அப்போஸ்தலன் பவுல், “நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.” என்று ஒருமுறை கூறினார். “இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்து வந்தேன்” என்று அப்போஸ்தலர் 23:1ல் ஒரு பிரதான ஆசாரியனுக்கு முன்பாக பவுல் சாட்சி சொன்னபோது, அவர் என்ன அர்த்தத்தோடு சொன்னார்? அவர் எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டிருந்தார் என்று அர்த்தப்படுத்தினார். அவர் என்னென்ன கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தார்? முதல் ஒன்பது கற்பனைகளை மட்டுமே கைக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் நேர்மையானவர் என்பதால் “இச்சியாதிருப்பாயாக” என்ற பத்தாவது கற்பனைக்கு அவர் வந்தபோது “எல்லா வகையான இச்சையும் தன்னில் இருப்பதாக கண்டார்” என்று ரோமர் 7:7-8-ல் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு வகையான இச்சையும் - அதாவது பணத்திற்கான இச்சை, மற்றவர்களின் மனைவிகள் மீதும் மற்றவர்களின் மகள்களின் மீதுமான இச்சை, கனத்திற்கான இச்சை, மேலும் இதுபோன்ற ஒவ்வொரு வகையான இச்சையும் - தனக்குள்ளே இருக்கிறதை கண்டுபிடித்து, இந்தப் பத்தாவது கற்பனையை தன்னால் கடைப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தார்.
ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் தனது இருதயத்தில் பரிசுத்த ஆவியால் (பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்து ஜனங்களை நிரப்பியது போல) நிரப்பப்பட்டபோது, "இந்த பத்து கற்பனைகளாகிய நியாயப்பிரமாணம் அல்ல, மாறாக பரிசுத்த ஆவியின் பிரமாணம், அதாவது கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம், என்னை இச்சையிலும், கோபத்திலும் மற்ற எல்லா பாவத்திலும் விழச்செய்த பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" என்று ரோமர் 8:2-ல் கூறுகிறார், மேலும், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறபடியால் "இச்சியாதிருப்பாயாக" என்ற நியாயப்பிரமாணத்தின் நீதி நமக்குள் நிறைவேறுகிறது என்று 4ம் வசனத்தில் அவர் தொடர்ந்து கூறுகிறார். இந்த வாழ்க்கை பழைய உடன்படிக்கையின் கீழ் சாத்தியமற்றதாகும்.
மத்தேயு 5-ல் இந்தப் பாவங்களை மேற்கொள்வது பற்றி இயேசுவானவர் பிரசங்கித்த போது, பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாமல் ஒரு மனிதனால் செய்ய முடியாத காரியங்களைப் பற்றியே அவர் பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களைப் படித்தால், மிக முக்கியமான கேள்விக்கு அந்த மூன்று அதிகாரங்களின் முடிவில் பதில் கிடைக்கவில்லை என்பதை நீங்கள் காணலாம். அது என்ன கேள்வி? "ஆண்டவரே, நான் இந்த வாழ்க்கையை எப்படி வாழ முடியும்?" என்ற கேள்வியாகும். ஆம், மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களில் கூட அது குறிப்பிடப்படவில்லை! ஒரு புதிய உடன்படிக்கை கிறிஸ்தவரிடமிருந்து, ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவரிடமிருந்து தேவன் எதிர்பார்க்கும் வாழ்க்கைத் தரத்தையே மலைப்பிரசங்கம் நமக்குக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது, ஆனால் அதை எப்படி அடைவது என்பது முழு பிரசங்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படித்தான் அறிவோம்? இந்த வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வாஞ்சையை நமது இருதயத்தில் உருவாக்குவதற்காக மட்டுமே கிறிஸ்து மலைப்பிரசங்கத்தைச் செய்தார் என்று நான் நம்புகிறேன், மேலும், ஒரு நபருக்கு இந்த வாழ்க்கைக்கான வாஞ்சை இருந்தால், அவர் தேவனிடம் சென்று, “ஆண்டவரே, இதற்கான தீர்வு என்ன?” என்று கேட்பார். “நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டும். நீங்கள் உள்ளான மனிதனில் பலப்படுத்தப்பட வேண்டும்” என்று கர்த்தர் கூறுவார்.
