WFTW Body: 

“எரிகோவை நான் உன் கையில் ஏற்கனவே ஒப்புக் கொடுத்துவிட்டேன்” (யோசுவா 6:2) என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார். சாத்தானுக்கு எதிராக யுத்தம் செய்யப் போகும் நாம், அவர் அவனை ஏற்கனவே கல்வாரியில் தோற்கடித்து விட்டார் என்றும் கர்த்தர் சீக்கிரமாய் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கிப் போடுவார் என்றும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். “நான் இன்னும் ஏழு நாட்களில் எரிகோவை உன் கையில் ஒப்புக் கொடுக்கப் போகிறேன்” என்று கர்த்தர் யோசுவாவிடம் சொல்லவில்லை. இல்லை. “நான் பட்டணத்தை ஏற்கனவே உன் கையில் ஒப்புக் கொடுத்துவிட்டேன். நீ போய் அதை எடுத்துக் கொள்” என்றுதான் சொன்னார்.

இஸ்ரவேலர் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் ஏழு நாட்களில் 13 முறை எரிகோவைச் சுற்றி வந்து ஏழாவது நாளில், அவர்களுடைய எக்காளங்களை ஊத வேண்டும் என்பதுதான். இப்படி ஒரு பட்டணத்தைச் சுற்றி வந்து, கூச்சலிடுகின்ற காரியமானது, தற்போது, துரதிர்ஷடவசமாக, விசுவாசிகள் கைக் கொள்ளும் ஒரு யுக்தியாகச் சீரழிந்து காணப்படுகின்றது. கர்த்தர் கட்டளையிடும்போது மாத்திரமே இவை எல்லாவற்றிற்கும் மதிப்பு உண்டாகின்றது. நாம் செல்லுமிடமெங்கும் கல்வாரியின் வெற்றியை ஸ்தாபிப்பதுதான் நம்முடைய அழைப்பாகும். சாத்தான் தோற்கடிக்கப்பட்டு விட்டான் என்பதை நாம் அறிக்கை செய்ய வேண்டும். “சாத்தானே, நீ சிலுவையிலே தோற்கடிக்கப்பட்டாய்” என்று சொல்லி, அவர்கள் தங்கள் ‘சாட்சியின் வசனத்தாலே, சாத்தானை ஜெயித்தார்கள்’ ” –தங்கள் எக்காளங்களை ஊதினார்கள் (வெளி 12:11). நான் சாத்தானிடத்தில், அவன் தோற்கடிக்கப்பட்ட விஷயத்தை அடிக்கடி நினைவூட்டுவதிலே பேருவகை அடைகின்றேன். அவன் அதைக் கேட்பதிலே விருப்பமற்றவன் என்பதை நானறிவேன்.

ஒரு முறை ஒரு பெண்ணுக்காக ஜெபிக்கச் சொல்லி, அவளை எனது இல்லத்திற்குக் கூட்டி வந்ததை நினைவுகூருகிறேன். நான் அவளிடத்தில் ஆண்டவரை அவளுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளுமாறும், சாத்தானானவன் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டான் என்று சொல்லுமாறும் சொன்னேன். திடீரென அவள் என்னைப் பார்த்துச் சத்தமிட்டு, குரலை மாற்றியவளாய், “நான் சிலுவையில் தோற்கடிக்கப்படவில்லை” என்றாள். அவளுக்குள்ளிருந்து ஒரு பிசாசுதான் என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தது என்பதைப் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். ஆதலால் நான், “நீ ஒரு பொய்யன். 2000 ஆண்டுகளுக்கு முன்பாக நீ சிலுவையில் தோற்கடிக்கப்பட்டாய். இயேசுவின் நாமத்தில் நீ அவளை விட்டு வெளியே போ” என்று அந்தப் பிசாசிடம் சொன்னேன். அந்தப் பிசாசு உடனடியாக அவளைவிட்டுப் போய்விட்டது. அதன் பிறகு, அவளால் சாத்தானிடம், “சாத்தானே, நீ சிலுவையிலே தோற்கடிக்கப்பட்டாய்” என்று சொல்ல முடிந்தது. அந்த நாளிலே, நான் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். அதாவது சாத்தான் தான் சிலுவையிலே தோற்கடிக்கப்பட்டதை மீண்டுமாய் நினைவூட்டப்படுவதை விரும்புவதில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஆகவே நான் அதை அடிக்கடி அவனிடம் சொல்ல வேண்டுமெனவும், உலகெங்குமுள்ள விசுவாசிகளும் தினம்தோறும் சொல்லும்படி போதிக்க வேண்டுமெனவும் தீர்மானித்தேன்.

