WFTW Body: 

நமது CFC சபைகளில், நீங்கள் மரிக்கும்போது எப்படிப் பரலோகத்திற்குப் போவது என்பதைக் குறித்து நாம் பிரசங்கிக்கிறதில்லை. சகல ஜாதிகளிடத்திலும் போய் சீஷராக்கும்படியாகவும் — தாம் கட்டளையிட்ட யாவையும் அவர்களுக்கு உபதேசிக்கும்படியாகவும் — இயேசு நமக்குச் சொன்னாரே தவிர, நரகத்திற்குத் தப்பி எப்படிப் பரலோகத்திற்குப் போவது என்பதைக் குறித்து அவர் சொல்லவில்லை!! ஆனால், துக்கமான காரியம் என்னவென்றால், பெரும்பாலும் இந்நாட்களில் பிரசங்கிக்கப்படும் சுவிசேஷமானது, நீங்கள் மரிக்கும்போது எப்படிப் பரலோகத்திற்குப் போவது என்பதையே முக்கியமாய் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்கிறதில்லை; ஏனெனில் ஜனங்களைப் பரலோகத்திற்குக் கொண்டுபோவதில் எனக்கு விருப்பமில்லை. அது தேவனுடைய காரியம். இயேசு கிறிஸ்துவுக்காக இந்தப் பூமியில் சீஷரை உருவாக்கவே நான் நாடுகிறேன்; மேலும், இயேசு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசிக்கவே நான் நாடுகிறேன். மத்தேயு 28:18-20-ல் ஆண்டவர் நமக்கு மிகவும் தெளிவாய்க் கொடுத்த கட்டளை இது தான். கடந்த 50 வருடங்களாக, உலகத்தின் பல பாகங்களிலுள்ள நமது CFC சபைகளில் இதையேதான் நாம் செய்யப் பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் பூமியில் இயேசு கிறிஸ்துவுக்குச் சீஷனாயிருப்பது எப்படி, அவரை நாள்தோறும் பின்பற்றுவது எப்படி என்பதைக் குறித்ததே நான் பிரசங்கிக்கும் சுவிசேஷமாகும். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது என்று இயேசு கூறினார் (மத்தேயு 7:14). நம்முடைய பாவங்களைக் குறித்து மனந்திரும்பி, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிப்பதன் மூலமாய், இடுக்கமான வாசலுக்குள் நாம் பிரவேசிக்க முடியும். பின்பு, நாள்தோறும் நமது சிலுவையை எடுத்துக்கொண்டு, சுயத்திற்கு மரித்து, கிறிஸ்துவை நமது ஜீவியத்தில் முதன்மைப்படுத்தி, அவரைப் பின்பற்றுகிறதன் மூலமாய், அந்த நெருக்கமான வழியில் நடக்கும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த ஜீவ வழியையும் சீஷத்துவத்தையுமே இந்த வசனத்தில் இயேசு உபதேசித்தார். நமது சபைகள் எல்லாவற்றிலும் நாம் உபதேசிக்கிற நித்திய ஜீவ வழியும் இதுவே.

சீஷத்துவத்தைக் குறித்து, "ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" என்று இயேசு லூக்கா 14:26-ல் கூறினார். உங்களுக்கு அன்பானவர்களை வெறுக்கவேண்டும் என்பதைக் குறித்து அந்த வசனத்தில் இயேசு கூறியபடி யாராவது பிரசங்கிப்பதை நீங்கள் எத்தனை தரம் கேட்டிருக்கிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவுக்குச் சீஷனாயிருப்பதற்கு இதுவே முதலாவது நிபந்தனை. மேலும், மனந்திரும்பினவர்களை அல்ல, எல்லா இடங்களிலும் சீஷரையே உருவாக்கும்படி இயேசு நமக்குக் கட்டளையிட்டார். ஆகையால், நாம் சீஷரை உருவாக்க விரும்பினால், வேறெதையும் அவர்களுக்கு உபதேசிக்குமுன்பு, சீஷத்துவத்தின் இந்த பிரதான நிபந்தனையையே நாம் முதலாவது அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

