கிறிஸ்து பரமேறிச் சென்ற பின், அவர் சபைக்கு வரங்களைத் தந்தருளினார். ஜனங்களே அந்த வரங்கள். கிறிஸ்து சபைக்கு அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும், போதகர்களையும் தந்தருளினார் (எபேசியர் 4:13). வரம்பெற்ற இம்மனிதர்கள் விசுவாசிகள் எல்லோரையும் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்கு தயார்படுத்த வேண்டும் (எபேசியர் 4:12). இதை கவனிக்க வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும். வரம்பெற்ற இம்மனிதர்கள் தாங்களாகவே சபையைக் கட்ட வேண்டியவர்கள் அல்ல. விசுவாசிகள் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்கு, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பார்கள். கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதிலே ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு பங்கு உண்டு. ஆனால் இன்று அத்தகைய வேலையைக் காண்பது மிகவும் அபூர்வமாக உள்ளது.
வரம் பெற்ற மனிதர்களில் அப்போஸ்தலர்களே முதலிடம் வகிக்கின்றனர். அவர்கள் வெறும் முதல் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மட்டுமன்று. ஏனெனில் கிறிஸ்து பரமேறிச் சென்ற பிறகுதான், சபைக்கு அவர்களைத் தந்தருளினார் என இங்கு சொல்லப்படுகின்றது (எபேசியர் 4:8). அப்போஸ்தலர் புத்தகத்திலே, பவுலும் பர்னபாவும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படுவதாக நாம் வாசிக்கின்றோம். வெளி 2:2 -ல், 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான யோவான் மாத்திரமே உயிரோடிருக்கும்போது, கர்த்தர் எபேசு சபையைக் குறித்து, “அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்தீர்கள்” என்று சொன்னார். அந்நாட்களில் வேறு பல உண்மையான அப்போஸ்தலர்களும் இருந்தனர் என்பதையே இது உணர்த்துகின்றது. அப்படி இல்லாதிருந்தால், தான் ஓர் அப்போஸ்தலன் என்று சொல்லுபவனைச் சோதித்தறிய வேண்டிய நிலை உண்டாகியிருந்திருக்காது. இன்றும் அப்போஸ்தலர்கள் உள்ளனர். வேத வாக்கியங்களை எழுதுபவர்கள்தான் அப்போஸ்தலர்கள் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அந்திரேயா மற்றும் வேறு சில ஆதி அப்போஸ்தலர்களும் வேத வாக்கியங்களை எழுதவில்லை. ஆனால் அப்போஸ்தலர்கள் அல்லாத மாற்கு, லூக்கா போன்றவர்கள் வேத வாக்கியங்களை எழுதினர். அப்போஸ்தலர்கள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதற்காக தேவனால் அனுப்பட்ட மனிதர்களாவர். “அப்போஸ்தலன்” என்ற வார்த்தைக்கு, “அனுப்பப்பட்டவன்” என்று பொருளாகும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவனால் அனுப்பப்பட்டவனாவான். அவர்கள் அநேக இடங்களில் ஸ்தல சபைகளை ஸ்தாபித்து, அவற்றிற்கு மூப்பர்களை ஏற்படுத்துபவர்களாவர். பின்பு இந்த அப்போஸ்தலர்கள் அந்த மூப்பர்களுக்கு மூப்பர்களாக இருந்து, அவர்களை வழிநடத்தி, அவர்களுடைய சபையின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, அவர்களை முதிர்ச்சிக்கு நேராக நடத்துவார்கள். ஓர் அப்போஸ்தலனுக்கு ஸ்தல சபை என்று ஒன்றிருந்தாலும், அந்தச் சபையிலுள்ள விசுவாசிகள்மீது எவ்வித பொறுப்பையும் பெற்றிருப்பதில்லை. அவன் சபைகளின் மூப்பர்கள் மீதுதான் பொறுப்புள்ளவனாயிருப்பான்.
