WFTW Body: 

பிதாவாகிய தேவன் மிகக் கண்டிப்பானவரென்றும், இயேசு மட்டுந்தான் நம்மை நேசிக்கிறவர் என்றும் ஒரு தவறான எண்ணத்தை அநேகர் கொண்டுள்ளனர். இது சாத்தான் செய்த வேதப் புரட்டுகளில் ஒன்றாகும். பிதாவின் அன்புதான் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக இயேசுவை அனுப்பி வைத்தது. "பிதா தாமே உங்களை சிநேகிக்கிறார்" என்று இயேசு தமது சீஷர்களிடம் சொன்னார் (யோவா 16:27). மேலும் பிதாவானவர் ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிறவராகவும், காட்டிலுள்ள பூக்களை உடுத்துவிக்கிறவராகவும் இருக்கிறவரானபடியினால், அவர்களையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுவார் என்று சீஷர்களுக்குச் சொன்னார். அவர்களுடைய பரலோகப் பிதா தாமே அவர்களுடைய தேவைகளை எல்லாம் அறிந்திருக்கிறபடியால், அவர்கள் எதைக்குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெளிவுபடக் கூறினார் (மத் 6:26-34).

இப்பூமிக்குரிய தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பதற்கு அறிந்திருக்கும்போது, பரலோகப் பிதாவானவர் அவருடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை அருளுவது வெகு நிச்சயம் என்றும் கூறினார் (மத் 7:11).

இவையெல்லாம் மூல உபதேசத்தைச் சார்ந்தவை என நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும். இருப்பினும் நாம் ஜெபத்திலே தேவனிடத்தில் வரும்போது, அவருடைய கனிவான, அன்பான, தகப்பனுக்குரிய கரிசனையைப் பற்றி நாம் போதிய அளவு அறியாதபடியால் நம்முடைய விண்ணப்பத்திற்குப் பதில் கொடுப்பார் என்று நாம் விசுவாசிப்பதிலை. இப்படி நம்முடைய அவிசுவாசத்தினால் தேவனை மட்டுப்படுத்துகிறோம். நீங்கள் ஜெபிக்கும்போது, மெய்யாகவே ஓர் அன்புள்ள தகப்பனிடம் பேசுகிறோம் என்பதையும், அவர் உங்களது ஜெபத்தைக் கேட்பதற்கு விருப்பமுள்ளவராயும், உங்கள் மீது அக்கறை உள்ளவராயும் இருக்கிறார் என்பதையும் உங்களால் விசுவாசிக்க முடிகிறதா?

முதிர்ந்த பரிசுத்தவான்களைத்தான் தேவன் கவனித்துக் கேட்பார் என சிலர் எண்ணக்கூடும். பூமிக்குரிய தகப்பன் எப்படி இருக்கிறார்? ஒருவேளை அவனுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தால், அவன் 3 வயது மகளைவிட 20 வயது மகனிடம்தான் அதிகமாகப் பேசுவானா? 3 வயது மகளைப் பார்த்து, "நான் உன்னிடம் பேசுகிற அளவிற்கு நீ இன்னும் வளரவில்லை" என்று சொல்லுவானா? நிச்சயமாக அப்படிச் சொல்லமாட்டான். உண்மையில், அவன் தன்னுடைய கடைசிப் பிள்ளையிடம்தான் அதிகம் பேச வேண்டுமென விரும்புவான். தேவனும் அப்படித்தான் இருக்கிறார்.

"அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு, பெரியவன் வரைக்கும் எல்லாரும் என்னை பிதாவாக அறிந்து கொள்ளுவார்கள்" (எபி 8:11). இங்கு இளையவர்கள்தான் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்.

ஒருவேளை நீங்கள் நேற்றுத்தான் மறுபடியும் பிறந்தவராயிருந்தாலும், நீங்கள் தேவனிடம் வந்து, "தேவனே, நீர் என்னுடைய தகப்பன்; நான் உமது பிள்ளை. ஆகவே உம்மிடத்தில் பேசுவதற்கு எனக்கு எல்லாவித உரிமையும் உள்ளது" என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஜெபத்திலே இந்த விதமாகத்தான் தேவனிடத்தில் போக வேண்டும் என்று இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

நாம் ஜெபிக்கிற ஒவ்வொரு சமயத்திலும், நம்மீது அன்புள்ளவரும், கரிசனை உள்ளவரும், நம் மேல் விருப்பம் உள்ளவருமான ஒரு தகப்பனாக தேவனைக் கண்டு, அவரை அணுக வேண்டும். இப்படியாகத்தான் விசுவாசமானது உற்பத்தியாக முடியும். அப்படிப்பட்ட விசுவாசம் இல்லாமல் ஜெபிப்பது வீணான செயலாகத்தான் இருக்கும்.

தேவன் ஒரு நல்ல தேவனாய் இருக்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல வரங்களைத் தர விரும்புகிறார். "உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு தேவன் நன்மையை வழங்காதிரார்" என்று வேதம் சங் 84:11-ல் சொல்லுகிறது. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார்" என்று சங் 37:4 சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த வாக்குத்தத்தங்களையெல்லாம் இயேசு ஆமோதித்தார். அவர் இன்னும் பல வாக்குத்தத்தங்களுடனும், விளக்கங்களுடனும் அவற்றை உறுதிப்படுத்தினார்.

தேவன் நம்முடைய அன்புள்ள தகப்பன் என்று நாம் அளிக்கும் ஒப்புதல்தான், நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்க முடியும்.