யெகோவாவாகிய கர்த்தருடைய ஊழியக்காரராய் இயேசு இருந்தார். ஓர் ஊழியக்காரனானவன் எஜமான் சொல்லுகிறதைச் செய்கிறவன் என்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம் (1கொரிந்தியர் 4:2 லிவிங்). எனவேதான், பிதா என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்பதிலேயே தம் வாழ்நாளை அவர் செலவழித்து, அதனிமித்தம் களைத்து ஓய்ந்துபோகவோ அல்லது அலுத்துப்போகவோ அல்லாமல் பிதாவின் சித்தம் முழுவதையும் செய்து முடித்தார்! தம்முடைய மனுஷீக விருப்பங்களையோ, அவர் தொடர்ந்து மரணத்தில் ஊற்றிய வண்ணம் இருந்தார்!! இவ்வாறாகவே அவர் ஆத்துமத்தின்படி நடக்காமல் ஆவிக்குரியவராய் நடந்தார்!!
இயேசு தம்முடைய வாழ்க்கையில் ஜெபத்திற்கு உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அடிக்கடி வனாந்திரத்திற்குப் போய் ஜெபம்பண்ணுகிறவராய் இருந்தார் (லூக்கா 5:16). ஒருசமயம் இரவு முழுவதும் அவர் ஜெபித்து தம்முடைய பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்தெடுப்பதில் பிதாவின் சித்தத்தைக் கண்டுபிடித்தார் (லூக்கா 6:12,13). ஓர் ஆத்தும கிறிஸ்தவனுக்கு தேவ சமூகத்தில் காத்திருப்பது என்பது வீணடிக்கிற நேரமாய் இருக்கும். அவன் ஜெபித்தால், தன் குற்றமுள்ள மனச்சாட்சியை சமாதனப்படுத்தும் முயற்சியாகவே அது இருக்கும். அவன், தன்னில்தானே நம்பிக்கை உடையவனாய் இருக்கிறபடியினால், தன் வாழ்க்கையில் ஜெபம் அவனுக்கு ஒரு நிர்ப்பந்தமான அவசியமாய் இருப்பதில்லை. ஆனால் ஆவிக்குரிய மனிதனோ, ஒவ்வொன்றிற்கும் தொடர்ச்சியாய் தேவனையே சார்ந்திருப்பான். ஜெபம் அவனுக்கு அதிக நிர்ப்பந்தமான அவசியமாய் இருப்பதால், ஜெபிப்பதற்கே எப்பொழுதும் உந்தித்தள்ளப்படுவான்!
அவருடைய பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்பது “ஒன்றே” நமக்குத் தேவையானது என்று இயேசு கூறினார் (லூக்கா 10:39,42). பெத்தானியாவைச் சேர்ந்த மரியாள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாய் இருக்கிறாள். மாறாக, மார்த்தாளோ தன்னலமற்ற சேவையில் துரிதமாய் இருந்தாலும், படபடப்போடு வந்து, “ஆண்டவருடைய பாதத்தருகில் மரியாள் சோம்பேறியாய் உட்கார்ந்து இருக்கிறாள்” என்று குற்றம் சாட்டுகிறவளாய் இருந்தாள். ஆத்தும கிரியைக்கும், ஆவிக்குரிய கிரியைக்கும் உள்ள தெளிவான வேற்றுமையை எடுத்துக்காட்டுகிறவர்களாய் இந்த இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். ஆண்டவருக்கும், அவருடைய சீஷர்களுக்கும் தன்னலமற்ற சேவை செய்ததில் மார்த்தாள் ஒரு பாவமும் செய்யவில்லை, ஒருபோதும் இல்லை! ஆனாலும் அவள் இளைப்பாறுதல் இல்லாமல், மரியாளைக் குற்றம்சாட்டுகிறவளாய் இருந்தாள். இதுவே மனுஷீகமான ஊழியத்தை சரியாய் படம்பிடித்துக் காண்பிக்கிறது. எப்போதுமே ஆத்தும கிறிஸ்தவன் இளைப்பாறுதல் இல்லாதவனாயும், எரிச்சல் அடைகிறவனாயும் இருப்பான். அவன் தன் சொந்தக் கிரியைகளை விட்டு ஓய்ந்தில்லாததினால், தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கக் கூடாதவனாயும் இருக்கிறான் (எபிரெயர் 4:10). அவனுடைய விருப்பம் நல்லதுதான். தன்னலமற்ற சேவையைத்தான் செய்தான்! ஆனால், அவனுடைய “சொந்த கிரியைகள்” எவ்வளவு நன்மையானதாய் இருந்தாலும், தேவனுடைய பார்வையில் அவைகள் அழுக்கான கந்தையாகத்தான் இருக்கும்! (ஏசாயா 64:6) என்பதை உணராதிருக்கிறான்.