அடுத்ததாக வருபவர்கள் தீர்க்கதரிசிகளாவர். இவர்கள் சபையிலுள்ள பிரச்சனைகளைக் கண்டறியத்தக்க பகுத்தறிதலைப் பெற்ற மனிதர்களாவர். அவர்கள் நோயாளியின் வியாதியைக் கண்டறிந்து, அதற்கான மருந்தைக் கொடுத்து, தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்து, புற்று நோயை அகற்றி குணமளிக்கும் ஒரு நல்ல மருத்துவரைப் போன்றவர்களாவர். தீர்க்கதரிசிகள் ஒவ்வொரு சபையிலும் எப்பொழுதும் பாவமாகிய புற்று நோயை வெளியரங்கப்படுத்திக் கொண்டே இருப்பதால், அவர்கள் பிரபலமானவர்களாய் இருப்பதில்லை. அநேக ஜனங்களுக்குத் தங்களது உடலைப் பற்றிய ஸ்கேன் முடிவுகளை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி இருப்பதில்லை. அதைப் போலவே, ஒரு தீர்க்கதரிசி விசுவாசிகளின் அந்தரங்க பாவ நிலையை எடுத்துரைக்கும்போது, அநேகர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இதுதான் ஒரு ஸ்தல சபையின் மிக முக்கியமான ஊழியமாகும். எந்த சபையும் ஆவிக்குரிய ஜீவியத்தில் நிலைத்திருப்பதற்கு, ஒவ்வொரு கூட்டத்திலும் பாவத்தை வெளியரங்கப்படுத்துகிற தீர்க்கதரிசிகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜனங்கள் தங்களுடைய அந்தரங்கமான பாவங்களைக் குறித்து உணர்த்தப்பட்டு, இந்தக் கூட்டத்திலே தேவன் வாசம் பண்ணுகிறார் என அறிக்கையிட்டு, அவரிடத்தில் திரும்புவார்கள் (1கொரி 14:24,25). நான் இப்போது இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்திலே ஜனங்களுக்கு, அவர்கள் எங்கு செல்ல வேண்டுமென்றும், யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறவர்களாகவும், நியாயத்தீர்ப்பைச் சொல்லி அச்சுறுத்துகிறவர்களாகவும் இருக்கும் திரளான கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. அவை கள்ளத்தீர்க்கதரிசனங்களாகும். புதிய உடன்படிக்கையிலே “உத்தரவு பிறப்பிக்கும்” தீர்க்கதரிசனம் ஒருபோதும் காணப்படவில்லை. அது பழைய உடன்படிக்கைத் தீர்க்கதரிசிகளின் ஊழியமாகும். பரிசுத்த ஆவியை சில வேளைகளில் மாத்திரமே பெற்றுக் கொண்ட தீர்க்கதரிசிகள் செய்த ஊழியமாகும். ஆனால் இன்று காரியம் அவ்வாறு இருப்பதில்லை.
அடுத்ததாக வருபவர்கள் சுவிசேஷகர்கள். இவர்கள் சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்கள் மீது பாரங்கொண்டு, அவர்களுக்குத் தனிப்பட்டவிதமாக சுவிசேஷம் சொல்லியோ அல்லது சுவிசேஷக் கூட்டங்கள் மூலமாக சுவிசேஷம் சொல்லியோ, அவர்களை ஆண்டவரிடத்திற்குக் கொண்டுவருவதற்கான திறமைப் பெற்ற விசுவாசிகளாவர். ஒரு ரொட்டித் துண்டை (ஒரு அவிசுவாசியை) எடுத்து வாயினுள் போடும் உடலிலுள்ள கையைப் போன்றவர் தான் சுவிசேஷகன். தீர்க்கதரிசியானவன் வாயினுள் வந்த உணவை மென்று சிறிதாக மாற்றும் பல்லைப் போலவும், அந்த உணவை மேலும் சிறிதாக மாற்றும் அமிலத்தைக் சுரக்கும் குடலைப் போலவும் செயல்பட்டு, கடைசியில் சரீரத்தின் ஓர் அங்கமாக மாற்றுபவராவார். அமிலத்தைக் கொட்டும் ஊழியத்தைக் காட்டிலும், ரொட்டித் துண்டை மென்மையாகக் கையிலெடுக்கும் சுவிசேஷ ஊழியமானது அதிகமாக மெச்சிக் கொள்ளப்படுகிறது. ஆனால் அந்த ரொட்டித் துண்டானது சரீரத்தின் ஓர் அங்கமாக மாற வேண்டுமானால், இவ்விரு ஊழியங்களுமே அவசியமாகும். ஆகவே சுவிசேஷகனும், தீர்க்கதரிசியும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
