WFTW Body: 

இயேசு மத்தேயு 5:3-இல், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;” என்று கூறினார். “பாக்கியவான்” என்ற இந்த வார்த்தை “மகிழ்ச்சியான ஒருவர்” அல்லது விரிவாக்க வேதாகமம் கூறுவது போல் “பொறாமைப்பட வேண்டிய ஒருவர்” என்று பொருள்படும். பூமியிலுள்ள ஒருவரைப் பார்த்து நீங்கள் பொறாமைப்பட விரும்பினால், பணக்காரரையோ, பிரபலமான நபரையோ அல்லது அழகாக இருப்பவரையோ பார்த்துப் பொறாமை கொள்ளாமல், ஆவியில் எளிமையுள்ளவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளுங்கள். ஏனென்றால் பரலோகராஜ்யம் அவர்களுடையது. வசீகரம், செல்வம் போன்ற வேறு பல தகுதிகளைக் கொண்ட ஜனங்கள் பூமிக்குரிய காரியங்களை வைத்துக்கொண்டு பூமிக்குரியதொரு ராஜ்யத்தைக் கொண்டிருக்க முடியும். ஆனால், பரலோகராஜ்யம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கே சொந்தமானதாகும். எல்லாவற்றையும் நிதானித்துப் பார்க்கும்போது, ஆவியில் எளிமையாயிருக்கும் நபரே உண்மையில் பொறாமைப்பட வேண்டியவராயிருக்கிறார். ஏனென்றால், அவரது செல்வம் தான் நித்தியத்திற்கும் நீடிக்கப் போகிறது. நித்தியம் ஒருபோதும் முடிவடையாது; மில்லியன் கணக்கான ஆண்டுகள் நித்தியத்தில் ஒரு வினாடி போன்றது. பூமியில் நமது வாழ்நாளைப் பற்றி நாம் நினைக்கும் போது, அது 70 அல்லது 80 ஆண்டுகளாக இருந்தாலும், மனிதன் ஒரு நித்திய பிறவி என்று நீங்கள் உண்மையில் நம்பினால், 70 ஆண்டுகள் என்னவாக இருக்கும்? ஒன்றுமேயில்லை! ஆயிரம் ஆண்டுகள் கர்த்தருக்கு முன்பாக ஒரு நாள் போலவும், ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும் இருக்கிறது என்று 2 பேதுரு கூறுகிறது! நித்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பூமியில் நமது முழு வாழ்க்கையும் மிகவும் குறுகியதாயிருக்கிறது.

தேவனுடைய ராஜ்யத்தில் தன் எதிர்காலத்தை நாடுகிறவனே உண்மையிலேயே ஞானமுள்ளவன். ஆவியில் எளிமையுள்ளவனே தேவனுடைய ராஜ்யத்தில் அதிகபட்ச செல்வங்களைப் பெறப்போகிறவனாய் இருக்கிறான் என்று இங்கே நமக்குச் சொல்லப்படுகிறது. இது அநேக கிறிஸ்தவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வாக்கியமாயிருக்கிறது, ஏனென்றால் வேதாகமத்திலுள்ள குழப்பமளிப்பது போலத் தோன்றும் வாக்கியங்களை அவர்கள் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. அதை அப்படியே படித்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். உவமைகளைக் கொண்டு சிந்திப்பது எனக்கு உதவியாக இருக்கிறது. சித்திரங்களின் அடிப்படையில் நான் சிந்திக்கும்போது, வேதத்தைப் பற்றிய தெளிவான புரிதலை நான் காண்கிறேன். உண்மையில், இயேசுவே பல உபதேசங்களை உப்பு, ஒளி போன்ற சித்திரங்களின் மூலமாகவும், பல உவமைகள் மூலமாகவும் விளக்கினார்.

ஆவியில் எளிமை” என்பதை “சரீரத்தில் எளிமை” என்பதோடு நாம் ஒப்பிடலாம்; ஏனென்றால், மனிதன் ஆவியாகவும் சரீரமாகவும் இருக்கிறான். சரீரத்தில் தரித்திரமாக இருப்பது என்றால் என்னவென்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு நாடோடி அல்லது பிச்சைக்காரன் சரீரத்தில் ஏழையாக இருக்கிறான். அதாவது, அவனது சரீரத் தேவைகளை கவனித்துக்கொள்ள அவனுக்கு என்ன தேவையோ அவை அவனிடத்தில் இல்லை. தெருக்களில் வசிக்கும் ஓர் ஏழை பிச்சைக்காரன் வீடு வீடாகச் சென்று தனது தேவைகளுக்காகப் பிச்சை எடுப்பான், ஆனால் அன்றைய நாளுக்குத் தேவையானதை மட்டுமே பெற்றுக் கொள்வான். பின்னர் அடுத்த நாளுக்கு இன்னும் கொஞ்சம் வாங்க அதே வீட்டிற்கு அவன் வர வேண்டும். ஆகவே “ஆவியில் எளிமை” என்ற சொற்றொடருக்கு இந்த உதாரணத்தை பொருத்திப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஆவிக்குரிய தேவையை அறிந்திருக்கிற ஒரு நபரை இயேசு இங்கு குறிப்பிடுகிறார் என்பதை நாம் காணமுடியும். அப்படிப்பட்டதொரு பிச்சைக்காரன், ஒவ்வொரு நாளும் தனது சரீரத் தேவையை அறிந்து, உதவிக்காக யாரோ ஒரு தாராள குணமுள்ள மனிதனின் வீட்டிற்குச் செல்கிறான். அந்த மனிதன் அவனிடம், “நேற்று தான் நான் உனக்குக் கொடுத்தேனே?” என்று கேட்டால், “அது நேற்று முடிந்து விட்டது - நேற்று நீங்கள் எனக்குக் கொடுத்த பணம் நேற்றைய தேவைக்கு போதுமானதாக இருந்தது, மீண்டும் நான் தேவையில் இருக்கிறேன். இன்று எனக்கு பணம் இல்லை, நான் தேவையில் இருக்கிறேன்” என்று அவன் சொல்வான்.

