எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

“ஒரு வேலைக்காரனைப் பற்றிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், அவன் தன்னுடைய எஜமானன் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை மாத்திரமே செய்கிறதுதான்” என்று 1கொரிந்தியர் 4:2 -ல் (TLB என்கிற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பு) எழுதப்பட்டுள்ளது. உண்மையுள்ள ஊழியக்காரனாக இருப்பதின் அர்த்தம் அதுதான். நீங்கள் எவ்வளவு செய்கிறீர்கள் என்பது கேள்வி அல்ல, ஆனால் கர்த்தர் செய்யச் சொல்கிறதை மாத்திரமே நீங்கள் செய்கிறீர்களா என்பதும் – அவர் செய்ய விரும்புகிற விதத்தில் நீங்கள் செய்கிறீர்களா என்பதும்தான் கேள்வி. அதற்காக, நீங்கள் தேவனுக்குக் காத்திருந்து, “கர்த்தாவே, நான் என்ன செய்ய நீர் விரும்புகிறீர்? நான் அதை மாத்திரமே செய்ய விரும்புகிறேன்" என்று அவரிடம் கேட்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு வேலைக்காரனைப் பணியில் அமர்த்தினால், அவன் உங்களுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உணருகிறானோ, அதையெல்லாம் செய்வதற்கு அங்கேயும் இங்கேயும் அவன் ஓடுகிறதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இல்லை. அவன் உங்களுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்றும், அவனிடம் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் சொல்கிறீர்களோ, அதைத்தான் அவன் செய்ய வேண்டுமென்றும் நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்கள் தேவன் தம்முடைய வார்த்தையில் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கேட்பதுமில்லை, அதிலுள்ள தெய்வீக கோட்பாடுகளைப் பின்பற்றுகிறதுமில்லை. மாறாக தாங்கள் சிறந்தது என்று உணருகிற விதத்தில் – பொதுவாக உலகப்பிரகாரமான தங்களுடைய எண்ணத்தில் உதித்தவைகளைக் கொண்டு தேவனுடைய ஊழியத்தை அவர்கள் செய்கிறார்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்ய தங்களுடைய சொந்த திட்டங்களை அவர்கள் தீட்டுகிறார்களே அல்லாமல், அவர்களுக்கான கர்த்தருடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறதற்காக தேவனுக்குக் காத்திருக்கப் பொறுமை இல்லை.

கிறிஸ்துவின் உண்மையான ஊழியர்கள் (சிலுவையின் வழியில் நடப்பவர்கள்) உலகத்தால் (அதில் உலகப்பிரகாரமான விசுவாசிகளும் அடங்குவர்) கனப்படுத்தப்பட மாட்டார்கள் என்று 1கொரிந்தியர் 4ம் அதிகாரத்தில் பவுல் கூறுகிறார். கர்த்தருடைய சபையில் அப்போஸ்தலர்கள் மிகப் பெரிய தேவ ஊழியர்கள். அவர்கள் சபைகளின் மூப்பர்களுக்கு மூப்பர்கள். அப்போஸ்தலர்கள் சபைகளை ஸ்தாபித்து, மூப்பர்களை நியமித்து, அந்த மூப்பர்களுக்கு வழிகாட்டுபவர்கள். ஆனால் இந்த அப்போஸ்தலர்களை உலகம் எவ்வாறு பார்க்கிறது? “தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்” (1கொரிந்தியர் 4:9). உலகத்தின் பார்வையில் அப்போஸ்தலர்கள் சமூக அந்தஸ்திலே கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் “விரைவில் கொல்லப்படவுள்ள கைதிகளைப் போலவும்... மனுஷருக்கு வேடிக்கையாகவும்... பைத்தியக்காரர்களைப் போலவும்... தூஷிக்கப் படுகிறவர்களாகவும்... குட்டுண்டவர்களாகவும்” காணப்படுகிறார்கள் (1கொரிந்தியர் 4:9-11 - TLB என்கிற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பு). பவுல் தன்னையும் மற்ற அப்போஸ்தலர்களையும் கொரிந்து சபையின் மாம்சீக கிறிஸ்தவர்களுடன் ஒப்பிடுகிறார். “நீங்கள் திருப்தியடைந்தவர்களாகவும், ஐசுவரியவான்களாகவும், புத்திசாலிகளாகவும், பலவான்களாகவும், கனவான்களாகவும் உலகத்தால் கருதப்படுகிறீர்கள். மறுபுறத்தில் நாங்கள் உலகத்தால் இழிவாகக் கருதப்படுகிறோம்." இயேசு கிறிஸ்துவின் உண்மையான அப்போஸ்தலன் இந்த உலகத்தால் கனப்படுத்தப்பட மாட்டான். மாம்சீக கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகத்தால் கனப்படுத்தப்படுகிறார்கள். நீங்கள் உலகத்தின் கனத்தை தேடினால், நீங்கள் நிச்சயமாக ஒரு மாம்சீக கிறிஸ்தவனாக உங்களுடைய வாழ்க்கையை முடிப்பீர்கள்.