அடுத்து வருபவர்கள் மேய்ப்பர்கள். கிரேக்க வார்த்தைகளான poimen (பெயர்ச் சொல்) poimaino (வினைச்சொல்) ஆகிய இரு வார்த்தைகளும் புதிய ஏற்பாட்டிலே 29 தடவைகள் வருகின்றன. அவை “மேய்ப்பர்”, “மேய்த்து” என்னும் பொருள்தரும் விதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில வேதாகமத்தில் இங்கு மாத்திரமே அது “பாஸ்டர் (Pastor)” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (தமிழ் வேதாகமத்தில் “மேய்ப்பர்“ என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) இது கிறிஸ்தவ வட்டாரத்திலே, இந்த ஊழியத்தைக் குறித்த ஏராளமான தவறாகப் புரிந்து கொள்ளுதலுக்கு வித்திட்டுவிட்டது. மேய்ப்பர்கள் எனப்படுபவர்கள் ஆடுகளை மேய்க்கிறவர்களாகவும், அவை பசியாயிருக்கும்போதும், அடிபட்டுக் கிடக்கும்போதும் அவற்றைக் கவனித்துக் கொள்ளுகிறவர்களாவும் இருக்கின்றனர். ஆடுகளைப் போஷித்து, ஆட்டுக் குட்டிகளை மென்மையாய்க் கவனித்து அவை முதிர்ச்சியை நோக்கி வளர்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்வதும் மேய்ப்பனின் வேலையாகும். ஒவ்வொரு சபைக்கும் ஒரு பாஸ்டர் அல்ல, மேய்ப்பர்கள் தேவை. இயேசுவானவர் வெறும் 12 பேரை மாத்திரமே கவனித்துக் கொண்டார். ஆகவே ஒரு சபையில் 120 பேர் இருந்தால், அவர்களைக் கவனித்துக் கொள்ள அந்த சபைக்கு 10 மேய்ப்பர்கள் தேவை. “பாஸ்டர்” என்ற பட்டத்துடன் ஊதியம் பெறுகின்ற முழுநேர ஊழியம் செய்யும் நபர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை. தங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மீது அக்கறைக் கொண்டு ஒரு மேய்ப்பனின் இருதயம் உடையவர்களையே நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் உலக வேலை செய்பவர்களாக இருந்து கொண்டு, சபையிலுள்ள தங்களிலும் இளையவர்களை ஊக்கப்படுத்த நாடுபவர்களாக இருக்கக்கூடும். 25 வயதுடைய ஒருவன், சபையிலுள்ள தன்னைவிட வயது குறைந்த பதின்பருவத்தினர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு ஒரு மேய்ப்பனாக இருக்க முடியும். இதைப் போன்ற அநேகர் சபையின் மூப்பர்களுக்குப் பேருதவியாய் இருக்க முடியும். சபையானது அளவிலே பெருகும் போது அதற்கு அநேக மேய்ப்பர்கள் தேவைப்படுகின்றனர். கிறிஸ்துவின் சரீரத்தில், மெகா சபைகளெல்லாம் தேவத் திட்டத்தில் இருப்பதில்லை. ஆனால் தகப்பனின் இருதயங்கொண்ட மேய்ப்பர்கள் உள்ள சிறு சபைகள் அத்திட்டத்தில் உள்ளன. பெரிய சபைகள் அனைத்தும் “பிரசங்க மையங்களாக” உள்ளன. அங்கே பொழுது போக்கிற்காகவும், வேதாகமக் கல்வி கற்பதற்காகவும் வருகின்றனர். கிருபையில் வளருவதற்காக அல்ல. அந்த சபைகளின் தலைவர்களெல்லாம் வெறுமனே நல்ல நிர்வாகிகளாகவும், பிரசங்கிகளாகவும் / போதகர்களாகவும் இருக்கிறார்களேயன்றி, மேய்ப்பர்களாக இருப்பதில்லை.
