WFTW Body: 

நாம் கடைசி காலத்தை நெருங்குகிற சமயத்தில், உலகிலுள்ள காரியங்களெல்லாம் மோசத்திலிருந்து மிக மோசமாகிக் கொண்டிருக்கிற சமயத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குச் சற்று முன்பாக உண்டாகும் மிகுந்த உபத்திரவ காலத்தை நெருங்குகிற சமயத்தில், நாம் அதிகதிகமாக விசுவாசத்தினாலே பிழைப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.

“விசுவாசம் கேள்வியினாலே (கேட்பதினாலே) வரும்; கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17).

இயேசு வனாந்திரத்திலே சாத்தானால் சோதிக்கப்பட்ட போதெல்லாம் தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டினார். இப்படியாய் அவர் ஒவ்வொரு சோதனையையும் ஜெயித்தார். இயேசு தம்முடைய சிறு வயதிலிருந்தே, தேவனுடைய வார்த்தையைத் தம்முடைய மனதிலே சேகரித்து வைத்திருந்தார். அந்தப் பண்டக சாலையிலிருந்து, ஒவ்வொரு சோதனையின் தேவைக்கேற்ப, பரிசுத்த ஆவியானவர் அவருக்கு நினைவூட்டினார்.
நாமும்கூட தேவனுடைய வார்த்தையை நம்முடைய மனதிலே சேகரித்து வைக்க வேண்டும். நாம் வாசிப்பதை விசுவாசிக்க வேண்டும். நாம் இருதயத்தில் விசுவாசிப்பதை வாயினாலே அறிக்கை செய்ய வேண்டும் (ரோமர் 10:8,9). ஏனென்றால், நாம் “சாட்சியின் வசனத்தினாலே” சாத்தானை ஜெயிக்கிறோம் (வெளி 12:11).

ஆனால் நம்முடைய அறிக்கையானது, எப்பொழுதும் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் நம்முடைய வாயினால் அறிக்கையிடுகிற எல்லாமே நமக்கு நடக்கும் என்றும், நாம் அறிக்கை செய்யும் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம் என்றும் சில பிரசங்கிகள் பிரசங்கிக்கின்றனர். அது ஓர் அனுமானமாகவும், மதியீனமாகவும்தான் இருக்கும். தேவன் அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதாக நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். நாம் அனுமானித்துச் சொல்லுகிற காரியங்களை அல்ல. ஆகவே நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தேவனுடைய வார்த்தையில் கண்டுபிடித்து, அவற்றை மட்டுமே அறிக்கை பண்ண வேண்டும்.

தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு நமக்கு உண்டாயிருக்கிற விசுவாசம்தான் இவ்வுலகத்தை ஜெயிக்கும் (1யோவான் 5:4).

மெய்யான விசுவாசம் என்பது தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு, அவருடைய சர்வ வல்லமை, அவருடைய பூரண ஞானம் ஆகியவற்றின் மீது பூரண நம்பிக்கை வைத்து, நம்முடைய ஆளுமை முழுவதும் அவர் மீது சார்ந்திருப்பதாகும்.

எனவே வரப்போகும் வருடத்தில், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினவற்றின் மீது விசுவாசம் வைத்து, தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட, கீழ்க்கண்ட எட்டு அறிக்கைகளை அடிக்கடி அறிக்கை செய்யுங்கள். அவற்றையெல்லாம் நீங்களே உங்களிடத்திலும், உங்களுடைய இருதயத்திலிருந்து சாத்தானிடத்திலும் சொல்லுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு அறிக்கையுடனும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வேதபகுதியையும் மனனம் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். ஜெயங்கொண்டவராய் இருங்கள்.

1. இயேசுவை நேசித்தது போலவே பிதாவாகிய தேவன் என்னையும் நேசிக்கின்றார் – ஆகவே நான் எப்பொழுதும் மகிழ்ந்து களிகூருவேன். “பிதாவே நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக்கிறதை இந்த உலகம் அறியும்படி நான் விரும்புகிறேன்” (1யோவான் 17:23) என்று இயேசு ஜெபித்தார்.

நாம் எப்போதும் நம்முடைய பாதுகாப்பை, தேவன் நம்மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பிலிருந்தும், அவர் நம்மீது வைத்திருக்கும் கரிசனையிலிருந்தும் கண்டு கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் விடுபட்டிருப்போம்.

2. தேவன் என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்துவிட்டார் – ஆகவே நான் ஒருபோதும் குற்ற உணர்வுடன் வாழ மாட்டேன். “நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9).

“நான் அவர்களுடைய அக்கிரமங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எபி 8:12).

நம்முடைய கடந்தகால பாவங்களெல்லாம் நீக்கப்பட்டுவிட்டன என்ற நிச்சயத்துடனே நாம் எப்போதும் இளைப்பாற வேண்டும். நம்முடைய கடந்த காலத்தைக் குறித்து சாத்தான் எந்த விதத்திலும் நம்மைக் குற்றப்படுத்த, நாம் ஒருபோதும் இடம் தரக்கூடாது. நாமும் நம்மை ஆக்கினைக்குட்படுத்திக் கொள்ளவும் கூடாது.

