WFTW Body: 

தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களாகிய ஏனோக்கையும் நோவாவையும் குறித்து நாம் பார்ப்போம்.

"அவன் மரித்தான்" என்ற சொற்றொடரை ஆதியாகமம் 5ல் எட்டு முறை வாசிக்கிறோம். ஆனால் அந்த அதிகாரத்தின் மத்தியில், மரித்தே போகாத ஒரு மனிதனாகிய ஏனோக்கைக் குறித்து வாசிக்கிறோம்!! ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், தேவன் அவனை உயிரோடே பரலோகத்துக்கு எடுத்துக் கொண்டார். மரணத்தின் மத்தியில் உயிர்த்தெழுதலின் ஜீவனுக்கு அது ஒரு படமாகும். ஏனோக்கு உயிர்த்தெழுதலின் வல்லமையில் வாழ்ந்து, மரணத்தை மேற்கொண்டு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு மனிதன் - ஆவிக்குரிய மரணத்தின் மத்தியில் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் மரணத்தை மேற்கொண்டு முடிவாகப் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் (raptured) தேவ பக்தியுள்ள சபைக்கு ஒரு படமாக அவன் இருக்கிறான்.

ஏனோக்கு தன்னுடைய வாழ்க்கையின் முதல் 65 ஆண்டுகள் தேவனற்ற மனிதனாக ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் 65 வயதான போது ஒரு மகனைப் பெற்று, தெய்வீக வெளிப்பாட்டின் மூலமாக அவனுக்கு "மெத்தூசலா" என்று பெயரிட்டான். "மெத்தூசலா" என்றால் "அவன் மரிக்கும்போது ஜலப்பிரளயம் வரும்" என்று பொருள்படும். ஏனோக்கு தன்னுடைய மகனைப் பெற்றபோது தேவன் ஒரு வெளிப்பாட்டை அவனுக்குக் கொடுத்தார் என்பதைக் குறிக்கிறது போலத் தெரிகிறது. அந்த மகன் மரிக்கும்போது ஜலப்பிரளயத்தால் உலகம் நியாயந்தீர்க்கப்படும் என்று தேவன் ஏனோக்கிடம் கூறினார். நியாயத்தீர்ப்பின் வெளிப்பாடு முதலில் நோவாவுக்கு வராமல் ஏனோக்குக்கு வந்தபடியால் தன்னுடைய மகனுக்கு அவன் மெத்தூசலா என்று பெயரிட்டான்.

உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கும்போது, அக்குழந்தை எவ்வளவு காலம் வாழும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே ஒவ்வொரு முறையும் மெத்தூசலா வியாதியுற்றபோது, நியாயத்தீர்ப்புக்கான நேரம் நெருங்கிவிட்டதா என்று ஏனோக்கு யோசித்திருப்பார். ஒரு குழந்தைக்கு "அவன் மரிக்கும்போது ஜலப்பிரளயம் வரும்" என்ற பொருள்படும் ஒரு பெயர் இருப்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒவ்வொரு முறையும் நீங்கள் அவனை அழைத்தபோது, உங்களுக்கு நியாயத்தீர்ப்பு நினைவூட்டப்பட்டிருக்கும். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பயம் ஏனோக்கை தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கச் செய்து, இக்காலத்தின் காரியங்களை விட நித்திய காலத்தின் காரியங்கள் அதிக முக்கியமானவை என்பதை உணரச் செய்தது. இதுதான் அடுத்த 300 ஆண்டுகளிலுள்ள ஒவ்வொரு நாளும் ஏனோக்கை தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்க செய்த நெருக்கடி ஆகும்.

உலகம் ஒழிந்துபோகும் என்று வேதாகமம் கூறுகிறது (1 யோவான் 2:17). இதனை நாம் விசுவாசித்தால், இக்காலத்தின் காரியங்களை விட நித்திய காலத்தின் காரியங்கள் அதிக முக்கியமானவை என்பதை ஏனோக்கு உணர்ந்ததுபோலவே நாமும் உணர்ந்து கொள்வோம்.

தேவன் மனிதன்மீது கொண்டுள்ள மிகவும் அதிகமான நீடிய பொறுமை அவர் மெத்தூசலாவை மற்ற மனிதர்களை விட அதிகமான ஆண்டுகள் (அதாவது 969 ஆண்டுகள்) வாழுவதற்கு அனுமதித்த உண்மையில் காணப்படுகிறது. 969 ஆண்டுகளாய் ஜனங்கள் மெத்தூசலாவின் பெயரை எப்பொழுதெல்லாம் கேட்டார்களோ அப்பொழுதெல்லாம் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் செய்தியைக் கேட்டார்கள். ஆனால் அச்செய்தியை ஜனங்கள் நிராகரித்தனர். இந்த நியாயத்தீர்ப்பைக் குறித்துப் பிரசங்கித்தவர் நோவா மாத்திரம் அல்ல, 300 ஆண்டுகள் ஏனோக்கும் அதைப் பிரசங்கித்தார், 669 ஆண்டுகள் தன்னுடைய பெயரின் மூலமாக மெத்தூசலாவும் அதைப் பிரசங்கித்தார்.