ஒரு பிள்ளை பள்ளிக்கூடத்தில் சேரும்போது, அவனுக்கு முதலாவது கற்பிக்கப்படுவது பௌதிகமோ இரசாயனமோ அல்ல. இல்லை. முதலாவது அவனுக்கு ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ எழுத்துக்கள் தான் கற்பிப்பார்கள். அது போலவே, நமது சபையில் சேருகிறவர்களுக்கு எல்லாவற்றிற்கும் முன்னதாக, ‘இயேசுவை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கவேண்டும்’ என்ற சீஷத்துவத்தின் ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ எழுத்துக்களையே கற்பிக்கவேண்டும். அந்த நிபந்தனையை நிறைவேற்ற மனதில்லாதவர்களிடத்தில், அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராயிருக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே தெளிவாய் நாம் சொல்லவேண்டும். இரண்டாந்தர சீஷர் என்று ஒரு வகுப்பே இல்லை. ஒரே ஒரு வகுப்பு சீஷர் மாத்திரமே உண்டு: “தன் தகப்பனையும் தாயையும் சகோதரனையும் சகோதரியையும் மனைவியையும் பிள்ளைகளையும், தன் ஜீவனையும் வெறுக்கிற” அவர்களே (லூக்கா 14:26) அந்த சீஷர்கள்.

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்றும், “கிறிஸ்து சபையின்மேல் அன்புகூர்ந்ததுபோல உங்கள் மனைவியிடத்தில் அன்புகூருங்கள்” என்றும், நமது பிள்ளைகளிடத்திலும் சகோதர சகோதரிகளிடத்திலும் அன்புகூரவேண்டும் என்றும் வேதத்தில் நாம் காணும் மற்றக் கட்டளைகளோடு, அவர்களை வெறுக்க வேண்டும் என்று கூறும் இயேசுவின் இந்தக் கட்டளையை நாம் எப்படி இசைவிக்கக்கூடும்?

இயேசு தமது செய்திகளில் ஒரு காரியத்தைத் தெளிவாக்கும்படி அநேகமுறை உதாரண-விளக்கங்களை (illustrations) உபயோகித்தார். ஆகையால், என் குடும்பத்தாரிடத்தில் அன்புகூரவேண்டும், வெறுக்கவேண்டும் என்று வெளித்தோற்றத்தில் ஒன்றுக்கொன்று விரோதமாய்க் காணப்படும் இந்தக் கட்டளைகளைப் புரிந்துகொள்ளும்படி, ஓர் உதாரண-விளக்கத்தைக் கண்டுபிடிக்க நான் நாடினேன்! இதை எனக்குத் தெளிவாக்கிய உதாரண-விளக்கம் இதுதான்: என் தகப்பன், தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரிடத்தில் நான் வைத்திருக்கும் அன்பை, நட்சத்திரங்களின் வெளிச்சத்திற்கு நான் ஒப்பிடுகிறேன்; அது பிரகாசமாயும் தெளிவாயும், அவைகளில் இருள் சிறிதும் இல்லாமலும் இருக்கிறது; நமது குடும்பத்தாரிடத்தில் நாம் வைத்திருக்கவேண்டிய அன்பின் சாயலே இது. ஆனால் காலையில் சூரியன் உதிக்கும்போது, நட்சத்திரங்கள் காணாமற்போகின்றன. அந்த நட்சத்திரங்கள் இன்னும் அங்கே தான் இருக்கின்றன, ஆனால் நம்மால் அவைகளைக் காணமுடியாது. அதுபோலவே, கிறிஸ்துவின்மேல் நான் வைத்திருக்கும் அன்பு சூரியனின் வெளிச்சத்தைப்போல் இருக்கவேண்டும்; அந்த வெளிச்சத்தில், என் குடும்பத்தாரிடத்தில் நான் வைத்திருக்கும் அன்பு மங்கி அற்பமாய்ப் போய்விடுகிறது. என் குடும்பத்தாரிடத்திலுள்ள அன்பு இன்னும் அங்கே இருக்கத்தான் செய்கிறது (காலையில் நட்சத்திரங்கள் இன்னும் இருப்பதுபோல). ஆனால் கிறிஸ்துவின்மேலுள்ள என் அன்பு மிகவும் பெரிதாயிருப்பதால், இப்போது கிறிஸ்துவின்மேலுள்ள என் அன்பின் மூலமாய் மாத்திரமே நான் மற்ற எல்லோரிடத்திலும் அன்புகூருகிறேன். அதாவது, கிறிஸ்துவின்மேலுள்ள என் அன்பு மிகவும் பெரிதாயிருப்பதால், என் மனைவியையாவது, என் பெற்றோரையாவது, எனக்கு நெருக்கமான யாரையாவது எனக்கும் கிறிஸ்துவுக்கும் நடுவே ஒருபோதும் வரவிடமாட்டேன். இதுமுதல் மற்ற யாவரிடத்திலும் கிறிஸ்துவின்மேலுள்ள என் உன்னதமான அன்பின் மூலமாய் மாத்திரமே நான் அன்புகூருவேன்.

