WFTW Body: 

    1. தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் ஒரு செம்மையான திட்டத்தை வைத்திருக்கிறார் என்று விசுவாசியுங்கள்:


“நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (எபேசியர் 2:10). தேவன் நம்மை வெகு காலத்திற்கு முன்பு கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டபோதே, நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் திட்டமிட்டிருந்தார். நாளுக்கு நாள் (ஒவ்வொரு நாளும்) அந்த திட்டத்தைக் கண்டுபிடித்து அதனைப் பின்பற்றுவதே இப்போது நம்முடைய கடமையாகும். தேவனுடைய திட்டத்தை விட ஒரு சிறந்த திட்டத்தை நம்மால் ஒருபோதும் தீட்ட முடியாது. மற்றவர்கள் செய்கிற காரியங்களை நாம் பின்பற்றக்கூடாது, ஏனென்றால் தேவனுடைய திட்டம் தம்முடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் வேறுபட்டிருக்கிறது. உதாரணமாக, யோசேப்பு தன்னுடைய வாழ்க்கையின் கடைசி 80 ஆண்டுகள் எகிப்து தேசத்திலுள்ள அரண்மனையில் தங்கி, மிகுந்த வசதிகளுடன் வாழவேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருந்தது. இதற்கு மாறாக, மோசே தன்னுடைய வாழ்க்கையின் கடைசி 80 ஆண்டுகள் எகிப்து தேசத்திலுள்ள அரண்மனையை விட்டு வெளியேறி, வனாந்தரத்தில் பெரும் அசௌகரியங்களுடன் வாழவேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருந்தது. வசதிகளையும் சுலபமான வாழ்க்கையையும் விரும்பி மோசே யோசேப்பின் முன்மாதிரியைப் பின்பற்றியிருந்தால், தன்னுடைய வாழ்க்கைக்குரிய தேவனுடைய சித்தத்தை இழந்திருப்பான். அதைப் போலவே இன்றும், ஒரு சகோதரன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவில் (U.S.A) வசதிகளுடன் வாழ வேண்டும் என்றும் மற்றொரு சகோதரன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வட இந்தியாவின் வெப்பத்திலும் தூசியிலும் கடினமாக உழைத்து வாழ வேண்டும் என்றும் தேவன் விரும்பலாம். ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையின் பங்கை மற்ற சகோதரனோடு ஒப்பிட்டு, அவன்மேல் பொறாமைக் கொண்டு குறை சொல்வதற்குப் பதிலாக, தன்னுடைய வாழ்க்கைக்குரிய தேவனுடைய திட்டத்தைக் குறித்து உறுதியாக நம்ப வேண்டும். தேவன் இந்தியாவில் அவருக்கு ஊழியம்செய்ய என்னை அழைத்தார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் வேறு யாரும் என்னுடைய அழைப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் நாம், நம்முடைய சொந்த கனத்தைத் தேடினாலோ, பணத்தை நேசித்தாலோ, வசதிகளை (சௌகரியங்களை) நேசித்தாலோ, மனிதனுடைய அங்கீகாரத்தை விரும்பினாலோ தேவனுடைய சித்தத்தை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது,

    2. தேவனை மிகவும் நெருக்கமாக அறிந்துகொள்வதே பெலன்கொண்டு இருப்பதின் ரகசியம்:


“தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்” (தானியேல் 11:32). இன்று, தேவனை மற்றவர்கள் மூலமாக (second-hand) நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ள விசுவாசிகளில் இளைய விசுவாசியைக் கூட அழைக்கிறார் (எபிரேயர் 8:11). தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிவது தான் நித்தியஜீவன் என்று இயேசு வரையறுத்தார் (யோவான் 17: 3). இது வாழ்க்கையின் மிகப் பெரிய வாஞ்சையாக பவுலுக்கு இருந்தது (பிலிப்பியர் 3:10), அது நமக்கும் மிகப் பெரிய வாஞ்சையாக இருக்க வேண்டும். தேவனை மிகவும் நெருக்கமாக அறிய விரும்பும் ஒருவர், எப்போதும் அவருக்குச் செவிகொடுக்க வேண்டும். தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் செவிகொடுக்கிறதின் மூலமாகத் தான் ஒரு மனிதன் தன்னை ஆவிக்குரிய ரீதியில் பிழைத்திருக்கிறவனாய் காத்துக்கொள்ள ஒரே வழி என்று இயேசு கூறினார் (மத்தேயு 4:4). அவருடைய பாதத்தருகே உட்கார்ந்து அவரைக் கவனித்துக் கேட்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான காரியம் என்றும் அவர் கூறினார் (லூக்கா 10: 42). இயேசு கொண்டிருந்த பழக்கமாகிய பிதாவுக்குச் செவிகொடுக்கும் பழக்கத்தை (ஏசாயா 50:4) நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலையில் தொடங்கி அந்த நாள் முழுவதும், இரவு நேரங்களில் தூங்கும் போதும் கூட செவிகொடுக்கும் மனப்பான்மையில் ஒவ்வொரு நாளும் நாம் இருக்க வேண்டும். அப்பொழுது இரவு நேரங்களில் நாம் எப்போதாவது தூக்கத்திலிருந்து எழுந்தோமென்றால், "கர்த்தாவே, சொல்லும்; அடியேன் கேட்கிறேன்" (1 சாமுவேல் 3:10) என்று நாம் கூற முடியும். 'தேவனை அறிந்துகொள்ளுதல்' எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை ஜெயங்கொள்ளுகிறவர்களாய் மாற்றும் - ஏனென்றால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தேவன் ஒரு தீர்வை வைத்திருக்கிறார் - நாம் அவருக்குச் செவிகொடுத்தால், அந்த தீர்வு என்ன என்பதை அவர் நமக்குச் சொல்லுவார்.

    3. தேவன் ஏற்றுக்கொண்ட யாவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்:


“தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்… சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்” (1 கொரிந்தியர் 12:18,25). தமக்கென்று ஒரு தூய்மையான சாட்சியைத் திருப்பிக்கொள்ளும்படியாக தேவன் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களில் மனிதர்களை எழுப்பியுள்ளார். ஆனால் அந்த தேவனுடைய மனிதர்கள் மரித்தபிறகு, அந்த மனிதனைப் பின்பற்றியவர்கள் தங்களுடைய குழுக்களைப் பிரத்தியேகமானதாகவும் (விலக்கப்பட்டதாகவும்) மதபேதமாகவும் மாற்றிவிடுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் சரீரமானது எந்தவொரு குழுவைக் காட்டிலும் பெரியது. இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் மணவாட்டி இன்று பல பல குழுக்களில் காணப்படுகிறாள். தேவனுடைய வார்த்தையின் விளக்கத்தில் வேறுபாடுகள் இருப்பதால், அவர்களில் அநேகருடன் நாம் ஒன்றிணைந்து ஊழியம்செய்ய முடியாவிட்டாலும், கர்த்தர் ஏற்றுக்கொண்ட யாவரோடும் நாம் ஐக்கியம் கொள்ள நாட வேண்டும்.