பழைய ஏற்பாட்டில், “அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக” என்றும், “பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” என்றும் நியாயப்பிரமாணம் கூறியது. இன்றைய நாட்களில், ஆணையிடுதல் என்பது ஏதாவது ஒன்றைக் குறித்து சத்தியம் செய்வது போன்றதாகும். ஜனங்கள் வேதத்தின் மேல் கையை வைத்து தாங்கள் உண்மையை மட்டும் பேசுவோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் உண்மையாக என்ன சொல்கிறார்கள் என்றால், “பெரும்பாலும் நான் பொய் சொல்கிறேன், ஆனால் இப்போது மட்டும் நான் உண்மையைப் பேசப் போகிறேன்” என்றே சொல்கிறார்கள். ஒருவர் வேதத்தின் மேல் கை வைத்து அதன் மீது சத்தியம் செய்வது தான் ஆணையிடுவதின் அர்த்தம். இருப்பினும், யாக்கோபு நிருபம் நீங்கள் எப்போதும் உண்மையைப் பேச வேண்டும் என்று கூறுகிறது (யாக்கோபு 5:12). அதைத்தான் இயேசு இங்கே கூறினார்.
நாம் எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே மத்தேயு 5:33-37-ன் சாராம்சமாயிருக்கிறது. நீதிமன்றத்தில் சத்தியம் செய்வதுபோல நாம் நம் வார்த்தைகளில் புத்திசாலித்தனமாகவும், சாதுரியமாகவும், நுட்பமாகவும் இருக்கக்கூடாது. நாம் உண்மையுள்ளவர்கள் என்று அறியப்பட வேண்டும். எந்தக் காரியத்திலும் பொய் சொல்லக்கூடாது. நமது “ஆம்” என்பது “ஆம்” என்றும், நமது “இல்லை” என்பது “இல்லை” என்றும் இருக்க வேண்டும். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். நான் “ஆம்” என்று ஒரு தந்திரமான முறையில் சொல்ல வேண்டியிருந்தால், அங்கு ஏதோ ஒரு தவறு இருக்கிறது, அது இறுதியில் மாய்மாலத்திற்கு வழிவகுக்கும்.
நீங்கள் யாத்திராகமம் 20-ல் பத்து கட்டளைகளைப் படித்திருந்தால், அது “பொய் சொல்லாயாக” என்று சொல்லவில்லை. ஒன்பதாவது கட்டளை, “உன் அயலானுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” என்பதாகவே இருக்கிறது. அது ஒரு நீதிமன்ற சூழலைக் குறிக்கிறது, அதாவது ஒரு நீதிமன்றத்தில் நீங்கள் பொய் சொல்லக்கூடாது என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஏதாவது சத்தியம் செய்வதாயிருந்தால் உண்மையை மட்டும் பேச வேண்டும். இதுவே பழைய ஏற்பாட்டின் தரமாக இருந்தது. ஏனென்றால் பொய் சொல்லக்கூடாது என்ற கட்டளையை யாரும் கடைபிடிக்க முடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். அதேபோல், பழைய ஏற்பாட்டில் “நீ கோபப்படக் கூடாது” என்று கூறும் எந்தக் கட்டளையும் இல்லை. ஏனென்றால் அத்தகைய கட்டளையை யாராலும் கடைபிடிக்க முடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். அந்நாட்களில், “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளை மட்டுமே இருந்தது. அதேபோல், பழைய ஏற்பாட்டில் “ஸ்திரீயை இச்சியாதிருப்பாயாக” என்று எந்தக் கட்டளையும் இல்லை. ஏனென்றால் அதை யாராலும் கடைப்பிடிக்க முடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். எனவே அந்நாட்களில், “சரீரப்பிரகாரமான விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளை மட்டுமே இருந்தது.
ஆனால் இப்போது புதிய உடன்படிக்கையில், பரிசுத்த ஆவியின் வரம் உள்ளே வந்து, பொய் சொல்லாமலும், கோபப்படாமலும், இச்சியாமலும் வாழும் ஒரு வாழ்க்கையை சாத்தியமாக்குகிறது. பரிசுத்த ஆவியானவர் வல்லமையுடன் வரும்போது, அவர் ஒரு விளக்கை எரிய வைக்கும் அல்லது ஒரு விசிறியை இயக்கும் அல்லது நமது சாதனங்களை இயக்கும் மின்சாரம் போல வருகிறார். அப்போது பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாமல் நம்மால் செய்ய முடியாத சில காரியங்களைச் செய்ய முடியும். இப்போது கண்களின் இச்சையை மேற்கொள்ள முடியும், கோபத்தை மேற்கொள்ள முடியும், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் சத்தமிடுவதை நிறுத்த முடியும், எப்போதும் உண்மையைப் பேச முடியும், மேலும் உங்கள் “ஆம்” என்பது “ஆம்” என்றும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” என்றும் இருக்க முடியும்.
