ஒவ்வொரு வாலிப இளைஞனும், வெகு சீக்கிரத்தில் அசுத்த நினைவுகளின் தாக்குதலால் சோதிக்கப்படுகிறான். பொதுவாக, பாலியத்திற்கான தூண்டுதல் ஸ்திரீகளை விட ஆண்களிடமே அதிக வலிமை கொண்டதாய் இருக்கிறது. ஆகவே, ஒரு வாலிப ஸ்திரீக்கு அசுத்த சிந்தை ஏற்படுதல் தாமதித்து.... ஒரு வாலிப இளைஞனுக்கோ இந்த தாக்குதல் முதலில் சம்பவிக்கிறது. “அசுத்த சிந்தையே” மனுஷனுடைய இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் தீமைகளில் முதல் தீமையாய் மாற்கு 7:21-ல் இயேசு குறிப்பிட்டார். மனந்திரும்பாத எல்லா மனுஷருடைய இருதயங்களும் பொல்லாததாய் இருக்கிறபடியால், இருதய யோசனையைக் குறித்து இயேசு குறிப்பிடும் விளக்கம் அனைவருக்கும் உண்மையானதாகவே இருக்கிறது. விபச்சார ஈடுபாடு கொண்ட மனிதனுடைய மனதை 'அசுத்த சிந்தைகள்' பாழ்கடிப்பதைப் போலவே.... ஒழுக்க நெறியில் வளர்ந்து வந்த ஒருவனுடைய மனதையும் இந்த அசுத்த சிந்தைகள் பாழ்கடிக்கச் செய்கிறது! ஒழுக்க நெறியில் வாழ்ந்த இவனுக்கு “சமுதாயத்தின் அச்சம்” இருந்தபடியாலும், காம சந்தர்ப்பங்கள் இல்லாதபடியாலும் 'அந்த மனிதனைப் போல்' விபச்சாரம் செய்யவில்லை, அவ்வளவுதான்.
சோதனைக்கும், பாவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகும். இயேசுவும்கூட “நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் (எபிரெயர் 4:15). ஆகிலும், ஒரு முறைகூட அந்த சோதனைகளுக்கு “தன் மனதளவில் கூட" இணங்காதபடியால், அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை. நாம் இந்த பூமியில் வாழும் கடைசிநாள் வரை சோதிக்கப்படுவோம். ஆனால், நாம் பாவம் செய்திடத் தேவையில்லை. பாலிய இச்சைகள், நம் மனதில் கலந்துவிட அனுமதிக்கும்போது மாத்திரமே நாம் பாவம் செய்கிறோம் (யாக்கோபு 1:15), இவ்வாறு நம்முடைய மனதில் தெறித்து விழும் “பாலிய தூண்டுதலுக்கு” நாம் இணங்க மறுத்துவிட்டால், நாம் பாவம் செய்திட வில்லை! பல வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த “தூயவான் சபையினர்" கூறும் போது “பறவைகள் என் தலைக்குமேல் பறப்பதை என்னால் தடுக்க இயலாது! ஆனால் என் தலையில் அமர்ந்து கூடுகட்டிக் கொள்வதை நான் நிச்சயம் தடை செய்திட முடியும்!” என்றனர். ஒரு காம சிந்தை எனக்குள் தோன்றி, அது என் சிந்தையில் கலந்து நான் களிகூரும் 'அந்த கண நேரத்தில்' தலையில் கூடுகட்ட அனுமதித்து விட்டேன்! அல்லது, நான் பாவம் செய்து விட்டேன்!
காம சிந்தைக்குள் சென்றுவிட்ட ஒருவனை, அந்த சிந்தை அவனை தனக்கு அடிமையாக்கி கொள்ளும் காலங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அந்த சிந்தையிலிருந்து மீட்கப்படுவதும் அதிக கடினமாய் மாறுகின்றது. எவ்வளவு துரிதமாய் நாம் மீட்கப்பட வாஞ்சிக்கிறோமோ, அவ்வளவு துரிதமாய் இலகுவில் நாம் விடுவிக்கப்படுவோம். தீமையான பாலிய சிந்தைகளை நாம் ஜெயித்திட வேண்டுமென்றால் 1) நாம் தோல்வியை நேர்மையாய் அறிக்கை செய்வதும் 2) விடுதலை பெற்றிட மெய்யான ஆர்வம் கொண்டிருப்பதும் 3) கிறிஸ்துவோடு நாம் மரித்த அந்த சத்தியத்தின் பங்கை ஏற்றுக்கொள்ளும்போதும் 4) நம் சரீரங்களையும் சிந்தைகளையும் ஆண்டவருக்கு முற்றிலுமாய் ஒப்புக்கொடுக்கும்போது அசுத்த காமசிந்தைகளை நாம் ஜெயித்திட முடியும்! (ரோமர் 6:1-14).
