WFTW Body: 

மத்தேயு 7:6 முதல், மலைப்பிரசங்கத்தின் இறுதிப் பகுதிகளை நாம் காண்கிறோம். “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதிருங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்பாகப் போடாதிருங்கள்; போட்டால் அவைகள் தங்கள் கால்களால் அதை மிதித்து, திரும்பி உங்களைப் பீறிப்போடும்” (மத்தேயு 7:6). நாம் யாரிடத்தில் எதைப் பேசுகிறோம் என்பதில் ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். நீதிமொழிகள் 26:4-ல், மதிகேடனுடைய மதிகேடுக்குத்தக்கதாக அவனுக்குப் பதில் சொல்ல வேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சத்தியத்தை மதிக்காதவர்களுக்கு அதை நாம் கொடுக்கக் கூடாது. அதனால்தான் நாம் ஜனங்களிடம் பேசும்போது நமக்கு ஞானம் தேவைப்படுகிறது. அனைவருக்கும் ஒரே பொதுவான செய்தியை நாம் வைத்திருக்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும் நாம் என்ன பேச வேண்டும் என்பதை அறிய நாம் தேவனிடத்தில் கேட்க வேண்டும். இவ்விதமாகத் தான் இயேசு வாழ்ந்தார், வேதாகமத்தின் எந்த வசனத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது நாம் இயேசுவின் மாதிரியைப் பார்க்க வேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனம் ஏசாயா 50:4-இல் இருக்கிறது. தேவ வசனத்தைப் போதிக்கிறவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான வசனமாகும். அவர்கள் “தேவனுடைய செய்தியாக ஒரு நபருக்கு நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று யோசிக்கிறார்கள். அதற்கு, அந்த நபருடைய ஆவிக்குரிய நிலை என்ன என்பதை முதலில் நாம் கண்டறிய வேண்டும். இதனால் தான் நாம் யாரிடமாவது தேவனுடைய வசனத்தைப் பேசும்போது நமக்கு தேவனிடமிருந்து தீர்க்கதரிசன ஞானம் தேவைப்படுகிறது. தேவனுடைய வசனத்தைக் கொடுப்பது ஒரு தெய்வீக காரியமாகும். வேதியியல் போதிப்பது போன்ற ஒரு விரிவுரையாக நீங்கள் அதை நினைத்தால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வேதாகமத்தைப் போதிக்கலாம். ஆனால், ஒரு நபருடைய ஆவிக்குரிய நிலைக்கு ஏற்றபடி தேவனுடைய வசனத்தைப் போதிக்க விரும்பினால், தேவன் மட்டுமே கொடுக்கக்கூடிய தெய்வீக ஞானம் உங்களுக்குத் தேவை. ஏசாயா 50:4 (இது கிறிஸ்துவைக் குறிக்கிறது), “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்;” என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், “என் பாதையில் வருகிற சோர்வுற்ற ஒருவருக்குச் சரியான வார்த்தையைக் கொடுப்பதற்காக, என் பிதாவாகிய தேவன் ஒவ்வொரு நாளும் காலையில் என்னைத் தட்டி எழுப்பி, சீஷனைப்போலக் கேட்கும்படி என் செவியைத் தட்டி எழுப்புகிறார்.” இயேசு தினமும் பிதாவுக்கு செவிகொடுப்பார் என்பதையும், தம்மிடம் வந்த ஜனங்களுக்குச் சரியான வார்த்தையைக் கொடுக்கும்படி அவர் எப்போதும் பிதாவினிடத்தில் செவிசாய்த்துக் கேட்பார் என்பதையும் இங்கே அவர் கூறுகிறார்.

