லூக்கா 15-ல் உள்ள மூன்று உவமைகளில், காணாமல் போன ஆடு, காணாமல் போன இளைய குமாரன், காணாமல் போன மூத்த குமாரன், காணாமல் போன காசு ஆகிய நான்கு விதமான பின்மாற்றக்காரர்களின் சித்தரங்களை நாம் பார்க்கிறோம். அத்துடன் திரியேக தேவனையும் நாம் இங்கு காண்கிறோம்.
காணாமல் போன ஆடு என்பது ஒரு விசுவாசியானவன் தற்செயலாகவோ, கவனக்குறைவினாலோ வழிவிலகிப் போவதற்கு ஒப்பாகச் கொள்ளலாம். மேய்ப்பனுக்கு, தேவ குமாரனாகிய இயேசுவை ஒப்பாகச் சொல்லலாம். கெட்ட குமாரனை, தேவனுக்கும், சபைக்கும் எதிராக முரட்டாட்டம் பண்ணி விலகிச் செல்லும் ஒரு விசுவாசிக்கு ஒப்பாகச் சொல்லலாம். தகப்பனை பிதாவாகிய தேவனுக்கு ஒப்பாகச் சொல்லலாம். முதலாவது விஷயத்தில் சொல்லப்படுவது போல அப்படிப்பட்டவனைத் தேடி அவன் செல்லவில்லை. பன்றிகளின் நிலைக்கு அவன் சென்று, உணர்வடையும் வரைக்கும் அவன் காத்திருந்தான். மூத்த குமாரனை, பிரமாணத்துவத்துக்குள்ளும், சுய நீதிக்குள்ளும், பெருமைக்குள்ளும் மூழ்கி காணாமல் போகிறவர்களுக்கு ஒப்பாகச் சொல்லலாம்.
காணாமல் போன காசைத் தேடும் ஸ்திரீயை, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கும் சபைக்கு ஒப்பாகச் சொல்லலாம். அவள் விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடினாள் (லூக் 15:8). அவள் காசைத் தொலைத்த போது, ஒருவன் பின்மாறிப் போவதற்குக் (காணாமல் போன காசு) காரணமாய் இருக்கிற ஒரு ஜாக்கிரதையற்ற சபையாக இருந்தாள். அவள் விளக்கைக் கொளுத்தி (அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு), பின்பு தேட ஆரம்பித்து காணாமல் போனவற்றைக் கண்டுபிடித்து, மந்தைக்குள் கொண்டுவந்தாள். அநேக விசுவாசிகளுக்குக் காணாமல் போனவர்களைக் குறித்தும், பின்மாற்றக் காரர்களைக் குறித்து எவ்வித பாரமும் இருப்பதில்லை. அவர்கள் தங்களைக் குறித்து மாத்திரமே அக்கறை கொள்கின்றனர். அத்தகைய விசுவாசிகளெல்லாம், பிதாவாகிய தேவனோடும், குமாரனாகிய தேவனோடும், பரிசுத்த ஆவியாகிய தேவனோடும் தொடர்பற்ற நிலையிலே வாழ்ந்து கொண்டுள்ளனர். நான் பல வருடங்களாக இப்படியான ஒரு ஜெபத்தை (சபையின் மூப்பர்களையும் இப்படியாக ஜெபிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறேன்) ஏறெடுக்கிறேன்: “ஆண்டவரே, இந்தப் பகுதியில் யாரேனும் ஒருவர், ஒரு பக்தியான வாழ்க்கை வாழ வேண்டுமென ஏக்கங்கொண்டிருந்தால், அவரை எங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் அல்லது எங்களை அவருடன் தொடர்பு கொள்ளச் செய்யும். ஒரு வேளை இவ்விரண்டுமே நடைபெறாவிட்டால், தயவுசெய்து எங்களுடைய தவறைச் சுட்டிக் காட்டும். நாங்கள் சரிசெய்து கொண்டு, அதன் மூலமாக உம்முடன் இசைந்து நடந்து, காணாமல் போனதைக் கண்டு பிடிக்கிறோம்.” இந்த ஜெபத்தை நீங்களும் ஏறெடுக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
காணாமல் போன ஆட்டை நாம் எத்தகைய மந்தைக்குள் கொண்டு வந்து சேர்க்கின்றோம் என்கின்ற விஷயமும் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. மந்தையிலுள்ள 99 ஆடுகள் நோயுற்றவையாகவும், ஒன்றையொன்று கடித்துப் பீறிப் போடுகிறவையாகவும் இருக்குமானால், அந்தக் காணாமல் போன ஆடானாது மந்தைக்குள் இருப்பதைக் காட்டிலும் வனாந்தரத்தில் இருப்பதே மேலானாதாகும். நமக்குக் காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிக்கிற ஊழியம் மாத்திரமல்ல, உள்ளே இருக்கும் 99 ஆடுகளை சௌக்கியமாகவும், சமாதானமாகவும் இருக்கும்படி கவனித்துக் கொள்கின்ற ஊழியமும் தேவைப்படுகின்றது. “மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் (காணாமல் போன ஆடு) பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்” என்று இயேசு கூறினார் (லூக் 15:7). எதைக் குறித்தும் மனந்திரும்ப அவசியமில்லாத 99 ஆடுகளை உடைய அந்த சபையானது (மந்தை) எவ்வளவு அற்புதமானதாக இருக்கும்! இது எங்ஙனம் சாத்தியமாயிற்று? அதெப்படியெனில், அவர்களெல்லாரும் அனுதினமும் தங்களை நியாயந்தீர்த்துக் கொண்டு மனம்திரும்புவதினிமித்தம் அது சாத்தியமாயிற்று. பல ஆண்டுகளாய் இது என்னுடைய பழக்கமாக இருந்து வருகின்றது. அதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளாக, பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையில் கிறிஸ்துவைப் போலல்லாத ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்து, அதற்காக மனந்திரும்பி, அதிலிருந்து என்னைக் கழுவிக் கொள்கின்றேன். நீங்களும் அப்படி இருப்பீர்களானால், மற்றவர்களின் தவறைச் சுட்டிக் காண்பிப்பதற்கான நேரம் உங்களுக்கு இருக்காது. ஏனெனில் உங்களைக் கழுவிக் கொள்ளவே உங்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். அப்பொழுது உங்களால் “மனந்திரும்ப அவசியமில்லாத” மக்களைக் கொண்டு, சபையைக் கட்ட முடியும். அதற்குள்ளாக காணாமல் போன ஆடு வந்து சுகத்தைப் பெற்றுக் கொள்ளும். எனவே, நாம் நம்முடைய சபைகளில் தொடர்ச்சியாக மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும். அப்போது படிப்படியாக, காலம் கனிய கனிய, பிறரை நியாயந்தீர்க்காமல், தங்களைத் தாங்களே நியாயந்தீர்த்துக் கொள்ளக் கற்றுக் கொண்ட ஜனங்களை சபையானது பெற்றுவிடும்.