நோவாவும் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, நியாயத்தீர்ப்பைக் குறித்து 120 ஆண்டுகள் (மெத்தூசலா உயிரோடிருந்த கடைசி 120 ஆண்டுகள்) பிரசங்கித்தார். தேவன் நோவாவுக்கு வெளிப்படுத்தியதால், ஜலப்பிரளயத்தின் விவரங்களை நோவா தெளிவாக அறிந்திருந்தது போல ஏனோக்கும் மெத்தூசலாவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் மெத்தூசலா மரிக்கும்போது ஜலப்பிரளயத்துடன் தொடர்புடைய ஏதோ ஒருவிதமான நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பதை அவர்கள் (ஏனோக்கும் மெத்தூசலாவும்) அறிந்திருந்தார்கள்.

ஏனோக்கு தன்னுடைய காலத்திலிருந்த அவபக்தியுள்ளவர்கள் எல்லாருக்கும் விரோதமாக நியாயத்தீர்ப்பை முன்னறிவித்தான் என்று யூதா கூறுகிறார் (யூதா 14, 15). ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்த ஒரு தீர்க்கதரிசி. ஆதாம் 622 வயதாயிருந்தபோது ஏனோக்கு பிறந்தான், ஆதாம் 930 வயதில் மரித்தான் (ஆதியாகமம் 5:5-23). ஆகவே ஏனோக்கு ஆதாமை 308 ஆண்டுகளாக அறிந்திருக்க வேண்டும். ஆதாம் தேவனோடே ஏதேனில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாட்களில் காரியங்கள் எப்படியாக இருந்தன என்பதைக் குறித்து ஏனோக்கு அடிக்கடி ஆதாமிடம் கேட்டிருக்கக் கூடும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. தானும் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற பெரியதோர் ஏக்கம் ஏனோக்குக்கு இருந்திருக்க வேண்டும். ஏதேனுக்கு வெளியேயும் கூட தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை நிரூபித்த முதல் மனிதனாக ஏனோக்கு ஆனார். பாவம் உலகத்திற்குள் வந்த பிறகும் கூட, மனிதனால் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்க முடியும்.

நான் என்னுடைய வாழ்க்கையில் அநேக பெரிய பிரசங்கியார்களை சந்தித்திருந்தாலும் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பிரசங்கியார்கள் வெகு சிலரையே சந்தித்திருக்கிறேன். ஆனால் அந்த வெகு சிலரே நானும் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று என்னுடைய இருதயத்தில் ஒரு ஏக்கத்தை என்னுடைய வாலிப நாட்களிலிருந்தே உண்டாக்கியவர்கள்.

நோவா மெத்தூசலாவின் பேரன், அவர் மெத்தூசலாவுடன் 600 ஆண்டுகள் வாழ்ந்தார். ஏனோக்கு எப்படி தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தார் என்று அவர் மெத்தூசலாவிடம் அநேக முறை கேட்டிருக்க வேண்டும். நோவாவின் இருதயத்திற்குள் தானும் தேவனோடே சஞ்சரிக்க வேண்டும் என்ற ஏக்கம் வந்தது. நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்று ஆதியாகமம் 6:9ல் நாம் வாசிக்கிறோம். நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் நோக்கத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார்.

(வேதாகமத்தில்) தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்த முதல் இரண்டு மனிதர்களுக்கும் பாவத்திற்கு எதிரான நியாயத்தீர்ப்பின் சத்தியத்தைத் தான் தேவன் வெளிப்படுத்தினார். தங்களை யாரும் நம்பவில்லை என்றாலும், ஏனோக்கும் நோவாவும் அந்த செய்தியை உண்மையாகப் பிரசங்கித்தார்கள். அப்பொழுதிலிருந்து தேவனுடைய ஒவ்வொரு உண்மையான தீர்க்கதரிசியும், விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் அவர்களின் பாவங்களுக்காகத் தேவன் நியாயந்தீர்ப்பார் என்கிற இதே செய்தியைத் தான் பிரசங்கித்திருக்கிறார்கள்.

ஏனோக்கும் நோவாவும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் இரண்டு பிரசங்கியார்கள், அவர்கள் இருவருமே தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதிலிருந்து ஒவ்வொரு பிரசங்கியாரும் இவ்வாறே இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.