வேதத்திலுள்ள சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகம் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முக்கியமான புத்தகமாகும். எனது கிறிஸ்தவ வாழ்க்கையை நான் தொடங்கியபோது, முதலாவதாக இந்தப் புத்தகத்தைப் படிக்கும்படி தேவன் என்னை வழிநடத்தியதற்காக அவருக்கு நான் ஆழ்ந்த நன்றியுடையவனாய் இருக்கிறேன். கிறிஸ்துவோடு உள்ள ஒரு தனிப்பட்ட, அன்புள்ள, நேசபக்தியுடைய உறவே, தேவனுக்கான அனைத்து உண்மையான ஊழியங்களும் ஊற்றெடுத்துப் பாயும் மூலமாகும்—அது சுவிசேஷப் பணி, சபையை ஸ்தாபித்தல், வேதத்தை போதித்தல், சமூக சேவை அல்லது எதுவாக இருந்தாலும் சரி. நாம் முதலாவதாக “மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையிலான பாட்டைக்” கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நம் ஆண்டவர் நமக்குப் பாடுவதும், நாம் அவருக்கு மறுமொழியாய்ப் பாடுவதுமான பாட்டு.
உன்னதப்பாட்டு 1:1-இல் நாம் முதலாவதாகக் காண்கிற காரியம் என்னவெனில், இது சாலொமோனின் உன்னதப்பாட்டு—அதாவது மணவாளனின் பாட்டு. பிரதானமாக இது மணவாளனுடைய பாட்டாயிருக்கிறது, மணவாட்டியுடையதல்ல. இதன் பொருள் என்னவென்றால், பிரதானமாக இது நம் ஆண்டவர் நமக்குப் பாடும் பாட்டாக இருக்கிறது; நாம் அவருக்குப் பாடும் பாட்டு அல்ல. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (1யோவான் 4:19). நாம் அவரை முந்தி நேசிக்கவில்லை; அவரே நம்மிடத்தில் முந்தி அன்புகூர்ந்தார். அவரே முதலாவதாக இந்தப் பாட்டை நமக்குப் பாடியதால்தான், இப்போது நம்மால் அவருக்கு ஒரு பாட்டைப் பாட முடிகிறது.
உன்னதப்பாட்டு 4:8-இல், மணவாளன் மணவாட்டியை நோக்கி, “லீபனோனிலிருந்து என்னோடே வா. என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்" என்று கூறுவதை நாம் கேட்கிறோம். இது 'உன்னதங்களில்' (heavenlies) வாழ்வதற்கான ஓர் அழைப்பாகும். தேவன் இவ்வாறு கூறுகிறார்: “காரியங்களை ஒரு தாழ்வான, பூமிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்காதே. என்னோடு உன்னதங்களுக்கு வா; அங்கிருந்து எல்லாவற்றையும் பார். அங்கிருந்து நீ பூமியின் காரியங்களைப் பார்க்கும்போது, அவை சிறியவையாகவும், மங்கலானவையாகவும், மதிப்பற்றவையாகவும் தோன்றும்.” தேவன் நம்மை ஓர் உன்னதமான நிலைக்கு உயர்த்த விரும்புகிறார். உண்மைதான், அங்கே சிங்கங்கள் இருக்கின்றன—அதாவது பிசாசுகள், தீயத் துரைத்தனங்கள் மற்றும் அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் அங்கே நாம் தேவனோடு இருப்போம்; அவரோடு இணைந்து அந்தத் தீய சக்திகள் அனைத்தையும் நாம் மேற்கொள்வோம்.
