக் கூறினார், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடக்கமாட்டான்.யோவான் 8:12-இன்படி, ஒரு நபர் இருளில் நடக்கும்போதெல்லாம், அந்த நபர் இயேசுவைப் பின்பற்றவில்லை என்பதை நாம் சந்தேகமின்றிச் சொல்லலாம். “சரி, நான் இப்போது கொஞ்சம் இருளாக இருக்கிறேன்” என்று நீங்கள் சொன்னால், அதற்குக் காரணம், நீங்கள் இயேசுவைப் பின்பற்றாமல் இருக்கிறீர்கள். தயவுசெய்து இருளில் நடப்பதையும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இயேசுவும் கூட கெத்செமனே தோட்டத்தில் குழம்பி, பிதாவின் சித்தத்தைப் பற்றி குழப்பமடைந்தார். அதனால்தான் அவர் ஒரு மணி நேரம், “பிதாவே, இந்தப் பாத்திரத்தை நான் குடிக்கலாமா வேண்டாமா?” என்று ஜெபித்தார். அது இருள் அல்ல. குழப்பம் என்பது விசுவாச வாழ்க்கையின் ஒரு பகுதி, ஆனால் இருள் என்பது வேறு ஒன்று, இயேசுவின் வாழ்க்கைக்கு முரணான ஒன்று. இயேசு, “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான், ஏனென்றால் நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார்.

பின்னர் அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உலகத்திற்கு ஒளியாக இருந்தார் என்று கூறினார். “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்றார் (யோவான் 9:5). அவர் எவ்வளவு காலம் உலகத்தில் இருந்தார்? அவர் 33 ½ ஆண்டுகள் உலகத்தில் இருந்தார். அவ்வளவுதான்.

ஜனங்கள் தங்களை அதிக ஆவிக்குரியவர்கள் என்று எண்ணி, “கிறிஸ்து இப்போது உலகில் இல்லையா?” என்று கேட்கலாம். சரி, நீங்கள் யோவான் 17:11-ஐ வாசித்தால் அங்கே, “நான் இனி உலகத்திலிரேன்” என்று கூறுகிறார். நாம் அதிக ஆவிக்குரியவர்களாக இருப்பதை விட்டுவிடவேண்டும். இயேசு இந்த உலகை விட்டு வெளியேறி பரலோகத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பு, சிலுவைக்கு முந்தைய நாள், “நான் இனி உலகத்திலிரேன். ஆனால் இந்த சீஷர்கள் இங்கே உலகில் இருக்கிறார்கள். இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், ஆனால் நான் இனி இங்கே இல்லை. நான் உம்மிடத்திற்கு வருகிறேன், பரிசுத்த பிதாவே, அதனால் நான் இனி உலகில் இல்லை” என்று கூறினார். எனவே, யோவான் 9-ஆம் அதிகாரத்தில், “நான் உலகத்திலிருக்கையில்” என்று அவர் கூறியபோது, ​​அவர் தம் வாழ்க்கையை வெளிப்படுத்திய அந்த 33½ ஆண்டு காலத்தைப் பற்றியே குறிப்பிட்டார். அவர் பரலோகத்திற்குச் சென்ற பிறகு, இன்று உலகத்திற்கு ஒளியாக இருப்பவர் யார்?

மத்தேயு 5:14, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. யாராவது என்னிடம், “உலகின் ஒளி யார்?” என்று கேட்டால், வேதப்பூர்வமான பதில், “அது நான்; இயேசுவைப் பின்பற்றுபவர்களுடன் சேர்ந்து, நான் உலகத்தின் ஒளி” என்று கூறுவதாக இருக்கும். நீங்கள் எப்போதாவது அப்படி யோசித்திருக்கிறீர்களா? “உலகின் ஒளி யார்?” என்ற கேள்விக்கு “நானும் இயேசுவைப் பின்பற்றுபவர்களும்” என்று பதிலளிக்க நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதுதான் சரியான பதில்.

“ஓ, என்னைப் பார்க்காதே. இயேசுவை மட்டும் பார்” என்று சொல்வது மிகவும் எளிது. ஆனால் அவர் இப்போது பூமியில் இல்லையே! "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று அவர் கூறினார். அநேக கிறிஸ்தவர்கள் வேதவசனங்களைச் சரியாகப் படிக்காததினால், அவர்களின் சொந்தப் புரிதலிலிருந்து வந்த, முற்றிலும் தவறான பல வகையான தவறான கருத்துக்களை அவர்கள் மனதில் பெறுகிறார்கள். தேவன் தமது ஜீவனை பரிபூரணமாக வெளிப்படுத்த அந்த 33½ ஆண்டுகளில் இயேசு கிறிஸ்துவை 100% சார்ந்திருந்தது போல, இப்போதும் அதே ஒளியை பரிபூரணமாக இன்று வெளிப்படுத்த பூமியிலுள்ள தம்முடைய சபையை - தம்முடைய சீஷர்களைச் சார்ந்திருக்கிறார்.

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்களாக.