தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு அவர்களை வனாந்தரத்தின் வழியே வழிநடத்திச் சென்றபோது, அவர்களுக்கு ஒரு முக்கியமான கட்டளையைக் கொடுத்தார். அது என்னவென்றால், “நான் உங்கள் நடுவில் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவீர்களாக” (யாத்திராகமம் 25:8) என்ற கட்டளையே! அதினிமித்தமே தமக்கு ஒரு வாசஸ்தலத்தை - ஒரு கூடாரத்தைக் கட்டும்படியும் கட்டளையிட்டார். பின்னர் இஸ்ரவேலர்கள் கானானுக்குள் நுழைந்த பிறகு இந்த பழைய ஏற்பாட்டின் கூடாரமே பின்பு தேவாலயமாய் மாற்றப்பட்டது.
ஆம், தம் ஜனத்தின் மத்தியில் வாசம்பண்ணவே தேவன் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் காண்கிறோம். ஆனால் கிறிஸ்து இப்பூமிக்கு வந்ததிலிருந்து இப்போது புதிய ஏற்பாட்டில் கையினால் செய்யப்பட்ட ஆலயத்தில் தேவன் தங்குவதில்லை. ஏனெனில், புதிய உடன்படிக்கையில் நம்முடைய இருதயத்திலேயே தேவன் இப்போது வாசமாயிருக்கிறார். இன்றைக்கும் தேவன் கொடுக்கும் கட்டளை யாதெனில், “நான் தங்கும்படி உங்கள் குடும்பத்தில் ஒரு வாசஸ்தலத்தைக் கட்டுங்கள்” என்பது தான். கணவனும், மனைவியுமாய் இணைக்கப்பட்டிருக்கும் யாவரையும் குறித்து தேவன் கொண்டிருக்கும் நோக்கம், “அவர் வந்து தங்கும்படியான வாசஸ்தலத்தை அவர்கள் குடும்ப வாழ்க்கையில் கட்டவேண்டும்” என்பதேயாகும்.
தேவமகிமைக்காக குடும்பத்தைக் கட்டுதல்
பொதுவாய் இன்று எல்லாத் திருமணத் தம்பதிகளுடைய எண்ணங்களும் “தாங்கள் வாழும்படி தங்களுக்காக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும்” என்பதாகவே இருக்கிறது. இதுவே கிறிஸ்தவரல்லாத ஒவ்வொரு தம்பதியருடைய நோக்கமாயும் இருக்கிறது. ஆனால், விசுவாசிகளாகிய நாம் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் நம் குடும்ப ஜீவியத்தில் மகிமைப்படுத்த விரும்புகிறவர்களாயிருந்தால், நாம் நமக்கென ஒரு வீட்டைக் கட்டாமல் “தேவன் வாசம் செய்யத் தகுந்த” ஒரு குடும்பத்தைக் கட்டவேண்டும். உத்தம கிறிஸ்தவ குடும்பத்திற்கும், தேவனற்ற குடும்பத்திற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தேவன் தங்கும்படி வீட்டைக் கட்டாமல், தங்களுக்கென வீட்டைக் கட்டுவதே அந்த வித்தியாசம்!! இதனிமித்தமே இன்று குழப்பங்களும், சமாதானமின்மையும் குடும்ப ஜீவியத்தில் தோன்றுகிறது. தேவன் தங்குவதற்கென தங்கள் வீட்டைக் கட்டாத யாவருடைய நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.