உன்னதப்பாட்டு 4:12-இல், மணவாளன் மணவாட்டியை “அடைக்கப்பட்ட தோட்டம்” என்று அழைக்கிறார்—அவள் ஒரு பிரத்தியேகமான தோட்டம்; மணவாளனுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தோட்டம். அவள் வேறு யாருக்கும் சொந்தமானவள் அல்ல; அவள் முழுமையாகத் தன் ஆண்டவருக்கே சொந்தமானவள். தேவனோடு நீங்கள் கொண்டிருக்கும் உறவும் அப்படித்தான் இருக்கிறதா? “நீ என்னுடைய தனிப்பட்ட தோட்டம்; பிரத்தியேகமாய் முற்றிலும் எனக்கே சொந்தம்,” என்று தேவன் உங்களைப் பார்த்துச் சொல்ல முடியுமா? நமக்குத் தேவையானதை விட அதிகமான பணத்தைச் சம்பாதிப்பதற்கும், இவ்வுலகின் அதிகாரத்தையும் புகழையும் அடைவதற்கும், நமக்கென ஒரு பெயர் பிரஸ்தாபத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்புக்கள் என, இவ்வுலகில் நம்மை ஈர்க்கக்கூடிய பல காரியங்கள் உண்டு. இத்தகைய சோதனைகளை, ஒரு மணப்பெண்ணைக் கவர்ந்திழுக்க முயலும் பிற ஆண்களுக்கு ஒப்பிடலாம். ஆனால், இங்கே நாம் காணும் மணப்பெண் அவற்றால் ஈர்க்கப்படுவதில்லை; அவள் தன் நேசருக்கு மட்டுமே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறாள். மிகச் சில விசுவாசிகள் மட்டுமே கிறிஸ்துவோடு இத்தகைய நெருக்கமான உறவில் வாழ்கிறார்கள்; எனவேதான் கிறிஸ்துவோடு நெருக்கமான உறவில் வாழாத பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அவரை ஆழமாக அறிந்துகொள்வதில்லை, அவருடைய வார்த்தையையும் புரிந்துகொள்வதில்லை. வேதாகமத்தைப் புரிந்துகொள்வதற்கான இரகசியம் என்னவென்றால், முதலாவதாக தேவனோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதே ஆகும். ஏனெனில், தம்முடைய வார்த்தையின் பொருள் என்ன என்பதை நமக்கு விளக்குவதற்கு அவரைவிடச் சிறந்த நபர் வேறு யாராக இருக்க முடியும்? ஆரம்பகால சீஷர்கள் நடந்தது போலவே நீங்களும் அவரோடு நடந்து செல்லுங்கள்; அவர் உங்களோடு பேசுவதைக் கேட்கத் தீவிரமாய் வாஞ்சியுங்கள். அப்படிச் செய்யும்போது, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது போலவே உங்கள் கண்களும் திறக்கப்படும்; அவர்களுடைய இருதயங்கள் பற்றி எரிந்தது போலவே உங்களுடைய இருதயங்களும் பற்றி எரியும்.
உன்னதப்பாட்டு 5:2-இல், மணவாளன் நள்ளிரவில் வந்து, "எனக்கு கதவைத் திற, என் பிரியமே!" என்று அழைத்தபோது, மணவாட்டி ஆடையணிந்து கதவைத் திறக்கச் சோம்பல்பட்டாள் (உன்னதப்பாட்டு 5:3). (தான் கழுவிச் சுத்தப்படுத்தியிருந்த) தன் பாதங்கள் மீண்டும் அழுக்காகிவிடுமோ என்று அவள் கவலைப்பட்டாள். அவரே கதவின் தாழ்ப்பாளைத் திறக்க முயன்றார் (உன்னதப்பாட்டு 5:4). பின்னர் மணவாட்டி தன் மனதை மாற்றிக்கொண்டு கதவைத் திறந்தாள்; ஆனால், தன் நேசரோ அங்கிருந்து சென்றுவிட்டதைக் கண்டாள். அவர் அழைத்தபோது அவள் உடனடியாகப் பதிலளிக்காததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இது நமக்கும் நிகழக்கூடும். ஆண்டவர் நம்மிடம், “இப்போது நீ செய்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிடு. அந்தப் புத்தகத்தைப் படிப்பதை நிறுத்து. அந்த உரையாடலை நிறுத்து. என்னோடு தனித்திருந்து என்னிடம் பேசு. நாம் இருவரும் சேர்ந்து நடந்து செல்லலாம்,” என்று கூறலாம். அதற்கு நாம், “ஆண்டவரே, சற்றுப் பொறுத்திரும். நான் செய்யவேண்டிய ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அது 15 நிமிடங்களில் முடிந்துவிடும். அதன் பிறகு நான் வருகிறேன்,” என்று பதிலளிக்கலாம். 15 நிமிடங்கள் கழித்து, அந்த முக்கியமான(?) வேலையை நாம் முடித்த பிறகு, “ஆண்டவரே, இப்போது நான் தயாராக இருக்கிறேன்,” என்று கூறுகிறோம். ஆனால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டதையே நாம் காண்கிறோம். அவரை நம்மால் கண்டடைய முடிவதில்லை. நீங்கள் தேவனுக்கு செயல்திறமிக்க ஓர் ஊழியக்காரனாகத் திகழ விரும்புகிறீர்களா? தேவன் உங்களை அழைக்கும்போது, நீங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் உடனடியாக விட்டுவிட்டு, அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்கும் இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் ஒருபோதும் வருந்தமாட்டீர்கள்.
