உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியை நாடி ஓடுகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அதைத் தவறான வழியில் நாடுகிறார்கள். தகாத முறையிலான பாலியல் இன்பம், அல்லது ஏராளமான பணம், அல்லது புகழ், கனம், பதவி மற்றும் அதிகாரம் போன்றவற்றில் மகிழ்ச்சியைக் காணலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவை அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு சிற்றின்பம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை.
தேவனும் நாம் மகிழ்ச்சியாய் இருக்கும்படி விரும்புகிறார். ஆனால், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” (மத்தேயு 5:8 – லிவிங் மொழிபெயர்ப்பு) என்று அவர் கூறுகிறார். பரிசுத்தமாக இருப்பதன் மூலம் தான் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும். பரிசுத்தமாக இருக்கிற காரணத்தினால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை உங்களைச் சுற்றியுள்ள உலகிற்கு நிரூபிக்கும்படிக்கு ஒரு கிறிஸ்தவராக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்கு தேவன் தடைசெய்த பாவமான விஷயங்கள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை என்பதை நீங்கள் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும்.
திருமணம் அல்லது வேலை போன்ற நியாயமான விஷயங்களை நாடுவதன் மூலம் கூட நாம் மகிழ்ச்சியைக் காண முடியாது. இவற்றை நாம் பெற்றுக்கொள்ளலாம், ஆனால் இவற்றின் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. கர்த்தரில் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அப்பொழுது மட்டுமே நாம் மெய்யான சத்தியத்திற்கு பயனுள்ள சாட்சிகளாய் இருக்க முடியும்.
பாவத்திலிருந்து மட்டுமல்ல, இந்த உலக அமைப்பிலிருந்தும் நம்மை இரட்சிக்க இயேசு வந்தார். இந்த உலகத்தை ஆளுபவன் சாத்தான். இந்த உலகில் நாம் காணும் நாகரீகங்கள், பொழுதுபோக்கு, கல்வி முறை மற்றும் பற்பல நடுநிலையாகத் தோன்றும் விஷயங்களுக்குப் பின்னால் சாத்தான் இருக்கிறான். உதாரணமாக, நல்ல கிறிஸ்தவ இசையைக் கேட்பதில் நமது எல்லா ஓய்வு நேரத்தையும் செலவிட்டால், நாம் அமைதியாக இருந்து தேவனுடைய சத்தத்திற்கு செவிசாய்ப்பதைத் தடுப்பதற்கான சாத்தானுடைய வழியாக இது இருக்கலாம். இவ்விதமாக 'மிகச்சிறந்த' ஒரு காரியத்திற்கு, 'நல்லதாயிருக்கும்' காரியமே எதிரி ஆகிறது.
ஆண்டவர் நம்மை இவ்வுலகத்தில் இருந்து எடுத்துக் கொள்வதில்லை. “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று யோவான் 17:15 -இல் பிதாவிடம் இயேசு ஜெபித்தார். இந்தப் பூமியில் தான் நாம் பரிசுத்தமாயிருப்பதற்குப் பயிற்சி பெற முடியும். ஒரு கப்பலின் நீர்-எதிர்ப்பு சக்தியானது கடலின் நடுவில் தான் சோதிக்கப்படுகிறது, கப்பலை நிறுத்தி வைக்கும் உலர்ந்த துறையில் (dry-dock) அல்ல!
நோவா மற்றும் லோத்தின் நாட்களில் ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள் - இப்படிப்பட்ட நியாயமான செயல்களில் – ஜனங்கள் ஈடுபட்டதாக இயேசு கூறினார் (லூக்கா 17:26-28). “உலகக் கவலைகளால்” நாம் ஆட்கொள்ளப் படும்பொழுது தேவனிடத்தில் செலவழிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. அதுதான் கடைசி நாட்களில் நமக்கு இருக்கும் ஆபத்து. நாம் இப்பொழுது அந்த நாட்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பொருளாதார ரீதியாக முன்னேறி, ஆடம்பரமாக வாழத் தொடங்கும் போது, நாம் தேவனிடமிருந்து எளிதில் விலகிச் செல்ல முடியும். “தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைவானெனில், அத்துடன் அவனுடைய தேவபக்தியானது மெய்யான ஆவிக்குரிய இலாபத்திற்கான வழியாகும்” (1தீமோத்தேயு 6:6 - பொழிப்புரை) என்று வேதம் கூறுகிறது.
இப்பொழுதே இரட்சணிய நாள். தேவனை விட மற்ற காரியங்களில் நாம் லயித்திருப்பதிலிருந்து நாம் மனம்திரும்ப வேண்டும். நம் இருதயம் தூய்மையற்றதாயிருக்கும்போது, நாம் மெய்யாக மகிழ்ச்சியாயிருக்க முடியாது. “உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” (ஆதியாகமம் 4:6) என்று தேவன் காயீனிடம் கேட்டது போல, நம்முடைய இரகசிய பாவங்களும், மற்றவர்கள் மேல் உள்ள தவறான மனப்பான்மையும் நம்மை வேறுபட்ட முகநாடி உடையவர்களாக்குகிறது. காயீன் எதிர்நோக்கியிருந்த ஆபத்தைக் குறித்து தேவன் அவனை எச்சரித்தார். பாவம் அவனது இருதயத்தின் வாசலில் பதுங்கி இருந்து அவனை விழுங்கக் காத்திருந்தது. அதனை ஆளுகை செய்யும் படி தேவன் அவனிடம் கூறினார்.
எல்லா நேரங்களிலும் பாவம் நமக்கு மிக மிக அருகாமையில் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் இதை உணர்ந்தோர் பாக்கியவான்கள் - ஏனெனில் அவர்கள் சோதிக்கப்படும் வேளையில் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருப்பார்கள். தன் மாம்சத்தின் பலவீனத்தை உணர்ந்து தேவனிடத்தில் உதவிக்காக தொடர்ந்து கதறுபவன் விழுவதில்லை.