தற்போதைய நடைமுறைக்கேற்ற ஓர் உதாரணத்தைப் பயன்படுத்துகிறேன்: நீங்கள் ஒரு விற்பனைப் பத்திரம் அல்லது வேறு ஏதேனும் ஒப்பந்தத்தில் சாட்சிகளுடன் நீதிமன்றத்தில் கையெழுத்திடவிருந்தால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அதை நீங்கள் மிகவும் கவனமாகப் படிப்பீர்கள், ஏனெனில் அது நீதிமன்றத்தால் செயல்படுத்தப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு கிறிஸ்தவனுக்கு, அவனுடைய வாயின் வார்த்தை நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அது உங்கள் வாழ்க்கையில் உண்மை என்று நீங்கள் கூறுவீர்களா?
என் சொந்த வாழ்க்கையில் ஒரு முறை, என் வீட்டிலிருந்த ஒரு பொருளை விற்க விரும்பினேன், அதை ஒருவர் வாங்க விரும்பினார். அவருடன் நான் உடன்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அது மிகவும் விலை உயர்ந்தது, நாங்கள் ஒரு விலைக்கு ஒப்புக்கொண்டோம். ஆனால் அவர் பல மாதங்களாக அதை வாங்க வரவில்லை. அதற்குள் அந்தப் பொருளின் மதிப்பு உயர்ந்துவிட்டது. நான் அவரிடம், “பாருங்கள், நாம் விலைபேசினபொழுதே நீங்கள் அதை வாங்கிக்கொள்ளவில்லை, ஆனால் இதன் மதிப்பு தற்பொழுது உயர்ந்துவிட்டது” என்று சொல்லியிருக்கலாம். நான் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், அந்தக் குறிப்பிட்ட விலைக்கு அதை அவருக்குக் கொடுக்க வாய்மொழியாக ஒப்புக்கொண்டேன். அப்போது கர்த்தர் என்னிடம், “உன்னுடைய 'ஆம்' என்பது 'ஆம்' என்றும், உன்னுடைய 'இல்லை' என்பது 'இல்லை' என்றும் இருக்கட்டும்” என்றார். அவர் ஒரு நெருக்கடியான சூழலில் இருந்த சகோதரர், அதினிமித்தமாக நான் அவருக்குக் கொடுத்த வார்த்தையை அதிநிச்சயமாகவே காப்பாற்ற விரும்பினேன். நான் அவரிடம், “நீங்கள் நிச்சயமாக முன்பு பேசின விலைக்கே அதைப் பெறலாம்” என்றேன். அவரும் மகிழ்ச்சியடைந்தார். நான் என்ன நஷ்டப்பட்டேன்? ஒருவேளை எனக்கு பொருளாதாரரீதியாக ஒரு குறிப்பிட்ட இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நான் அதை அதிக விலைக்கு அவருக்குக் கொடுத்து இன்னும் சில ஆயிரம் ரூபாய்களைச் சம்பாதித்திருக்கலாம். ஆனால் என் 'ஆம்' என்பது 'ஆம்' என்று இல்லாததால் எனக்கு ஒரு கெட்டமனச்சாட்சியே இருந்திருக்கும்.
நேர்மையாக இருக்கவும், நம் நடத்தையில் கிறிஸ்துவைப் போல இருக்கவும் கொஞ்சம் பணத்தை இழப்பது தகும். பண விஷயத்தில் நாம் பல சமயங்களில் சோதிக்கப்படுகிறோம். ஏனென்றால் நம்முடைய 'ஆம்' என்பது 'ஆம்' என்றும், 'இல்லை' என்பது 'இல்லை' என்றும் இருக்க நாம் தயாராக இருக்கிறோமா என்று அதன்மூலம் கண்டுகொள்ள முடியும்.
தேவன் நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, இந்தப் பகுதியில் நம்மைச் சோதிக்கிறார். என் வாழ்க்கையில் பல முறை, தேவன் என்னை சோதித்த இடங்களில், நான் எதையாவது இழக்கவோ அல்லது எதையாவது தியாகம் செய்யவோ வேண்டியிருந்ததைக் கண்டேன். இந்தக் கட்டளைகளின்படி நான் வாழ்வேனா என்று பார்க்க அவர் என்னைச் சோதிக்கிறார். பின்னர் நான் அதை உண்மையிலேயே நம்புகிறேனா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பேன். உண்மையைப் பேசுவதால் நமக்கு எந்த செலவும் ஏற்படாத பல சூழ்நிலைகள் இன்று உள்ளன. ஆனால் உதாரணத்திற்கு, உண்மையைப் பேசுவதால் உங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றால், அப்போதுதான் தேவன் உங்களை உயர்ந்த ஊழியத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று பார்க்க உங்களைச் சோதிக்கிறார். இந்தப் பகுதிகளில் பலவற்றில் தேவன் நம்மைச் சோதித்தறிகிறார் என்று நான் நம்புகிறேன். மேலும், பல வாலிபர்கள் தேவன் வைக்கும் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர்.