உன்னதப்பாட்டு 5:3-இல், மணவாளன் மணவாட்டியிடம், “நான் இரவில் வெளியே இருந்தேன்; என் உடல் பனியால் நனைந்திருக்கிறது,” என்று கூறுகிறார். இயேசு இழந்ததைத் தேடி இரட்சிப்பதற்காகவே பூமிக்கு வந்தார் என்பதால், அவர் சிலுவையின் பாதையில் (அதாவது, சுயத்திற்கு மரிப்பதின் பாதையில்) நடந்தார்; இவ்வுலகின் இருண்ட இரவில், வழிதவறிய ஆடுகளைத் தேடிச் சென்றபோது அவர் மிகுந்த துன்பங்களைச் சகித்துக்கொண்டார். இப்போது, அதே பாதையில் நடக்கும்படி அவர் தம் மணவாட்டியை அழைக்கிறார். ஆனால், மணவாட்டியோ அதற்கு விருப்பம் உடையவளாயில்லை.
உன்னதப்பாட்டு 6:4-10-இல், மணவாளன் தன் மணவாட்டியைப் புகழ்ந்து பாடுகிறார். ஸ்திரீகளெல்லாருக்குள்ளும், தன் மணவாட்டியைப் போன்றவள் வேறு யாருமில்லை என்றும், அவளே தன் பரிபூரணமானவள் என்றும் அவர் கூறுகிறார். “மற்றெல்லாரையும் விட அவளையே நான் தெரிந்துகொள்கிறேன்,” என்கிறார். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை இதே கண்ணோட்டத்தில் தான் நோக்க வேண்டும்: இவ்வுலகில் கவர்ச்சியான பெண்கள் பலர் இருக்கிறார்கள்; ஆனால், என் மனைவியைப் போன்றவள் வேறு யாருமில்லை. என் பார்வையில் அவளே முதன்மையானவள் (Number One) என்றே சொல்லவேண்டும். ஆண்டவர் இதைத்தான் நம்மைப் பற்றியும் சொல்கிறார். உலகிலுள்ள அனைத்து புத்திசாலிகள், செல்வந்தர்கள் மற்றும் மேன்மக்களுக்கும் மேலாக, அவர் நம்மைப் பாராட்டி மேன்மையாகக் கருதுகிறார்.
உன்னதப்பாட்டு 7:1-9-இல், மணவாளன் தன் மணவாட்டியைப் பார்த்து வியக்கிறார். நம்மிடம் எத்தனையோ பலவீனங்கள் இருந்தபோதிலும், நம் ஆண்டவர் உண்மையில் நம்மை வியந்து போற்றுகிறார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் தங்களைப் பார்த்து வியக்கிறார் என்பதை நம்ப இயலாத காரணத்தினாலேயே, அநேக விசுவாசிகள் தங்களைத் தாங்களே குற்ற உணர்வுக்குள்ளாக்கி, எப்போதும் ஒருவித மனபாரத்துடனே வாழ்கிறார்கள். மணவாளன் தன் மனவாட்டியின் உதடுகளைப் பார்த்து வியந்து பேசும்போது, அவள் உடனே அதற்குப் பதிலளிக்கிறாள்: “நீர் என் உதடுகளைப் பற்றிக் கூறியது உண்மைதான்; ஆனால், அதைவிடவும் அது உம்முடைய உதடுகளுக்கே மிகப்பொருத்தமாக இருக்கும்!” (உன்னதப்பாட்டு 7:9). இது அவ்விருவருக்கும் இடையிலான மிக உயர்ந்த அளவிலான நெருக்கத்தைக் குறிக்கிறது. இத்தகைய நெருக்கமான உறவையே நாமும் நம் ஆண்டவரோடு கொண்டிருக்க வேண்டும்.
