பிலதெல்பியா சபை ஒரு உண்மையுள்ள சபை என்று வெளிப்படுத்தின விசேஷம் 3 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். மூப்பர் உண்மையுள்ளவராக இருந்தபடியால், அந்த சபையும் உண்மையுள்ள சபையாக இருந்தது. “திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்” (வெளி 3:8) என்று தேவன் அவர்களிடம் சொன்னார்.
தேவன் ஓர் வாசலை நமக்காக திறக்கும்போது, அதை ஒருவராலும் பூட்ட முடியாது. “நானே திறவுகோலை உடையவர்” என்றும் “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும் நானே” (வெளி 3:7) என்றும் அவர் சொல்கிறார். எந்தவொரு கதவையும் நாம் போய் தட்டிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. நாம் அவைகளைத் தொடாமலேயே நமது கர்த்தர் நமக்கானதை திறக்கிறார். சில விமானநிலையங்களில் நாம் பார்த்திருக்கிற தானியங்கி கதவுகளைப் போலவே நீங்கள் அந்த கதவுகளின் அருகில் சென்றவுடன் அவைகள் தானாகத் திறந்துவிடும். உங்களுக்காக ஒரு ஊழியத்தின் வாசலை நீங்கள் தேடுகிறீர்களா? அத்தகைய வாசலை நீங்களே திறக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது அத்தகைய வாசலை உங்களுக்குத் திறக்க ஏதாவதொரு செல்வாக்கு மிக்க மனிதனை நீங்கள் தேடுகிறீர்களா? மற்றவர்கள் வைத்திருக்கிற ஊழியத்தை நீங்கள் இச்சிக்கிறீர்களா? அது தீமையானது.
கொஞ்சத்திலே தேவனுக்கு உண்மையாயிருங்கள். அவர் சரியான நேரத்தில் உங்களுக்கு நேர்த்தியான ஊழியத்தின் வாசல்களைத் திறப்பார். அப்பொழுது நீங்கள் அநேகத் தவறான வாசல்கள் அண்டைச் சென்று, உங்கள் நேரத்தையோ உங்கள் வாழ்க்கையையோ வீணாக்க மாட்டீர்கள். கர்த்தரில் நம்பிக்கையாயிருங்கள், அவர் மாத்திரமே உங்களுக்காக வாசல்களைத் திறக்கட்டும் - அவர் உங்களுக்காகத் தீர்மானம் செய்துள்ள இடங்களுக்கு அவர்தாமே உங்களைப் படிப்படியாக வழிநடத்துவார்.
நான் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு ஒருமுறை பயணம் செய்தபோது, கர்த்தர் என்னிடம் சொன்னது என் நினைவிற்கு வருகிறது. “நீ அங்கே செல்கிறாய் என்று உனக்குத் தெரிந்தவர்கள் யாருக்கும் கடிதம் அனுப்பாமல் அங்கே செல்” என்று கர்த்தர் சொன்னார். நான் அங்குச் சென்று எங்குமே எவ்வித ஊழியமும் இல்லாமல் திரும்பி வந்தேன். நான் அவருக்குக் கீழ்ப்படிகிறேனா என்பதைப் பார்க்கும்படி கர்த்தர் என்னைச் சோதித்தார். அடுத்தமுறை நான் அந்த தேசத்திற்குச் சென்றபோது, கர்த்தர் எனக்குத் தெரியாத மக்களிடத்திலேயே அநேக வாசல்களைத் திறந்தார். அந்த இடங்களே நான் போகக் கர்த்தர் விரும்பின இடங்கள். தேவன் தமது சர்வத்தையும் ஆளும் தன்மையின் மூலமாக நேர்த்தியான வாசல்களைத் திறக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். எனக்கென்று ஏதாவதொரு ஊழியத்தை உருவாக்க, நானாகவே முன்பு வாசல்களைத் திறக்க முயன்றிருந்தால், நான் தேவனுடைய சித்தத்தை முழுமையாக தவறவிட்டிருந்திருப்பேன். எனவே எந்த இடத்திலும் உங்களை நீங்களே எப்போதும் முன்னேற்றித் தள்ள வேண்டாம். தேவனுக்குக் காத்திருங்கள், அவர் உங்களுக்காக நேர்த்தியான வாசல்களைத் திறக்கட்டும். பிலதெல்பியா சபையில் இருந்தவர்கள் போல உங்களுக்குக் கொஞ்சம் பெலனே இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் அவர் நாமத்தை மறுதலியாமல், அவர் வசனத்தைக் கைக்கொண்டால், அவர் உங்கள்மேல் அன்பாயிருக்கிறதை உங்கள் சத்துருக்களும் அறிந்துகொள்ளும்படி செய்வார் (வெளி 3:8, 9).
பிறகு கர்த்தர், “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு (வெளி 3:11)” என்று இந்த சபைக்குச் சொன்னார். கர்த்தர் நமக்கு ஒரு ஊழியத்தைக் கொடுத்தால், நாம் உண்மையுள்ளவர்களாக இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அவர் அந்த ஊழியத்தை வேறு ஒருவரிடம் கொடுப்பார். பின்னர் அந்த நபர் உங்களுக்குரிய கிரீடத்தைப் பெற்றுக்கொள்வார். உங்களுடைய கிரீடத்தையும் தன்னுடைய கிரீடத்தையும் அவர் பெற்றுக்கொள்வார். எனவே உண்மையுள்ளவர்களாக இருங்கள். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை தம்முடைய சபையிலே கர்த்தர் தூணாக்குவார் (வெளி 3:12). தூண்களே ஒரு கட்டிடத்தைத் தாங்குகின்றன. சிம்சோன் இரண்டு தூண்களையும் கீழே தள்ளினபோது, முழு கட்டிடமும் தகர்ந்துபோனது. சில சமயங்களில் முழு சபையையும் இரண்டு மூப்பர்கள் மட்டுமே தாங்குகிறார்கள். அவர்கள் மரிக்கும்போது, சபையும் மரித்துவிடுகிறது. தேவன் தம்முடைய சபைகளில் அநேகத் தூண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்கள் அந்தரங்க வாழ்க்கையிலும், உங்கள் எண்ணங்களிலும் பாவத்தை ஜெயங்கொள்ள நாடுவீர்களானால், நீங்கள் ஒரு தூணாக இருக்க முடியும்.