WFTW Body: 

பவுல், "அவர்களுடைய விசுவாசத்தின் கிரியை, அன்பின் பிரயாசம், நம்பிக்கையின் பொறுமை" என்று 1தெசலோனிக்கேயர் 1:2-ல் சொல்லப்படும் விசுவாசத்தையும், அன்பையும், நம்பிக்கையும் குறித்துப் பேசிவிட்டு, பின்பு அந்த அதிகாரத்தின் முடிவில், மெய்யான மனந்திரும்புதலைப் பற்றிப் பேசுகிறார். இங்கே மெய்யான மனந்திரும்புதலைக் குறித்தத் தெளிவான விளக்கங்களில் ஒன்றை நாம் புதிய ஏற்பாட்டிலே பார்க்கிறோம் அது "விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்புதல்" (1தெச 1:9) என்பதாகும்.

மனந்திரும்புதல் என்றால், நாம் நம்முடைய விக்கிரகங்கள் யாவற்றையும் விட்டுவிட்டு தேவனிடத்தில் திரும்புவது என்பதாகும். நீங்கள் பாவத்திலே ஜீவிக்கும்போது, உங்களுடைய முகம் விக்கிரகத்தை நோக்கியபடியும், முதுகுப்புறமானது தேவனை நோக்கியபடியும் உள்ளது. உங்களுக்கு உங்களுடைய பணமோ, உங்களுடைய வேலையோ, உங்களுடைய இலட்சியமோ, ஏதாவதொரு பாவ சந்தோஷமாகவோ, உங்களுடைய பெண்சினேகிதியோ (girl friend), அல்லது நீங்களே உங்களுடைய விக்கிரகமாக இருக்கலாம். நீங்கள் கண்ணால் பார்க்கக்கூடிய, சாதாரண விக்கிரகமாக கூட இருக்கலாம். விக்கிரகங்களில் பல வகை உள்ளன. மனந்திரும்புதல் என்பது எல்லாவிதமான விக்கிரகங்களையும் விட்டு 180 பாகை (degrees) தேவன்பக்கமாகத் திரும்பி, அந்த விக்கிரகங்கள் எல்லாம் உங்களுடைய முதுகுக்குப் பின்னால் இருக்கும்படியாகச் செய்வதாகும். அத்தகைய விக்கிரகங்களெல்லாம் உங்களுடைய முதுகுக்குப் பின்னால் போகும் அளவுக்கு நீங்கள் திரும்பவில்லையானால், நீங்கள் மெய்யாகவே மனந்திரும்பவில்லை என்பதாகத்தான் அர்த்தமாகும்.

அநேகக் கிறிஸ்தவர்கள் இன்னும் தங்கள் வாழ்க்கையில் விக்கிரகங்களை வைத்துக் கொண்டே தேவனையும் எதிர்கொள்ள முயற்சிக்கிறார்கள். தங்களுடைய இலட்சியங்களும், விருப்பங்களும் இவ்வுலகத்தில் இருக்க, அவர்களோ தாங்கள் மறுபடியும் பிறந்துவிட்டதாகக் கற்பனைக் கோட்டையைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்! இத்தகைய "கிறிஸ்தவர்கள்தான்" இவ்வுலகத்திலேயே "மிகவும் சந்தோஷமற்றவர்களாக" இருக்கிறார்கள். தங்களுடைய இன்பம், பணம் ஆகியவற்றை முழுவதுமாக விக்கிரகமாக்கிக் கொண்ட ஜனங்கள்கூட இத்தகைய "கிறிஸ்தவர்களைக்" காட்டிலும் சந்தோஷம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர்! ஆனால் தேவனுக்கென்று மாத்திரமே வாழ்பவர்களால் தான் உச்சகட்ட சந்தோஷத்தை அடைய முடியும். யாரெல்லாம் தேவனுக்காகவும், உலகத்திற்காகவும் சேர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் பரிதாபத்திற்குரியவர்களேயாவர். இது இருவேறு திசைகளை நோக்கிப் பயணிக்கும் இரு படகுகளிலே நீங்கள் உங்களுடைய இரு கால்களையும் வைப்பதற்கு ஒப்பாகும். அப்படிச் செய்வதால், நீங்கள் நடு ஆற்றிலே விழுந்து விடுவீர்கள். தங்கள் ஜீவியத்திலே மனந்திரும்புதல் என்னும் முறையான அஸ்திபாரம் போடாத கிறிஸ்தவர்கள்தான் இன்று அநேக பிரச்சனைகளை சந்தித்தவர்களாயிருக்கிறார்கள்.

தேவனுக்குரிய ஸ்தானத்தை பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு காரியமும் விக்கிரகமேயாகும். நீங்கள் அதிகமாக மெச்சிக் கொள்ளும் ஓர் ஆவிக்குரிய தலைவர்கூட உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய இடத்தைப் பிடித்துவிட முடியும்; அல்லது நீங்கள் அதிகமாக விரும்பும் ஒரு குறிப்பிட்ட வேத உபதேசம்கூட இதைச் செய்துவிட முடியும். நாம் தேவனிடமாய்த் திரும்பினதற்குப் பிறகு, ஜீவனுள்ள, மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதிலும், பரத்திலிருந்து அவரது குமாரன் திரும்ப வருவதற்காகக் காத்திருப்பதிலுமே நம்முடைய எஞ்சியுள்ள நாட்களை கழிக்க வேண்டும் (1தெச 1:9,10). மெய்யான மனந்திரும்புதல், விசுவாசம் ஆகியவை பற்றிய முழுநிறைவான விளக்கத்தை நாம் இங்கே பெற்றுள்ளோம். இவ்விதமாக மனந்திரும்பின ஒரு கிறிஸ்தவன் மாத்திரமே நல்லதோர் அஸ்திபாரத்தைப் போட்டிருக்கிறான். அவன் தன் பணம், சுகம்... ஜனங்களின் அபிப்பிராயம், மற்றெதுவானாலும் அதற்குரிய ஸ்தானத்தில் வைத்துவிட்டு முழுவதுமாய் தேவனிடம் திரும்பிவிட்டிருப்பான். அதுமுதற்கொண்டு அவனது பிரதான நோக்கமெல்லாம் தேவனைச் சேவிப்பதாகத்தான் இருக்கும். அவன் உலக வேலையைச் செய்து வந்தாலும், பிரதான நோக்கமெல்லாம் தேவனை சேவிப்பதாகவே இருக்கும். பரலோகத்திலிருந்து கிறிஸ்து திரும்ப வருவதை ஆவல் பொங்க எதிர்பார்த்தவனாக, தேவனைச் சேவிப்பான். இயேசு திரும்ப வரும்போது, அவர்,"இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிப்பார்" (1தெச 1:10).

மேற்சொன்ன 1தெச1:9,10 - ன் படி ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்ய பவுல் கொண்டிருந்த மாதிரியின்படியே நம்முடைய அனுபவமும் உள்ளதா என்று ஒவ்வொரு கிறிஸ்துவனும் தன்னை தானே சோதித்துப் பார்ப்பதே நல்லது.