ஆவியில் தரித்திரனாயிருக்கிற” ஒருவன், இவ்விதமாக தேவனிடத்தில் வந்து, “ஆண்டவரே, நான் தேவையுள்ளவன்” என்று சொல்லுகிறவனாய் இருக்கிறான். ஒரு பிச்சைக்காரன் தனது சரீரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி கேட்பதைப் போலவே, அவன் ஒவ்வொரு நாளும் தனது ஆவிக்குரிய தேவையை உணர்ந்து தேவனிடம் வந்து, தனது ஆவிக்குரிய தேவையை சந்திக்க உதவி கேட்கிறான்.

நீதிமொழிகள் புத்தகத்தில், இந்த நிலையைப் பற்றி பேசும் ஒரு வசனம் இருக்கிறது. நீதிமொழிகள் 8, ஞானத்தைப் பற்றிய ஒரு அதிகாரம். கிறிஸ்து இங்கே ஞானமாக சித்தரிக்கப்படுகிறார்: “ஞானமாகிய நான்…” என்று 12-ஆம் வசனம் தொடங்குகிறது. ஞானத்தின் மூலமே உலகம் படைக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். அவர் வானங்களை ஸ்தாபிக்கிறபோது வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும், பூமியும் மற்ற யாவும் உண்டாவதற்கு முன்னே அவர் அங்கே இருந்தார் என்று 24-ஆம் வசனம் கூறுகிறது; அப்பொழுது அவர் அங்கே இருந்தார் (வசனம் 27). ஆகையால் ஞானமே நமக்குத் தேவையாகும். “என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று ஞானம் கூறுகிறது. தேவனுடைய வாசலின் நிலைக்கால்களில் காத்திருக்கும் அந்தப் பிச்சைக்காரனை இப்போது நினைத்துப் பாருங்கள். ஒரு பிச்சைக்காரன் தனது அன்றாட தேவைக்காகக் காத்திருப்பதுபோல், நாமும் ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய தரித்திரர்களாக தேவனுக்கு முன்பாக வரவேண்டும்.

நாம் தேவை உள்ளவர்களாக இருந்தால் ஒழிய அப்படி வர மாட்டோம். பணக்காரர்கள் பிறர் வீடுகளில் பிச்சை எடுப்பதில்லை; அதைச் செய்ய அவர்கள் வெட்கப்படுவார்கள். ஒரு பிச்சைக்காரன் தேவையுள்ளவன் என்பதால் வெட்கப்படுவதில்லை. உணவுக்கோ அல்லது அன்றாடத் தேவைகளுக்கோ அவனிடம் பணம் இல்லை, அது அவனுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் தனது ஆவிக்குரிய தேவையை அறிந்த ஒருவன் மட்டுமே ஒவ்வொரு நாளும் தேவனுக்கு முன்பாக வந்து, “ஆண்டவரே, நான் தேவையுள்ளவன், இன்று எனக்கு ஞானம் தாரும்” என்று கேட்பான். “என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் காண்கிறான்” என்று நீதிமொழிகள் 8:35 கூறுகிறது.

ஆவியில் ஏழையாக இருப்பது என்பதன் அர்த்தம் இதுதான்: நமது ஆவிக்குரிய தேவையை தொடர்ந்து அறிந்திருப்பது. தனது ஆவிக்குரிய தேவையை தொடர்ந்தேச்சையாய் அறிந்து, தேவனிடமிருந்து ஞானத்தைத் தேடுகிறவன், பரலோகராஜ்யம் முழுவதையும் சுதந்தரித்துக்கொள்வான். பரலோகராஜ்யத்தை தேவனுடைய ராஜ்யத்தின் ஐசுவரியமாக நீங்கள் கண்டால், “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” என்று எபேசியர் 1:3 கூறுகிறபடி, பரிசுத்த ஆவியின் ஒவ்வொரு ஆசீர்வாதமும் உன்னதங்களிலே கிறிஸ்துவுக்குள் நம்முடையதாயிருக்கிறது. பரலோக ராஜ்யத்தில் உள்ள அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் ஆயிரம் அறைகள் கொண்ட ஒரு பெரிய மாளிகையாக நாம் கருதலாம். அந்த மாளிகையின் ஒவ்வொரு கதவையும் திறக்கும் பிரதான சாவி (master key) தான் “ஆவியின் எளிமை.” ஆவியில் எளிமை உள்ளவன் பாக்கியவான், ஏனென்றால் அவன் பரலோகராஜ்யம் முழுவதையும் சுதந்தரித்துக்கொள்ள முடியும். அதாவது, மாளிகையின் ஒவ்வொரு அறையையும் சுதந்தரித்துக்கொள்ள முடியும். இந்தப் பிரதான சாவியை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், ஒவ்வொரு அறையிலும் உள்ள பொக்கிஷங்களையும் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.