பெரிய அப்போஸ்தலனாகிய பவுல் நியாயப்பிரமாணத்தின்படி மிகவும் நேர்மையான மனிதராக இருந்தார், ஆனால் அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு தேவ ஆவியானவர் அவரை விடுதலையாக்கும் வரை இந்த இச்சையை மேற்கொள்ள முடியவில்லை. இது இயேசு குருடனின் கண்களைத் திறக்கிறது போன்றதாகும்: குருடனால் தன்னுடைய கண்களைத் தானே திறக்க முடியாது.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே இது சாத்தியமாகும். மெய்யாகவே, நாம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டால் மட்டுமே, மலைப்பிரசங்கத்தில் இயேசுவானவர் பிரசங்கித்த அனைத்தையும் நாம் கைக்கொள்ள முடியும்.
"ஆவியின் நிறைவு" என்ற பெயரில் இன்று சுற்றி வரும் மலிவான போலியானவைகளைப் பற்றி நான் பேசவில்லை. நீங்கள் அனுபவித்ததாகக் கூறும் ஆவியின் நிறைவு உங்களை உலுக்கவும், தரையில் உருளவும், சிரிக்கவும், அந்நியபாஷைகளில் பேசவுமே வைக்கிறது, ஆனால் கோபம் பாலிய இச்சை போன்ற பாவங்களால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்களெனில், நீங்கள் இன்னும் உங்கள் மனைவி அல்லது கணவரிடம் சத்தத்தை உயர்த்துகிறவர்களாய் இருக்கிறீர்களெனில், நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படவேயில்லை. யாரும் உங்களை வஞ்சிக்க விடாதீர்கள். பலர் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். பரிசுத்த ஆவி நமக்கு ஒரு புதிய நாவை தருகிறார், அந்நிய பாஷைகளில் பேசும் திறனை மட்டுமல்ல, நம் தாய்மொழியில் பேசும்போது நாவைக் கட்டுப்படுத்தும் வல்லமையையும் தருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை சபையில் அந்நிய பாஷைகளில் பேசிவிட்டு, அதே ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குமேல் உங்கள் தாய்மொழியில் உங்கள் மனைவியிடம் சத்தத்தை உயர்த்துவீர்களாயின் எந்தப் பயனும் இல்லை. அது பரிசுத்த ஆவியின் நிறைவே அல்ல.
பரிசுத்த ஆவியின் நிறைவு நம் நாவுகளின் மீது நமக்குக் கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது. ஆவியின் கனி இச்சையடக்கமாகும். ஆவியானவர் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் நம் நாவுகளை கட்டுப்படுத்தும் வல்லமையை நமக்குத் தருகிறார். இந்த அனுபவம் உங்கள் வாழ்வில் மெய்யானதாய் மாறவில்லையென்றால், மெய்யான பரிசுத்த ஆவியின் நிறைவை உங்களுக்குத் தரும்படி நீங்கள் தேவனிடம் கேட்க வேண்டும். ஆவியின் வரங்களுக்காகத் தேவனுக்கு நன்றி, ஆனால் பரிசுத்த ஆவியின் வரங்களைக் கொண்டிருப்பதற்கு மேலாக மெய்யான பரிசுத்த ஆவியின் நிறைவைத் தேவனிடம் கேளுங்கள். அது மாத்திரமே பாவத்தை மேற்கொள்வதற்கான ஒரே வழியாகும். வேறு வழியேயில்லை.