நீங்கள் எத்தனை தடவை பிசாசிடம், அவன் சிலுவையிலே தோற்கடிக்கப்பட்டவன் என்று சொல்லியிருக்கிறீர்கள்? இன்றே ஆரம்பியுங்கள். அவன் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டதை அடிக்கடி அவனிடம் சொல்லுங்கள். நீங்கள் அப்படிச் சொல்வதற்காக அவன் உங்களை வெறுப்பான். சாத்தான் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன். ஏனெனில் அப்பொழுதுதான் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்று என்னால் அறிந்து கொள்ள முடியும். சாத்தானைக் கண்டு அஞ்ச வேண்டாம். நீங்கள் உங்களுடைய சாட்சியின் வசனத்தை அறிவித்துக் கொண்டே இருக்கும்போது, உங்களால் தேவனுடைய வல்லமையைக் கொண்டு சாத்தானை உங்கள் கால்களின் கீழாய்க் கொண்டு வர முடியும். நான் இங்கு உங்களுக்கு ஒரு யுக்தியைச் சொல்லித் தரவில்லை. நீங்கள் உங்களுடைய மனச்சாட்சியைச் சுத்தமாகக் காத்துக் கொள்ளாமல், சாத்தானை எதிர்க்க முயன்றால், அவன் உங்களை நோக்கி, ”நான் இயேசுவை அறிவேன். பவுலைப் பற்றியும் அறிவேன். நீ யார்?” (அப் 19:15) என்று நகைப்புடன் கூறுவான். ஆகவே, முதலாவது உங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள், பின்பு சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள் (யாக் 4:7). “நீ பலங்கொண்டு, திடமனதாயிரு” என்று கர்த்தர் யோசுவாவிடத்தில் சொன்னார் (யோசுவா 1:7).

இஸ்ரவேலர் முதன்முதலாக கானானிலே தோற்கடிக்கப்படுவதை யோசுவா 7-ம் அதிகாரத்தில் காண்கின்றோம். தாங்கள் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என யோசுவா கர்த்தரிடம் வினவினான். அதற்கு கர்த்தர், “பாளையத்தில் பாவம் இருக்கிறது” என பதில் தந்தார். ஒரு மனிதன் தடை செய்யப்பட்டதைத் திருடிவிட்டான். “நீங்கள் எரிகோவிலே உங்களுக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை யாவற்றையும் கர்த்தருக்கே கொடுத்துவிட வேண்டும்” என்று தேவன் மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார் (யோசுவா 6:17). ஆகானைத் தவிர மற்றெல்லாரும் அந்தக் கற்பனைக்குக் கீழ்ப்படிந்தார்கள் (யோசுவா 7:20). இறுதியில், அவன் பிடிபட்டு, அம்பலப்படுத்தப்பட்டவுடன், தான் பாவம் செய்ததாக அறிக்கை பண்ணினான். அவன் அங்கிருந்த வீடொன்றில், ஒரு பாபிலோனிய ஆடையைக் கண்டு, அதை இச்சித்தான். “நான் அதைக் கண்டு, இச்சித்து, எடுத்து, ஒளித்து வைத்தேன்” என்றான் (யோசுவா 7:21). சோதனையிலே இந்த நான்கு படிகளும் உள்ளன. நாமும் இது போலவேதான் பாவம் செய்துவிட்டு, பின்னர் அதை மறைக்கிறோம். அதன்பின் ஆகான் கல்லெறிந்து கொல்லப்பட்டான்.