3. தேவன் என்னை அவருடைய ஆவியினால் நிரப்புவார். ஆகவே நான் எப்பணியைச் செய்யவும் எப்பொழுதும் பலம் பொருந்தியவனாய்த் திகழ்வேன். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமப் பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக் 11:13).

நாம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொண்டு, இப்புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படி ஜெபிக்க வேண்டும். தேவன் நிச்சயமாய் நம்மை நிரப்புவார்.

4. தேவன் என்னுடைய எல்லைகள் எல்லாவற்றையும் தீர்மானித்திருக்கிறார். ஆகவே நான் எப்பொழுதும் மனரம்மியமாய் வாழ்வேன். “தேவன் மனுஷருடைய முன்தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்களுடைய குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்” (அப் 17:26).

“உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” (எபி 13:5).

நம்முடைய சூழ்நிலைகளைக் குறித்து நமக்கு எவ்வித குறைசொல்லுதலும் இருத்தலாகாது. நாம் பெற்றிருக்கிறவற்றை, இந்த புது வருடம் முழுவதும், மற்ற எவருடனும் ஒருபோதும் ஒப்பிடலாகாது.

5. தேவனுடைய கற்பனைகள் அனைத்துமே எனது நன்மைக்காகவே உள்ளன. ஆகவே நான் தேவனுடைய எல்லாக் கற்பனைகளுக்கும் எப்பொழுதும் கீழ்ப்படிய விரும்புகிறேன். “அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” (1யோவான் 5:3).

“கர்த்தருடைய கற்பனைகள் யாவும் உனக்கு நன்மை உண்டாக்குபவை” (உபா 10:13).

நாம் ஆண்டவராகிய இயேசுவிடத்தில் அன்புகூருகிறோம் என்பதற்கு ஆதாரம், நாம் எப்பொழுதும் அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதாகும் (யோவா 14:15). ஆகவே இந்தப் புது வருடத்தில் தேவனுடைய ஒவ்வொரு கற்பனைக்கும் கீழ்ப்படிய ஆவலுடன் இருக்க வேண்டும்.

6. என்னை பாதிக்கச் செய்யும் எல்லா மனிதரையும், நிகழ்வுகளையும் தேவன்தாமே கட்டுப்படுத்துகிறார். ஆகவே நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிக்கிறேன். அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய வாழ்வில் அவருடைய சித்தம் மாத்திரமே நிறைவேற்றப்பட வேண்டுமென்று விரும்பினால், நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற யாவும் நன்மைக்காகவே நடக்கின்றது என்பதை நிச்சயத்துக் கொள்ளலாம். இந்த புது வருடத்திலே நாம் எதிர்கொள்ளப் போகிற ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிகழ்வும் நம்முடைய நன்மைக்காகவே நடக்கப் போகின்றது என்பதை அறிந்து கொள்வது எத்துணை ஆச்சரியமான விஷயம்!

7. இயேசு சாத்தானைத் தோற்கடித்து அவனுடைய வல்லமையிலிருந்து என்னை விடுவித்தார். ஆகவே நான் ஒருபோதும் எதற்கும் அஞ்சிடேன். “மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனின் வல்லமையைத் தம்முடைய மரணத்தின் மூலமாக வெளியரங்கமான கோலமாக்கி, ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கு அப்படியானார்” (எபி 2:14,15). “கர்த்தர் எனக்குச் சகாயர்; நான் பயப்படேன்” (எபி 13:6).

சாத்தானானவன் இன்னும் தேவனால் அழிக்கப்படவில்லை. ஆனால் நம்முடைய ஆண்டவர் அவனை நிராயுதபாணியாக்கிவிட்டார். ஆகவே இயேசுவின் நாமத்தினாலே “சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்” (யாக் 4:7).

8. நான் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். ஆகவே நான் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன். “நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்று கர்த்தர் சொன்னார் (ஆதி 12:2).

“ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு உண்டாகும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று” (கலா 3:14).

நாமாகவே ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்துவிட முடியாது. தேவனால்தான் நம்மைப் பிறருக்கு ஆசீர்வாதமாக மாற்ற முடியும். ஆகவே இந்தப் புதிய வருடத்திலே நீங்கள் சந்திக்கப் போகிற ஒவ்வொரு நபருக்கும் தேவன் உங்களை ஆசீர்வாதமாய் மாற்ற வேண்டும் என்ற இந்த வாக்குத்தத்தை உரிமை பாராட்டுங்கள்.

“விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற் 9:23).

இந்த 2018 –லே, நீங்கள் உங்களுடைய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கொடுத்து, மேற்சொன்ன எல்லா வாக்குத்தத்தங்களையும் அதிகதிகமாய் அறிக்கையிட்டு, அனுபவித்து வருகிற வேளையிலே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் இருப்பீர்களாக.