“சூரியன் அஸ்தமித்தது” என்று ஆதியாகமம் 28:11 -ல் எழுதப்பட்டுள்ளது. அது ஒரு புவியியல் உண்மையை மட்டுமே குறிப்பதாக இருந்தாலும், ஆவிக்குரிய ரீதியிலும் யாக்கோபின் வாழ்க்கையில் மெய்யாகவே சூரியன் அஸ்தமித்தது. அவன் பறிக்கிறவனாகவும் (Grab) ஏமாற்றுகிறவனாகவும் (Cheat) இருந்து, உலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருந்தான். இருப்பினும் தேவன் தம்முடைய இரக்கத்தினால் யாக்கோபை சந்தித்து, அவனுடைய வாழ்க்கைக்கு மேலான நோக்கம் வைத்திருப்பதாக அவனிடத்தில் தேவன் சொன்னார். “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவன், நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உனக்குள் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 28:13,14) என்று தேவன் சொன்னார். இது “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்” என்று அழைக்கப்படுகிறது (கலாத்தியர் 3:14). தேவன் ஆபிரகாமை அழைத்தபோது “நான் உன்னை ஆசீர்வதிப்பேன், பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" (ஆதியாகமம் 12:2,3) என்று ஆபிரகாமிடம் தேவன் சொன்னார். ஆபிரகாமுக்கு சொன்னதைக் கர்த்தர் மறுபடியும் யாக்கோபுக்கும் சொன்னார். நாம் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருக்கும்போது இந்த ஆசீர்வாதம் நம்முடையதாகும் என்று கலாத்தியர் 3:14 -ல் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியானால் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருப்பதின் நோக்கம்தான் என்ன? அது நிச்சயமாக நாம் அந்நியபாஷையில் பேசுவதற்கு அல்ல! கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் சிலருக்கு கொடுக்கும் வரங்களில் ஒன்றுதான் அந்நியபாஷையாகும். துரதிஷ்டவசமாக அநேக கிறிஸ்தவர்கள் இதை மிகவும் பெரிதுபடுத்தி இருக்கிறார்கள். ஆனால் அது முக்கியமான நோக்கம் அல்ல. சரீர சுகமும் கூட முக்கியமான நோக்கம் அல்ல. தன்னுடைய மாம்சத்தில் கொடுக்கப்பட்டிருந்த முள்ளிலிருந்து பவுல் குணமடையவேயில்லை. தேவன் நம்மை ஆசீர்வதித்து, பூமியிலே நாம் சந்திக்கிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் நம்மை ஆசீர்வாதமாக மாற்றுவதே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருப்பதின் பிரதானமான நோக்கமாகும் (கலாத்தியர் 3:14). தேவன் நம்மைப் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்போது, எல்லா ஜனங்களுக்கும் நாம் ஒரு ஆசீர்வாதமாக இருப்போம்.
நம்மைச் சந்திக்கிற ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்திலாவது ஆசீர்வாதம் பெறாமல் போக மாட்டார்கள்! இது அதிகமான பரிமளதைலத்தை (Perfume) தங்கள்மேல் பூசிக்கொள்கிற ஸ்திரீகளுக்கு ஒப்பாக இருக்கிறது. நீங்கள் அவர்களுக்கு சில அடி தூரம் இருக்கும்போதே அவர்களுடைய பரிமளதைலத்தின் வாசனையை உணரமுடியும்! அவர்கள் எங்குச் சென்றாலும், ஜனங்கள் அவர்களுடைய பரிமளதைலத்தின் வாசனையை உணரமுடியும். நமக்கும் அப்படியே இருக்கும். ஒரு வீட்டிற்கு ஐந்து நிமிடம் செல்கிறோமோ ஐந்து நாட்கள் செல்கிறோமோ, கண்டிப்பாக அந்தக் குடும்பத்திற்கு நாம் ஆசீர்வாதமாக இருப்போம். அதுவே “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்” - எல்லா இடங்களிலும் தாகமாயிருக்கும் ஜனங்களுக்கு நம்முடைய உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஆசீர்வாதமாக ஓடும்.
ஏசா வருகிறான் என்று யாக்கோபு கேள்விப்பட்டபோது அவனிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று தந்திரமாக திட்டம் தீட்டினான் என்பதை ஆதியாகமம் 32 -ம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். தான் விரும்பாத மூன்று மனைவிகளையும் முன்பாக வைத்தான். பின்பு ராகேலையும் தன்னையும் பின்பாக வைத்தான். ஒருவேளை மற்ற அனைவரும் கொலை செய்யப்பட்டாலும், தானும் ராகேலும் தப்பித்துக்கொள்ளலாம் என்றெண்ணி அப்படிச் செய்தான்! யாக்கோபு எப்போதும் இருந்தது போலவே, இப்போதும் சுயநல மனுஷனாகவே இருந்தான். இப்படிப்பட்ட சுயநலமான மனுஷனைத் தேவன் தெரிந்தெடுத்து அவனை இஸ்ரவேலாக மறுரூபப்படுத்தியதைப் பார்ப்பது நமக்குப் பெரிய உற்சாகத்தைத் தருகிறது.