ஒரு மேய்ப்பன் ஓர் ஆட்டை இழந்த போது, அந்த மேய்ப்பனுக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. ஸ்திரீயானவள் ஒரு காசை இழந்த போது, அந்த ஸ்திரீக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. காணாமல் போன குமாரனின் விஷயத்திலும், தகப்பனுக்குத்தான் நஷ்டம் உண்டானது. இந்த உவமைகள் எல்லாவற்றிலும், மனுஷன் பாவம் செய்யும் போதெல்லாம், தேவனுக்குத்தான் நஷ்டம் ஏற்படுகின்றது என்பதைத்தான் இயேசு உபதேசித்துக் கொண்டிருந்தார். தேவன் இழந்து போனதை, அவரிடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பதே, சபையிலே நமது பணியாகும்.
காணாமல் போன குமாரன் தன்னை தனது தகப்பன் நேசிக்கிறார் என்னும் ஒரு காரியத்தை மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தான். அதனால்தான் அவன் திரும்பிவரத் தீர்மானித்தான். அந்த நாளிலே தன்னுடைய மகன் திரும்பி வருவான் என்று தகப்பனுக்கு எப்படி தெரிந்திருந்தது? எப்படியெனில் அவன் தன்னுடைய மகன் திரும்பி வரமாட்டானா என்ற ஏக்கத்துடன் தினந்தோறும் ஜன்னல் வழியாக விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததினால்தான் தெரிந்திருந்தது. ஒரு நாள் அவனைக் கண்டவுடன், ஓடோடிச் சென்று அவனை வரவேற்றான். ஆனால் மூத்த குமாரனோ, தகப்பனுடைய இருதயத்தின் உணர்வுகளிலே பங்கு கொள்ள முடியவில்லை. அவன் தன் தகப்பனுக்காகக் கடினமாக உழைக்கிறவனாகவும், எப்பொழுதும் கீழ்ப்படிகிறவனாகவும் இருந்தான் (லூக் 15:28,29). ஆனால் காணாமல் போனவற்றைக் குறித்த வாஞ்சை அவனிடத்தில் இல்லை. தன்னுடைய தகப்பனின் இருதயத்தோடு அவனுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. அவன் தன்னுடைய தகப்பனிடத்தில், “நான் போய் என்னுடைய இளைய சகோதரனைத் தேடிக் கண்டுபிடித்து வருகிறேன்” என்று ஒரு தடவையேனும் சொல்லவில்லை.
இருவகையான ஊழியக்காரர்களும், மூப்பர்களும் உள்ளனர். ஒருவர், இங்கு சொல்லப்பட்டது போல அன்பினாலும் மனதுருக்கத்தினால் நிறைந்த தகப்பனைப் போன்றவர். இன்னொருவரோ அந்த மூத்த சகோதரனைப் போல கடினமானவரும், வளைந்து கொடுக்கும் தன்மையற்றவரும், தொழில் ரீதியானவருமானவர் ஆவார். இவ்விருவரில் எவரைப் போலிருப்பது என்று நாம் ஒவ்வொருவருமே தெரிந்தெடுத்துக் கொள்ள முடியும். கதை தொடங்கும்போது, மூத்த குமாரன் உள்ளேயும், இளைய குமாரன் வெளியேயும் இருக்கின்றனர். ஆனால் அது முடியும் போது மூத்த குமாரன் வெளியேயும், இளைய குமாரன் உள்ளேயும் இருக்கின்றனர். இப்போது முதலில் இருப்பவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் கடைசியாய் இருப்பார்கள். பிதாவின் இருதயத்துடன் ஐக்கியம் கொண்டிராத காரணத்தினால், அநேகக் கிறிஸ்தவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே இருப்பார்கள். சபையிலுள்ள ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் கர்த்தருடைய ஊழியக்காரராக இருக்க வேண்டும். அவர்கள் காணாமல் போனவர்களுக்காக பிதாவின் இருதயத்துடன் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும்.