WFTW Body: 

1.தேவனுக்காக அக்கினியாய் இருந்துவிட நாடுங்கள்

“நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். பரிசுத்த ஆவியானவர் பயமுள்ள ஆவி அல்ல" (2தீமோத்தேயு 1:6,7) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். அக்கினி தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக, அந்த தேவவரத்தை அனல்மூட்டி எழுப்பி விடும்படியும் அதனை புதுப்பித்துக் கொள்ளும்படியும் பவுல் தீமோத்தேயுவிடம் வலியுறுத்தினார். பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் இயேசுவே நமக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தாலும் (மத்தேயு 3:11), எல்லா நேரங்களிலும் அந்த அக்கினி எரிந்துகொண்டே இருப்பதற்கு நாமும்கூட ஏதாவது செய்ய வேண்டும். தேவன் அக்கினியை எரியச் செய்கிறார், தேவனுடைய சித்தத்திற்கு எல்லா நேரங்களிலும் முழுமையாக அர்ப்பணித்த ஒரு வாழ்க்கையை எரிபொருளாக நாம் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். தேவன் உங்களை ஒருதரம் அபிஷேகம் செய்தபடியால், “ஒருதரம் அபிஷேகம் செய்யப்பட்டவன் எப்பொழுதும் அபிஷேகத்தில் இருப்பான்” என்று சொல்லி, ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கலாம் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இது “ஒருதரம் இரட்சிக்கப்பட்டவன் எப்பொழுதும் இரட்சிப்பில் இருப்பான்” என்பதற்கு இணையான தவறான நம்பிக்கையாகும். தேவனால் உண்மையிலேயே அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனங்கள், ஒரு வருடத்திற்குப் பிறகு ஆவிக்குரிய ரீதியில் செத்தவர்களாய் இருக்கிறதை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கையில் அக்கினி போய்விட்டது. உலக ஆசைகளும் பெருமையும் உள்ளே வந்து அக்கினியை வெளியே எடுத்துப் போட்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் பணத்திற்குப் பின்பாகவும் ஒரு வசதியான வாழ்க்கைக்குப் பின்பாகவும் ஓடி, தேவனுடைய அக்கினியை இழந்து விட்டார்கள். அது வருத்தமாகவும் தேவனுடைய ராஜ்யத்திற்கு மிகப் பெரிய இழப்பாகவும் இருக்கிறது. எனவேதான் பவுல் தீமோத்தேயுவிடம் “உன்மேல் வந்த அக்கினியை நீ புதுப்பித்துக்கொண்டு எரிந்துகொண்டே இருக்கும்படி செய்வாயாக என்றும் இனி அது உன்னைப் பொறுத்தே உள்ளது என்றும் எரிந்துகொண்டே இருக்கும்படி நீ செய்யாவிட்டால் அது அணைந்து போய்விடும் என்றும் ஒரு நல்மனசாட்சியை காத்துக்கொள்வதின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்வதின் மூலமாகவும், தன்னைத்தானே தாழ்த்துவதின் மூலமாகவும், முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுவதின் மூலமாகவும், பண ஆசை இல்லாதவனாய் இருப்பதின் மூலமாகவும், மற்றவர்களோடு வாக்குவாதம் செய்யாதவனாய் இருப்பதின் மூலமாகவும், அந்த அக்கினியை அவித்துப்போடுகிற எந்தவொன்றிலிருந்தும் விலகுவதின் மூலமாகவும் அந்த அக்கினியை எரிந்துகொண்டே இருக்கும்படி செய்யமுடியும் என்றும்” கூறினார்

2.முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுகிற விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ள நாடுங்கள்

"பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே நீதியை அடையும்படி நாடு" என்று 2தீமோ 2:22 -ல் பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் பரிசுத்தத்தை நாடுகிறவர்களுடனே முக்கியமாக ஐக்கியம் கொள்ள நாட வேண்டும். அது நாம் பாவத்திலிருந்து விலகி ஓடுவதற்கு உறுதுணையாய் இருக்கும். முழு இருதயத்தோடும் பரிசுத்தத்தை வாஞ்சிப்பவர்களே இப்பூமியில் நமக்கு உற்ற நண்பர்களாய் இருக்க வேண்டும். அநேக விசுவாசிகள் குறைந்த தரநிலை உடையவர்களாய், தேவபக்தியின் மீது விருப்பம் அற்றவர்களாய் உள்ளனர். ஆனால் நாமோ பரிசுத்த வாழ்வு வாழ நாட்டமுடையவர்களுடனேயே அதிக நேரம் செலவிட வேண்டும். ஒருவர் சுத்தமான இருதயத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? ஜனங்கள் தங்களது இருதயத்தின் நிறைவினால் பேசுவார்கள் என்று இயேசு சொன்னார் (மத்தேயு 12:34). ஒரு மனிதன் எதைப் பேச விரும்புகிறான் என்பதை வைத்தே அவனுடைய இருதயத்தை நிறைத்திருக்கிறது எது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவன் பணத்தையும் உலகப் பொருட்களையும் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தால், அவனுடைய இருதயமானது பணத்தைப் பற்றிய சிந்தனையால் நிறைந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், ஒரு மனிதன் அதிகமாக ஆண்டவரைப் பற்றியே பேச விரும்புவானானால், அதுதான் அவனுடைய இருதயத்தில் நிறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். “இயேசுவைப் போலவே ஆக வேண்டும்” என்ற ஏக்கம் உள்ளவர்களோடு ஐக்கியப்படவே நான் விரும்புகிறேன். நாம் ஆண்டவரை நேசித்தால், அவரைப் பற்றியே பேச விரும்புவோம். இதுவே ஆண்டவருக்குப் பயனுள்ள ஊழியம் செய்வதற்கான இரகசியமாகும்.

3.தேவனுடைய தரநிலையை நிலைநிறுத்த நாடுங்கள்:

“தேவனுடைய தரநிலையை என்றுமே குறைத்துவிடாதே" (2தீமோத்தேயு 1:13) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு புத்திச் சொன்னார். நம்முடைய நாட்களில் எல்லாக் கிறிஸ்தவ பிரசங்கிமார்களுக்கும் இந்தப் புத்திமதியைக் கொண்டிருப்பது அதிக அவசியமாகும். உங்களுடைய சபைக்குள் இன்னும் அதிகமான மக்களைக் கொண்டுவருவதற்காக வேதவாக்கியங்களில் நீங்கள் காணும் தரநிலையைக் குறைக்க வேண்டாம். குறைந்த தரத்துடன் அதிகமான மக்கள் இருப்பதைவிட அதிக தரத்துடன் குறைவான மக்கள் இருப்பதே கர்த்தருடைய பார்வையில் ஒரு மேன்மையான சபை. 300 ஒத்த வேஷம் தரித்த விசுவாசிகளைக் கொண்ட சபையைவிட 3 சீஷர்களைக் கொண்ட சபையே மேலானது. 300 ஒத்த வேஷம் தரித்த விசுவாசிகளைக் காட்டிலும், 3 முழு இருதயங்கொண்ட சீஷர்கள் ஒரு கிராமத்தில் கிறிஸ்துவுக்காகச் செல்வாக்கை ஏற்படுத்த முடியும். தனக்குப் பின்வரும் சந்ததியினரைக் குறித்து ஒவ்வொரு உண்மையான தேவ ஊழியருக்கும் இதுவே பாரமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ சரித்திரத்தில், ஒரு இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினர் தேவனுடைய தரநிலையை குறைத்துவிடுகிறார்கள் என்பதை நாம் அநேகமாகக் காண்கிறோம். ஏனென்றால் அவற்றின் ஸ்தாபகர்கள் கொண்டிருந்த அதே தரிசனத்தை இரண்டாம் சந்ததியினர் கொண்டிருக்கவில்லை. பெரிய ஸ்தாபன சபைகளின் இன்றைய நிலைமையையும், அந்தச் சபையின் ஸ்தாபகர்கள் நாட்களில் இருந்த நிலைமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்தச் சபைகளின் ஸ்தாபகர்கள் இன்று பூமிக்கு வந்தால், தாங்கள் ஸ்தாபித்த சபையில் அவர்கள் சேர மாட்டார்கள் – ஏனென்றால் அந்த ஸ்தாபகர்கள் நிலைநிறுத்திப் பறைசாற்றிய தேவனுடைய தரநிலையை அவைகள் குறைத்துவிட்டன. வெளிப்புறமாக உபதேசம் சரியாக இருக்கலாம், ஆனால் வல்லமையும் அபிஷேகமும் போய்விட்டது. மெய்யான ஜீவன் போய்விட்டது, தேவனுடைய அறிவும் போய்விட்டது. தேவனுடைய தரநிலை ஒரு தூய்மையான பொக்கிஷமாய் இருக்கிறபடியால், அதனை நமக்குள் வாசஞ்செய்யும் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக நாம் காத்துக்கொள்ள வேண்டும்.