இவ்வாறு நாம் தொடர்ச்சியான ஜெய வாழ்விற்குள் வாழ வேண்டுமென்றால் “ஆவியில் நடக்கிறவர்களாய்” தேவன் நம்மை சிட்சித்து நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அவருக்கு நாம் தரவேண்டும் (கலாத்தியர் 5:16-19). இயேசு கற்றுக் கொடுக்கிறபடி, தீய புத்தகங்களை படிப்பதற்கும் அவைகளைக் காண்பதற்கும் நம் கண்களைப் பிடுங்கி எறியவும் பாலிய சிந்தைகளைத் தூண்டும் சேதிகளை கேட்க விரும்பும் நம் காதுகளை வெட்டி எறிவதற்கும்.... நாம் தவறிவிட்டால், நம் சிந்தைகளை கற்பின் ஒழுக்கத்திற்கு கொண்டுவர நம்மால் ஒருபோதும் முடியாது! இதுவே, இயேசு கற்பித்த போதனையின் சாரமாகும் (மத்தேயு 5:28-30), இந்தப் பாலிய சிந்தையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டுமென்றால், நம்முடைய சரீரத்தை இயேசு கூறிய விதமாய் சிட்சித்து ஒடுக்குவது மிகுந்த அவசியமாகும்! மிக வலிமையான பரிசுத்தவான்கள் கூறிய அறிக்கையில் “தங்கள் மனதில் தோன்றிய பாலிய ஈர்ப்பு சோதனைகளுக்கு எதிராய் ஓர்-தொடர் யுத்தம் தாங்கள் செய்ய வேண்டியிருந்ததை” கூறியிருக்கிறார்கள். குறிப்பாய், தங்கள் சரீரங்களை வெகு கடினமாய் சிட்சிக்க வேண்டியிருந்ததை அவர்கள் கூறியிருக்கிறார்கள்!
யோபு திருமணமாகி 10-பிள்ளைகளை உடையவராய் இருந்தார். ஆகிலும் அசுத்த பாலிய சிந்தையிலிருந்து தான் விடுபடுவதற்கு 'தன் கண்களை' கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருந்தார். எனவேதான் “எந்த ஒரு கன்னிப்பெண்ணையும் பாலிய இச்சையோடு பார்க்காதிருக்க என் கண்களோடு உடன்படிக்கை பண்ணினேன்!" எனக் கூறினார் (யோபு 31:1). எல்லா புருஷர்களுக்கும் அபாயமான சோதனைகள் கண்களின் வழியாகவே தாக்குகின்றன. மிகுந்த கவனம் கொள்ளாதபட்சத்தில், ஒரே ஒரு அசுத்த சிந்தையானாலும் அல்லது ஒரே ஒரு அசுத்த படங்களானாலும்... நம் கண்களின் கதவைத் தாண்டி மனதிற்குள் செல்ல அனுமதித்து விட்டால், அந்த மனதில் விழுந்து விட்ட பிம்பத்தை அகற்றுவது வெகு கடினமானதாகும்!
நம்முடைய மனதானது தேவனுடைய வார்த்தையினால் தினசரி நிறைந்திருக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது, தீய சிந்தையிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு ஓர் பாதுகாப்பான வழிமுறையாகும்! இதை தாவீது எடுத்துக்கூறும்போது “நான் உம்முடைய வார்த்தைகளை சிந்தித்து, அவைகளை என் இருதயத்தில் பத்திரப்படுத்திவைத்தேன்! அவைகள் என்னை பாவத்திற்கு விலக்கி காக்கின்றன” எனக் கூறினார் (சங்கீதம் 119:11). மேலும் நமது பரிசுத்த வேதாகமம் “நீங்கள் தேவனுடைய அங்கீகாரத்திற்கு மதிப்பு கொடுப்பவர்களாய் இருந்தால், உங்கள் மனதை பரிசுத்தமுள்ளவைகள் எவைகளோ, சரியானவைகள் எவைகளோ, தூய்மையானவைகள் எவைகளோ, எது நேர்த்தியானதோ அல்லது எது நன்மையானதோ.... அவைகளில் உங்கள் மனதை பதித்துவையுங்கள்” எனக் கூறுகிறது (பிலிப்பியர் 4:8 - JB மொழிபெயர்ப்பு).