கிறிஸ்துவின் உண்மையான அப்போஸ்தலன் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாக ஒருபோதும் ஐசுவரியவானாக மாட்டான். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாக ஐசுவரியவானாகிய ஒரு மனிதனை நீங்கள் எங்கே பார்த்தாலும், அவன் கிறிஸ்துவின் அப்போஸ்தலன் அல்ல என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாகத் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் வீடுகளையும் நிலங்களையும் வாங்கிய ஒரு நபர், கிறிஸ்துவின் அப்போஸ்தலன் அல்ல. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாகக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு விலையுயர்ந்த வாகனங்களை வாங்கக்கூடிய ஒரு மனிதன், கிறிஸ்துவின் அப்போஸ்தலன் அல்ல. அவன் வெறும் ஒரு மாம்சீக கிறிஸ்தவன். பவுல் தன்னுடைய பிரசங்கிக்கிற வரத்தின் மூலமாக அதிகமான பணத்தைச் சம்பாதித்திருக்கக் கூடும்; ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறதில்லை. இயேசுவும் அப்போஸ்தலர்களும் செய்ததைப் போல - தன்னுடைய பூமிக்குரிய தேவைகளைச் சந்திப்பதற்காக வெகுமதிகளை ஏற்கலாம், ஆனால் அதன் மூலமாக அவன் கோடீஸ்வரனாக மாட்டான். ஆனால் இன்றைய கிறிஸ்தவத்தில் இதற்கு நேர்மாறானதையே நாம் காண்கிறோம். அதனால்தான், அப்போஸ்தலர்களென்றும் போதகர்களென்றும் அழைக்கப்படுகிற இவர்களுக்கு (நோயுற்றவர்களைக் கூட குணப்படுத்தக் கூடியவர்கள் இவர்கள்) நான் கொடுக்கும் மரியாதை பூஜ்ஜியமாகும். ஏழை மக்களிடமிருந்து தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாக ஐசுவரியவான்களாக மாறும் இந்த சுவிசேஷ பிரசங்கிகளைக் காட்டிலும் வட இந்தியாவுக்குச் சென்று எளிமையாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவி செய்யும் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. நீங்கள் யாரைப் பின்பற்றப் போகிறீர்கள்? பவுலையும் பேதுருவையும் பின்பற்றப் போகிறீர்களா? அல்லது இன்றைய போலியானவர்களைப் பின்பற்றப் போகிறீர்களா? நாங்கள் கடினமாக நடத்தப்படுகிறவர்களாகவும்... எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறவர்களாகவும்... இருக்கிறோம் என்று பவுல் தொடர்ந்து சொல்கிறார்” (1கொரிந்தியர் 4:11,12).

