(கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லா வேத குறிப்புகளையும் தயவு செய்து வேதாகமத்தில் பாருங்கள்)
ஒரு புத்தாண்டு ஜெபம்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 90:12).
ஆவிக்குரிய வளர்ச்சியும் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மறுரூபமாகுவதும் ஒரே நாள் இரவில் நடக்கிறதல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக நாளுக்கு நாள் மெதுவாக நடக்கிறதாகும். ஓர் ஆங்கிலப் பல்லவியிலே (chorus) நாம் இவ்வாறு பாடுகிறோம்: "கொஞ்சம் கொஞ்சமாக நாளுக்கு நாள்; எல்லா வகையிலும் கொஞ்சம் கொஞ்சமாக, என் இயேசு என்னை மாற்றுகிறார்; நான் சென்ற வருடம் இருந்தது போல் இந்த வருடம் இல்லை; சித்திரம் தெளிவாக இல்லை என்றாலும், அவர் என்னை மாற்றுகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இது மெதுவாக நடந்தாலும், ஒரு நாள் நான் அவரைப் போலவே இருப்பேன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்." எனவே, மறுரூபமாகுதலின் கிரியையை அவர் நம்மிடத்தில் நடப்பிக்கும்படி இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் நம்மையே கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்.
பரிசுத்த ஆவியானவராலும் தேவனுடைய வார்த்தையினாலும் மறுரூபப்படுகிறோம்
பரிசுத்த ஆவியானவரை நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவராக இருக்க அனுமதிக்கும்போது, பாவத்தின் வல்லமையிலிருந்தும், பண ஆசையிலிருந்தும், தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடான மனுஷீகப் பாரம்பரியங்களிலிருந்தும், ஜனங்களின் அபிப்பிராயங்களுக்கு அடிமையாக இருப்பதிலிருந்தும் முதலில் நம்மை அவர் விடுதலை செய்வார் (2கொரிந்தியர் 3:17). பிறகு இயேசுவின் மகிமையை வேத வசனங்களில் நமக்குக் காண்பித்து, நம்முடைய சிந்தனை முறையை மாற்றி, இயேசு சிந்தித்தபடியே நாமும் சிந்திக்கும்படி தொடங்கச் செய்து, அந்த சாயலுக்கு ஒப்பாகப் பரிசுத்த ஆவியானவர் நம்மை மெதுவாக மறுரூபப்படுத்த நாடுவார் (2கொரிந்தியர் 3:18; ரோமர் 12:2). பரிசுத்த ஆவியானவர் இக்கிரியை இந்த வருடம் நம்மில் செய்ய விரும்புகிறபடியால் நம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்போம்.
துதியினாலும் நன்றி செலுத்துதலினாலும் மறுரூபப்படுகிறோம்
"ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொள்ளுங்கள்” (எபேசியர் 5:18-20). புறங்கூறுதல், கோட்சொல்லுதல், கசப்பு, கோபம் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நம்மை விடுதலை செய்கிற, நன்றி நிறைந்த இருதயத்தைப் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்க விரும்புகிறார். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் நாம் காணும் பரலோகத்தின் ஏழு காட்சிகளிலும், பரலோகத்தில் இருப்பவர்கள் தேவனைத் தொடர்ந்து துதித்துக் கொண்டே இருப்பதைக் காண்கிறோம். பரலோகத்தின் சூழல் எந்தவொரு முறுமுறுப்பும் குறைசொல்லுமில்லால் எப்பொழுதும் துதியினால் நிறைந்து காணப்படுகிறது. இந்த பரலோகத்தின் சூழலை நம்முடைய இருதயங்களிலும் நம்முடைய வீடுகளிலும் இந்த ஆண்டு பரிசுத்த ஆவியானவர் கொண்டுவர விரும்புகிறபடியால் நம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்போம்.
