WFTW Body: 

தேவன் ஒளியாகவும் இருக்கிறார்! அன்பாகவும் இருக்கிறார்!! (1யோவான் 1:5; 1யோவான் 4:8). அவர் “சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவராயிருக்கிறார்”. (1தீமோத்தேயு 6:16). அவர் பரிசுத்தராயிருக்கிறபடியினால் நம்மையும் பரிசுத்தராயிருக்கும்படி அழைக்கிறார்.

'பரிசுத்தம்' என்பது மானிடர்க்கு சோதனைகள் மூலமாகவே வரமுடியும். ஆதாம் முதலில் நன்மை தீமை அறியாதவனாகத்தான் உருவாக்கப்பட்டான். தேவனோ, அவன் பரிசுத்தனாய் இருக்க விரும்பினார்! எனவேதான் அவன் சோதிக்கப்படும்படி அனுமதித்தார்!!

நன்மை தீமை அறியத்தக்க மரமானது தேவனால் படைக்கப்பட்டதே ஆகும். அது தன்னில்தான் தீமையுடையது அல்ல! ‘அது மிகவும் நல்லது' என்று தேவன் சொன்ன ஒரு உலகத்தில்தான் இருந்தது (ஆதியாகமம் 1:31), ஆகிலும், அது தேவனால் விலக்கப்பட்டு, அதன்மூலம் ஆதாம் சோதிக்கப்பட்டு, அதற்கு அவன் எதிர்த்து நின்று - பரிசுத்தனாயிருக்க வாய்ப்பு அளிக்கிற ஒரு மரம்!

நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்றே வேதம் சொல்லுகிறது (யாக்கோபு 1:2). ஏனென்றால், அந்த சோதனைகளே தேவனுடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்காளிகளாக மாற நமக்கு சந்தர்ப்பம் அளிக்கின்றன! (எபிரெயர் 12:10), நாம் ஒன்றிலும் குறைவுபடாமல் பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படியே சோதனைகள் நிகழ்கின்றன! (யாக்கோபு 1:4).

நாம் இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தத்தின் மகிமையை தியானிக்கிற வேளையில், அவர் தேவனாய் இருந்தபோது கொண்டிருந்த பரிசுத்தத்தைக் கவனிக்கப் போகிறதில்லை. ஏனெனில் அது நமக்கு மாதிரியாய் இருக்க முடியாது! நாம் அவரை “எல்லாவற்றிலும் தம் சகோதரருக்கு ஒப்பாக இருந்தவராயும், நம்மைப்போல் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு பாவமில்லாதிருந்தவராகவே” இப்போது பார்க்கிறோம் (எபிரெயர் 2:17; எபிரெயர் 4:15).

இப்படித்தான் இயேசு நமக்கு முன்னோடியானார்! (எபிரெயர் 6:20). நாம் ஓட வேண்டிய ஓட்டத்தை நமக்கு முன்னால் ஓடி, நாம் பின்பற்றக்கூடிய ஒரு வழியைத் திறந்துவைத்தார். ஆகையால்தான் அவர் நம்மைப் பார்த்து “என்னைப் பின்பற்றுங்கள்” என்று சொல்ல முடிந்தது! (யோவான் 12:26). இவ்வாறு நமக்கு முன் ஓடிய அவரை நோக்கி நாமும்கூட ஓட்டத்தை பொறுமையாய், சோர்ந்துபோகாமல் அதைரியமடையாமல் ஓடிடமுடியும்! (எபிரெயர் 12:1-4).

எந்த ஒரு மனிதனுக்கும் நேரக்கூடிய ஒவ்வொரு சோதனையையும் நாம் எப்படி சந்திக்கிறோமோ அப்படியே அவரும் சந்தித்தார்! இவ்வாறாகவே அவர் நம்மைப்போல் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார், எபிரெயர் 4:15-ல் சொல்லப்பட்ட இந்த உண்மை, யாரேனும் ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளமுடியாத, மிக வெளிப்படையான தெளிவான உண்மை! இதுவே, நம் எல்லோரையும் உற்சாகமூட்டுவதாய் உள்ளது!! இன்று தேவன் நமக்கு கொடுக்கக்கூடாத எந்த ஒரு பெலனையும் இயேசு விசேஷமாய் பிரயோகப்படுத்தவில்லை. தம்முடைய பிதாவாகிய தேவனால் தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் 'ஒரு மனிதன் என்ற முறையில் சோதனையைச்சந்தித்து வெற்றி பெற்றார்!

தேவனுடைய கற்பனைகள் பாரமானவைகள் என்றும், மனிதனால் கடைப்பிடிக்க முடியாதது என்றும் சாத்தான் யுகயுகமாக காண்பித்திருக்கிறான். இயேசுகிறிஸ்து நம்மைப் போலவே மாம்சத்தில் வந்து, தம்முடைய பூரணமான கீழ்படிந்த வாழ்க்கையின்மூலம் சாத்தானின் அந்தப் பொய்யை வெளியரங்கமாக்கிவிட்டார்! இன்று நாம் சோதிக்கப்படுகிற எந்த சோதனையையும், நாம் கீழ்படிய வேண்டிய எந்த கற்பனையையும் இயேசுகிறிஸ்து சந்திக்கவில்லையென்றால், அந்த விஷயத்தில் நாம் பாவம் செய்வதற்கு போக்குச் சொல்ல இடமுண்டு. மேலும் அந்தப் பூரண கீழ்படிதலுள்ள வாழ்க்கையை, அவர் நம்மைப் போல பலவீனம் இல்லாத வேறு ஒரு மாம்சத்தில் வாழ்ந்திருந்தாலோ அல்லது நமக்குக் கிடைக்கக்கூடாத வல்லமையைக் கொண்டு வாழ்ந்திருந்தாலோ அவருடைய வாழ்க்கை நமக்கு முன் மாதிரியாகவும், சோதிக்கப்படுகிற வேளையில் நம்மை ஊக்குவிக்குகிறதாயும் இருக்க முடியாது! ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஒரு மனிதனாய் இந்த பூமியில் வாழ்ந்து, நமக்குத் தேவன் கொடுக்கிற அதே பெலத்தின்மூலம், வேத வார்த்தைகளில் நாம் பார்க்கிற அவருடைய பிரமாணங்களுக்கு நாம் கீழ்படிய முடியும் என்று நமக்கு பயிற்சி செய்து காண்பித்திருக்கிறார்!

நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்ட பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15).

பாவமில்லாது வாழ்ந்த இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையானது, மனிதன் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் எல்லா பாவங்களையும் ஜெயிக்க முடியும் என்பதையும் இந்த உலகத்திற்கு காண்பிக்கிற நிரூபணமாய் இருக்கிறது. நாம் அவருக்குள் நிலைத்திருந்தால் அவர் நடந்தபடியே நாமும் இப்போது நடக்க முடியும் (யோவான் 2:6).