உன்னதப்பாட்டு 7:10-இல், “நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது” என்று மணவாட்டி கூறுகிறாள். இங்கே மணவாட்டி, ஆண்டவர் தனக்குச் சொந்தமானவர் என்பதை மட்டுமல்லாமல், ஆண்டவர் தன்மீது மிகுந்த பிரியம் கொண்டிருக்கிறார் என்பதையும் சேர்த்துச் சொல்கிறாள். “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று ஆண்டவர் சொல்வதும்; ஆனால், “நான் உன் மேல் பிரியமாய் இருக்கிறேன்” என்று அவர் சொல்வதும் முற்றிலும் வேறுபட்ட காரியங்களாகும். ஒரு கணவன் தன் மனைவியை நேசிக்கலாம்; ஆனால், அவள் காரியங்களைச் செய்யும் விதம் அவனுக்கு சந்தோஷமளிக்காமல் இருக்கலாம். ஆண்டவர் உங்களை நேசிக்கலாம்; ஆனால், உங்கள் வாழ்க்கையிலுள்ள பல காரியங்களைக் குறித்து அவருக்குத் திருப்தி இல்லாமல் இருக்கலாம். முதிர்ச்சியடைந்த அன்பு என்பது, ஆண்டவருக்குப் பிரியமாய் நடப்பதையே தன் இலக்காகக் கொள்கிறது. இப்போது அந்த மணவாட்டி, தன் மணவாளனோடு இணைந்து பணியாற்றும் ஒரு துணையாளராக மாறி, “வாரும் என் நேசரே! நாம் வயல்வெளிகளுக்குப் போவோம்” என்று அழைக்கிறாள் (உன்னதப்பாட்டு 7:11). அறுவடைக்கு ஆயத்தமாகி, வெண்மையாய்க் காட்சியளிக்கும் வயல்வெளிகள் நிறைந்த இந்த உலகத்தின் தேவைகளைக் குறித்து, தன் மணவாளனுக்கு இருக்கும் அதே அக்கறையை அந்த மணவாட்டியும் இப்போது பகிர்ந்துகொள்கிறாள். ஆனால், அந்த வயல்வெளிகளுக்கு நீங்கள் ஒருபோதும் தனித்துச் சென்றுவிடாதீர்கள். உங்கள் நேசரோடு இணைந்தே அங்கு செல்லுங்கள். அவரோடு ஓர் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதன் பிறகே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அந்த வயல்வெளியின் எந்தப் பகுதியில் நீங்கள் பிரயாசப்பட்டால் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகத்துல்லியமாக அறிந்திருப்பவர் அவரே.
இவ்விதமாகவே, கடந்த அறுபது ஆண்டுகளாக, ஆண்டவரின் முழுநேர ஊழியனாக நான் அவருக்கு ஊழியம் செய்ய முயன்று வருகிறேன். நான் எந்தவொரு இடத்திற்கும் தனித்துச் செல்ல வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. நான் இவ்வாறு கூறியிருக்கிறேன்: “ஆண்டவரே, நீர் என்னை முன்னின்று நடத்திச் செல்லும்; நான் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன். நாம் இருவரும் இணைந்து வயல்களுக்குச் செல்வோம். நீர் எங்கு செல்கிறீர் என்பதை எனக்குச் சொல்லும். ஒருவேளை நீர் ஓரிடத்திற்குச் செல்லவில்லை என்றால், நானும் அங்கு செல்ல விரும்பவில்லை.” நாம் ஆண்டவருடன் ஐக்கியம் கொண்டு, அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த நிலையில் அவருக்கு ஊழியம் செய்தால், நம் வாழ்வில் எந்தவிதமான தற்பெருமையும் இருக்காது; நம்முடைய ஊழியத்தை வேறொருவருடைய ஊழியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போக்கும் இருக்காது.