தேவகிருபையினாலே மறுரூபப்படுகிறோம்
"தேவகிருபையானது நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ண பெலன் கொடுக்கிறது" (தீத்து 2:11,12). தேவன் தம் கிருபையின் மூலமாக நம்முடைய சிந்தனை-வாழ்க்கையை மறுரூபப்படுத்தி, இந்த ஆண்டில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும் வகையில் நம்முடைய பேச்சை எப்பொழுதும் கிருபை பொருந்தினதாய் மாற்ற விரும்புகிறார் (கொலோசெயர் 4:6). இந்த ஆண்டில் கணவன் மனைவி ஒருவரோடொருவர் நடந்து கொள்ளும் விதத்தைத் தேவனுடைய கிருபை மறுரூபப்படுத்த விரும்புகிறது (1பேதுரு 3:7). இந்த ஆண்டில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும், அந்த பிரச்சனையை மேற்கொள்ள போதுமான கிருபையைத் தேவன் நமக்குக் கொடுக்க முடியும் (2கொரிந்தியர் 12:9). எனவே, இந்த ஆண்டில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை நீங்களே தாழ்த்தி விடுங்கள் - ஏனென்றால் தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கு மட்டுமே கிருபை அளிக்கிறார் (1பேதுரு 5:5).
கீழ்ப்படிதலினாலே மறுரூபப்படுகிறோம்
"அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்" (எபிரெயர் 5:8) என்று இயேசுவைக் குறித்து நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. தம்முடைய பிதா “இல்லை” என்று சொன்ன காரியங்களுக்கு, இயேசுவும் “இல்லை” என்றே சொன்னார். அப்படிச் செய்வதில் ,தம்முடைய சுய சித்தத்தை எப்போதும் வெறுக்கிறதான பாடுகள் அடங்கியிருந்தது. அநேக ஆண்டுகளாக இத்தகைய சுய-வெறுப்பிற்குப் பிறகு, "இயேசு பூரணரானார் (பூரணப்படுத்தப்பட்டார்)" (எபிரெயர் 5:9). இங்கே "பூரணம்" என்பதற்குப் பொருள் "முழுமை" என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்லுவோமென்றால், இயேசு கீழ்ப்படிதல் என்னும் பள்ளியில் கிரமமாய் படித்துப் பட்டம் பெற்றார். நாமும் இந்தப் பட்டத்தைத் தான் பெற வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறார். எனவே, அவர் நம்மைப் பல பரீட்சைகளுக்கு (சோதனைகளுக்கு) ஊடாக நடத்திச் செல்வார். எந்தப் பரீட்சையிலாவது நாம் தோற்றுப் போனால் மீண்டும் அதைச் செய்ய நமக்கு வாய்ப்பு தருவார்! அவர் இயேசு பெற்ற அதே பட்டத்தை நாமும் பெற்று நம்மை ஜெயங்கொண்டவர்களாக மாற்ற விரும்புகிறார் (வெளி 3:21)! இது நாம் பெறக்கூடிய மிக முக்கியமான பட்டமாகும். எனவே, இந்த ஆண்டில் ஒவ்வொரு சூழ்நிலையிலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால், நம்முடைய சுய சித்தத்திற்கு "இல்லை" என்றும் தேவனுடைய சித்தத்திற்கு "ஆம்" என்றும் சொல்லுவோம்.
தேவனால் அருளப்படுகிற ஆறுதலினாலே (ஊக்கத்தினாலே) மறுரூபப்படுகிறோம்
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே (ஊக்கத்தினாலே), எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் (ஊக்கத்தைக் கொடுக்கத்) திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் (ஊக்கமளிக்கிறவர்)/ (2கொரிந்தியர் 1:3,4). அநேக சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கும் ஜனங்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஜெயங்கொள்ள நாம் உதவ வேண்டுமென்றால், முதலாவதாக அநேக சோதனைகளையும் பிரச்சனைகளையும் நாம் கடந்துசென்று அவைகளை ஜெயங்கொண்டிருக்க வேண்டும். நம்முடைய சோதனைகளில் நாம் ஜெயம் பெறத் தேவன் நமக்கு அருளும் பெலனையும் ஊக்கத்தையும் தான் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். இந்த ஆண்டில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நம்மை ஆசீர்வாதமாக மாற்ற தேவன் விரும்புகிறார் (கலாத்தியர் 3:8,9,14 காண்க). இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் நாம் யாரையாவது ஒருவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (எபிரெயர் 3:13ஐ வாசியுங்கள்). அது அப்படியே ஆகட்டும்.
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாக அமைவதாக.