கடைசியாக வருபவர்கள் போதகர்களாவர். இம்மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை எளிமையாக்கி, ஜனங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கிக் காட்டுபவர்களாவர். கிறிஸ்த வட்டாரத்தில் அநேக நல்ல போதகர்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு சபைக்கும் ஒரு போதகர் தேவைப்படுவதில்லை. 20 அல்லது 30 சபைகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து போதிப்பதற்கு, ஒரு போதகர் இருந்தாலே போதுமானதாகும். இன்று நமக்கிருக்கும் CD, DVD இணையதளம் (Internet) போன்ற வசதிகளைக் கொண்டு ஒரு போதகரே நூற்றுக்கணக்கான சபைகளுக்குப் போதித்துவிட முடியும். அதைப் போலவே ஒவ்வொரு சபைக்கும் ஒரு சுவிசேஷகன் தேவையில்லை. ஏனெனில் ஒரு சுவிசேஷகன் ஓரிடத்திலுள்ள ஜனங்களை கிறிஸ்துவினிடத்தில் கொண்டுவந்த பிறகு, வேறு இடத்தை நோக்கி நகர்ந்து செல்ல முடியும். ஆனால் ஒவ்வொரு சபைக்கும் மேய்ப்பர்களும், தீர்க்கதரிசிகளும் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றனர்.
கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுவதுதான் இத்தனை வகையான ஊழியங்களின் நோக்கமாகும். ஒரு சுவிசேஷகன் ஆத்துமாக்களைக் கிறிஸ்துவினிடம் கொண்டுவந்த பிறகு, அவர்களை ஏதாவதொரு சபைக்குப் போகும்படியோ அல்லது அவர்களுடைய செத்த சபைக்கேத் திரும்பிப் போகும்படியோ சொல்லக்கூடாது. எபேசியர் 4-ல் இத்தகைய சுவிசேஷகனைப் பற்றிச் சொல்லப்படவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தங்களுடைய ஊழியத்துடன் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளும் அநேக சுவிசேஷகர்கள் உள்ளனர். அவர்கள் கூட்டங்களை நடத்துகின்றனர்; ஜனங்களும் இரட்சிக்கப்படுகின்றனர் (என நம்புகிறோம்). அதன்பிறகு அவர்களை அவர்களது செத்த சபைக்கேத் திரும்பிச் செல்லும்படி சொல்லுகின்றனர். அந்த செத்த சபைகளில் அவர்களை சத்தியத்திற்குள் நடத்தத்தக்க மேய்ப்பர்களும், போதகர்களும் இருப்பதில்லை. இங்கு எபேசியர் 4 –ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் சுவிசேஷகர்களோ, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள், போதகர்கள் போன்றவருடன் இணைந்து பணியாற்றியதாக நாம் வாசிக்கிறோம். சுவிசேஷகன் மனந்திரும்பியவர்களை நல்ல மேய்ப்பர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய ஒத்துழைப்புத்தான் கிறிஸ்துவின் சரீரத்திலே நமக்குத் தேவைப்படுகிறது. சபையின் ஆதி நாட்களில் இப்படித்தான் இருந்தன. பிலிப்பு ஒரு சுவிசேஷகனாய் இருந்தார். அவர் ஓர் அப்போஸ்தலனாகவோ, ஒரு மேய்ப்பனாகவோ இருக்கவில்லை (அப் 8). எனவே மனந்திரும்பியவர்களை தேவனுடைய சத்தியத்திற்குள்ளாக நடத்தும் பொறுப்பை பிலிப்புவிடமிருந்து, சமாரியாவிலிருந்த வேறு சிலர் பெற்றுக் கொண்டனர். தாங்களாகவே அங்குமிங்கும் அலைந்து திரியும்படி பிலிப்பு அவர்களை விடவில்லை.