இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கையின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; பெந்தெகொஸ்தே நாளில் புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது என்பதை அவர்கள் உணர்வதில்லை. 1947-இல் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பதையே அறியாமல் இருக்கும் இந்தியர்களைப் போன்றது இது. அப்படிப்பட்ட ஒருவரை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா? கிறிஸ்தவர்கள் இன்னும் பழைய உடன்படிக்கையின் கீழ் வாழ்வதும் அதே அளவு அபத்தமானதாயிருக்கிறது.
அநேக கிறிஸ்தவர்கள் பல விஷயங்களில் பழைய உடன்படிக்கையின் கீழேயே வாழ்கிறார்கள். பழைய உடன்படிக்கையில் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட மட்டுமே முடியும் (சங்கீதம் 103); ஆனால் புதிய உடன்படிக்கையில், “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என்று ரோமர் 6:14 கூறுகிறது. பாவ மன்னிப்பை மட்டுமே பெற்றிருந்து, ஆனால் பாவத்தின் மீது ஜெயம் பெறாதிருப்பவர்கள் பழைய உடன்படிக்கையிலேயே வாழ்கிறார்கள். பழைய உடன்படிக்கையில், ஒரே சரீரமாக ஒன்றிணைந்து செயல்பட முடியாத வெறும் ஆராதனைக்கூட்டத்தினராய் (congregation) ஜனங்கள் இருந்தார்கள். இன்று ஒரு சபை ஒரே சரீரமாக செயல்பட முடியாமல் போகும்போது, அது உண்மையிலேயே ஒரு பழைய உடன்படிக்கை ஆராதனைக்கூட்டமாகவே இருக்கிறது என்பதற்கு அதுவே சான்று. தசமபாகம் (tithing) வலியுறுத்தப்படும்போது, அதுவும் பழைய உடன்படிக்கையே.
இன்று கிறிஸ்தவ உலகில் நாம் காண்கிற “தசமபாக” வலியுறுத்தல் முற்றிலும் பழைய உடன்படிக்கையாயிருக்கிறது. எனவே புதிய ஏற்பாட்டு “கொடுத்தலின்” (giving) கொள்கைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் நீங்கள் 10% செலுத்தவேண்டும் என்று கூறும் எந்தப் பிரமாணமும் இல்லை. தசமபாகம் கட்டளையிடப்பட்டதாக கடைசியாக குறிப்பிடப்படுவது பழைய ஏற்பாட்டிலுள்ள மல்கியா புத்தகத்தில் தான். இயேசு மத்தேயு 23-இல் அதைக் குறிப்பிட்டபோது, அவர் இன்னும் பழைய உடன்படிக்கையின் கீழிருந்த பரிசேயரிடத்திலும் யூத ஜனங்களிடத்திலும் தான் கூறினார். புதிய உடன்படிக்கை பெந்தெகொஸ்தே நாளில் ஏற்படுத்தப்பட்டது; அதற்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் தசமபாகம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடும் ஒரே ஒரு கட்டளை கூட இல்லை. தசமபாகத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லவே இல்லை.
எபிரெயர் புத்தகத்தில் ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு 10% கொடுத்ததாக ஒரு மங்கலான குறிப்பு இருக்கிறது. ஆனால் அது ஆபிரகாம் பின்பற்றிய ஒரு பிரமாணம் அல்ல. தான் விரும்பியதை ஆபிரகாம் கொடுத்திருக்கலாம். தற்செயலாக அது 10% ஆக இருந்திருக்கிறது. ஆபிரகாம் எந்த நியாயப்பிரமாணத்தையும் பின்பற்றவில்லை; அவன் அதைச் செய்யாமல் போயிருந்தாலும் அது ஒரு பாவமாக இருந்திருக்காது.
புதிய உடன்படிக்கையில் “கொடுத்தலின்” கொள்கைகள் என்னவென்றால், அது அந்தரங்கமாக இருக்கவேண்டும் (மத்தேயு 6:1-4), உற்சாகமாகக் கொடுக்கவேண்டும் (2கொரிந்தியர் 9:7), மற்றும் நம்மிடம் இருக்கும் அளவுக்குத் தக்கபடி கொடுக்கவேண்டும் (1கொரிந்தியர் 16:2). நீங்கள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று எந்தப் பிரமாணமும் இல்லை. தேவன் உங்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறாரோ அதற்கு ஏற்றபடி கொடுக்கலாம். உங்களிடம் ஏராளமாக இருந்தால், அதிகமாகக் கொடுக்கலாம்; உங்களிடம் குறைவாக இருந்தால், கொடுக்க வேண்டியதில்லை. அது பரவாயில்லை. ஏனென்றால் தேவன் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்! ஏழையாயிருக்கும் தம்முடைய பிள்ளைகளில் எவரும் தமக்குக் கொடுப்பதினால் துன்பப்படவேண்டும் என்று அவர் விரும்புவதில்லை.