எரிகோவின் யுத்தத்தில் கிடைத்த கொள்ளைப் பொருட்களை எடுக்க அனுமதியில்லை என்று கேள்விப்பட்டவுடன், ஆகான், “இந்த ராட்சதர்களையெல்லாம் கொன்று, பட்டணங்களையெல்லாம் கைப்பற்றியவுடன், தனக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அடுத்த 20 ஆண்டுகளுக்கு நான் ஓர் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். எனவே எனக்கென்று எதையாவது எடுத்து வைத்துக் கொள்ளட்டும்” என்று எண்ணியிருந்திருக்கக் கூடும். இஸ்ரவேலர்கள் பொருளாசையுள்ளவர்களோ என தேவன் சோதித்துக் கொண்டிருந்தார் என்பதை அவன் சற்றேனும் நினைக்கவில்லை. ஆகான் எவ்வளவு மதியீனனாய் இருந்தான். ஒருவேளை காத்திருந்திருப்பானேயானால், அவனுக்கு வேண்டிய பொன், வெள்ளி, வஸ்திரங்கள் யாவையையும் பெற்று இருந்திருப்பான், ஆனால் அவனைச் சோதிப்பதை அவன் அறிய தவறியதால் எல்லாவற்றையும் இழந்து போனான். அப்பொழுதிருந்து கானான் யுத்தங்களில் கிடைக்கும் எல்லா கொள்ளைப் பொருட்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தேவன் சொல்லிவிட்டதாக யோசுவா 8:2 வாயிலாக வாசிக்கிறோம். நீங்கள் பொருளாசையுள்ள, அபகரிக்கிற நபரா என்று தேவன் உங்களையும் சோதிப்பார். நீங்கள் அப்படி இருந்தால், தேவன் உங்களுக்கென்று திட்டம் பண்ணியிருந்த மிகச் சிறந்ததை, காலமெல்லாம் தவறவிட்டவராகத்தான் இருப்பீர்கள். அதற்கு பதிலாக தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடினால், உங்களுக்குத் தேவையானதை அவர் எப்போதும் தருவார்.

ஆகான் கொல்லப்பட்ட பிறகு, ஆயி பட்டணம் எப்படி வெல்லப்பட்டது என்று யோசுவா 8:26 -ல் வாசிக்கிறோம். நாம் முன்னேற்றப் பாதையில் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னால், கடந்த காலத்தைச் சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். இல்லையென்றால், நம்முடைய வாழ்வில் வரும் ஆயி பட்டணங்களில் தோல்வியைத் தழுவ வேண்டும். மோசே மலையுச்சியின் மேல் தன் கையை உயர்த்தியிருந்ததைப் போலவே, யோசுவாவும் ஆயிற்கு எதிராக ஈட்டியை நீட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவனது போர் வீரர்கள் போரிட்டனர்; ஆயி பட்டணம் வீழ்ந்தது. ஒரு வெற்றியை ருசித்தாலே, மிக மெத்தனமான போக்கு நமக்குள் புகுந்துவிடுகிற அபாயம் நம் எல்லார் முன்பாகவும் உள்ளது. நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றால், வஞ்சனையானது நம் வாசற்படியில் வந்து தட்டும் அபாயம் உண்டாகிவிடும். யோசுவாவிற்கு இதுதான் நிகழ்ந்தது (அதிகாரம் 9). கிபியோனியரில் சிலர் – கானானியராகிய அவர்கள் கொல்லப்பட்டிருந்திருக்க வேண்டியவர்கள் – வந்து யோசுவாவைச் சந்தித்தனர் (யோசுவா 9:4). அவர்கள் தந்திரமாகச் செயல்பட்டனர். தூர தேசத்திலிருந்து வந்தவர்களைப் போல நடித்தனர். கிழிந்த உடைகளையும், அறுந்த செருப்புகளையும் அணிந்து கொண்டு, கெட்டுப் போன அப்பங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு நின்றனர் (யோசுவா 9:5). அவர்கள் இஸ்ரவேலரை முகஸ்துதி செய்தனர். ஜனங்கள் நம்மை முகஸ்துதி செய்யும்போது, நாம் பெருத்த அபாயத்தில் இருக்கிறோம். வஞ்சனை மிக அருகாமையில் இருக்கிறது. “அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்கவில்லை” என்று யோசுவா 9:14 -ல் வாசிக்கிறோம். யோசுவா அவர்களை நம்பி, அவர்களைக் கொல்வதில்லை என்று அவர்களோடே ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். மூன்று நாட்கள் கழிந்தவுடன்தான், அவர்கள் கொல்லப்பட வேண்டிய கானானியர்கள் என்பதைக் கண்டுபிடித்தான் (யோசுவா 9:16). ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொண்டு, அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு, தங்கள் வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டனர்.