இன்றைய கற்பு ஒழுக்கத் தரம் உலகமெங்கும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால், அசுந்த சிந்தைகளிலிருந்து முற்றிலும் விடுதலை பெறுவது கடினம்! என சிலர் சொல்லக்கூடும். ஆனால், இந்தப் பாலியத்து தீமைகள் நமது 21-ம் நூற்றாண்டிற்கு புதிதானதொன்றல்ல! முதலாம் நூற்றாண்டு கொரிந்து பட்டணத்தில் கற்பு ஒழுக்கக் கேடும், வேசித்தன தாராள மனப்போங்கும் நிறைந்து கிடந்தது! ஆகிலும் அங்கிருந்த கிறிஸ்தவர்கள், தங்கள் சிந்தைகளைச் சிறைப்படுத்தி, அவைகளை கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்குள் கொண்டுவந்து வாழ்ந்திட தேவ ஆவியானவர் அவர்களை எச்சரித்தார் (2கொரிந்தியர் 10:15), இன்றும் அவ்வாறே செய்யும்படி தேவ ஆவியானவர் நமக்கு கூறுகிறார். ஜீவனுக்குள் நடத்தும் பாதை இடுக்கமும், கடினமாயும் தோன்றலாம்! ஆனால், அவ்வழியில் நாம் நடந்து சென்றிட பரிசுத்தாவியானவர் நம்மைப் பெலப்படுத்த வல்லவராயிருக்கிறார்!
இவ்வித கற்பு ஒழுக்க வாழ்க்கை வாழும் பொருட்டு, நம்முடைய 'எதிர்பாலரோடு விரோதம்' கொண்டிருக்கும் மனப்பான்மையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நாம் ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. அவ்வாறு நாம் இங்கு பொருள்படுத்தவே இல்லை! நம் எதிர் பாலரோடு கொண்டிருக்கும் ஈர்ப்புத்தன்மையையும் பாவமாக கருதிவிடக் கூடாது. அது, இயற்கை வரம்பிற்கு உட்பட்டதேயாகும்! தேவனுடைய சௌந்தரியமான படைப்பில் “வசீகரமான முகமும்” அடங்கியிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது! ஆகிலும் வீழ்ச்சியடைந்த சிருஷ்டிகளாகிய நாம், கவனமாய் இருக்கவில்லையென்றால்.... அழகுள்ள தோற்றம், பின்பு நம்மை இச்சைக்குள் இழுத்து செல்வதை நாம் காண முடியும். ஆகவே எதிர்பாலரின் வசீகரம், அவர்கள் பட்சத்தில் தூய்மையாய் இருந்தாலும்.... நமக்கோ, அசுத்த சிந்தையாய் மாறிவிட முடியும்!
ஆகவே, நமக்குள் இருக்கும் பரிசுத்தாவியானவரின் சத்தத்திற்கு உடனடியாக கீழ்ப்படிவதில்தான் நம்முடைய பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. அவரே நம்மை உணர்த்தி, நம் கண்களையோ நம் சிந்தைகளையோ வேறு திசைக்குத் திருப்பும்படி கட்டளை கொடுக்கிறார். எனவே நாம் அவ்வப்போது ஜெபிக்க வேண்டிய முக்கியமான ஜெபம் என்னவெனில் “ஆண்டவரே என்னால் மேற்கொள்ள முடியாத சோதனைகளை சந்தித்திட என்னை நடத்திட வேண்டாம்” என்பதேயாகும். இந்த ஜெபத்தை மெய்பக்தியோடு ஜெபித்த அனேக வாலிபர்கள் ஜெயம் பெற்று வாழ்ந்திருக்கிறார்கள்.