இயேசு கற்பித்தவைகளை வேதத்தில் எழுதப்பட்டதைப் போலவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பலர் அதை நீர்த்துப்போகச் செய்திருக்கிறார்கள் அல்லது அவைகளைத் திரித்து பொருள்படுத்தியிருக்கிறார்கள். பல போதகர்கள் தேவனுடைய தரத்திற்கு ஏற்ப வாழ முடியாதபடியினால், தேவனுடைய தரத்தை தங்கள் நிலைக்குத் தாழ்த்திவிட்டார்கள். தேவனுடைய வார்த்தையில் நீங்கள் இன்னும் அடைந்திராத அல்லது உங்கள் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்த ஒன்றை நீங்கள் காணும்போதெல்லாம், உங்களுக்கு இரண்டு தேர்ந்தெடுப்புகள் இருக்கின்றன. ஒன்று, “தேவனுடைய வார்த்தை உண்மையில் அப்படியெல்லாம் பொருள்படுத்தவில்லை. எழுத்தின்படி அல்லாதபடிக்கு, அது பொதுவான வேறு ஒரு காரியத்தைக் குறிக்கிறது” என்று சொல்லலாம். உதாரணமாக, நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்: “பிலிப்பியர் 4:4-இல், ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ என்று வேதம் கூறுகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது உண்மையில் 'எப்பொழுதும்' என்று அர்த்தமல்ல. இதன் பொருள், ‘பொதுவாக,’ அல்லது 'பெரும்பாலான நேரங்களில்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.” இவ்வாறு நீங்கள் தேவனுடைய வார்த்தையை உங்களுடைய மாம்சீகத் தரநிலைக்குத் தாழ்த்துவதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். மேலும் நீங்கள் அந்த வசனத்திற்குக் கீழ்ப்படிவதாகக் கற்பனை செய்துகொண்டு உங்களையே திருப்திப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் ஆவிக்குரிய சிந்தனையுள்ள ஒரு கிறிஸ்தவர் தேவனுடைய வார்த்தையை இருக்கிற வண்ணமாகவே அப்படியே ஏற்றுக்கொண்டு, “நான் கர்த்தருக்குள் 24/7 சந்தோஷப்பட வேண்டும்” என்று கூறுவார்; மேலும், “ஆண்டவரே, நான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. நான் சில நேரங்களில் சந்தோஷமாயிருக்கிறேன், சில நேரங்களில் (அல்லது பெரும்பாலான நேரங்களில்) முறுமுறுக்கிறேன், அடிக்கடி கோபப்படுகிறேன், ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் நான் சந்தோஷமாயிருப்பதில்லை. வேதத்தில் கூறப்பட்டபடி நான் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துவதில்லை, இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தயவுசெய்து என்னை அந்த நிலைக்குக் கொண்டு செல்லும்” என்று அவர் மனத்தாழ்மையுடன் தன் நிலைமையை ஒத்துக்கொள்கிறார்.
அந்த நபரே தேவனுடைய தரநிலையை அடைய முடியும். தேவனுடைய தரத்தை தன்னுடைய மாம்சீக நிலைக்குத் தாழ்த்திய மற்றொரு நபர் அதை ஒருபோதும் அடையமாட்டார். ஒருநாள் அவர் நித்தியத்தில் விழித்தெழுந்து, தனது வாழ்நாள் முழுவதும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதைக் கண்டுகொள்வார். எனவே, தேவனுடைய வார்த்தையை அது இருக்கும் தரத்திலேயே வைத்துவிட்டு, நாம்தான் அதைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை ஒத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு ஒத்துக்கொள்ளும்போது, நாம் தேவனுடைய அந்தத் தரத்தை நம் வாழ்வில் அடைவதற்கு சிறிதேனும் நம்பிக்கை உண்டாகும்.
“வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறும் மத்தேயு 5:20-ஐ நாம் வாசிக்கும் போது, இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பரிசேயர்களின் நீதி மிகவும் உயர்ந்த தரத்தில் இருந்தது. அவர்கள் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்தனர். ஐசுவரியமுள்ள வாலிபன் இயேசுவிடம் வந்து, “நான் எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினான். ஆனால் இயேசுவோ அதைக்குறித்து கேள்வி கேட்கவில்லை. (நிச்சயமாக, அவர்களால் பத்தாவது கட்டளையைக் கடைபிடிக்க முடியவில்லை. ஏனெனில் பத்தாவது கட்டளை அந்தரங்கத்தில் கைக்கொள்ள வேண்டியிருந்ததால் யாராலும் அதைக் கடைபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் மற்ற ஒன்பது கட்டளைகளையும், 600-க்கும் மேற்பட்ட கற்பனைகளை உள்ளடக்கிய அனைத்து பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களையும் கைக்கொண்டார்கள்.) பரிசேயர்கள் தாங்கள் தவறாமல் ஜெபிப்பதாகவும், அநேகமாக ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபிப்பதாகவும், வாரத்திற்கு இரண்டு முறை உபவாசிப்பதாகவும், தங்கள் வருமானத்தில் தசமபாகம் கொடுப்பதாகவும் பெருமையாகக் கூறினர். எனவே இந்த வசனம் ‘உங்கள் நீதி அவர்களுடைய நீதியைவிட அதிகமாக இருக்க வேண்டும்’ என்று கூறும்போது எதனைப் பொருள்படுத்துகிறது?
ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் ஜெபிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உபவாசிக்க வேண்டும், உங்கள் வருமானத்தில் 10 சதவீதத்திற்கு மேல் கொடுக்க வேண்டும் என்று அர்த்தமா? அது அப்படியல்லவே. நம்முடைய மனது லௌகீக சிந்தை கொண்டதாய் இருக்கிறபடியினால், நாம் எப்போதும் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே சிந்திக்கிறோம். நாம் எவ்வளவாய் லௌகீக சிந்தை கொண்டவர்களாக இருக்கிறோமோ, அவ்வளவாய் எண்ணிக்கை, புள்ளிவிவரங்கள் மற்றும் அளவுகளின் அடிப்படையிலேயே சிந்திக்கிறோம். ஒரு சபையை அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்த்து மதிப்பிடாமல் மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து மதிப்பிடுகிறோம். “உங்களில் 30,000 பேர் ஒரு சபையில் கூடும்போது நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அவர் சொன்னது அதுவல்ல. அவர் தமது பதினொரு சீஷர்களையும் பார்த்து, “நீங்கள் பதினொருவரும் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று கூறினார். ஜனங்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருப்பது என்பதே ஒரு ஸ்தல சபையிலுள்ள மெய்யான சீஷர்களின் முதன்மையான அடையாளமாகும்.
இயேசு எப்போதும் தரத்தையே வலியுறுத்தினார். இன்றைய கிறிஸ்தவத்தில், ஊழிய ஸ்தாபன அமைப்புகள் மற்றும் மெகா சபைகள் போன்றவை, எண்ணிக்கையையே வலியுறுத்துகின்றன. ‘நம்முடைய சபையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?,’ ‘நாம் எத்தனை இடங்களை சந்தித்திருக்கிறோம்?,’ ‘நமது வருடாந்திர காணிக்கை எவ்வளவு?’ இவைகளே அவர்கள் தங்களுக்குள்ளாகப் பெருமைபாராட்டும் காரியங்கள். அல்லது பிரசங்கிமார்கள் இவ்வாறு சொல்வார்கள்: ‘நான் எத்தனை நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்?,’ ‘நான் எத்தனை பிரசங்கங்கள் செய்திருக்கிறேன்?,’ ‘நான் எத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறேன்?,’ ‘நான் எத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறேன்?’ இவைகள்தான் மாம்சத்துக்குரிய ஜனங்கள் மேன்மை பாராட்டும் காரியங்கள்.
இயேசுவோ எப்போதும் தரத்தையே வலியுறுத்தினார்: தரமான (சாரமுள்ள) உப்பு மற்றும் தரமான (பிரகாசிக்கும்) ஒளி. அவர் பூமியில் வாழ்ந்த நாட்களின் முடிவில் அவருக்கு பதினொரு சீஷர்கள் மட்டுமே இருந்தனர். அது ஒரு பெரிய எண்ணிக்கையல்ல, ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தைப் பாருங்கள். அந்தப் பதினொரு சீஷர்களும் உலகத்தையே தலைகீழாக மாற்றினர். எல்லாவற்றையும் தேவனுக்காய் வெறுத்துவிட்ட, பணஆசை இல்லாத, மேலும் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த இதுபோன்ற சீஷர்களை எங்கே கண்டுபிடிக்க முடியும்? உலகில் இன்றைக்கு இதுபோன்ற ஒரு பிரசங்கியைக் கூடக் காண்பது மிகவும் அரிதானதாகும்.
“வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இருக்க வேண்டும்” என்று இயேசு சொன்னபோது தரத்தையே வலியுறுத்தினார். தரமானது, நீங்கள் எவ்வளவு காரியங்களில் ஈடுபாடாக இருக்கிறீர்கள் என்ற எண்ணிக்கையைப் பொருத்ததல்ல. அது பணத்தை பொருத்ததுமல்ல. அது ஜெபத்தைப் பொருத்ததுமல்ல. உபவாசத்தைப் பொருத்ததுமல்ல. அது வாழ்க்கையின் தரத்தை மட்டுமே பொருத்ததாகும்.
மீதமுள்ள வசனங்களில் (சொல்லப்போனால், மலைப்பிரசங்கத்தின் இறுதி வரையிலும்) இயேசு இந்த ஒரு வசனத்தையே விளக்குகிறார். மலைப்பிரசங்கத்தின் பெரும்பகுதி மத்தேயு 5:20-ஐத் தான் விளக்குகிறது என்று நாம் கூறலாம். நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இருக்க வேண்டும். நாம் தேவனுடைய தரநிலைகளை ஒருபோதும் தாழ்த்தக் கூடாது.