சகலவிதமான மிருகங்களும் மனிதனால் அடக்கப்பட்டதுண்டு, ஆனால் நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது என்று யாக்கோபு கூறுகிறார் (யாக்கோபு 3:7-8). ஆனால், பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே முடியும். நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், அவர் உங்கள் நாவின் மீதும் உங்கள் கண்கள் மீதும் உங்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொடுப்பார். மத்தேயு 5:21-32-ல் பாவம் தொடர்பாக இயேசு பேசியபோது, மனுஷ அவயவங்களின் இரண்டு அவயவங்களாகிய நாவால் பாவம் செய்தலையும் கண்களால் பாவம் செய்தலையும் குறித்தே பேசினார். இவ்விரண்டும் மிக மிக முக்கியமானவை.
உங்கள் நாவின் மீதும் உங்கள் கண்கள் மீதும் கட்டுப்பாட்டைக் கொடுக்காத பரிசுத்த ஆவியின் நிறைவு என்று சொல்லப்படுகிற எந்தவொரு மலிவான போலித்தனத்திலும் ஒருபோதும் திருப்தி அடையாதீர்கள். தேவனுக்கு முன்பாகச் சென்று, “ஆண்டவரே, தரங்குறைந்த போலியான காரியத்தை நான் பெற்று இருக்கிறேன். நான் உம்மிடம் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன் என்று மக்களை நம்ப வைப்பதற்கான போலியான ஆவியை மட்டுமே பெற்றிருக்கிறேன். அது ஒன்றுக்கும் பிரயோஜனமற்றது. மெய்யான பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்க விரும்பவில்லை.” என்று கூறுங்கள்.
நான் ஒரு இளம் கிறிஸ்தவனாக இருந்தபோது, இவ்விரண்டு பகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டவனாய் இருந்தேன். நான் பரிசுத்த ஆவியின் நிறைவைத் தேடியபோது, ஜனங்கள் என்னை வெவ்வேறு சபைகளுக்கு அனுப்பினர். ஆனால் அங்கு கண்டவற்றைக் குறித்து மிகவும் ஏமாற்றமடைந்தேன். அந்த சபைகளில் அதிகமான சத்தத்தைத் தான் கேட்டேன், “தேவனே, நான் தேடுவது இதுவல்ல. பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையே தேடுகிறேன். அதைப் பெறுவதற்கு பத்து வருடங்களானாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கு மெய்யான பரிசுத்த ஆவியின் நிறைவு வேண்டும். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, யாக்கோபு யோவான் பெற்ற அந்த ஆவியானவரை நான் பெற விரும்புகிறேன், இன்று உலகம் முழுவதும் பரவி வரும் மலிவான போலியான பரிசுத்த ஆவியை அல்ல.” என்று ஜெபித்தேன்.
மக்கள் ஏதாவது போலியால் திருப்தி அடைய வேண்டும் என்றே பிசாசு விரும்புகிறான். நீங்கள் தங்கம் அல்லது வைரம் அல்லது பணத்தை வாங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு போலியானதை வாங்கிவிடக்கூடாது என்பதற்காக எவ்வளவு கவனமாக இருப்பீர்கள். அநேக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் பிறரிடமிருந்து வாங்கும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைப் பரிசோதிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பீர்கள். மெய்யான பரிசுத்த ஆவியின் நிறைவு என்றதான நித்தியமான பங்கைக் குறித்து நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்!
போலியான ஒன்றில் திருப்தி அடைந்துவிடாதீர்கள். போலியான தங்கம், வைரங்கள் மற்றும் நாணயத்தாள்களை பெற்றுக் கொள்வதிலேயே நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக் கொள்ளுகிற காரியத்தில், போலியான ஒன்றைப் பெற்றுக் கொள்வதை குறித்து நீங்கள் அதிக திருப்தியற்றவர்களாய் இருக்கவேண்டுமல்லவா?. நீங்கள் மெய்யான பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா அல்லது போலியானதைப் பெற்றிருக்கிறீர்களா என்பதற்கு இதுதான் சோதனை: தேவனுடைய ஆவியானவர் உங்களைப் பாவம் மற்றும் மரணத்தின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கி இருக்கிறாரா (ரோமர் 8:2)? ஆம், அதுவே சோதனை.