அமெலேக்கியரின் நல்ல ஆடுகள் (மாம்சம்) கெட்ட ஆடுகளைப் போலவே தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவைகளே! (1சாமுவேல் 15:39,1சாமுவேல் 9-19). ஆனால், இதை மனுஷீக புத்தியினால் விளங்கிக்கொள்ள முடியாது. நல்ல ஆடுகளை தேவனுக்குக் கொடுக்காமல் நிராகரித்துவிடுவது பைத்தியமாகத்தான் தோன்றும். ஆனால் “தேவன் எதிர்பார்ப்பது பலியை அல்ல, கீழ்ப்படிதலே” ஆகும். “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே நலம்” என்றே வேதம் திட்டமாய்க் கூறுகிறது (1சாமுவேல் 15:22). ஆனால், தேவன் என்ன சொல்கிறார் என்று கேட்பதற்கு நேரம் செலவழிக்காமல், எப்படி நாம் அவர் குரல் கேட்டிட முடியும்? கீழ்ப்படிதலுக்கு முன்னானது கேள்வி. ஆகவேதான், இயேசுவின் சத்தத்தைக் கேட்பதுவே நமக்குத் தேவையான ஒன்று என்று சொன்னார். அவரது குரலைச் சார்ந்தே மற்ற அனைத்தும் இருக்கிறது!
மார்த்தாளைப்போல ஊழியம் செய்கிறவர்கள், அதை எவ்வளவு உத்தமமாய் செய்தாலும் உண்மையாகவே “அவர்கள் தங்களுக்கே ஊழியம் செய்கிறார்கள்.” அவர்களை கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என்று அழைக்க முடியாது! ஏனென்றால், நல்ல ஊழியக்காரன், ஊழியம் செய்வதற்கு முன்பாக எஜமான் என்ன சொல்கிறார் என்று கேட்டே ஊழியம் செய்வான்!!
நாம் இயேசுவைப்போல் “நம் சுயபெலன்” எல்லாவற்றையும் மெய்யாகவே வெறுமையாக்கி இருப்போமானால் சாலமோன் ஜெபித்தது போலவே, “என் தேவனாகிய கர்த்தாவே... நான் போக்குவரவு அறியாத சிறு பிள்ளையாயிருக்கிறேன்... ஆகையால் நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க, அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” (1இராஜாக்கள் 3:7,9) என்று ஜெபித்திருப்போம். மனிதன் என்கிற முறையில் நன்மை இன்னதென்றும் நன்மையில்லாதது இன்னதென்றும் அறிகிறதற்கு, அதாவது ‘பிதாவின் சித்தம் எது, பிதாவின் சித்தம் இல்லாதது எது?’ என்று அறிவதற்கு தம்முடைய பிதாவினிடத்திலேதான் கேட்கவேண்டும் என்று இயேசு அறிந்திருந்தார்!
'அலங்கார வாசல்' என்ற தேவாலய வாசலண்டையில் சப்பாணியாய் இருந்த ஒரு மனுஷன், பிச்சை கேட்டுக்கொண்டு இருந்ததை இயேசு கண்டார். அவர் அவனைப் பலமுறை கண்டிருந்தும், அவனை சுகப்படுத்தவில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வதற்கு அவருக்கு பிதாவினிடத்திலிருந்து வழிநடத்துதல் இல்லை! ஆனால், அவர் பரத்துக்கு ஏறின பின்பு பிதா நியமித்த சரியான வேளையில் யோவானும், பேதுருவும் அவனுக்கு சுகம் கொடுத்தபடியால், அநேகர் தேவனிடத்தில் திரும்புவதற்கு அந்நிகழ்ச்சி ஏதுவாயிருந்தது!! அதுவே, அந்த மனிதன் சுகமாவதற்கு பிதாவின் வேளையாய் இருந்தது, அதற்கு முன்னால் அல்ல! ஒருவேளை, முன்கூட்டியே அந்த மனிதனுக்கு இயேசு சுகம் கொடுத்திருந்தால், அவர் பிதாவின் சித்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்திருப்பார்!! தம் பிதாவின் வேளையே பூரணமானது என்று அறிந்திருந்தபடியால், எதைச் செய்வதற்கும் அவர் அவசரப்பட்டதேயில்லை.