இந்தக் கொள்கைகளை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், அநேக போதகர்களும் பிரசங்கிகளும் உங்களைச் சுரண்டி பணவிஷயத்தில் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள். ஆனால் இதை மனதில் வையுங்கள்: நாம் கொடுக்கும்போது, அந்தரங்கமாக கொடுக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்படி கேட்கும் எந்த சபையும், உண்மையில் மத்தேயு 6:1-4-இல் உள்ள தேவனுடைய வார்த்தையை நீங்கள் மீறும்படி கேட்கிறது. முடிந்தவரையில் நம்முடைய எல்லா “கொடுத்தலும்” அந்தரங்கமாகவும், தன்னிச்சையாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கவேண்டும்.
இதனால்தான், ஜனங்களுக்கு முன்பாக ஒரு பையை வைத்து, அவர்களை சந்தோஷமில்லாமல் கொடுக்கும்படி வற்புறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி பொதுப்படையாக காணிக்கைப் பையைக் கொடுத்து காணிக்கை போடச் செய்வதினால் அவர்கள் அந்தரங்கமாகக் கொடுப்பதும் கூடாததாகிவிடும். ஏனென்றால் அவர்களுடைய அருகில் உள்ளவர்கள் அவர்கள் கொடுப்பதை கவனித்துக்கொண்டிருப்பார்களே. சபையில் எங்காவது ஓர் இடத்தில் ஒரு பெட்டியை வைப்பதே சரியான வழி என்று நான் நம்புகிறேன். அப்பொழுது ஜனங்கள் தன்னிச்சையாக, அந்தரங்கமாக, மகிழ்ச்சியுடன், தங்கள் திறனுக்கு ஏற்றபடி கொடுக்க முடியும். ஆனால் மிகச் சில சபைகளே இதை கடைப்பிடிக்கின்றன. ஏனென்றால் அநேக கிறிஸ்தவ போதகர்களிடமும் அநேக கிறிஸ்தவ சபைகளிலும் பணத்தின் மீதான அளவுகடந்த ஆசை நிறைந்திருக்கிறது.
மத்தேயு 5:20-இல் நாம் காணும் "உங்கள் நீதி வேதபாரகர் பரிசேயரின் நீதியை விட அதிகமாயிருக்கவேண்டும்" என்பதே மலைப்பிரசங்கத்தின் மீதமுள்ள பகுதிக்கு ஒரு தலைப்பாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படி, வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியை விட நம்முடைய நீதி எந்தெந்த விதங்களில் அதிகமாயிருக்க வேண்டும் என்பதே மலைப்பிரசங்கத்தின் மீதமுள்ள பகுதியின் மையப்பொருளாக இருக்கிறது.
“கொடுத்தலின்” விஷயத்தில், நம்முடைய மனோபாவம் பரிசேயர்களுடைய மனோபாவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்று இயேசு கூறுகிறார். அவர்கள் தாங்கள் கொடுப்பதை ஜனங்கள் அறியவேண்டும் என்று விரும்பிய மாயக்காரராயிருந்தார்கள். மனுஷர் காணும்படி உங்கள் நீதியை அவர்களுக்கு முன்பாக செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு கூறினார். அதுவே அடிப்படையான கோட்பாடாகும். மனுஷர் காணவேண்டும் என்பதற்காக அதைச் செய்யவேண்டாம் என்று இயேசு கூறினார்.
சில நேரங்களில் ஜனங்கள் நாம் செய்வதை கவனிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது. அவர்கள் தற்செயலாக அறிந்துகொண்டாலோ, அல்லது தவிர்க்க இயலாத சூழ்நிலையிலோ நாம் குற்றவுணர்வு கொள்ளவேண்டியதில்லை. ஆனால் ஜனங்கள் கவனிக்கவேண்டும் என்பதற்காக நாம் காரியங்களைச் செய்யக் கூடாது. அதுவே இங்கே சொல்லப்படுகிற கருத்து. இல்லாவிட்டால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்த வசனத்தின்படி, கர்த்தருடைய பணிக்காகக் கொடுத்த அநேகர் பரலோகத்தில் எந்த பலனையும் பெறப்போவதில்லை, ஏனென்றால் தாங்கள் எவ்வளவு கொடுத்தோம் என்பதை மற்றவர்கள் அறியவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
நீங்கள் அந்தரங்கமாகக் கொடுத்தால், அந்தரங்கத்தில் பார்க்கிற உங்கள் பிதா உங்களுக்கு பலனளிப்பார். தேவன் வாக்களித்திருக்கிற இந்த பலன் எத்தனை அருமையானது! அவருடைய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தால், கிறிஸ்து மீண்டும் வரும் நாளில், தியாகமாகவும் அந்தரங்கமாகவும் கொடுத்தவர்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.