திருமணமான துவக்கத்தில் எல்லோருமே “மகிழ்ச்சியான குடும்பத்திற்கென” திட்டங்களைத் தீட்டுகிறார்கள். ஆனால், திருமணமான சுமார் 6 மாதங்கள் கழித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கசந்து கொள்வதும், திட்டுவதும் துவங்கி குடும்பத்தில் குழப்பமே நிரந்தரமாய் தங்கிவிடுகிறது. பத்து வருடங்கள் ஆகும்போது அநேகத் தம்பதியர் ஒருவர்மீது ஒருவர் சலிப்படைந்துவிடுகிறார்கள். இந்த நிலைக்கு ஒரே காரணம், “இவர்கள் சுயநலமாக தங்களுக்காகவே வீட்டைக் கட்டினார்கள்!!” என்பது தான். ஆனால், தேவனை மகிமைப்படுத்த நாடி அவருக்கென்றே நம் வீட்டைக் கட்டுவதன் மூலமே மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்த திருமண வாழ்க்கையானது சாத்தியம் என்று தேவனுடைய வார்த்தை நமக்கு போதிக்கிறது.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கென்று தேவன் கொண்டிருந்த நோக்கமே திருமணத் தம்பதியருக்கான தேவனுடைய நோக்கமுமாயிருக்கிறது. ஆம், தேவன் அவர்களோடு வாசம்பண்ணும்படி அல்லது அவருடைய மகிமை அவர்களிடத்தில் தங்கும்படி ஒரு “ஸ்தலத்தை” அவருக்குக் கட்டும்படிக்கே திருமணத் தம்பதியரை தேவன் இணைக்கிறார். ஆயினும், அவருக்காகக் கட்டப்படும் ஸ்தலம் அவருடைய கட்டளைப்படியே துல்லியமாய் இருக்க வேண்டுமென தேவன் கூறியிருந்தார். ஆகவே இஸ்ரவேலர்கள் தங்களைத் தாழ்த்தி தேவன் தந்த “திட்டத்தின் படியே” கட்டினார்கள். எனவேதான் நாம் யாத்திராகமம் 40:34-ஆம் வசனத்தில் வாசிக்கிறபடி “கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” என காண்கிறோம். உங்கள் வீட்டில் தேவ மகிமை தங்க வேண்டுமென்றால், நீங்களும் உங்கள் வீட்டை தேவனுடைய திட்டத்தின்படியே துல்லியமாய்க் கட்டவேண்டும். வேதவாக்கியங்களில் தேவன் கட்டளையிட்டிருக்கிறபடியே உங்கள் திருமண வாழ்க்கையைக் கட்ட நாடுங்கள். அப்பொழுது உங்கள் வீட்டிலும் தேவ மகிமை தங்கும்!
தேவன் நியமித்திருக்கும் “ஒழுங்கின்” படியே குடும்பத்தைக் கட்டுதல்
இன்று அநேகக் கிறிஸ்தவக் குடும்பங்களில் “கசப்பும், பொறாமையும், முறுமுறுப்பும், பண ஆசையும்” நிறைந்திருக்கிறது. கிறிஸ்தவரல்லாதோருடைய குடும்பங்களுக்கும் இந்தக் குடும்பங்களுக்கும் வித்தியாசம் ஏதும் இருப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன என்பது இப்போது நமக்குத் தெரியும். ஆம், இவர்கள் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறபடி தங்களுடைய வீட்டைக் கட்டாமல் தாங்கள் விரும்புகிறபடி கட்டியதால் தேவ மகிமை இவர்களுடைய குடும்பத்தை நிரப்பமுடிவதில்லை.