இச்சம்பவத்திலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ள முடியும்? நம்மை முகஸ்துதி செய்து, தவறான நோக்கங்களுடன் சபைக்குள் நுழைந்துவிடாதபடி கவனமுடன் இருக்கும்படியாக, இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறோம். இம்மாதிரியான சமயங்களிலெல்லாம் நாம் நம்முடைய சுய ஞானத்தின்மீது சாயாமல், தேவனுடைய ஆலோசனையை நாடுவதுதான் நாம் எடுக்கக் கூடிய பாதுகாப்பான நடவடிக்கையாகும். விசேஷமாக, நாம் பெரும் வெற்றிகளை வசமாக்கிக் கொண்டவுடனே, கவனமாய் இருப்பது அவசியமாகும். இயேசு அற்புதமான சுகங்களை அளித்த பிறகு, அவருடைய பிதாவிற்கு மகிமையைச் செலுத்துவதற்காக, ஜெபிப்பதற்காக வனாந்திரத்திற்குள் நழுவி விடுவார் என்று நாம் சுவிசேஷங்களில் வாசிக்கிறோம் (லூக் 5:15,16). அது நமக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நாம் கர்த்தருடைய ஆலோசனையைத் தேடாத நிலை நமக்கு எப்பொழுது உண்டாகின்றது? நாம் வெற்றியை ருசிக்கும்போதுதான். தோல்வி அடையும்போதல்ல. நாம் தோல்வியைக் காட்டிலும், வெற்றிக்குப் பிறகுதான் பெரும் அபாயத்தைத் தொட்டு நிற்கிறோம். வழக்கமாக, நாம் தோல்விக்குப் பிறகு, கர்த்தரை ஏமாற்றிவிட்டோமே என்ற ஆதங்கத்தில், ஆண்டவரை கிட்டிச் சேருவோம். நாம் சற்று நேரம் வெற்றிக்குள் இருந்துவிட்டாலே, ஆவிக்குரிய பெருமை நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

யோசுவா 10 -ஆம் அதிகாரத்தில், கிபியோனை ஐந்து ராஜாக்கள் சுற்றி வளைத்துத் தாக்கியபோது, கிபியோனியர் யோசுவாவின் உதவியை நாடினர். அப்போது கர்த்தர் யோசுவாவைத் திடப்படுத்தி, “அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக் கொடுத்தேன். அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்” (யோசுவா 10:8). வார்த்தையானது எப்போதுமே, “நான் ஏற்கனவே ஒப்புக் கொடுத்தேன்” என்றே இருந்தது. யுத்தம் தொடங்கு முன்பே, வெற்றியானது கையளிக்கப்பட்டு விட்டது. நாமும் சாத்தானிடம் இப்படித்தான் செல்ல வேண்டும். சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் நம் முன்னே நிற்க முடியாது. பாதாளத்தின் வாசல்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையை மேற்கொள்ளவே முடியாது. யோசுவா அவர்கள் மேலெழும்பி, அவர்களை ஜெயித்தான். “இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை” (யோசுவா 10:21). அதன் பின்பு, யோசுவா, இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, “நீங்கள் கிட்ட வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின் மேல் வையுங்கள்” என்றான் (யோசுவா 10:24). “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்” என்று வேதம் ரோமர் 16:20 -ல் கூறுகின்றது. இயேசு ஏற்கனவே சாத்தானைக் கல்வாரியில் தோற்கடித்துவிட்டார். ஆனால் சாத்தான் இப்போது நம்முடைய கால்களின் கீழ் நசுக்கப்படுவான்.