தேவன் யாரையும் தமது உண்மையுள்ள ஊழியராக இருக்க கட்டாயப்படுத்துவதில்லை. நீங்களும் நானும் அவருக்கு உண்மையுள்ள ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்களா இல்லையா, நீங்கள் தேவனுடைய வார்த்தையின் தரங்களைப் பின்பற்றப் போகிறீர்களா, ஜனங்களைப் பிரியப்படுத்த அவரை சமரசம் செய்யப் போகிறீர்களா என்பதுதான் நீங்கள் பிற்காலத்தில் தேவனுடைய உண்மையான ஊழியராக மாறுவீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
உதாரணமாக, ஒரு சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அங்கு இருக்கும் ஒரு விலையுயர்ந்த இயந்திரத்தை நீங்கள் தற்செயலாக தவறாகப் பயன்படுத்தி சேதப்படுத்திவிட்டீர்கள், ஆனால் நீங்கள் அதைச் செய்ததை யாரும் பார்க்கவில்லை. பலர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள், சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவர் இயந்திரம் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டுபிடித்து, அதிகாரிகள் விசாரிக்க வருகிறார்கள். முதலாளி வந்து இயந்திரத்தை யார் கெடுத்தது என்று கேட்கிறார். அது நீங்கள்தான் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அநேகர் அதைப் பயன்படுத்தி வருவதால், அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் வாயைத் திறக்காததால் பொய் சொல்லவில்லை என்று நினைக்கிறீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள் பொய்தான் சொன்னீர்கள். நீங்கள் வாயைத் திறக்காமலேயே பொய் சொன்னீர்கள். உங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அந்த இயந்திரத்தை கடைசியாக நீங்கள்தான் பயன்படுத்தி ஏதோ ஒரு வகையில் அதைக் கெடுத்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை நீங்கள் அதை ஒத்துக்கொண்டிருந்தால், அது ஒரு விலையுயர்ந்த இயந்திரம் என்பதால் உங்களை வேலையிலிருந்து நீக்கியிருப்பார்கள்.
அந்த நேரத்தில் எது மிக முக்கியமானது? பிசாசு உங்களிடம் வந்து ஒரு பொய் தான் சர்வ வல்லமை வாய்ந்தது என்று கூறுகிறான்; ஆகையால் நீ ஒரு பொய் சொன்னால் உன் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறான். அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் அது பொய் என்று உங்கள் இருதயத்தில் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார். தேவன் சர்வவல்லமையுள்ளவர் இல்லையா? இந்த சூழ்நிலையில் நீங்கள் தேவனை நம்பி உண்மையைப் பேசினால், ஒருவேளை நீங்கள் உன் வேலையை இழக்க நேரிடும். ஆனால் தேவன் உங்களுக்கு இதைவிட சிறந்த வேலையைத் தருவார். உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா? இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் நாம் சோதிக்கப்படுகிறோம்.
நான் ஏதோ ஒரு தத்துவத்தை இங்கு பேசவில்லை. அநேக முறை தேவன் என்னை இந்தப் பகுதியில் பல்வேறு விஷயங்களில் சோதித்திருக்கிறார். அதற்குக் காரணம், அவ்வித சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து ஓடும் வழியைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நான் புத்திசாலியா அல்லது சாமார்த்தியனா என்பதை அவர் பார்க்க அல்ல, மாறாக நான் நேர்மையானவனா, உண்மையைப் பேசுவதற்கு ஒரு விலைக்கிரயத்தை செலுத்த தயாராக இருக்கிறேனா என்பதைப் பார்க்கவே என்னைப் பரிசோதித்திருக்கிறார்.
இப்படித்தான் அவர் என்னை அபிஷேகம் செய்து, என்ன விலைக்கிரயமானாலும் பிரசங்க மேடையிலிருந்து உண்மையைப் பேச ஓர் ஊழியத்தைக் கொடுத்தார். இன்றைய கிறிஸ்தவ உலகில், பல தீர்க்கதரிசிகள் பிரசங்க பீடங்களிலிருந்து சத்தியத்தைப் பேச வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தூக்கி எறியப்பட்டு, வெறுக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், விமர்சிக்கப்பட்டாலும் அல்லது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், என்ன விலை கொடுத்தாலும் சத்தியத்தை மட்டுமே பேசுவார்கள். அந்த ஊழியத்திற்கு தேவன் உங்களை ஆயத்தப்படுத்தும் வழி, சாதாரண சூழ்நிலைகளில் நீங்கள் சத்தியத்தைப் பேசுவீர்களா என்றும், அதற்கென்று ஒரு விலைக்கிரயமாக உங்கள் வேலையை இழக்க நேரிட்டாலும், அல்லது பணத்தை இழக்க நேரிட்டாலும் நீங்கள் சத்தியத்திற்காக நிற்பீர்களா என்றும் உங்களைச் சோதிப்பதன் மூலம்தான்.