தேவன் தங்கவிரும்பும் வாசஸ்தலமாகிய குடும்பத்தில், “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாய் இருக்க வேண்டும். அதேபோல ஸ்திரீக்கு புருஷன் தலையாய் இருக்க வேண்டும்” (1கொரிந்தியர் 11:3,4). இதுவே குடும்பத்தைக் குறித்த தேவ ஒழுங்கு. இவ்வாறு தேவன் கட்டவிரும்பும் குடும்பத்தில் கிறிஸ்துவே தலையாய் இருக்கிறார். “கிறிஸ்துவே எங்கள் இல்லத்தின் தலைவர்” என்ற வாசகத்தை கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் உபயோகிக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவ்விதம் அந்த வீட்டில் நடப்பதில்லை! ஆதாமையும், ஏவாளையும் தேவன் சிருஷ்டித்த போது ஏவாளுக்குத் தலையாய் இருக்கும்படி தேவன் ஆதாமைத் தந்தருளினார். தேவன் தாமே ஆதாமுக்குத் தலையாய் இருந்தார். தேவன் அவர்களை குடும்பவாழ்வில் ஒன்றாய் இணைத்தபோது, அடுத்த வசனத்தில் “சாத்தான் அங்கு வந்தான்” என வாசிக்கிறோம். இன்றைக்கும் தேவன் ஒரு புருஷனையும் ஒரு ஸ்திரீயையும் திருமணத்தில் இணைக்கும்போது சாத்தான் அவர்களுடைய குடும்ப வாழ்வில் பிரவேசிப்பான் என்பதை இவ்வசனம் நமக்கு போதிக்கிறது. ஆகவே நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். சாத்தான் ஒருபோதும் நுழைய முடியாதபடி நம் குடும்பங்கள் இருக்க வேண்டும்.
ஆதாம்-ஏவாளின் குடும்பத்திற்குள் சாத்தானால் நுழைய முடிந்ததற்குக் காரணம் என்ன? தேவன் அவர்களுக்கு வகுத்துத்தந்த “தலைமை ஒழுங்கினை” அவர்கள் கைக்கொள்ளவில்லை என்பது தான்! ஏவாளை கீழ்ப்படியாமைக்குள் நடத்திட சர்ப்பம் அவளுக்கு ஆலோசனை கூறியபோது அதற்கு அவள் மறுமொழியாக, “பார் சாத்தானே, நானாக எதையும் தீர்மானிக்க முடியாது. எனக்கு தேவன் ஒரு தலையை நியமித்திருக்கிறார். நான் அவரிடம் சென்று கலந்தாலோசித்த பின்பு என் பதிலை உனக்குச் சொல்லுகிறேன்” என அவள் கூறியிருந்திருக்க வேண்டும். அப்படிக் கூறியிருந்திருப்பாளென்றால் காரியம் எவ்வளவு வித்தியாசமாயிருந்திருக்கும்?! ஆனால், அவளோ அப்படிச் செய்யவில்லை. அதற்கு மாறாக, அவள் சாத்தானோடு நீண்டநேரம் கலந்துரையாடி, முடிவில் தன் தலையாகிய கணவனைக் கேட்காமலே ஒரு தீர்மானத்தை எடுத்தாள். இவ்வாறு தேவன் ஏற்படுத்திய ஒழுங்கை இவள் மீறியதுமல்லாமல், தன் கணவனையும் தேவனுக்குக் கீழ்படியாது இருக்கும்படி கூறிவிட்டாள். இந்தவேளையில் ஆதாம், ஏவாளைப் பார்த்து “இதோ பார், தேவன் எனக்குத் தலையாயிருக்கிறார். ஆகவே, இந்த விஷயத்தில் நான் அவரிடம் சென்று கலந்தாலோசித்து பின்பு முடிவெடுக்கிறேன்” என்று கூறியிருந்திருக்க வேண்டும். ஆனால், அவனோ அப்படிச் செய்யவில்லை. அவ்வாறு அவர்கள் தேவ ஒழுங்கைக் கடைபிடித்திருந்தால், இன்று உலகில் நாம் காணும் ஏராளமான பாவங்களும், துன்பங்களும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்காது! இன்றைக்கு குடும்பங்களில் சாத்தான் எளிதில் நுழைந்து அங்கு தாறுமாறுகளை உண்டாக்கி, குடும்பத்தையும் அங்குள்ள குழந்தைகளையும் நாசம் செய்வதற்கு, இந்த “தலைமை” ஒழுங்கு மீறப்படுவதே காரணமாகும்! “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என்று சங்கீதம் 127:1 கூறுகிறது.
நாம் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே துல்லியமாகக் கீழ்ப்படிவது தான் அவர் நம் வீட்டைக் கட்டுவதற்கான ஒரே வழியாகும்.