WFTW Body: 

லௌகீகத்திற்கும், பாவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மைக்கும் நேராய் சபையை நடத்தும்படியான போதகங்களைப் போதிக்கும் 'பிரசங்கிகளை' அனுமதித்தபடியால், பெர்கமு சபையின் மூப்பர் கடிந்து கொள்ளப்பட்டார் (வெளி 2:14,15). ஒருவேளை இந்த மூப்பர் தன்னைப் பொருத்த மட்டில் நல்லவராய் இருந்திருக்கக்கூடும். ஆனால் அதே சமயம் “பிலேயாமின் உபதேசங்களை” அனுமதித்து விட்டார். இதனிமித்தமே அவர் கர்த்தருக்கு முன்பாக குற்றமுள்ளவராய் காணப்பட்டார்.

பாவத்தை எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வழி நடத்தும் எந்தப் பிரசங்கமும் சபையில் பிரசங்கிக்கப்படாமல் காத்துக்கொள்ளும் உத்திரவாதத்தை மூப்பர்களின் பொறுப்பிலேயே தேவன் கொடுத்திருக்கிறார். “தேவபக்திக்கேற்ற உபதேசங்கள்” (கிறிஸ்துவைப் போன்ற ஜீவியத்திற்குள் நடத்தும் உபதேசங்கள்) இருப்பதையும், அவைகளே “ஆரோக்கியமான உபதேசங்கள்” என்றும் 1தீமோத்தேயு 6:3-ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். இதைத் தவிர வேறு எந்த உபதேமும், கொஞ்ச அளவோ அல்லது அதிக அளவோ, அது ஆரோக்கியமற்ற உபதேசமேயாகும்!!

பாவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள வழிநடத்தும் போதகங்களை இந்த மூப்பர் ஏன் அனுமதித்தார்? அநேகமாக இந்த மூப்பர் சபையில் உள்ள சகோதர சகோதரிகளை எந்த ஒரு காரியத்திற்காகவும் கண்டித்துத் திருத்தியிருக்கமாட்டார். அது ஏனென்றால், தான் “தாழ்மையான” "சாந்தமுள்ள” சகோதரன் என கருதப்பட்ட பெயரைப் பாதுகாத்திட விரும்பினார். ஆம், இந்த மூப்பர் சபையின் நன்மையைவிட தன் சொந்த நற்பெயரையே தேடினார்.

“தாழ்மை” “சாந்தம்” ஆகிய திவ்ய சுபாவங்களை, இயேசு நமக்கு உரைத்தபடி அவருடைய மாதிரியிலிருந்தே நாம் கற்றுக்கொள்ள வேண்டும் (மத்தேயு 11:29). இவ்வாறு இயேசு சொன்னபடி செய்யத் தவறும்போது, இக்குணாதிசயங்களுக்குத் தவறான அர்த்தத்தையே நாம் பெற்றிருப்போம்!

இயேசுவினிடத்திலிருந்த சாந்தமும், தாழ்மை குணமும், தேவாலயத்திலிருந்த காசுக்காரர்களை விரட்டுவதற்கு சிறிதும் தடையாய் குறுக்கிடவில்லை. அதைப் போலவே, “இயேசு சிலுவையைத் தவிர்க்க வேண்டும்” எனப் பேதுரு தவறான உபதேசத்தை இயேசுவிடம் பிரசங்கித்த போது அவரைப் பார்த்து “அப்பாலே போ சாத்தானே!” எனக் கடிந்து கொள்வதற்கும் அவரிடமிருந்த சாந்தகுணமும் தாழ்மையும் தடையாய் நிற்கவில்லை (மத்தேயு 16:22,23).

இவ்வாறு, சபையைத் தவறான பாதையில் நடத்தும்படி பேதுருவைப் போன்ற ஓர் நல்ல சகோதரனைக்கூட சாத்தான் உபயோகித்திட முடியும். எப்படியெனில், பேதுருவைப் போலவே நல்ல சகோதரர்கள் சில சமயங்களில் “சிலுவை உபதேசத்தின்” தரத்தைக் குறைக்கும் விதத்தில் பிரசங்கித்திடமுடியும். நாமோ, உடனடியாக இது போன்ற பிரசங்கங்களைச் “சாத்தானுடைய சத்தமென” அடையாளம் கண்டு கொள்ள ஜாக்கிரதை கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், இவ்வித பிரசங்கங்கள் மூலமாகவே, சபையை தேவன் நடத்த விரும்பும் திசையிலிருந்து வேறு திசைக்கு சாத்தான் திருப்பிவிட முடியும்.

