எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

பழைய உடன்படிக்கையில் பலதரப்பட்ட ஓய்வுநாட்களை யூதர்களுக்கு தேவன் தந்தார். அவைகளில் குறிப்பாக வாரத்தில் ஒருநாள் ஓய்ந்திருப்பதைத்தான் நம்மில் அநேகர் அறிந்திருக்கிறோம். அதிகமாய் அறியப்பட்டிராத வேறு சில ஓய்வுநாட்களையும் தேவன் அறிவித்திருந்தார். அவைகளில் ஒன்றுதான் ஒவ்வொரு ஆறு வருஷங்களுக்குப் பின்பாக வரும் 7-வது "ஓய்வு வருஷ”மாகும்! (லேவியராகமம் 25:2-4). மற்றொன்று, "ஐம்பதாம் வருஷத்தின் ஓய்வு". 7-ஓய்வு வருஷங்களுக்குப் பின்பாக அதாவது ஒவ்வொரு 49-வருஷங்களுக்குப் பின்பாக வருவது இந்த 50-வது ஓய்வு வருஷமாகும். “யூபிலி வருஷம்” என இந்த 50-ம் வருஷத்தின் ஓய்வு ஆசரிப்பு அழைக்கப்பட்டது (லேவியராகமம் 25:8-12).

இந்த யூபிலி வருஷத்தில், இஸ்ரவேலர்கள், “தங்கள் தேசமெங்கும் அதன் குடிகளுக்கெல்லாம் விடுதலை அறிவித்து” (லேவியராகமம் 25:10 லிவிங்(Living) மொழிபெயர்ப்பு) கடனாளிகளின் எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

இவ்வாறு யூபிலி ஆண்டில் மாத்திரமல்லாமல், ஒவ்வொரு 7-வது வருடத்திலேயும், "ஒவ்வொருவரையும் அவரவருடைய கடனிலிருந்து அவ்வாண்டில் தேவனே விடுதலை செய்தபடியால், கடன் கொடுத்தவன் தன் கைவசம் உள்ள எந்தக் கடன் பத்திரத்திலேயும் 'கொடுத்துத் தீர்க்கப்பட்டது' என்று எழுத வேண்டும்" என தேவன் கட்டளையிட்டிருந்தார். (உபாகமம் 25:1-10 வசனங்களை கவனித்து வாசித்துப் பாருங்கள்).

ஓய்வு வருஷங்கள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் கொண்ட காலமாக இருக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தன. “யூபிலி” என்ற வார்த்தைக்கு “மகிழ்ச்சியின் பேரொலி” என்று அர்த்தமாகும். ஆம், எல்லா கடன்களும் மன்னிக்கப்பட்டு, எல்லா கடனாளிகளும் விடுவிக்கப்படுவதால், யூபிலி வருஷம் முழுவதும் மகிழ்ச்சியின் பேரொலி நிறைந்த வருஷமாக இருக்கவேண்டும். அந்த வருஷத்தைக் குறித்து ஆண்டவர் இஸ்ரவேலர்களுக்கு குறிப்பிட்டபோது, “ஆ, இவ்வருடம்தான் உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி நிறைந்த வருடம்!” (லேவியராகமம் 25:11 - லிவிங் மொழிபெயர்ப்பு) என பரவசம் நிறைந்த தொனியில் குறிப்பிட்டார்!

ஆனால், இப்போதோ புதிய உடன்படிக்கையில் வாழும் நாம் வாரத்தின் ஒவ்வொரு நாளையும் ஓய்வுநாளாய் கொண்டாடுகிறோம். ஏனென்றால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குப் பரிசுத்தமான நாளாகும்.

ஆகவேதான் நமக்கு ஒவ்வொரு வருஷமும் யூபிலி வருஷமேயாகும். ஆம், நமக்குத் தீங்கிழைத்து நம்மை ஏமாற்றிய அனைவரையும் மன்னித்து விடுவிக்கும் மகிழ்ச்சி நிறைந்த வருஷமாகும்!! ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சி பொங்கும் வருடமாய் நமக்கு மாறிட முடியும். ஒவ்வொரு வருடமும் நமக்கு ஒரு யூபிலி வருடமாக இருக்கும்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேவன் நம்மிடத்தில் இரக்கம் உள்ளவராக இருப்பது போலவே நாமும் மற்றவர்களிடம் இரக்கம் பாராட்டுவதற்கே அழைக்கப்பட்டு இருக்கிறோம்! ஆம், “பிதா நம்மிடம் இரக்கம் உள்ளவராய் இருப்பது போலவே" என்ற வாக்கியமே நம் உள்ளத்தில் எப்போதும் நிறைந்தவர்களாக நாம் தொடர்புகொள்ளும் எந்த மனுஷரோடும் வாழ்ந்திடவேண்டும்.

நாம் கர்த்தரிடத்திலிருந்து ஏராளமானவைகளை “இலவசமாய்த் தான்" பெற்றிருக்கிறோம். நாமும் பிறருக்குத் தாரளமாயும் இலவசமாயும் கொடுத்திடக்கடவோம்!! (மத்தேயு 10:8), கர்த்தருக்கென்று கொடுப்பவன் கஷ்டத்தோடு கருமித்தனமாக கொடுக்காமல், ஒரு விசாலமான இருதயத்தோடு தாராளமாகவே கொடுக்கவேண்டும்!

கர்த்தர் நமக்கு இலவசமாக அருளிய மன்னிப்பின் வியப்பை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. கல்வாரி சிலுவையில் கர்த்தர் நமக்காக செய்த அனைத்திற்குமான நன்றியின் வெளிப்பாடாக நம் முழு வாழ்க்கையையும் இப்போது வாழ வேண்டும்.

பரிதாபகரமான ஜீவியத்திலிருந்து நாம் இரட்சிக்கப்பட முடியும் என்பது சுவிசேஷத்தின் நற்செய்தியாயிருக்கிறது. இப்போதும் நம் மூலமாய் தொடர்ந்து பாய்ந்து சென்று, நாம் சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாக அமைந்திடக்கூடிய ஜீவத்தண்ணீருள்ள நதிகளை நாம் பெற்றிருக்க முடியும்.

தேவன் நம்மிடத்தில் இரக்கமாய் இருந்தது போலவே நாமும் மற்றவர்களிடத்தில் இரக்கமாய் இருந்திடமுடியும்.

தேவன் நம்மை விடுவித்தது போலவே நாமும் மற்றவர்களை விடுவிக்க முடியும்.

தேவன் நம்மை ஆசீர்வதித்தது போலவே நாமும் மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும்.

தேவன் நமக்கு இலவசமாகக் கொடுத்தது போலவே நாமும் மற்றவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க முடியும்.

தேவன் நம்மிடத்தில் இருந்தது போலவே நாமும் மற்றவர்களிடத்தில் பரந்த-இருதயம் கொண்டவர்களாய் இருந்திட முடியும்.

நமக்கு கடன்பட்டவர்கள் அல்லது எந்த வகையிலும் நம்மை காயப்படுத்திய அல்லது நமக்கு தீங்கு செய்த அனைவரையும் விடுவித்தால், இந்த ஆண்டும் - வரப்போகும் ஒவ்வொரு ஆண்டும் - நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக இருந்திட முடியும். பிறரிடம் உள்ள கசப்புக்களை நிரந்தரமாகப் புதைத்துவிட்டு, எல்லா மனுஷரிடமும் இரக்கமுள்ளவர்களாயிருந்து, அவ்விதமாக ஆண்டவரிடம் ஒரு புதிய வருடத்தை இன்று துவக்கிடுங்கள்.