நான் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு கூறினார். அவரால் மாத்திரமே அதைக் கட்டமுடியும். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாய் மாத்திரமே இருக்கிறோம். ஒருவர் நாவைப்போலவும், மற்றொருவர் கையைப்போலவும், வேறொருவர் காலைப்போலவும் இருக்கிறோம். அவ்வளவாய்ப் பிரபலமாயிராத சில விசுவாசிகள், சரீரத்தின் மறைவான உறுப்புகளைப்போல் இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவே தமது சரீரத்தைக் கட்டுகிற தலையாயிருக்கிறார். அவருடைய சரீரத்தின் அவயவங்களாய் அவரால் ஆளப்படவும், அடக்கியாளப்படவும், உபயோகிக்கப்படவும் நம்மை நாமே அவருக்கு ஒப்புக்கொடுக்க மாத்திரமே நம்மால் கூடும். கைகளும் கால்களும் தாமாய் ஒன்றையும் செய்யாது. என்ன செய்யவேண்டும் என்று தலையே கைக்குச் சொல்லுகிறது; எங்கே போகவேண்டும் என்று கால்களுக்குச் சொல்லுகிறது. அப்படியே நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். அப்படித்தான் கிறிஸ்துவின் சரீரம் கிரியை செய்கிறது, கட்டப்படுகிறது. இதையே நாம் வலியுறுத்த நாடியிருக்கிறோம்.

ஆனால் தேவன் ஒரு நபரைக் கொஞ்சம் உபயோகிக்கத் தொடங்கி, ஒரு இடத்தில் கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுகிற அற்புதத்தை அவர் காணத்தொடங்கும்போது, ஆவிக்குரிய பெருமையே பெரிய ஆபத்தாயிருக்கிறது. தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது, பெருமை மூலையில் பதுங்கிக்கொண்டிருக்கிறது. அந்த ஸ்தல சபையைக் கட்டியவர்கள் நாம்தான் என்றாவது, அந்த ஜனங்களைக் கிறிஸ்துவினிடத்தில் கொண்டுவந்தவர்கள் நாம்தான் என்றாவது நாம் நினைக்கத் தொடங்க முடியும். தேவனுடைய ஓர் ஊழியக்காரனாவது ஒரு சபையாவது பெருமையடையும்போது, தேவன் உடனே அந்த மனுஷனையும் அந்த சபையையும் எதிர்க்கத் தொடங்குகிறார்.

இந்தக் கடைசி நாட்களில் நமது ஜீவியத்தில் தேவனை மகிமைப்படுத்தவும், அவருடைய சபையைக் கட்டவும், நாம் எல்லாரும் தேவனுக்குப் பயந்து, அவருடைய ஆவியின் வல்லமையை நாள்தோறும் தேடுவோமாக.

ஆமென்.