இதற்கு ஓர் உதாரணம் யோவான் 8-இல் இருக்கிறது. அங்கே, விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை இயேசுவினிடத்திற்குக் கொண்டுவந்து, அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்த நியாயப்பிரமாணத்தை மேற்கோள் காட்டிய பரிசேயர்களைக் குறித்து நாம் வாசிக்கிறோம். இயேசு அவர்களுடன் கருத்து வேறுபடவில்லை, ஏனென்றால் அவருக்கு நியாயப்பிரமாணம் தெரியும். அவர் தாமே அதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மோசேக்குக் கொடுத்திருந்தார்! அப்படியிருக்க, அவர் அங்கே என்ன செய்தார்? இயேசு பதில் சொல்லவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த ஸ்திரீயைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள், இயேசுவோ குனிந்து தரையில் விரலால் எழுதிக்கொண்டிருந்தார் (யோவான் 8:6). பிதாவினிடமிருந்து ஒரு தெளிவான வார்த்தைக்காக அவர் காத்திருந்தார். “இவர்களுக்கு நான் என்ன சொல்லட்டும்? இந்த ஏழை ஸ்திரீயைக் கல்லெறிந்து கொல்ல விரும்புகிற இந்த ஜனங்ளுக்குக் கொடுக்கவேண்டிய சரியான வார்த்தை எது?” என்று அவர் தம் இருதயத்தில் பிதாவை நோக்கிக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் நியாயப்பிரமாணத்தை மீறப்போவதில்லை, ஏனென்றால் மோசேக்கு அவர் கொடுத்த நியாயப்பிரமாணம் அவளைக் கல்லெறியச் சொன்னது. பிதாவினிடமிருந்து வார்த்தையைப் பெற்றவுடன், அவர் நிமிர்ந்து நின்று அவர்களைப் பார்த்து, “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன். தாராளமாகச் செய்யுங்கள் - நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் அவளைக் கல்லெறியலாம், ஆனால் பாவம் இல்லாதவன் மட்டுமே முதல் கல்லை எறிய முடியும்” (யோவான் 8:7) என்று கூறினார். பெரியோர்கள் அதிக பாவம் செய்திருந்ததால், அவர்களே முதலாவதாகப் புறப்பட்டுப் போனார்கள்.

அந்த சூழ்நிலையைக் கையாள ஒரே ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது! ஒரு முழு பிரசங்கம் தேவைப்படவில்லை. இயேசு பதில் ஒன்றும் பேசாதிருந்த மற்ற சமயங்களும் உண்டு. உதாரணமாக, ஒருவர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது “நான் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்: யோவானுடைய ஞானஸ்நானம் பரலோகத்திலிருந்தோ மனுஷரிடத்திலிருந்தோ உண்டாயிற்று?” என்று அவர் கேட்டார். அவர்கள் தங்களுக்குள், “மனுஷரிடத்திலிருந்து என்று சொன்னால், ஜனங்கள் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று கருதுவதால் அவர்கள் கோபப்படுவார்கள், பரலோகத்திலிருந்து என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நீங்கள் விசுவாசிக்கவில்லை?’ என்று இயேசு நம்மிடம் கேட்பார்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு, “நாங்கள் அறியோம்” என்றார்கள். அப்பொழுது இயேசு, “நானும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்” என்றார் (மத்தேயு 21:27).

இயேசு எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளவில்லை. சிலர் அவரிடம் வந்து, “ஒருவன் மரித்துவிட்டான், அவனுடைய மனைவி அவனுடைய சகோதரனை மணந்துகொண்டாள், அவனுடைய ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. உயிர்த்தெழுதலில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள்?” என்று ஒரு மதியீனமான கேள்வியைக் கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலளித்தார்; அவர் கண்டுகொள்ளாமல் போகவில்லை. உயிர்த்தெழுதலில் விவாகம் இல்லை என்பதை அவர்களுக்கு விளக்க அவர் நேரம் எடுத்துக்கொண்டார். இயேசு கொடுத்த பதில்களைப் பார்த்தால், “இதற்கு என்ன பதில்?” என்று ஒரு கணினி நிரலில் (Computer Program) தேடுவது போன்ற நிலையான பதில் அல்ல அது. அவர் எப்போதும் பரிசுத்த ஆவியானவருக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தார். மத்தேயு 7:6-இலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கோட்பாடு இது.