எத்திசை நோக்கி சபை நடத்தப்படவேண்டுமோ, அதைத் தீர்மானிக்க வேண்டிய பெரிய பொறுப்பை சபை மூப்பர்களாகிய நாமே பெற்றிருக்கிறோம். அவ்வாறு நாம் நடத்திச் செல்லும் திசை உலகத்திற்குரியதாகவோ, ஒத்தவேஷத்திற்குரியதாகவோ ஒரு போதும் இருக்கவே கூடாது. மேலும் அந்த திசை பரிசேயத்துவமாகவும், சட்டதிட்ட ஆவிக்குட்பட்டதாகவும் ஒரு போதும் இருக்கக் கூடாது. ஆம், சபையை நாம் நடத்தும் திசை தேவசித்தத்திற்கு நேராய் நடத்தும் சிலுவையின் பாதையாகவே இருந்திட வேண்டும்!

பொதுவாக, பிலேயாமைப் போன்ற பிரசங்கிகள் ஒரு வலிமையான “மனுஷீக ஆத்துமவல்லமையைப்” பெற்றிருப்பார்கள். அதை உபயோகித்து, சபையில் உள்ள ஜனங்களிடத்தில் ஓர் ஆரோக்கியமற்ற கவர்ச்சியை உண்டாக்கி விடுகிறார்கள். இவ்வித வலிமையான கவர்ச்சிகளைப் பெற்றிருக்கும் பிரசங்கிகள், பிறரைத் தங்கள் வசப்படுத்தி, அவர்கள் கிறிஸ்துவையே தங்கள் தலையாகக் கொண்டு இணைவதற்குப் பெரும் தடையாய் நிற்கிறார்கள். இவர்கள், ஜனங்களைத் “தங்கள் பக்கம்” ஈர்த்திருக்கிறபடியால் அவர்களை உண்மையான ஆவிக்குரிய தன்மையிலிருந்து வழிவிலகச் செய்து, ஒரு மேலோட்டமான உலக வழக்கத்தின்படி வாழும் மார்க்க ஜீவியத்திற்குள் நடத்தி விடுகிறார்கள்!!

"தங்களுடைய மனுஷீக ஆத்தும வல்லமையை எங்ஙனம் மரணத்தில் ஊற்ற வேண்டும்” என்பதை விளங்கிக் கொள்ளாத எந்தப் பிரசங்கியும், தங்கள் விசுவாசிகளைத் தங்களோடுதான் இணைத்துக்கொள்வார்கள். ஆம், தலையாகிய கிறிஸ்துவினிடத்தில் அவர்களை இவர்கள் இணைப்பதில்லை! இப்படிப்பட்ட சபையில் உள்ள விசுவாசிகள், தங்கள் சபையின் ஊழியனைப் போற்றிப் புகழ்ந்து அவரையே பின்பற்றி விடுவார்கள்!! ஆனால் தங்கள் ஜீவியகாலத்தில், கோபத்தையோ, பாலிய இச்சையோ அல்லது உலகத்தையோ ஜெயித்து வாழ்ந்திட ஒருக்காலும் முடியாது!!!

ஆவிக்குரிய வல்லமைக்கும், மனுஷீக ஆத்தும வல்லமைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை, நாம் செம்மையாய்ப் பகுத்தறியக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் ஏராளமான வேத அறிவும், பிரசங்க வரமும் இருக்கக்கூடும். இன்னமும் தம்முடைய சபையில் உள்ள சகோதர சகோதரிகளை உபசரிக்கக் கூடியவராகவும் பலவகையில் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராகவும் இருக்கக் கூடும். இவ்வித “மனுஷீக” நற்குணம் கொண்ட இவர், ஜனங்களை கிறிஸ்துவினிடத்தில் இணைக்காமல் தன்னோடு இணைத்துக் கொள்பவராய் இருந்தால், கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்கு பெரும் தடையாய் மாறிவிடுவார்!!

பிலேயாமைப் போன்ற பிரசங்கிகள் எப்போதுமே பிறரிடமிருந்து அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் வாங்குவதில் மகிழ்ச்சியாய் இருப்பார்கள் (எண்ணாகமம் 22:15-17). ஆம், பரிதானம் அல்லது பரிசுப் பொருட்கள் நம்முடைய கண்களை மறைத்து குருடாக்கிவிட முடியும்! (நீதிமொழிகள் 17:8). மேலும் இவ்வித பரிசுகள், அதைக் கொடுத்தவர்களைப் பிரியப்படுத்தும்படி நடத்தி, முடிவில் நாம் அவர்களுக்கு அடிமைகளாகும் நிலைக்கு நடத்திவிட முடியும். இந்தக் கொடிய நிலை, நமக்கு உபகாரம் செய்த ஜனங்களுக்கு தேவனுடைய சத்தியங்களைப் பேசுவதற்கும், அவர்களைக் கடிந்து கொண்டு திருத்துவதற்கும் முடியாத இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து விடும்!!

தேவ ஊழியர்களாகிய நாம், எப்போதும் “சுயாதீனத்தில்” நிலைத்திருப்பவர்களாய் இருக்க வேண்டும்! ஏனெனில் “நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டபடியால் மனுஷருக்கு அடிமைகளாகி விடக்கூடாது (1கொரிந்தியர் 7:23) என வேதம் நம்மை எச்சரிக்கிறது.