பவுல் தன்னுடைய பொருளாதார தேவைகளை தானே சந்தித்துக் கொண்டார், ஆனால் அவர் தூற்றப்பட்டவராகவும் அவதூறாகவும் பேசப்பட்டார். ஜனங்கள் அவரைப் பற்றி பொய்யான கதைகளைச் சொன்னார்கள், ஆனால் அதற்குப் பதிலாக அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அவர் சென்ற எல்லா இடங்களிலும் அவர் துன்புறுத்தப்பட்டு, “உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானார்” (1கொரிந்தியர் 4:13). அதன் பொருள் என்னவென்றால், கழிவுநீர் குழாயில் பாயும் அசுத்தத்தை விட எவ்விதத்திலும் மேன்மையாக உலகம் அவரை கருதவில்லை. அந்நாட்களிலுள்ள மிகப்பெரிய அப்போஸ்தலனை உலகம் அவ்வாறாக நடத்தியது. இதற்கு நேர்மாறாக, கொரிந்து சபையிலுள்ள கிறிஸ்தவர்கள் உலகத்தால் மதிக்கப்பட்டும் கனப்படுத்தப்பட்டும் இருந்தனர் - அவர்கள் அதைக் குறித்து மகிழ்ச்சியும் அடைந்திருந்தார்கள். தேவனுடைய ஊழியக்காரனாக இருப்பதின் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்குக் கிறிஸ்தவம் தவறிவிட்டது என்று சொல்வதற்கு நான் வருந்துகிறேன். தேவனுடைய உண்மையான ஊழியக்காரனாக இருப்பதின் அர்த்தம் என்ன என்பதை நம் தேசத்திற்கு நிரூபிப்பதே நம்முடைய பணியாக இப்பொழுது இருக்கிறது – எவ்விதத்திலும் ஒத்தவேஷம் தரியாதவனாகவும் எந்தவொரு உலக கனத்தையும் தேடாதவனாகவும் இருக்கிறதே ஆகும். ஒருவருடைய இறையியல் பட்டங்களை குறித்தோ அல்லது மற்ற உலகப்பிரகாரமான தகுதிகளைக் குறித்தோ தேவன் ஈர்க்கப்படுகிறதில்லை. இத்தகைய தகுதிகள் பிசாசையும் பயமுறுத்துகிறதில்லை!

பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்கள் சிம்மாசனங்களில் அமர்ந்து கனத்தைப் பெற விரும்புகிறார்கள். அந்த வழியில் செல்ல வேண்டாம். உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனுடைய தாழ்மையான ஊழியக்காரனாக இருந்துவிடுங்கள். நீங்கள் உலகத்தாலும் பாபிலோனியக் கிறிஸ்தவத்தாலும் நிராகரிக்கப்பட்டாலும் ஒரு சாதாரண சகோதரனாகவும் சாதாரண சகோதரியாகவும் இருந்துவிடுங்கள்.

புகழ்பெற்றவர்களாயும் வசதியானவர்களாயும் இருந்த கொரிந்து சபையினர் மீது பவுல் பொறாமைக் கொண்டாரா? இல்லை. அவர்களுக்காக வருத்தப்பட்டார். ஏனென்றால் அவர் அவர்களை விட ஆசீர்வதிக்கப்பட்ட நிலையிலிருந்தார். அவர்களுக்கு ஒரு தகப்பனாக அவர் பேசினார் – அவர்களை வெட்கப்படுத்தும்படியாக பேசவில்லை (1கொரிந்தியர் 4:14). தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் ஒரு தகப்பன். அவன் ஜனங்களை வெட்கப்படுத்துவதில்லை. ஒரு மாணவன் ஏதேனும் தவறு செய்திருந்தால், ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களை வெட்கப்படுத்தலாம். இருப்பினும் ஒரு நல்ல தகப்பன், தன்னுடைய பிள்ளை முட்டாள்தனமாக ஒன்றைச் செய்தாலும்கூட, ஒருபோதும் தன்னுடைய பிள்ளையை வெட்கப்படுத்தவே மாட்டான். ஆனால் கிறிஸ்தவத்தில் தகப்பன்மார்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (உபாத்தியாயர்களுக்கும்) உள்ள விகிதம் சுமார் 1:10,000 (1கொரிந்தியர் 4:15).