பல சமயங்களில், ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஏற்ற வார்த்தை எது என்பதை நாம் அறிய வேண்டும். எல்லா ஊழியத்திலும் ஜனங்களுக்குச் சரியான வார்த்தையைக் கொடுப்பது மிகவும் முக்கியம். புதிய ஏற்பாடு ஏன் 1கொரிந்தியர் 14:1-இல் “தீர்க்கதரிசனம் உரைக்க நாடுங்கள்” என்று சொல்லுகிறது? ஒவ்வொரு விசுவாசியும் தீர்க்கதரிசனம் சொல்ல நாடவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், புதிய ஏற்பாட்டுச் சபை கூடுகையில், எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்களானால் (எல்லாரும் தீர்க்கதரிசிகள் அல்ல, ஆனாலும் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்ல முடியும்), அந்நியன் ஒருவன் உள்ளே வரும்போது, அவன் கேட்பவற்றால் கண்டிக்கப்பட்டு, அவனுடைய இருதயத்தின் இரகசியங்கள் வெளிப்படுவதால், அவன் தேவன் மெய்யாகவே உங்களுக்குள் இருக்கிறார் என்று அறிந்து கொள்வான் (1கொரிந்தியர் 14:24-25). அவன் பின்பு அவன் முகங்குப்புற விழுந்து, “ஆச்சரியம்! தேவன் நிச்சயமாக இங்கே இருக்கிறார், ஏனென்றால் என் தேவைக்கேற்ற வார்த்தையை நான் பெற்றுக் கொண்டேன்!” என்று சொல்லி தேவனை ஆராதிப்பான்.

ஒவ்வொரு சபைக் கூடுகையும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு சபையிலும் தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சொல்லக்கூடியவர்கள் இருக்க வேண்டும். நீங்கள் தேவனுக்குக் காத்திருக்க வேண்டும், அதைச் செய்வதற்கு எல்லாவற்றையும் அவரிடத்தில் நீங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்குத் தகுதியற்றவர்கள். ஒரு நபருக்கு எதைக் கொடுப்பது பொருத்தமானது என்பதை நீங்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இயேசு மத்தேயு 7:6-இல் கூறியதன் அர்த்தம் இதுதான். பன்றியைப் போல இருக்கும் ஒருவனைப் பார்க்கும்போது, பன்றிக்கு ஏற்றதைக் கொடுங்கள்; நாயைப் போல இருக்கும் ஒருவனைப் பார்க்கும்போது, அதற்கு எலும்பைக் கொடுங்கள். மிருகஜீவன்களுக்கு நீங்கள் மலைப்பிரசங்கத்தைக் கொடுக்க முடியாது.

நாம் தீர்க்கதரிசன வரத்தை நாடும்போது, நாம் பேச எழும்பும் அந்தத் தருணத்தில், நமக்கு முன்பாக இருப்பவர்களின் தேவை என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள தேவன் நமக்கு வல்லமையைத் தருகிறார், மேலும் அவர்களது தேவைக்கேற்ற வார்த்தையை அவர் நமக்குக் கொடுப்பார். இது இயேசு மலைப்பிரசங்கத்தை முடிக்கும்போது சொல்லும் மிக முக்கியமானதொரு தாற்பரியமாகும். இது மிகவும் முக்கியமானது - விசுவாசிகளுடனோ அல்லது அவிசுவாசிகளுடனோ, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க அழைக்கப்பட்ட நமக்கு இதை புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். நாம் யாரையும் அற்பமாக எண்ணக்கூடாது. நீங்கள் ஒருவரை அற்பமாக எண்ணினால், நீங்கள் தேவனுக்கு ஊழியக்காரனாக இருக்கத் தகுதியற்றவர்கள். இயேசு மிக மோசமான பாவிகளைக்கூட அற்பமாக எண்ணவில்லை. ஆனால் ஜனங்களின் தேவைக்கேற்ற சரியான வார்த்தை நம்மிடம் இருக்க வேண்டும். இதுவே மத்தேயு 7:6-இன் கருத்தாகும்.