இயேசுவின் வாழ்க்கையோ, பூரண இளைப்பாறுதல் உடையதாயிருந்தது. ஒரு நாளின் 24 மணி நேரத்தில், பிதாவின் சித்தம் முழுமையையும் செய்வதற்குப் போதுமான அவகாசம் இருந்தது. ஆனால், அவர் தமக்கு நன்மையாய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் செய்ய விரும்பியிருந்தால், 24 மணி நேரம் கூட அவருக்குப் போதாததாய் இருந்திருக்கும்!! மேலும், அவருடைய அநேக நாட்கள் மனக்கிலேசத்திலும், இளைப்பாறுதல் இல்லாமையிலும் முடிந்திருக்கும். தம்முடைய சர்வவல்ல பிதா அவருடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிடுகிறார் என்ற உண்மையை இயேசு அறிந்திருந்தார். ஆகையால், ஒவ்வொரு நாளிலும் வந்த எல்லா தடங்கலின் மத்தியிலும் இயேசு மகிழ்ச்சியாய் இருந்தார். இயேசுவின் ஜீவன் நம்முடைய உள்ளான மனுஷனிலும் பூரண இளைப்பாறுதலைக் கொண்டுவர முடியும்! இதற்கு அர்த்தம், நாம் ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக பிதாவின் சித்தம் எதுவோ, அதை மாத்திரமே நாம் செய்ய வேண்டும்! அப்பொழுது, நம்முடைய சொந்த அட்டவணையில் இருக்கிற காரியங்களைச் செய்து முடிக்காமல், பிதாவின் சித்தத்தை மாத்திரம் செய்துமுடிக்க வாஞ்சையாய் இருப்போம்.
ஆத்தும கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்தக் கிரியைகளைச் செய்வதற்கே விடாப்பிடியாய் இருக்கிறபடியால், அவர்கள் எரிச்சலும், பதட்டமும் அடைந்து, முடிவில் மனதளவிலோ, சரீரத்திலோ பாதிப்புக்கு ஆளாகிவிடுகிறார்கள்!
இயேசுவோ இப்படிப்பட்ட எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்தார். காரணம், அவர் தம் உள்ளான மனுஷனில் பூரண இளைப்பாறுதலுடன் இருந்தார். அவர் நமக்கு, “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கும் இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) என கற்றுக் கொடுத்தார்.
தேவ வார்த்தையில் தேவ ஆவியானவர் நமக்குக் காண்பிக்கிறதும், நமக்கு அருளிச்செய்து, நம்மூலம் வெளிப்படப்பண்ண விரும்புகிறதுமான இயேசுவின் மகிமை இதுவே!
கர்த்தர் நம்முடைய மேய்ப்பராயிருக்கிறார்! அவர் தம்முடைய ஆடுகளை இளைப்பாறுதலான மேய்ச்சல் நிலத்திற்கே நடத்துகிறார்!! ஆடுகள், தங்களுடைய மனம்போனபோக்கில் ‘அடுத்து எந்த நிலத்திற்கு மேயப்போகலாம்?' என்று தீர்மானிக்கிறதில்லை. அவைகள் செய்வதெல்லாம், மேய்ப்பனைப் பின்பற்றும் ஒரே ஒரு செயல் மாத்திரமே! அவ்வாறு பின்பற்றிட ஒருவன் முழுமையாய், தன் சுய நம்பிக்கை, சுய திறமையாவற்றையும் வெறுமையாக்கியிருக்க வேண்டும். இயேசுவும்கூட தம் பிதாவை வாய் திறவாத ஆட்டைப் போலவே, சாந்தமாய் பின்தொடர்ந்தார்! ஆனால் ஆத்தும கிறிஸ்தவர்களோ 'அவ்வித ஆடுகளாய்' இருக்க விரும்புகிறதில்லை. ஆகையால் தங்கள் சுய புத்தியினால் அவர்கள் திசை தப்பிபோகிறார்கள். நம்முடைய புத்தி தேவன் கொடுத்த மிகப் பிரயோஜனமான ஈவுதான்! ஆனால், அதுவே நம் வாழ்க்கையில் ஆண்டு கொள்ளும்படி நாம் உயர்த்தினால், எல்லா ஈவுகளையும்விட அதிக அபாயமுள்ள ஈவாக அது மாறிவிடும்!!
