WFTW Body: 

எஸ்றா, நெகேமியா என்னும் இரு தேவ பக்தியான மனுஷரின் செல்வாக்கினால், தேவன் மிகப்பெரிய எழுப்புதலை யூதர்கள் மத்தியிலே கட்டளையிட்டார் என்பதைக் குறித்து நெகேமியாவின் புஸ்தகம் நமக்கு விவரித்துக் காண்பிக்கிறது.

எஸ்றா மூலமாக தேவன் செய்த கிரியை பற்றி நெகேமியா 8-ஆம் அதிகாரத்தில் சொல்லப்படுகிறது. அவன் புருஷர்கள், ஸ்திரீகள் மற்றும் விவரம் தெரிந்த பிள்ளைகள் ஆகிய எல்லாரையும் ஒன்று திரட்டி, அவர்களுக்கு 6 மணி நேர வேத போதனை நடத்தினான். "சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய் செவி கொடுத்தார்கள்" என்று நெகேமியா 8:3-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தேவனைத் துதித்து கூட்டத்தைத் தொடங்கினர் (நெகேமியா 8:6). அதன் பிறகு எஸ்றா வாசிக்கப்பட்ட வேத பகுதியை மிகுந்த சிரமத்தோடு அவர்களுக்கு விளக்கிக் கூறினான் (நெகேமியா 8:8). வெளிப்படையாகச் சொல்லப் போனால், எஸ்றா தேவனுடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு விவரித்துச் சொல்லுவதற்காக ஏற்கனவே மாதக்கணக்கில், வருடக் கணக்கில் அவற்றையெல்லாம் கருத்தூன்றி வாசித்திருந்தான். இந்த நாளுக்கென்று தேவன் அந்தரங்கத்திலே அவனை ஆயத்தப்படுத்தி வைத்து இருந்தார்.

எழுப்புதல் பரவியது; ஜனங்கள் அழுகையோடு தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள் (நெகேமியா 8:9). அதன் பின்பு அவர்கள் தங்களுக்குண்டான எல்லாவற்றையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்படியாக அறிவுறுத்தப்பட்டார்கள். இப்படியெல்லாம் நடந்த தருணத்தில், "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே அவர்களுடைய பெலனாயிருந்தது" (நெகேமியா 8:10). ஜனங்கள் வெளியே சென்று தங்களுக்குச் சொல்லப்பட்ட புத்திமதிகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அடுத்த நாளிலே எஸ்றா தலைவர்களுக்கென்று ஒரு பிரத்யேக வேத போதனையை நடத்தினான் (நெகேமியா 8:13). ஒவ்வொரு வருடத்தின் ஏழாம் மாதத்திலும், "கூடாரப் பண்டிகையைக்" கொண்டாட வேண்டுமென தேவன் கட்டளையிட்டிருந்ததை அறிந்து அதற்கு உடனே கீழ்ப்படிந்தனர். யோசுவாவின் காலத்திலிருந்து, இந்தக் கட்டளையானது 900 வருடங்களாகக் கைக்கொள்ளப்படாமலிருந்தது (நெகேமியா 8:14-17). தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாய் விளங்கின தாவீது கூட, இஸ்ரவேலரை இக் கட்டளைக்குக் கீழ்ப்படியப் பண்ணவில்லை. அடுத்த ஏழு நாட்களுக்கு எஸ்றா ஜனங்களுக்கு வேத போதனை செய்வதைத் தொடர்ந்தான் (நெகேமியா 8:18).

நெகேமியா 9-ஆம் அதிகாரத்திற்கு வரும்போது, அங்கு நெகேமியா மூலமாக தேவன் செய்த காரியங்கள் எல்லாம் எழுதப்பட்டுள்ளன. இஸ்ரவேல் ஜனங்கள் உபவாசித்து, பாவ அறிக்கை செய்து, மறுஜாதியாரையெல்லாம் விட்டுப் பிரிந்து வந்தார்கள் என்பதாக அந்த அதிகாரம் ஆரம்பிக்கிறது (நெகேமியா 9:1,2). அதற்குப் பிறகு அவர்கள் முதல் 3 மணி நேரத்தை வேத போதனையிலும், இன்னொரு 3 மணி நேரத்தைக் கர்த்தரைத் துதிப்பதிலும், பாவ அறிக்கை செய்வதிலும் செலவிட்டனர். இது மற்றொரு எழுப்புதலாகப் பரிணமித்தது (நெகேமியா 9:3). பின்பு லேவியர் எழுந்து நின்று உரத்த சத்தமிட்டு கர்த்தரிடத்தில் கதறினர் (நெகேமியா 9:4). நெகேமியா 9:5 முதல் நெகேமியா 9:37 வரையுள்ள ஜெபம்தான், வேதத்திலுள்ள ஜெபங்களிலேயே நீண்ட ஜெபமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு, ஆபிரகாம் காலந்தொட்டு 40 வருட வனாந்திர வாழ்க்கையிலும், நியாயாதிபதிகள் மற்றும் இராஜாக்கள் காலத்திலும் இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட பின்னடைவைக் குறித்து நினைவு கூர்ந்தனர். மேலும் தேவனால் அனுப்பப்பட்ட நியாயத்தீர்ப்புகள் எல்லாம் நீதியானதும் சரியானதும் என்று அறிக்கையிட்டும் லேவியர் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தனர். அதன் பிறகு அவர்கள் மனந்திரும்பி, ஓர் உடன்படிக்கையை உண்டுபண்ணி அதிலே முதலாவது நெகேமியாவும் பின்பு எல்லாருமாகச் சேர்ந்து முத்திரையிட்டுக் கொடுத்தார்கள் (நெகேமியா 10:1).

தேவ பயம் கொண்ட எஸ்றா, நெகேமியா என்னும் இருவரின் செல்வாக்கின் நிமித்தமே இவை யாவும் நடந்தேறின. அவர்களுடைய கூட்டு ஊழியத்தை உற்று நோக்கினால், அது புதிய உடன்படிக்கை சபையில் இரு மூப்பர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஒப்பாகவே உள்ளது. இன்று நாம் முன்னோக்கிச் செல்லத்தக்கதான எவ்வளவு அற்புதமான முன்னுதாரணமாக இது உள்ளது.