அதன்பிறகு தேவன் எப்படி யாக்கோபை சந்தித்து, அவனோடு போராடி, அவன் தொடைச் சந்தைச் சுளுக்க செய்தார் என்று நாம் வாசிக்கிறோம். அவர் விரும்புகிற இடத்திற்கு நம்மைக் கொண்டுவருவதற்கு தேவன் மிகவும் தீவிரமாக காரியங்களைச் செய்கிறார். தேவன் அவனை உடைத்து, "இந்த நேரத்திலிருந்து நீ தேவனுடைய இளவரசனாகப் (இஸ்ரேல்) போகிறாய்" (ஆதியாகமம் 32:28) என்று சொன்னார். தேவனால் அவனை இஸ்ரவேல் என்று எப்பொழுது அழைக்க முடிந்தது? 60 அல்லது 70 ஆண்டுகளுக்குப் பிறகு அவனோடு போராடி இறுதியாக அவன் தொடை சந்தைச் சுளுக்க செய்து முற்றிலுமாக அவனை உடைத்த பிறகே தேவனால் அவனை இஸ்ரவேல் என்று அழைக்க முடிந்தது. பிறகு தேவன், "நான் போகட்டும்" என்று சொன்னார். அதற்கு யாக்கோபு "நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்" என்று கடைசியாக சொன்னான். பணத்தையும், சேஷ்டபுத்திரபாகத்தையும், ஆஸ்திகளையும், ஸ்திரீகளையும், ஆடுகளையும் பறித்துக்கொண்டு (Grab) அவனுடைய வாழ்நாள் முழுவதையும் செலவழித்த இந்த மனிதன், இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு தேவனை இறுகப் பற்றிக்கொள்கிறான். "தேவனே நான் பணத்திற்காகவும் ஸ்திரீகளுக்காகவும் ஆஸ்திகளுக்காகவும் மற்றும் அநேக பூமிக்குரிய பொருட்களுக்காகவும் வாழ்ந்தேன். ஆனால் இப்பொழுதோ நீர் மாத்திரம் எனக்கு வேண்டும்" என்று யாக்கோபு சொல்வதுபோல் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் அந்த நாள் வரத் தேவன் காத்திருக்கிறார். பிறகு அவர் யாக்கோபுக்கு சொன்னதையே நமக்கும் சொல்வார். “இனி நீ பறித்துக்கொள்கிறவன் அல்லது வஞ்சகன் (யாக்கோபு) என்று அழைக்கப்படாமல், தேவனுடைய இளவரசன் (இஸ்ரவேல்) என்று அழைக்கப்படுவாய்; ஏனென்றால் நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே" என்று நம்மிடம் சொல்வார்.
யாக்கோபு எப்பொழுது ஜெயம் கொள்ளுகிறவனாக மாறினான்? அவன் தொடைச்சந்து சுளுக்கிய பிறகுதானே! அவருடைய வல்லமையினாலே நம்மைத் தரிப்பதற்கு முன்பாக தேவன் நம்மை உடைக்க வேண்டும் என்ற இந்த மிகப்பெரிய சத்தியத்தை வேதவாக்கியத்தின் ஆரம்பத்திலேயே நாம் பார்க்கிறோம். தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொள்கிற உடைக்கப்பட்ட மனிதனே தேவனுடைய அதிபதியாகிறான். - பெரியவனும் வல்லவனுமான ‘மிஸ்டர்.யுனிவேர்ஸ் (Mr.Universe)' அல்ல! அன்பான சகோதர சகோதரிகளே, நீங்கள் எவ்வாறாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அவ்வாறாக உங்களை உருவாக்குவதற்கு முன்பாக அவர் உங்களை உடைக்க வேண்டும். அதன்பிறகு "சூரியன் உதயமாயிற்று" என்ற இந்த அருமையான வார்த்தைகளை ஆதியாகமம் 32:31 -ல் நாம் வாசிக்கிறோம். மறுபடியும் ஒரு புவியியல் உண்மை என்றாலும், ஆவிக்குரிய ரீதியிலும் யாக்கோபின் வாழ்க்கையிலே இது மெய்யாகவே இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அவனுடைய வாழ்க்கையில் சூரியன் அஸ்தமித்தது. இப்பொழுதோ சூரியன் உதயமாயிற்று.