நம் ஆண்டவர், தம் சீஷர்களுக்கு “பிதாவே, உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். பரலோகத்தில் தேவ சித்தம் எப்படிச் செய்யப்படுகிறது? தேவ தூதர்கள் அங்கே, “தேவனுக்காக எதையாவது செய்யலாம்!” என்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்குமானால், பரலோகத்தில் குழப்பம்தான் இருக்கும். அப்படியானால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த தேவ தூதர்கள் ஒவ்வொருவரும், தேவ சமூகத்திற்குச் சென்று “தேவன், என்ன சொல்லுவார்?” என்று காத்திருந்து, அவர் சொல்லுகிறது எதுவோ அதை அப்படியே செய்கிறார்கள்!! சகரியாவுடன் பேசின காபிரியேல் தேவதூதன் சொல்லுகிறதைக் கேளுங்கள்: “நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்! உன்னுடன் பேச அனுப்பப்பட்டு வந்தேன்” (லூக்கா 1:19). இதே நிலையைத்தான் இயேசுவும் வகித்தார். பிதாவின் சமூகத்தில் காத்திருந்து, அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்த்து, அவருடைய சித்தம் செய்தார்!!
ஆத்தும கிறிஸ்தவர்கள் கடினமாய் உழைக்கவும், அதிகமாய் தியாகமும் செய்யலாம். ஆனால் இவர்களின் கடின உழைப்பை நித்தியத்தின் வெளிச்சம் ‘இரா முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் பிடிக்கவில்லை’ என்பதையே காட்டும்! மாறாக, தங்கள் சிலுவையை அனுதினம் எடுத்து, தங்கள் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினவர்கள், வலை நிறைய மீன்களைப் பிடித்தவர்களாய் இருப்பார்கள். காரணம், அவர்கள் ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வலையைப் போட்டவர்கள்!! (யோவான் 21:1-6).
“நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாக” என பவுல் குறிப்பாய்க் கூறுவதைப் பாருங்கள் (கொலோசெயர் 4:7). “கலப்பையின்மேல் தன் கையை வைத்து, அதாவது தன் சொந்தமான வேலையை விட்டுவிட்டு வந்த பிறகு, அவைகளை மீண்டுமாய் பின்னிட்டுப் பார்க்கிற எவனும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குத் தகுதியுள்ளவன் அல்ல” (லூக்கா 9:62) என்று இயேசு கூறினார்.
“என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்” எனவும் இயேசு தெரிவித்தார் (மத்தேயு 15:13).
“நாற்று' நம்முடைய பார்வைக்கு நல்லதா இல்லையா என்பது கேள்வியல்ல, ‘அதை யார் நட்டார்?’ என்பதே கேள்வி. அண்டசராசரத்திலும் காணப்படும் எதற்கும், தேவன் ஒருவர் மட்டுமே சட்டப்படியான ஆதிமூல கர்த்தர்! வேதம் “ஆதியிலே தேவன்” என்றே ஆரம்பிக்கிறது. எல்லா செயல்களும் நித்திய தன்மையுள்ளதாய் இருக்கவேண்டுமானால், தேவனிடத்திலிருந்துதான் அவை ஆரம்பிக்க வேண்டும் - நம்முடைய மனதில் அல்ல!!
“தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவான் 2:17).
மற்ற யாவரும் அழிந்து போவார்கள் என்றே யோவான் எச்சரித்தார்!
எனவேதான், நமக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாய் இருக்கிறது. “நான் தேவ சித்தத்தின் படி வாழ்ந்து, அதற்காகவே பிரயாசப்படும் மனிதனா?" என்பதே அந்த நல்ல கேள்வியாகும்!